search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது: தினகரன் அதிரடி பேட்டி
    X

    அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது: தினகரன் அதிரடி பேட்டி

    என்னை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கூறும் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் என்னிடமே இருக்கிறது என்று துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அதிரடி பேட்டியில் கூறியுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து அமைச்சர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார்.

    என்னை யாரும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடியாது என்று கூறிய தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடுவேன் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் வைத்து தினமும் ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி அலுவலகத்துக்கு செல்லாமலேயே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்களை சந்தித்து வரும் தினகரன் கட்சி பணிகளில் வேகம் காட்டாமலேயே இருக்கிறார்.

    கட்சி நிகழ்ச்சிகளில் தினகரனை முன்னிறுத்த வேண்டும் என்றும் ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமியை சந்தித்து தினகரன் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. திகார் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் நிருபர்களை சந்தித்த தினகரன் அதன் பின்னர் அமைதியாகவே இருந்து வருகிறார்.

    பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றியும் புகார் அளித்தார். 60 நாட்கள் சசிகலா பொறுமையாக இருக்கச் சொல்லி இருக்கிறார். அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தினகரன் தெரிவித்தார். இதன் பின்னர் சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி ஆலோசனையில் ஈடுபட்டார்.


    இந்த நிலையில் தனது அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் பற்றியும், தன்னை ஒதுக்கி வைத்திருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்து வருவது பற்றியும் ஆவேசமாக பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எனக்கே அத்தனை அதிகாரமும் உள்ளது. என்னை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அமைச்சர்கள் சிலர் அதுபோன்று கூறி வருகிறார்கள். இது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. இந்த அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார்? என்பதை அவர்களிடமே போய் கேளுங்கள்.

    என்னை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கூறும் அமைச்சர்களை நீக்கும் அதிகாரமும் துணைப் பொதுச் செயலாளர் என்கிற முறையில் என்னிடமே இருக்கிறது. இதனை பயன்படுத்தி அமைச்சர்கள் உள்ளிட்ட யாரையும் என்னால் நீக்க முடியும். இதனை அமைச் சர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு எப்போது செல்வீர்கள் என்று எல்லோருமே என்னிடம் கேட்கிறார்கள். பத்திரிகையாளர் சந்திப்பிலும் இந்த கேள்வி என்னிடம் அதிகம் கேட்கப்படுகிறது. அதற்கான காலம் வரும். அப்போது கட்சி அலுவலகத்துக்கு நான் நிச்சயமாக செல்வேன். 60 நாட்கள் கழித்து அரசியல் பணிகளில் நிச்சயமாக தீவிரம் காட்டுவேன். என்னைப் பொறுத்தவரையில் நான் எதற்கும் பயப்படாதவன். என் மீது எந்த தவறும் இல்லை. எனவே ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த வழக்காக இருந்தாலும் சரி, எந்த வழக்காக இருந்தாலும் சரி அதனை துணிச்சலுடன் எதிர்கொள்வேன்.

    இவ்வாறு தினகரன் கூறினார்.

    Next Story
    ×