என் மலர்
உத்தரப் பிரதேசம்
- இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது.
- காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்ளை அறிவிக்கும் துணிச்சலை அந்த கட்சி பெறவில்லை.
பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நேற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதன்மூலம் இன்றைய காங்கிரஸ் இன்றைய இந்தியாவின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. அதேநிலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்னும் விசித்திரமானது. அனைத்து தொகுதிக்கான வேட்பாளர்களை அந்த கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கும் துணிச்சலை அந்த கட்சி பெறவில்லை.
ஸ்திரதன்மையற்ற அல்லது நிலையற்ற என்ற மற்றொரு பெயராகியுள்ளது இந்தியா கூட்டணி. இதனால்தான் அந்த கட்சி சொல்லும் ஒரு விசயத்தை கூட நாட்டு மக்கள் இன்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை இரண்டு சிறுவர்கள் (Two Boys- do ladke) என்ற படம் படுதோல்வி அடைந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். தற்போது அந்த படம் இவர்களால் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. (ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரை இரண்டு சிறுவர்கள் என மறைமுகமாக தாக்கினார்.)
எத்தனை முறை இந்த இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மரப்பானையை தீ மீது வைப்பார்கள் எனத் தெரியவில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்னோர், நகினா (எஸ்சி), மொராபாபாத், ராம்பூர், பிலிபிட் ஆகிய 8 தொதிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற்ற இருக்கிறது.
2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
- இந்தியா கூட்டணி கமிஷனுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள்.
- பா.ஜனதா அரசு எந்த பாகுபாடும் இல்லாமல் செயல்படுகிறது.
லக்னோ:
பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-
பா.ஜனதாவுக்கு நாடு தான் முதலில் முக்கியம். நாங்கள் தேசிய கொள்கைக்காக பணியாற்றி வருகிறோம். ஏழை-எளியவர்களின் நல்வாழ்வுக்காக உழைத்து வருகிறோம். இதனால் மக்களின் நம்பிக்கையை பா.ஜனதா பெற்று இருக்கிறது. பா.ஜனதா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தியா கூட்டணி கமிஷனுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த கூட்டணி கட்சிகள் ஊழலில் மூழ்கி கிடக்கின்றன.
மோடி அரசாங்கம், மக்கள் பணிக்காக உழைத்து கொண்டிருக்கிறது. காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யும் பணி நிறைவடைந்து விட்டது. காஷ்மீரில் கல்லெறிவோர் எறிந்த கற்களை கொண்டு வளர்ந்த ஜம்மு-காஷ்மீரை கட்ட தொடங்கினோம்.

பா.ஜனதா அரசு எந்த பாகுபாடும் இல்லாமல் செயல்படுகிறது. எங்கள் கொள்கைகள் அனைவரையும் சென்றடைய 10 ஆண்டுகள் உழைத்துள்ளோம். மக்கள் 100 சதவீதம் பயன் அடைய வேண்டும் என்பதே எங்களது மந்திரம். அதுதான் உண்மையான மதச்சார் பின்மை மற்றும் சமூக நீதி இப்பகுதி மகா பெண் சக்தியின் ஸ்தலம். பெண் சக்தியாக விளங்குவது ஒரு போதும் புறக்கணிக்காது. நாடு நம் நாடு. ஆனால் இந்தியா கூட்டணி, பெண் சக்திக்ககு எதிராக செயல்படுகிறது நாட்டின் துரதிருஷ்டம். சக்தியை அழிக்க முயன்ற அனைவருக்கும் என்ன நடந்தது என்று வரலாற்றிலும், புராணங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று பா.ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாள். சில ஆண்டுகளில் ஏராளமானோர் பா.ஜனதாவில் இணைந்தனர். இதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதற்கு மிகப் பெரிய காரணம், பா.ஜனதா அரசியலை பின்பற்றாமல், தேசிய கொள்கையை பின் பற்றுவதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி சஹாரன்பூரில் இருந்து மாலை காசியாபாத் செல்கிறார். அங்கு 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்கள்.
மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ரோடு ஷோ நடக்கிறது.
பின்னர் அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகிறார். இதில் 2 லட்சம் பேர் வரை இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மதரசா சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக என கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
- மதரசாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது
2004-ம் ஆண்டு முதல் உத்தர பிரதேசத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வியை கற்றுத் தரும் பள்ளிகளுக்கு என, உ.பி., மதரசா கல்வி வாரிய சட்டம் அமலில் உள்ளது.
இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக இருப்பதாகவும், மதரசா வாரியத்தை மத்திய, மாநில சிறுபான்மையின நலத்துறை நிர்வகிப்பதும் தவறு என்றும் கூறி, அன்சுமான் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விவேக் சவுத்ரி மற்றும் சுபாஷ் வித்யார்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, உத்தர பிரதேச மதரசா கல்வி வாரிய சட்டம் 2004, அரசியலமைப்புக்கு எதிரானது. அத்துடன் இது மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுகிற வகையில் உள்ளது என்று கூறி அந்த சட்டத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் மார்ச் 22 அன்று ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், தற்போது மதரசாக்களில் கல்வி பயிலும் மாணவர்களை, வழக்கமான கல்வி நிறுவனங்களில் சேர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி மதரசாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, மதரசா கல்விச் சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது மத்திய அரசு, உத்தரபிரதேச அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
- ஆத்திரத்தில் வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார்.
உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் 'பிப்ரைச்' என்ற ஊரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷில்பா (வயது 34). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
ஷில்பாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஷில்பாவும் அந்த இளைஞரும் கடந்த ஏழு ஆண்டுகளாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவரம் அறிந்த கணவன் ராம் கோவிந்த் இது குறித்து தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஷில்பா கடும் மன வேதனை அடைந்தார். மேலும் ஆத்திரத்தில் தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழே இறங்குமாறு கூறினர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்தார்.
இதுபற்றி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி அந்த பெண்ணை உயிருடன் மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
மேலும், போலீஸ் விசாரணையில் மனைவி ஷில்பா தான் கள்ளத் தொடர்பு வைத்துள்ள நபரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விபரீத கோரிக்கைக்கு கணவன் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம்
- விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர்
உத்தரபிரதேசத்தில் 2022 டிசம்பரில் கரிஷ்மா என்ற பெண் விகாஸ் என்பவரை திருமணம் செய்தார். பின்பு இந்த ஜோடி கிரேட்டர் நொய்டாவில் உள்ள விகாஸ் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வரதட்சணை கொடுமையால் கரிஷ்மா அவரது கணவர் மற்றும் கணவரது குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக கரிஷ்மாவின் சகோதரர் தீபக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால், விகாசின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இன்னும் அதிக வரதட்சணை கேட்டு கரிஷ்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கரிஷ்மாவிற்கு ஒரு பெண் குழந்தையைப் பிறந்துள்ளது. அதன்பிறகும் விகாஸ் குடும்பத்தினரின் அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அதனால் கரிஷிமாவின் குடும்பத்தினர் விகாஸ் குடும்பத்திற்கு கூடுதலாக ₹10 லட்சம் கொடுத்தனர். அதன்பின்பும் இந்த கொடுமை முடிவுக்கு வரவில்லை.
அண்மையில், விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதனை கரிஷ்மா குடும்பத்தினரால் கொடுக்கமுடியவில்லை.
இந்நிலையில், மார்ச் 29 அன்று கரிஷ்மா எங்களை தொடர்பு கொண்டு விகாஸ் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்தார். உடனே நாங்கள் விகாஸ் வீட்டிற்கு சென்று பார்க்கையில் கரிஷ்மா இறந்து கிடந்தார். கரிஷ்மாவை அவரது கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரில், விகாஸ், அவரது தந்தை சோம்பல் பதி, அவரது தாய் ராகேஷ், சகோதரி ரிங்கி மற்றும் சகோதரர்கள் சுனில் மற்றும் அனில் ஆகியோர் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விகாஸ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உத்தர பிரதேசத்தின் மீரட்டில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் தொடங்கினார்.
- அப்போது பேசிய அவர், மூன்றாவது முறை ஆட்சி அமைக்க பா.ஜ.க. அரசு தயாராக உள்ளது என்றார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட்டில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தல் ஆட்சி அமைப்பதற்கு மட்டுமல்ல. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவும், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்குமான தேர்தல்.
உலகளவில் 11-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தபோது, நாட்டில் வறுமை அதிகரித்தது. 5-வது இடத்திற்கு வந்த போது, 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேறினர்.
3-வது இடத்திற்கு வரும்போது வறுமை முற்றிலும் அகற்றப்படுவதுடன், அதிகாரம் பெற்ற மத்திய தர வர்க்கத்தினர் நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருப்பார்கள்.
கடைசி 10 ஆண்டுகளில் வளர்ச்சிக்கான டிரைலரை மட்டும் பார்த்துள்ளீர்கள். நாட்டை இன்னும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை மக்கள் முன்பு உள்ளது. மூன்றாவது முறை ஆட்சி அமைக்க பா.ஜ.க. அரசு தயாராக உள்ளது.
அடுத்த 5 ஆண்டுக்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி உள்ளோம். அடுத்த ஆட்சியில் முதல் 100 நாட்களில் மிகப்பெரிய கொள்கைகளுக்காக பணியாற்றுகிறோம்.
ஊழல்வாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்ன தடை வந்தாலும் அதை நிறுத்த மாட்டேன். ஊழல்வாதிகள் ஒன்றுசேர்ந்து இண்டியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். அக்கூட்டணியை கண்டு பயப்பட மாட்டேன் என தெரிவித்தார்.
- தனக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில், ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள் நிரம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- பார்சலை திருப்பி கொடுக்க முயன்றபோது சம்பந்தப்பட்ட நிறுவனம் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கடந்த 28-ந்தேதி பிளிப்காட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளார். அன்றைய தினமே அவருக்கு ஆர்டர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அவர் தனக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில், ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள் நிரம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அந்த பார்சலை திருப்பி கொடுக்க முயன்றபோது சம்பந்தப்பட்ட நிறுவனம் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் எக்ஸ் தளத்தில் ஸ்மார்ட்போன் அட்டையுடன் கூடிய பெட்டியையும், அதில் ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டார்.
அவரது இந்த பதிவு வைரலாகியது. இதைத்தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனம் அவருக்கு பதிலளித்தது. அதில் நீங்கள் ஆர்டர் செய்ததை தவிர வேறு எதையும் அனுப்புவதற்கு நாங்கள் விரும்ப மாட்டோம். இந்த நிகழ்வுக்காக மிகவும் வருந்துகிறோம். உங்களுக்கு மேலும் உதவி செய்ய தயவு செய்து உங்கள் ஆர்டர் விபரங்களை வழங்கவும் என தெரிவித்துள்ளது.
A #Ghaziabad resident claims he ordered Mobile phone worth Rs22,000 through @Flipkart but instead received stones! Victim claims courier refuses to take back the parcel. So much so for #onlineshopping #onlinefraud @_Kalyan_K #India #mobilephone #infinix @InfinixIndia pic.twitter.com/OkfnMRQ7ma
— AbhishekPatni (@Abhishek_Patni) March 29, 2024
- முக்தார் அன்சாரி மரணத்தை தொடர்ந்து அவரது வீடு மற்றும் சில நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- முக்தார் அன்சாரியின் மனைவி மற்றும் மகன்கள் முக்தார் அன்சாரி சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல தாதாவாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் முக்தார் அன்சாரி. இவர் மீது அந்த மாநிலத்தில் 63 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 15 வழக்குகள் கொலை வழக்குகள் ஆகும்.
உத்தர பிரதேச வரலாற்றில் மிகப்பெரிய தாதாவாக கருதப்பட்ட இவர் 1963-ம் ஆண்டு செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். இவரது மூதாதையர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். ஆனால் தவறான நபர்களுடன் சேர்ந்ததால் முக்தார் அன்சாரி தாதாவாக மாறினார்.
1980-ல் இவர் ஒரு தாதா கும்பலில் சேர்ந்து தனிப்பெரும் ரவுடியாக உலா வந்தார். மிக குறுகிய காலத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல்களில் இவர் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கினார். 1990-ல் இவருக்கு என்று தனி ரவுடி படை உருவாகியது.
உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் இவரது பெயரை கேட்டாலே பயப்படும் அளவுக்கு அவர் அந்த மாநிலத்தில் குற்ற நடவடிக்கைகளில் கலக்கி வந்தார். காசிப்பூர், வாரணாசி, ஜான்பூர், மவு ஆகிய மாவட்டங்களில் இவரது அட்டகாசம் மிக கடுமையாக இருந்தது.
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் 8 வழக்குகளில் இவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக இவர் அடிக்கடி ஜெயிலுக்கு செல்ல நேரிட்டது. அரசியல்வாதிகளின் தொடர்பு ஏற்பட்டதால் பல வழக்குகளில் தப்பி வந்தார்.
குற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அவர் அரசியலில் ஈடுபட தொடங்கினார். மவு தொகுதியில் அவருக்கு செல்வாக்கு இருந்ததால் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் இருந்து அவர் 5 தடவை உத்தர பிரதேச சட்டசபைக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதால் பஞ்சாபிலும், உத்தர பிரதேசத்திலும் ஜெயிலுக்குள் இருக்க வேண்டி இருந்தது. ஜெயிலுக்குள் இருந்தபடியே அவர் தனது கூலிப்படையை இயக்கிக் கொண்டே அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் ஒரு தண்டனைக்காக அவர் பண்டா ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஒரு மாதமாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து பண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் அவர் உடல்நிலை மோசமானது. அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணித்து வந்தனர்.
நேற்று இரவு 8.45 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். இதுபற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது கூலிப்படை ரவுடிகளும் பீதிக்குள்ளானார்கள். முக்தார் அன்சாரி மரணத்தை தொடர்ந்து அவரது வீடு மற்றும் சில நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே முக்தார் அன்சாரியின் மனைவி மற்றும் மகன்கள் முக்தார் அன்சாரி சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். முக்தார் அன்சாரிக்கு ஜெயிலில் விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.
ஆனால் இதை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
- ஐந்து முறை முக்தார் அன்சாரி எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார்.
- 2005-ல் இருந்து உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டர்-ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. இவர் பண்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 63 வயதான முக்தார் அன்சாரி மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாரடைப்பால் முக்தார் அன்சாரி உயிர் பிரிந்ததாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது சகோதரும் காசிப்பூர் தொகுதி எம்.பி.யுமான அப்சல் அன்சாரி, முக்தார் அன்சாரி ஜெயிலில் மெதுவாக கொல்லும் விசம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் அதை மறுத்துள்ளனர்.
ஐந்து முறை முக்தாரி அன்சார் எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார். ஐந்து முறையும் மவு சதார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005-ல் இருந்து உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவரது மறைவையொட்டி பண்டா, மவு, காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2022-ல் இருந்து உத்தர பிரதேசத்தின் பல்வேறு நீதிமன்றங்களால் 8 வழங்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட 66 பேர் கொண்ட கேங்ஸ்டர் பட்டியலில் இவரது பெயரும் அடங்கும்.
ஜெயிலில் அவர் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிய நிலைக்கு சென்றார். 9 டாக்டர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மவு-வை சொந்த இடமாக கொண்ட முக்தார் அன்சாரிக்கு காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
- முன்னணி தலைவரான வருண் காந்திக்கு பா.ஜ.க.வில் இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
- தலைமையின் இந்தச் செயல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் பிலிபித் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கடந்த 2009 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர் வருண் காந்தி. 2014-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இவரது தாய் மேனகா காந்தி 2019-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் பிலிபித் தொகுதி உறுப்பினராக உள்ள வருண் காந்திக்கு இம்முறை போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்குப் பதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது.
வருண் காந்தி போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடியை வருண் காந்தி விமர்சனம் செய்ததால்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வருண் காந்தி தனது தொகுதி மக்களுக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
பிலிபித் தொகுதி உறுப்பினராக இருக்கும் எனது பதவிக்காலம் முடிவடைகிறது. எம்.பி.யாக உங்களுடனான தொடர்பு முடிவுக்கு வரலாம். ஆனால் ஒரு மனிதனாக எனது கடைசி மூச்சு வரை உங்களுடன் இருப்பேன். பிலிபித் மக்கள் அற்புதமானவர்கள்.
இந்த தொகுதியில் எம்.பி.யாக அவர்களுக்கு பணியாற்றியதில் திருப்தி அடைகிறேன். எனது பதவிக்காலத்தில் பிலிபித் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனக்கு இந்த முறை அதிர்ஷ்டம் இல்லை. இனி நான் உங்களோடு எம்.பி.யாக இருக்க மாட்டேன். நான் கடைசி வரை உங்கள் மகனாக இருப்பேன். உங்களுக்காக என் வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். இப்போது நான் உங்கள் ஆசீர்வாதத்தை மட்டுமே கேட்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- கங்கா தடுப்பணை பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ 10 வினாடிகள் ஓடுகிறது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர்.
சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காகவே வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் சாகசங்களை செய்து அவற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலானது.
கங்கா தடுப்பணை பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ 10 வினாடிகள் ஓடுகிறது. அதில், மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஆபத்தான முறையில் வீலிங் செய்யும் காட்சிகள் உள்ளது. வீடியோவின் பின்னணியில் ஒரு பஞ்சாபி பாடலும் இசைக்கப்படுகிறது. இணையத்தில் வைரலான இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கான்பூர் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை மடக்கி பிடித்து மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ये कानपुर के लड़के भी पता नहीं कब सुधरेंगे । पुलिस का भी डर नही है । "बहन जी" को ये "गंगा बैराज पुल" ही नहीं बनना चाहिए था । डेली सब के सब "बाइक से स्टंट" करते है या तो इंस्टाग्राम की "रील" बनाते रहते है । #कानपुर #kanpur #BikeStunt #police #UPPolice pic.twitter.com/55NGK0Ni1g
— Shael Kumar (@ShaelKumar57183) March 27, 2024
- செலான்களையும் போலீசார் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் பலரும் பதிவிட்டதோடு, சமூக ஆர்வலர்களும் போலீசாருக்கு வலியுறுத்தினர்.
நொய்டா:
கடந்த 25-ந்தேதி ஹோலி கொண்டாட்டத்தின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை வீசினர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 2 இளம்பெண்கள் மோட்டார் சைக்கிளில் ரொமான்ஸ் செய்தபடி ஹோலி கொண்டாடியது தொடர்பான 3 வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதில் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார். அதன் பின்புறத்தில் 2 இளம்பெண்கள் எதிர்எதிரே அமர்ந்து கொண்டு இந்தி பாடலுக்கு ஆபாச நடன அசைவுகளை அரங்கேற்றிய காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபரும், பின்னால் இருந்த 2 இளம்பெண்களும் ஹெல்மெட் அணியாத நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதைப்பார்த்த பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஸ்கூட்டர் ஓட்டிய வாலிபர் மற்றும் இளம்பெண்களுக்கு ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்த செலான்களையும் போலீசார் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிலையில் அவர்கள் மீது வெறும் அபராதம் விதித்தால் மட்டும் போதாது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் பலரும் பதிவிட்டதோடு, சமூக ஆர்வலர்களும் போலீசாருக்கு வலியுறுத்தினர்.
இந்நிலையில் நொய்டாவின் செக்டார் 113 போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில், வீடியோவில் இடம்பெற்ற வாலிபர் மற்றும் இளம்பெண்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 279 (அலட்சியமாக வாகனம் ஓட்டி மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்), 290 (பொதுமக்களுக்கு தொல்லைகள் ஏற்படுத்துதல்), 294 (பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்), 336 மற்றும் 337 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் மோட்டார் வாகன சட்ட விதிகள் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மேலும் ரூ.47 ஆயிரத்து 500 என மொத்தமாக ரூ.80 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) அனில்குமார் யாதவ் தெரிவித்தார்.






