என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.
- தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தெற்கு ரெயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
1000 கி.மீ.க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்.
மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.
எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரெயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.
- நடைபயிற்சி சென்ற போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- தென் தமிழகத்தின் தமிழ் இலக்கிய மொழி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.
நெல்லை:
தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவர் நாறும்பூ நாதன் (வயது 64). தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சொந்த ஊராக கொண்ட நாறும்பூ நாதன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு மனைவி மற்றும் 1 மகன் உள்ளனர். மனைவி, சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் தீபக் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
நெல்லை சாந்திநகரில் வசித்து வந்த நாறும்பூ நாதன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியாகவும் இருந்தார்.
இந்நிலையில் நாறும்பூநாதன் இன்று காலை நடைபயிற்சி சென்ற போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் காலமானார்.
அவரது உடல் சாந்திநகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இலக்கிய வாதிகள், எழுத்தாளர்கள் நாறும்பூ நாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பல்வேறு நூல்களை எழுதியுள்ள நாறும்பூநாதன் தென் தமிழகத்தின் தமிழ் இலக்கிய மொழி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.
இவருக்கு தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது வழங்கி கவுரவித்துள்ளது.
- தமிழகத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்குமென செய்யப்படும் சூழ்ச்சியேயாகும்.
- தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்க அரசு சார்பாக என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொடர்வண்டித்துறை தேர்வெழுத தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும்.
தென்னக தொடர்வண்டித்துறையில் காலியாகவுள்ள 493 லோகோ பைலட் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு வருகின்ற 19.03.25 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்காக, தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்களை ஒதுக்கி, நுழைவுச் சீட்டினை அனுப்பி இருப்பது தேர்வர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதற்கட்டத் தேர்வுக்கு அருகாமையிலேயே தேர்வு மையங்களை அமைத்துக்கொடுத்த தேர்வாணையம் இரண்டாம் கட்ட தேர்விற்கு 1000 கி.மீ.க்கு அப்பால் தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளது.
தேர்வு மையம் குறித்து நான்கு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்ற நிலையில், வேறு மாநிலத்தின் இரண்டாம் நிலை நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் அமைந்துள்ள தேர்வு மையத்தினை தமிழகத் தேர்வர்கள் கண்டறிவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, இது தமிழகத் தேர்வர்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, உளவியலாக அவர்களைச் சிதைத்துத் தோல்வியுறச் செய்வதற்கும், தமிழகத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்குமென செய்யப்படும் சூழ்ச்சியேயாகும். இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தருவதில் முன்னணி மாநிலமாகத் திகழ்கின்ற தமிழ்நாட்டில் போதிய அளவில் தேர்வு மையங்களை அமைக்காதது ஏன்?
கடந்த 2019 ஆம் ஆண்டு தொடர்வண்டித்துறையின் முதல்நிலை தேர்விலும் இதேபோன்று வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்து அறிவிப்பு வெளியானபோதும், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் உடனடியாக அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அது குறித்து உடனடியாகக் கேள்வி எழுப்பிய நிலையில், திமுக ஆட்சி அமைந்த பிறகு 2022 ஆம் ஆண்டு மற்றும் தற்போதும் தேர்வு மையங்கள் வேற்று மாநிலத்தில் அமைக்கப்படுவதை வாய்மூடி வேடிக்கைப்பார்ப்பது ஏன்? தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்க அரசு சார்பாக என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றி அமைத்துதர தொடர்வண்டித்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை தொடர்வண்டித்துறை இரண்டாம் கட்டத் தேர்வினை தள்ளிவைக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
- 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்கள்.
பத்திரப் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், அந்த நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
தற்போது பங்குனி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 17-ந் தேதி (நாளை) அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர்கள் இருந்தால் 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும்.
அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கண்காட்சி கடந்த 14-ம் தேதி சென்னையில் தொடங்கியது.
- மாணவர்கள், பெற்றோர்களுக்கு இந்த கண்காட்சி விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்கியது.
ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையம் (Austrade) சார்பில் "ஃபெஸ்டிவல் ஆஃப் ஆஸ்திரேலியா"வின் இரண்டாம் கட்ட நிகழ்வு நடைபெற்றது. இது ஆஸ்திரேலியாவின் உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் பிரீமியம் உணவு, பான தயாரிப்புகளைக் கொண்டாடும் கண்காட்சியாகும். இந்த கண்காட்சி கடந்த 14-ம் தேதி சென்னையில் தொடங்கியது.
அதன்பிறகு இந்த விழா புனே (மார்ச் 16), அகமதாபாத் (மார்ச் 20) மற்றும் டெல்லி (மார்ச் 22) ஆகிய நகரங்களிலும் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாக உரையாடவும், அவர்களின் கல்வி மற்றும் தொழில் விருப்பங்களை ஆதரிக்கும் வகையில் கல்வித் திட்டங்களை ஆராயவும் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த சென்னை கண்காட்சி ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்கியது.
ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கல்வி உறவுகள் பல ஆண்டுகளாக ஆழமடைந்துள்ளன. வளர்ந்து வரும் வலுவான பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை வளர்க்கின்றன. ஃபெஸ்டிவல் ஆஃப் ஆஸ்திரேலியா இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் இருப்பை வலுப்படுத்துகிறது.
- பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
சுப முகூர்த்தம் நாள் என்பதால் இன்று கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.
இன்று காலை 9.15 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. பக்தர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு கடலில் புனித நீராடினர்.
- இரு மாதங்களாக வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- ராட்தச பாறையில் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் வசிஷ்டநதி கரையில் பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் ஒன்றான, 500 ஆண்டுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் சாம்பவமூர்த்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கடந்த இரு மாதங்களாக வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்த நிலையில், கோவில் அருகே ஆற்றின் மையப்பகுதியில் ராட்தச பாறையில் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் காசி.அன்பழகன் தலைமையிலான குழுவினர், ஏறக்குறைய 11 நீளத்தில் 4 அடி உயரம் மற்றும் அகலத்தில் காணப்படும் இந்த புடைப்புச் சிற்ப பாறையை ராட்சத கிரேன் கொண்டு மீட்டு கரைக்கு கொண்டு சுத்தப்படுத்தினர்.
அப்போது இந்த பாறையில், 16ம் நுாற்றாண்டு காலத்தை சேர்ந்த ஆஞ்சநேயர், விநாயகர் மற்றும் சிவலிங்கம் சாமிக ளின் புடைப்புச் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த புடைப்புச் சிற்ப பாறையை கோவிலுக்கு அருகே வசிஷ்டநதிக் கரையிலேயே வைத்துள்ளனர். இந்த சாமிகளை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
- அ.தி.மு.க. நிர்வாகிகள் செங்கோட்டையனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
- செங்கோட்டையனின் செயல்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பொதுச்செயலாளர் இது தனிப்பட்ட விஷயம் என்று தெரிவித்து விட்டார்.
சென்னை:
அ.தி.முக.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்ட பிறகு கட்சியின் தலைமை பதவியை கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 28-ந்தேதி பொறுப்பேற்ற இவர் தொடர்ந்து கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருவதுடன் மாவட்ட செயலாளர்கள் முதல் பல்வேறு அணிகளிலும் நிர்வாகிகளை நியமித்துள்ளார். அ.தி.மு.க.வை வலுப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை மாவட்டந்தோறும் அனுப்பி வைத்து கள ஆய்வையும் மேற்கொள்ள வைத்தார்.
இப்படி முன்னணி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வந்தபோதிலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கட்சியில் ஓரம் கட்டப்பட்டு வந்தார்.
மாவட்டம் வாரியாக கள ஆய்வு பணிக்காக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலிலும் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறாததாலேயே நான் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தேன் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார்.
இருப்பினும் எடப்பாடி பழனிசாமியுடனான கருத்து மோதல் காரணமாகவே செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று பரபரப்பான தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை மறுத்த செங்கோட்டையன் எப்போதும் போல கட்சி பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன் தலைமையில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் ஒரு பிரிவினர் அவருக்கு எதிராக செயல்பட்டு மோதலில் ஈடுபட்டனர்.
கட்சியில் இருந்து ஏற்கனவே ஓரம் கட்டப்பட்டிருந்த செங்கோட்டையன் இந்த மோதல் சம்பவத்தால் கட்சி தலைமை மீது மேலும் அதிருப்தியில் இருந்தார். இதுதான் கடந்த 2 நாட்களாக எதிரொலித்துக் கொண்டு உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இதில் பங்கேற்க வந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேராக சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்தார். சட்டசபையில் பட்ஜெட் தாக்கலானபோது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து கோஷமிட்டனர். ஆனால் செங்கோட்டையன் அமர்ந்தபடியே இருந்தார். அதே நேரத்தில் சபாநாயகர் அப்பாவுவை அவர் தனியாக சந்தித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் ஆவேசத்துடன் பதில் அளித்தார்.
"செங்ட்டைகோட்டையன் நடந்து கொள்வது பற்றி அவரிடமே கேளுங்கள்" என்னிடம் இதுபற்றியெல் லாம் கேட்க வேண்டாம் என்று காட்டமாக கூறினார்.
இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு அ.தி.மு.க.வில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக செங்கோட்டையன் விவகாரம் அ.தி.மு.க.வில் புகைச்சலை ஏற்படுத்தி இருந்த நிலையில் முதல் முறையாக அ.தி.மு.க. நிர்வாகிகள் செங்கோட்டையனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான வைகைச் செல்வன் காஞ்சிபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
செங்கோட்டையனின் செயல்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பொதுச்செயலாளர் இது தனிப்பட்ட விஷயம் என்று தெரிவித்து விட்டார். சட்டமன்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக நடத்தப்பட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அவருக்கு என்ன பிரச்சனை என்று அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
அ.தி.மு.க. தொண்டர்களால் இயக்கப்படுகிற இயக்கம் ஆகும். தொண்டர் தொடங்கிய இயக்கத்தில் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இணைத்துக் கொண்டதுதான் வரலாறு. அப்படி தோன்றிய இயக்கத்தை 50 ஆண்டுகள் அழைத்துச் சென்றவர் புரட்சி தலைவி.
எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள், 3 மாதம் ஆட்சி பீடத்தில் இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவராக இருந்து கட்சியை வழி நடத்திக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஒன்றிரண்டு பூசல்கள் இருக்கும். கசப்புகள் இருக்கும். கருத்து வேறுபாடுகள் இருக்கும். இந்த வேறுபாடுகள் மற்றும் மன வருத்தத்தால் கட்சியில் இருந்து போனவர்கள் காணாமலேயே போய்விட்டார்கள்.
சொந்த அண்ணன்-தம்பிக்குள் பிரச்சனை என்றால் பேசி தீர்க்க வேண்டும். செங்கோட்டையனுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் பொதுச்செயலாளரைத் தான் சந்தித்து பேசி இருக்க வேண்டும்
அதை விட்டு விட்டு பொது வெளியில் அவர் இப்படி நடந்து கொள்வது அநாகரீகமான செயலாகும்.
இவ்வாறு வைகை செல்வன் கூறினார்.
செங்கோட்டையன் விவகாரத்தில் அ.தி.மு.க.வில் மீண்டும் மோதல் வெடித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவே அர்த்தம் கொள்ளத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பலரது வீடுகளில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இதில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிளவில் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாடு முழுவதும், தி.மு.க. அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் / நபர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த 6-ஆம் தேதி (06.03.2025) அன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
அச்சோதனையின் முடிவாக, அமலாக்கத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களைப் பணியமர்த்துதல். இடமாற்றம் செய்தல், வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு, பார் உரிமம் வழங்கும் டெண்டர் ஒதுக்கீடு, கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் பெறப்பட்ட ரூபாய் 10 முதல் 30 வரையிலான கூடுதல் தொகை. டிஸ்டில்லரீஸ் மற்றும் பாட்டிலிங் கம்பெனிகள் மூலம் நடந்த முறைகேடுகளைப் பற்றிப் பெரிய பட்டியலே அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முறைகேடு பற்றி விளக்கும்போது, நன்கு திட்டமிடப்பட்ட கணக்கில் வராத பணம் ஈட்டுதல் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான பணம் பெறுதல் (a well-archestrated scheme of unaccounted cash generation and illicit payments), டிஸ்டில்லரீஸ் கம்பெனிகளுக்கும் பாட்டில் கம்பெனிகளுக்கும் இடையில் இருந்த மிகப் பெரிய கூட்டு (the collusion between distilleries and bottling companies) மூலம் நிதி சம்பந்தமான ஆவணங்கள் தவறாகக் கையாளப்பட்டு (manipulation of financial records), மறைமுகமாக அல்லது மறைக்கப்பட்ட முறையில் பணம் வருதல் (concealed cash flows), முறையான ஏய்ப்பு (Systematic Evasion) நடந்துள்ளது என்று விவரிக்கப்பட்டுள்ளது.
இதை வைத்துப் பார்க்கையில், முறைகேடு செய்வதில் பெரும் அனுபவம் வாய்ந்த, கைதேர்ந்த மற்றும் நுட்பமான மூளைகளால் மட்டுமே இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவே அர்த்தம் கொள்ளத் தோன்றுகிறது.
அமலாக்கத் துறை. டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்துப் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளைப் பார்த்தால், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பறைசாற்றும் இதே அரசுதான் மக்கள் நலனைக் கெடுத்து. மதுவிற்கு அடிமையாக்கும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்துத் தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது எனப் பொதுமக்களே கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர்.
ஊழலில், காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே தி.மு.க.வின் ஆட்சி அதிகார வரலாறு. அமலாக்கத் துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீரே. இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால், இந்த டாஸ்மாக் முறைகேட்டில் மட்டுமே சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது.
ஆகவே. இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான. நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஆனால், விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்.
இந்த வேளையில், இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்புச் சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல ஆனால், எத்தனைக் கோடிகளைக் கொட்டினாலும், இனி இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது. இவர்களை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.
- மருத்துவர்களைத் தொடர்புகொண்டு ஏ.ஆர்.ரகுமானின் உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!
- இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன் என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
இந்த நிலையில், ஏ.ஆர். ரகுமான் உடல் நலன் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி! என்று கூறியுள்ளார்.
இதனிடையே, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன் என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
- வைகை அணையின் நீர்மட்டம் 59.84 அடியாக உள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தபோதும் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்துள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். நீர்மட்டம் குறைந்து வருவதால் தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
அணைக்கு 50 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 322 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 113.75 அடியாக சரிந்துள்ளது. 1518 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 59.84 அடியாக உள்ளது. 114 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3572 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.71 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 3 கன அடி.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 32.60 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
- பல்வேறு பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- பல ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக பணி செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் துறைமுகத்தையொட்டி அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த அனல் மின் நிலையத்தில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
இங்கு 210 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளது. இதன் மொத்த உற்பத்தித்திறன் 1050 மெகாவாட் ஆகும். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அனல்மின் நிலையத்தில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் தீ விபத்தாக மாறி முதல் மற்றும் இரண்டு அலகுகளில் தீ எரியத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 3-வது அலகுக்கும் தீ பரவும் சூழல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக 1,2,3 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தீ விபத்து குறித்த தகவலை தொடர்ந்து சிப்காட், ஸ்பிக் தொழிற்சாலை, என்.டி.பி. எல்., தூத்துக்குடி புறநகர் பகுதிகள் மற்றும் ஏரல் உட்பட 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக இருக்கும் சூழலில், அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் நிரந்தர தொழிலாளர்களாக 1,550 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 1,270 தொழிலாளர்களும் பணி செய்து வருகின்றனர்.
இதுபோக பல ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக பணி செய்து வருகின்றனர். கப்பலில் வரும் நிலக்கரியை துண்டுகளாக நொறுக்கப்பட்டு சிறு துண்டுகள் நிலக்கரி அரவை எந்திரங்களில் செலுத்தப்பட்டு தூளாக்கப்படுகிறது.
தூளாக்கப்பட்ட நிலக்கரி பொடியாக்கி செலுத்தி விசிறிகள் மூலமாக உலைக்குள் வேகமாகச் செலுத்தி எரிக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த அலகுகளில் தான் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






