என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.
- தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, காஞ்சி கோவில் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்க ளாகவே பட்டிக்குள் இருக்கும் ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்று வருவது தொடர் கதையாகி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.
இதையடுத்து நாய்களை கட்டுப்படுத்த கோரியும், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில் கவுந்தப் பாடி அருகே கோழிப் பண்ணைக்குள் புகுந்து 100 கோழிகளை தெரு நாய்கள் கொன்றுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த குட்டி பாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம்.
இவர் அதேபகுதியில் சொந்தமாக கோழிப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். கோழிப் பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகளை வளர்த்து வருகிறார்.
கோழிப்பண்ணை சுற்றி கம்பி வலைகள் அமைத்து அதில் கோழிகளை வளர்த்து வந்தார்.இந்நி லையில் சோம சுந்தரம் கோழிப் பண்ணைக்குள் தெரு நாய்கள் கூட்டம் திடீரென புகுந்தது.
இதை தொடர்ந்து அந்த தெரு நாய்கள் அங்குள்ள கம்பி வலைகளை கடித்து உள்ளே புகுந்து 100-க்கும் மேற்பட்ட கோழிகளை கடித்துக் கொன்றுள்ளது. கோழிகள் அலறல் சத்தம் கேட்டு வந்த சோமசுந்தரம் அங்கு 100 கோழிகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சோமசுந்தரம் இறந்த கோழிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதேபோல் கவுந்தப்பாடி அடுத்த மஜரா பாப்பாங் காட்டூர், பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அதிகாலை 4 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்றுள்ளது. இது தொடர்பாகவும் கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாகவே எங்கள் பகுதியில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன. தற்போது கோழிப் பண்ணைக்குள் புகுந்து 100 கோழிகளை கொன்று உள்ளது. இதேப்போல் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளையும் கொன்று உள்ளது.
தொடர்ந்து தெரு நாய்கள் அட்டகாசம் செய்து வருவ தால் எங்களுக்கு ஒரு வித அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் வாழ்வா தாரத்தை இழந்து தவித்து வருகிறோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- முறைகேடு செய்து ஈட்டியதா என்று விசாரணை.
திண்டுக்கல்:
டெல்லியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் நேற்று திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி ரெயில்வே எஸ்.பி. ராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனிப்பிரிவு காவலர் மணிவண்ணன் கொண்ட போலீசார் அந்த ரெயிலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (வயது 48) என்பவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அதில் ரூ.13 லட்சத்து 77 ஆயிரத்தி 900 பணம் இருந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது தான் வெளிநாட்டு பணத்தை மாற்றி தரும் பணியில் இருப்பதாகவும், அதற்காக கமிசன் பெற்று வருவதாகவும் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொடுத்ததில் கிடைத்த பணத்தை தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்குரிய எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை.
இதனையடுத்து அந்த பணத்தை திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் நவநீத கிருஷ்ணனை கைது செய்து இந்த பணம் உண்மையிலேயே வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொடுத்ததில் கிடைத்ததா? அல்லது முறைகேடு செய்து ஈட்டியதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாங்கள் வெளிநடப்பு செய்தால் போங்க... போங்க... என எங்களை பார்த்து சபாநாயகர் நகைக்கிறார்.
- வரலாற்று சிறப்புமிக்க பேரவை தலைவரை பெற்றுள்ளோம் - செல்வப்பெருந்தகை
சட்டசபை சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு தொடங்கியது.
சபாநாயகர் அப்பாவு இருக்கையை விட்டு இறங்கினார். அவையை துணை சபாநாயகர் நடத்தினார்.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையில், சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் சபாநாயகர் அப்பாவு பாரபட்சம் காட்டுகிறார். கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்வதில்லை. எதிர்க்கட்சி தலைவராக நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்று ஆவேசமாக கூறினார்.
எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பதிலடி அளித்தனர்.
கடந்த கால பிரச்சனைகள் எல்லாம் ஏன் பேசுகிறார்கள். அதற்கும் அப்பாவுவிற்கும் என்ன சம்பந்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இங்கே விவாதமா நடக்கிறது? - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
மக்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும்பொழுது அதனை பேச அவை தலைவர் அனுமதிக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி
நாங்கள் வெளிநடப்பு செய்தால் போங்க... போங்க... என எங்களை பார்த்து சபாநாயகர் நகைக்கிறார். சட்டசபை தலைவர் ஒரு தலைபட்சமாக நடந்துகொள்ளுவது எப்படி நியாயமாக இருக்கும்- எடப்பாடி பழனிசாமி
சபாநாயகர் அப்பாவுவை காங்கிரஸ் பேரியக்கம் ஆதரிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
சபாநாயகர் அப்பாவு இரண்டு பக்கத்தின் கருத்துக்களையும் கேட்கிறார்- செல்வப்பெருந்தகை
நான் பேச மறந்ததை சபாநாயகர் பேச ஆரம்பித்து விடுகிறார். வரலாற்று சிறப்புமிக்க பேரவை தலைவரை பெற்றுள்ளோம் -செல்வப்பெருந்தகை
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் இன்று சட்டசபைக்கு வரவில்லை.
- சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை
- தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. இங்கு பழமையான மரங்கள் அதிகம் உள்ளன. இதில் நேற்று இரவு சுமார் 500 வருடம் பழமையான புளிய மரம் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்தது.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த புளிய மரத்தின் மேல் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்திருப்பார்களா? என சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மொழிக்கொள்கையில் உறுதியைக் காட்ட ‘ரூ’ தேவையில்லை.
- தமிழ்நாட்டில் இன்னும் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வில்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத் தான் நிதிநிலை அறிக்கைக்கான லட்சினையில் 'ரூ' அடையாளத்தை வைத்திருந்தோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தமிழை இந்த அரசு தேடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த அணு குமுறையை வைத்துக் கொண்டு அன்னைத் தமிழுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது.
தமிழை பயிற்றுமொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய தி.மு.க. அரசு 2006-ம் ஆண்டில் முதன் முதலில் சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகம் செய்து அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்தது. இன்று வரை அதன் தமிழ் துரோகம் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் இன்னும் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வில்லை. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கையும் விரைவாக விசாரணைக் கொண்டு வந்து தமிழை கட்டாய பாடமாக்க எந்த நடவடிக்கையையும் இன்றைய அரசு மேற்கொள்ளவில்லை.
உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும். பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்க நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர்.
- எதிர்க்கட்சி தலைவராக நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை.
சட்டசபை சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு தொடங்கியது.
சபாநாயகர் அப்பாவு இருக்கையை விட்டு இறங்கினார். துணை சபாநாயகர் அவையை நடத்தினார்.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர்.
* மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் சபாநாயகர் அப்பாவு பாரபட்சம் காட்டுகிறார்.
* அதிக நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெற வேண்டும் என வலியுறுத்துவோம். ஆனால் குறைந்த நாட்கள் தான் நடந்துள்ளது.
* கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்வதில்லை.
* எதிர்க்கட்சி தலைவராக நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை.
* அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பேசும்போது பல குறுக்கீடுகள் செய்வதால் முழுமையாக பேச முடியவில்லை. இது ஜனநாயகமா?
* 2 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவித்தார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்கள் உள்ளன.
- வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும்.
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி சலுகை அளித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி மாற்றங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். பழைய மற்றும் புதிய வரி விதிகளில் ஒன்றை தேர்வு செய்வது வரி செலுத்துவோரின் தனிப்பட்ட பொறுப்பாக இருந்தாலும் புதிய வரிமுறையை ஊக்குவிப்பதற்காக ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை என்பது உள்பட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
2 முறையின் கீழும் வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் வரி செலுத்துவோர் தங்கள் வங்கி கணக்கு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மேலும் சேமிப்பு கணக்குகளில் ஈட்டப்படும் வட்டியையும் குறிப்பிட வேண்டும். செயலற்ற வங்கி கணக்குகளை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. பணத்தை திரும்ப பெறுவதற்கு முதன்மை கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதேபோல் ஷேர்மார்க் கெட்டின் பங்குகள் கூட்டாண்மை சொத்துகள் மற்றும் கடன்கள் வெளிநாட்டு சொத்துகள் அல்லது வருமானம் ஏதேனும் இருந்தால் அவற்றையும் வெளியிட வேண்டும்.
பழைய வரிமுறையின் கீழ் பல்வேறு விலக்குகள் மற்றும் கழிவுகள் இருப்பதால் வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும். முதலீடுகள், சுகாதார காப்பீடு, கல்விக்கடன், நன்கொடைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
புதிய வரிவிதிப்பு குறைந்த வரிவிகிதங்களை வழங்குகிறது. ஆனால் பெரும்பாலான விலக்கு களை அனுமதிக்காது. அடிப்படை வருமான வெளிப்படுத்துதல் மட்டுமே தேவைப்படுகிறது. வீட்டு வாடகை, பயணப்படி போன்ற விலக்குகளுக்கான சலுகைகள் பொருந்தாததால் இது எளிமையானது என்றார்.
வரி செலுத்துவோர் பழைய வரி முறையை விரும்பினால் வீட்டு வாடகை கொடுப்பதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் புதிய வரிமுறையில் இந்த விலக்கு கிடைக்காது. வாடகை ரசீது இதில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் வீட்டு உரிமையாளரின் பெயர், வாடகை தொகை, பணம் செலுத்தும் தேதி மற்றும் முகவரி ஆகியவை இருக்க வேண்டும்.
- பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை.
- தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண்மைக்கு என நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தமிழ்நாடு அரசின் சிறப்புக்குரிய ஒரு திட்டமாகும்.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படக் கூடிய ஒன்று தான். இந்த நிதிநிலை அறிக்கையில் அது தொடா்பான அறிவிப்பு இல்லை என்பது உண்மை தான். ஆனால் மானியக் கோரிக்கையின் போது, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தமிழக முதலமைச்சரும், துறைச் சாா்ந்த அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையில் நியாயம் உள்ளது. அதை அரசு பரிசீலனை செய்து தள்ளுபடி செய்யும் என நம்புகிறேன்.
வேளாண் துறைக்கு மட்டு மல்ல கூட்டுறவுத்துறை, ஆவின் துறை உள்ளிட்ட 9 துறை இருக்கிறது. எல்லா வற்றிற்கும் சேர்த்து தான் 45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட் என்றாலும் கூட பல நிதி வரவு செலவு அறிக்கை, நிதி பற்றாக்குறை இருக்கதான் செய்கிறது. இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு மானிய கோரிக்கையின் போது பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், அரியலூர் மாவட்டத்தில் முந்திரி வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்க நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து வருவது தொடர் கதையாக நீடிக்கிறது. தமிழ்நாடு அரசும் தொடர்ந்து பல தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது.
மத்திய அரசு இந்த பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை. இது என்னவோ தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
மத்திய அரசு நினைத்தால் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். அந்த அளவிற்கு வலிமையுள்ள அரசாக இருக்கிறது. இலங்கை அரசோடும் இணக்கமான அரசாகவும் இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மீனவா்களின் பிரச்சனைகளில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக அணுகுவதே பிரச்சனைகள் தொடா்வதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேள்வி நேரத்தில் தொகுதிக்கான கேள்வியை கேட்ட பின்னர் இருக்கையில் இருந்து செங்கோட்டையன் எழுந்து சென்றார்.
- சட்டசபைக்கு செங்கோட்டையனும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒன்றாகவே வந்துள்ளனர்.
சட்டசபையில் கடந்த 4 ஆண்டுகளாக ராதாபுரம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு சபாநாயகராக பதவி வகித்து வருகிறார்.
சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார்.
தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் சட்டசபை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, குணசீலன் மற்றும் மருத்துவர் செரியன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றது.
கேள்வி - பதில் நிகழ்வில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.
கேள்வி நேரத்தில் தொகுதிக்கான கேள்வியை கேட்ட பின்னர் இருக்கையில் இருந்து செங்கோட்டையன் எழுந்து சென்றார்.
அவையில் இருந்து செங்கோட்டையன் எழுந்து சென்றதையடுத்து, அ.தி.மு.க. கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது அவைக்கு செங்கோட்டையன் மீண்டும் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்த 16 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் செங்கோட்டையனும் ஒருவர்.
செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக செங்கோட்டையன் வீட்டிற்கே சென்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபைக்கு செங்கோட்டையனும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒன்றாகவே வந்துள்ளனர்.
- ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும்.
- பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக உற்சவர் பூமாதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடி ஏற்றப்பட்டது.
இதனை யொட்டி மூலவர் ஒப்பிலியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ந்தேதியும், தொடர்ந்து, அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும்படையல், புஷ்பயாகம், விடையாற்றி புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெறுகிறது.
- சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசித்தார்.
இதைத் தொடர்ந்து 2025-26 வேளாண் பட்ஜெட் கடந்த மார்ச் 15-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வாசித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெறுகிறது. மேலும், சபாநாயகர் மீது அ.தி.மு.க. சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் விவாதம் நடைபெறுகிறது.
இந்தநிலையில் சட்டசபை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, குணசீலன் மற்றும் மருத்துவர் செரியன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8220-க்கும், சவரன் ரூ.65,760-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்து, மீண்டும் அதே மாதம் 19-ந்தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் விலை குறைந்து காணப்பட்டு, கடந்த 4-ந் தேதியில் இருந்து பெருமளவில் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை பயணித்து வருகிறது.
கடந்த வாரம் 13-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960-க்கு விற்பனையானது. அடுத்த நாளில் தங்கம் விலை குறைந்தாலும், மறுநாளே 65 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் ரூ.65,760-க்கு விற்பனையானது.
நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8220-க்கும், சவரன் ரூ.65,760-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8210-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.65,680-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து வெள்ளி 113 ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
15-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
14-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,400
13-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,960
12-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-03-2025- ஒரு கிராம் ரூ.112
15-03-2025- ஒரு கிராம் ரூ.112
14-03-2025- ஒரு கிராம் ரூ.112
13-03-2025- ஒரு கிராம் ரூ.110
12-03-2025- ஒரு கிராம் ரூ.109






