என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.
- முதலமைச்சரின் பேச்சை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் நேற்று டாஸ்மாக் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார்.
நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்று கூறி சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்த நிலையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்களை நேற்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி அ.தி.மு.க.வினர் இன்று கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பேரவைக்கு வருகை தந்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவி உடையில் பேரவைக்கு வராதது மகிழ்ச்சி என்று கூறினார்.
முதலமைச்சரின் பேச்சை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படுவதில்லை, அ.தி.மு.க.வினர் பேசுவது நேரலை செய்யப்படுவதில்லை என்று கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர்.
- மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், கொங்கு மண்டலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்களில் ஒன்றுமாகிய பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, இங்கு வந்து பக்தி பரவ சத்துடன் குண்டம் இறங்கினர்.

ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர்.
பிற்பகல் 11 மணிக்கு குண்டம் மூடப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளல், மண்டபக்கட்டளை, மிராசுதாரர்களுக்கு மரியாதை செலுத்துதல், தேங்காய் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.
நாளை 9-ந்தேதி முதல் காலை , இரவு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் வீதி உலா, மண்டபக்கட்டளை நடக்கிறது. 12-ந்தேதி காலை 11 மணிக்கு மகாதரிசனம் , அம்மன் புறப்பாடு, கொடி இறக்கம், மண்டபக்கட்டளை யுடன் விழா நிறைவடைகிறது.
- அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபடுகிறது.
- ஓரிரு நாட்களுக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என தகவல்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அண்ணாமலை மாற்றப்படுவாரா? அல்லது அவரே தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்ற பேச்சும் பலமாக அடிபடுகிறது. அதுக்கு காரணம் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சிப்பதுதான்.
இதுதொடர்பாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தலைமையில் கூட்டணிக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலையையும் அமித்ஷா அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு அண்ணாமலை அளித்த பேட்டிகள் அவர் மாற்றப்படலாம் என்றும் நீட்டிக்கப்படலாம் என்றும் பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்தது.
அவர் மாற்றப்படலாம் என்ற கருத்து தொண்டர்களை விட தலைவர்கள் மத்தியில்தான் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் மாற்றப்பட்டால் தலைவர் பதவியை பிடிப்பது எப்படி எனறு ஒவ்வொருவரும் காய் நகர்த்தத் தொடங்கினார்கள்.

தலைவர் பதவிக்கான போட்டியில் மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், மூத்த தலைவர் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேராசிரியர் ராம சீனிவாசன் ஆகியோர் இந்த போட்டியில் தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள்.
இவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி வழிகளில் காய் நகர்த்துகிறார்கள். எச்.ராஜா மூத்த நிர்வாகி. அவர் இதுவரை மாநில தலைவர் ஆனதில்லை. அதுமட்டு மல்ல, அண்ணாமலையை போல் அதிரடி அரசியல் பண்ணுவார் என்று டெல்லி மேலிடத்துக்கு நெருக்கமான தமிழக பிரபலங்கள் சிலர் முயற்சிக்கிறார்கள்.
அகில இந்திய மகளிர் அணி தலைவராக இருக்கும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய மந்திரி ஒருவர் களம் இறங்கி இருப்பதாகவும், அவர் அண்ணாமலையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
இப்படி பல தளங்களில் இருந்து பல்வேறு விதமாக தகவல்களை மேலிட தலைவர்கள் காதுகளில் போட்டாலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யாரை தலைவராக நியமித்தால் கட்சிக்கும் கூட்டணிக்கும் பலம் சேர்க்கும் என்ற அடிப்படையில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
அதில் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகிப்பதாக தெரிகிறது. அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். எனவே கூட்டணி அமைப்பது, கூட்டணி பேச்சு வார்த்தையை சுமூகமாக கொண்டு செல்வது ஆகியவை சுலபமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
அதேநேரம் கட்சி வளர்ச்சிக்கு எந்த பலனையும் தராது என்று கட்சியினர் சிலர் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் நேற்று இரவு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் நேற்று மாலையில் அண்ணாமலை கூறும்போது, 'நான் பிரதமர் மோடி என்ற ஒரே தலைவரை நம்பிதான் கட்சிக்கு வந்தேன். அவர் கைகாட்டும் பணி எதுவாக இருந்தாலும் செய்து முடிப்பேன். நான் முழு நேரமும் களப்பணியில் இருப்பேன்.
மாநிலத்தில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக நான் என் காலணிகளை கழற்றி இருக்கிறேன். எனது முழுநேரத்தையும் இன்னும் தீவிரமாக களத்தில் செலவிடுவேன்.
மக்களை சந்திக்க நிறைய பயணம் இருக்கும். மாநில தலைவரைப் போல் எனக்கு அதிக வேலை இருக்காது. அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றவர்கள் நிறுவன பணிகளை செய்யட்டும். அதனால்தான் அடுத்த மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்றேன் என்றார்.
இதனால்தான் அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபடுகிறது. அதனால் தான் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இருக்கும் நயினார் நாகேந்திரன், நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்புக்கு இடையில் அண்ணாமலை சிருங்கேரி சென்றிருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று கட்சியினர் கூறுகிறார்கள்.
- ஆயிரக்கணக்கானவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
- போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வும் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 24-ந்தேதி பள்ளியின் கடைசி வேலை நாளாகும். அதன் பின்னர் கோடை விடுமுறை விடப்படுகிறது. கோடை விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது. சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பியதால் சிறப்பு ரெயில்கள் அறிவிக் கப்பட்டு வருகிறது. தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயில்கள் நிரம்பி வருகின்றன.
சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகள் மற்றும் கோவை, திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டன. இந்த வாரம் முதல் மே, ஜூன் மாதம் வரை பெரும்பாலான ரெயில்களில் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருச்செந்தூர், திருச்சி, ராமேஸ்வரம், பெங்களூர், மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழ் புத்தாண்டு தினம் அரசு விடுமுறையாகும். 12, 13-ந் தேதி (சனி, ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து தமிழ் புத்தாண்டு தினம் வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குகிறது. அரசு விரைவு போக் குவரத்துக் கழகம் 1000 பஸ்களை முழு அளவில் இயக்க திட்டமிட்டுள்ளன.
இதே போல வருகிற 18-ந்தேதி புனிதவெள்ளி அரசு விடுமுறையாகும். அதனோடு சேர்ந்து 19, 20 ஆகிய நாட்களும் தொடர் விடுமுறையாக இருப்பதால் முன்பதிவு அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசலை குறைக்க கோடைகால சிறப்பு ரெயில் இன்னும் கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆம்னி பஸ்களிலும் முன் பதிவு விறுவிறுப்பாக உள்ளது. கோடை காலத்தில் குளிர்சாதன வசதியுள்ள பஸ், ரெயில்களில் மக்கள் செல்ல விரும்புவதால் துரந்தோ, வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் ஜூன் மாதம் வரை நிரம்பி உள்ளன.
- கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
- மே மாதம் 12-ந் தேதி மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருசநாடு, வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மூலம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டத்தை பொறுத்து நீர் திறப்பும் அவ்வப்போது நிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 56.89 அடியாக உள்ளது.
வரத்து வினாடிக்கு 516 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி-சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கோடையின் தாக்கம் இன்னும் 2 மாதங்கள் நீடிக்கும் நிலை இருந்த போதிலும் கோடை மழையும் கை கொடுத்து வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஆறுதல் படுத்தி வருகிறது.
மே மாதம் 12-ந் தேதி மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்காக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது அணையில் உள்ள நீரின் அளவு சித்திரை திருவிழாவுக்கு திறப்பதற்கு போதுமான அளவு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், வைகை அணையில் தற்போது 2.4 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் இரு போக பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு காலம் முடியும் தருவாயில் உள்ளது.
இதனால் மதுரை சித்திரை திருவிழாவுக்கு தண்ணீர் திறக்கவும், கோடையில் குடிநீர் தேவைக்கும் தற்போதுள்ள நீர் இருப்பு போதுமானதாகும் என்றனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.90 அடியாக உள்ளது. வரத்து 493 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 1543 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33.60 அடி. வரத்து 71 கன அடி. இருப்பு 110.96 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 91 அடி. வரத்து 26 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 50.34 மி.கன அடி. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 35.80 அடி. வரத்து 12 கன அடி. இருப்பு 34.80 மி.கன அடி.
- மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் நேற்று முன்தினம் 300 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறப்பதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
- அணையில் தற்போது 75.30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அதோடு ஏராளமான கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேட்டூர்அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்ததண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறப்பதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2520 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 107.79 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 75.30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- 1914-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
- சமாதியில் பிரந்தா எ டியர் டாக் 26 நவம்பர் 1914 என்ற தேதியையும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்துள்ளனர்.
செஞ்சி:
செஞ்சியில் பிரெஞ்சுகாரர்கள் வளர்ப்பு நாய்க்கு நினைவிடம் கட்டி வைத்துள்ளனர்.
1914-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அப்போது அவர்கள் தங்குவதற்காக செஞ்சி-திண்டிவனம் சாலையில் சங்கரபரணி ஆற்றின் அருகே தாழ்வாரம் உள்ள ஒரு அடுக்கு கொண்ட வீட்டினை செங்கற்களால் மிக அழகாக கட்டியுள்ளனர்.
பிரெஞ்சுக்காரர்கள் தங்களுடைய பாதுகாப்பு கருதியும் கவுரவமான வாழ்க்கை நடத்துவதில் ஆசை கொண்ட இவர்கள் மிகச் செல்லமாக வளர்த்து வந்த பிரந்தா என்ற பெயரிட்டுள்ள நாய் இறந்து விட்டதை இந்த பங்களாவுக்கு அருகிலேயே புதைத்து அதற்கு சமாதியும் அமைத்துள்ளனர்.
அவர்கள் வசித்த வீடு 110 வருடங்களுக்குப் பிறகும் இதுவரை நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை பங்களாவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் அருகில் உள்ள நாய்க்கு கட்டப்பட்ட சமாதியும் இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.
சமாதியில் பிரந்தா எ டியர் டாக் 26 நவம்பர் 1914 என்ற தேதியையும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்துள்ளனர். இது பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. நூறாண்டுகளைக் கடந்த பங்களாவும் தற்போது பழமை மாறாமல் நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் வந்தால் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
- கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.
- அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளது உலகப் புகழ் பெற்ற பண்ணாரியம்மன் திருக்கோவில்.
இக்கோவிலுக்கு ஈரோடு திருப்பூர் கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா சிறப்பாக நடந்து வருகிறது. அதன் படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்ப ரத்தில் பண்ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 1-ந் தேதி அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அதிகாலை நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் பல்வேறு மலைவாழ் மக்கள் தாைர தப்பட்டை மீனாட்சி வாத்தி யத்துடன் அம்மன் பாரம்ப ரிய புகழ்பாடி களியாட்டமும் கம்பம் ஆட்டமும் நடை பெற்றது.
தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜையும் காலை குண்டத்திற்கு தேவையான வேப்பம் ஊஞ்ச மர கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு குண்டத்திற்கு விறகுகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அடைக்கலம் உடன் பண்ணாரியம்மன் சருகு மாரியம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம் இக்கரை நகமும் புதூர் மற்றும் வெள்ளியம்பாளை யம் கிராமங்களைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் மூங்கில் கரும்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 15 அடி நீளமும் பத்தடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து குண்டத்தை சுற்றியும் மலர்களை தூவி கற்பூரங்களை ஏற்றி சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டது.

இதையடுத்து சரியாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.
பின் வரிசையில் காத்தி ருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்ட னர். இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமி கள் உள்ளிட்ட லட்சக்க ணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி பண்ணாரி மாரியம்மனை வழிபட்டனர்.
அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கும் தெய்வமே... என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவு க்கு பக்தி கோஷம் எழுப்ப ப்பட்டது.
இதில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து பக்தர்கள் சாரை, சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது.
இன்று மதியம் வரை பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதனை தொட ர்ந்து மதியத்திற்கு மேல் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவ சாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறங்கினர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ளே பண்ணாரி அம்மனை வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் கோவில் வளா கத்தை சுற்றி தயார் நிலை யில் தீயணைப்பு துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். குண்டத்தில் ஓடி வந்த பக்தர்களை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். குண்டம் இறங்க குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர்.
குண்டம் விழாவை தொடர்ந்து நாளை மதியம் மாவிளக்கு பூஜையும் இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. மேலும் 15-ந் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்கரத தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. 15-ந் தேதி மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.
குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் குண்டம் திருவிழாவிற்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஈரோடு கோபி கோவை புளியம்பட்டி சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப் பட்டன.
அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகளும் செய்ய ப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஒலிபெருக்கியின் மூலம் போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படா மல் பக்தர்கள் குண்டம் இறங்கி சென்று பண்ணாரி அம்மனை வழிபட கோவில் சார்பில் அனைத்து ஏற்பாடு களும் தீவிரமாக செய்ய ப்பட்டது.
இதையொட்டி வன த்துறையினரும் வனப்பகுதி யில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- தங்கம் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியில் இருந்து தாறுமாறாக அதன் விலை எகிறி வருகிறது. கடந்த 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 480 ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தையும், 31-ந்தேதி ரூ.67 ஆயிரத்தையும் தாண்டியது.
அதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயர்ந்து, கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்தது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் 4-ந்தேதி தங்கம் சவரனுக்கு ரூ.1,280-க்கும் மறுநாளான 5-ந்தேதி சவரனுக்கு ரூ.720-க்கு குறைந்து ஒரு சவரன் ரூ.66,480-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்கநாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.66,280-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,225-க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.102-க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,280
06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480
05-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480
04-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,200
03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-04-2025- ஒரு கிராம் ரூ.102
06-04-2025- ஒரு கிராம் ரூ.103
05-04-2025- ஒரு கிராம் ரூ.103
04-04-2025- ஒரு கிராம் ரூ.108
03-04-2025- ஒரு கிராம் ரூ.112
- டாஸ்மாக் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார்.
- எதிர்க்கட்சியினரை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர்.
தமிழக சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது டாஸ்மாக் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார்.
நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்று கூறி சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை நேற்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
சட்டசபையில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க.வினர் எதிர்க்கட்சியினரை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் சபாநாயகரை கண்டிக்கும் வகையில் இன்று அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்.
- 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 106 சிறைவாசிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
- 24 பேர் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பையும், 268 பேர் பட்டய படிப்பையும் படித்து வருகின்றனர்.
சென்னை:
சிறைவாசிகளுக்கு 100 சதவீத கல்வி அறிவை புகட்டும் விதமாக தமிழக அரசும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் ஒருங்கிணைந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, அனைத்து சிறைகளிலும் எழுதப்படிக்க தெரியாத சிறைவாசிகளுக்கு பள்ளி கல்வித்துறையின் சிறப்பு கல்வியறிவு திட்டத்தின் மூலமாக அடிப்படை கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தால் பயன் அடைந்து வரும் சிறை கைதிகள் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:-
அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனி சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறை ஆகியவற்றில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை கொண்ட ஆரம்ப பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகாத்மா காந்தி சமுதாய கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன.
2024-25-ம் கல்வி ஆண்டில் சிறை கைதிகளில் 135 பேர் பிளஸ்-2 தேர்வும், 137 பேர் பிளஸ்-1 தேர்வும், 247 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும், 232 பேர் 8-ம் வகுப்பு தேர்வும் எழுதி உள்ளனர்.
2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 106 சிறைவாசிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 24 பேர் வணிக மேலாண்மை முதுகலை பட்டப்படிப்பும், 3 பேர் கலை அறிவியல் முதுகலை படிப்பும் படித்து வருகின்றனர். ஒருவர் கணினி முதுகலை பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.
120 பேர் கலை, அறிவியல், வணிகவியல், இலக்கியம் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பும், 24 பேர் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பையும், 268 பேர் பட்டய படிப்பையும் படித்து வருகின்றனர்.
'கத்தியை தீட்டாதே...புத்தியை தீட்டு' என்ற அறிவுரையை ஏற்று சிறை கைதிகள் மனம்மாறி கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






