என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu BJP President"

    • அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபடுகிறது.
    • ஓரிரு நாட்களுக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என தகவல்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    அண்ணாமலை மாற்றப்படுவாரா? அல்லது அவரே தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்ற பேச்சும் பலமாக அடிபடுகிறது. அதுக்கு காரணம் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சிப்பதுதான்.

    இதுதொடர்பாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தலைமையில் கூட்டணிக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலையையும் அமித்ஷா அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அதன்பிறகு அண்ணாமலை அளித்த பேட்டிகள் அவர் மாற்றப்படலாம் என்றும் நீட்டிக்கப்படலாம் என்றும் பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்தது.

    அவர் மாற்றப்படலாம் என்ற கருத்து தொண்டர்களை விட தலைவர்கள் மத்தியில்தான் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் மாற்றப்பட்டால் தலைவர் பதவியை பிடிப்பது எப்படி எனறு ஒவ்வொருவரும் காய் நகர்த்தத் தொடங்கினார்கள்.


    தலைவர் பதவிக்கான போட்டியில் மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், மூத்த தலைவர் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேராசிரியர் ராம சீனிவாசன் ஆகியோர் இந்த போட்டியில் தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி வழிகளில் காய் நகர்த்துகிறார்கள். எச்.ராஜா மூத்த நிர்வாகி. அவர் இதுவரை மாநில தலைவர் ஆனதில்லை. அதுமட்டு மல்ல, அண்ணாமலையை போல் அதிரடி அரசியல் பண்ணுவார் என்று டெல்லி மேலிடத்துக்கு நெருக்கமான தமிழக பிரபலங்கள் சிலர் முயற்சிக்கிறார்கள்.

    அகில இந்திய மகளிர் அணி தலைவராக இருக்கும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய மந்திரி ஒருவர் களம் இறங்கி இருப்பதாகவும், அவர் அண்ணாமலையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இப்படி பல தளங்களில் இருந்து பல்வேறு விதமாக தகவல்களை மேலிட தலைவர்கள் காதுகளில் போட்டாலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யாரை தலைவராக நியமித்தால் கட்சிக்கும் கூட்டணிக்கும் பலம் சேர்க்கும் என்ற அடிப்படையில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

    அதில் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகிப்பதாக தெரிகிறது. அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். எனவே கூட்டணி அமைப்பது, கூட்டணி பேச்சு வார்த்தையை சுமூகமாக கொண்டு செல்வது ஆகியவை சுலபமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    அதேநேரம் கட்சி வளர்ச்சிக்கு எந்த பலனையும் தராது என்று கட்சியினர் சிலர் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.

    இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் நேற்று இரவு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் நேற்று மாலையில் அண்ணாமலை கூறும்போது, 'நான் பிரதமர் மோடி என்ற ஒரே தலைவரை நம்பிதான் கட்சிக்கு வந்தேன். அவர் கைகாட்டும் பணி எதுவாக இருந்தாலும் செய்து முடிப்பேன். நான் முழு நேரமும் களப்பணியில் இருப்பேன்.

    மாநிலத்தில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக நான் என் காலணிகளை கழற்றி இருக்கிறேன். எனது முழுநேரத்தையும் இன்னும் தீவிரமாக களத்தில் செலவிடுவேன்.

    மக்களை சந்திக்க நிறைய பயணம் இருக்கும். மாநில தலைவரைப் போல் எனக்கு அதிக வேலை இருக்காது. அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றவர்கள் நிறுவன பணிகளை செய்யட்டும். அதனால்தான் அடுத்த மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்றேன் என்றார்.

    இதனால்தான் அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபடுகிறது. அதனால் தான் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

    டெல்லியில் இருக்கும் நயினார் நாகேந்திரன், நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த பரபரப்புக்கு இடையில் அண்ணாமலை சிருங்கேரி சென்றிருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று கட்சியினர் கூறுகிறார்கள்.

    • அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார்.
    • படிப்பு முடிந்து திரும்புவதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் தொடர்பாக படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி அவர் லண்டன் செல்கிறார்.

    அவர் படிப்பு முடிந்து திரும்புவதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும். இந்த கால கட்டத்தில் கட்சி பணியை பார்ப்பது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் டெல்லி செல்கிறார். அங்கு தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் போது அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக யாரையாவது நியமிக்கலாமா? அல்லது தற்காலிகமாக செயல் தலைவராக யாரையாவது நியமிக்கலாமா என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    புதிய தலைவருக்கான பரிசீலனையில் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, தற்காலிகமாக தலைவரை நியமிப்பது சாத்தியமில்லை.

    ஏற்கனவே மத்திய மந்திரி எல். முருகன் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகி மத்திய மந்திரி ஆனபோது 8 மாதம் தலைவர் இல்லாமல் தான் இருந்தது. அதேபோல் இப்போதும் அப்படியே விட்டு விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    ஒரு வேளை புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்தால் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய மூவரில் ஒருவரை நியமிக்கலாம் என்றார்.

    ×