என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாளுக்கு நாள் அதிரித்து வரும் பரோட்டா மோகத்திற்கு பல வகை ருசிகளில் ஓட்டல்களில் விற்பனையாகிறது.
- வாழை இலை பரோட்டா, சாக்லேட் பரோட்டா என எத்தனையோ வந்துவிட்டது.
மதுரை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரோட்டாவின் ருசிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. டிபன் வகைகளில் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பொங்கல் என்று அனைத்து வீட்டிலேயே தயாரித்து அடிக்கடி வழங்கும் நிலையில், ஓட்டலில் தயாராகும் புரோட்டாவுக்கு தனி மவுசு உண்டு.
அனைவருக்கும் பிடித்த உணவாகிப்போன பரோட்டா உடலுக்கு கேடு என்றும், அது தொடர்பாக பல்வேறு டாக்டர்களின் விமர்சனங்கள் வந்தபோதிலும் வாய்க்கு பூட்டு போட யாரும் விரும்பவில்லை. நாளுக்கு நாள் அதிரித்து வரும் புரோட்டா மோகத்திற்கு பல வகை ருசிகளில் ஓட்டல்களில் விற்பனையாகிறது.
விருதுநகர் பொரிச்ச பரோட்டாவில் தொடங்கி, மதுரை பன் புரோட்டா, லேயர் லேயராக வரும் நூல் பரோட்டா, முட்டை பரோட்டா, வீச்சு பரோட்டா, முட்டை லாப்பா பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, கைமா பரோட்டா, சிலோன் பரோட்டா, வாழை இலை பரோட்டா, சாக்லேட் பரோட்டா என எத்தனையோ வந்துவிட்டது.
இதற்கெல்லாம் மகுடம் சூட்டியதுபோல் மதுரையில் மற்றுமொரு சுவையாக தர்பூசணி பரோட்டாவை ஒரு தனியார் ஓட்டல் அறிமுகம் செய்துள்ளது.
மதுரையில் உள்ள ஒரு பிரபல ஓட்டல் நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நித்தியானந்தா கைலாச நாடு என அறிவித்த நிலையில் கைலாசா நாட்டில் தனது உணவகத்தை அறிமுகம் செய்ய அனுமதி வேண்டி கடிதம் எழுதி அதன் நிர்வாகி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில் முகக்கவசம் போன்ற வடிவில் பரோட்டா உருவாக்குவது என வித்தியாசமான முறையில் உணவகத்திற்கு வருபவர்களை ஈர்ப்பதற்காக சமூக வலைதளங்கள் மூலமாக இந்த ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்து வருகிறது. தற்போது தர்பூசணி விவகாரத்தில் மேலும் ஒரு விவாதத்திற்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தங்கள் உணவகத்தின் சார்பில் வெயிலுக்கு அறிமுகம், அடிக்கிற வெயி
லுக்கு ஆனந்தமாய் சுவைத் திட குளு குளு தர்பூசணி பரோட்டா என்ற வாசகத்து
டன் கூடிய விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு அவரது ஆதரவாளர்கள் சிலர் சூப்பர், ஆகா, ஓகோ, அருமை என்று கூறி அந்த ஓட்டலை குஷிப்படுத்தி ஆடியோ வெளியிட்டு வரு
கின்றனர்.
அதன்படி அந்த ஓட்டலில் திடீரென தர்பூசணி பரோட்டா என அறிமுகப்படுத்தப்பட்டு அந்த வீடியோவில் தர்பூசணி பழத்தை பரோட்டாமாவின் மீது வைத்து, அதன் மீது எண்ணெய் ஊற்றி, அதனை பொறித்து பீட்சா போல வெட்டிக் கொடுப்பது போன்ற வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் என உணவகங்கள் செய்தாலும் கூட அதற்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உரிய அனுமதி பெற்ற பின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதற்கிடையே மதுரை கூடல்நகர் பகுதியில் ஒரே மாதத்தில் பரோட்டா தயாரிக்கும் பயிற்சியும் ஒரு குழுவால் அளிக்கப்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
- கடலில் குதித்த கடற்படையினர் 34 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அத்தியாவசிய சமையல் பொருட்கள், மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், பீடி இலைகள் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்களை கண்காணிக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் மண்டபம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 56 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்கள் அதிகாரிகளின் வருகையை முன்கூட்டியே அறிந்து கொண்டு தப்பிச்சென்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் 304 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் இலங்கை கடற்படையால் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இலங்கை வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உடுத்துறை கடற்பகுதியில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது தமிழகத்திலிருந்து கடல் வழியாக கஞ்சா பண்டல்களுடன் வந்த படகை கண்டதும் இலங்கை கடற்படையினர் அந்த படகை நெருங்கினர். இதையடுத்து இலங்கை கடற்படையினரை கண்டதும் படகில் இருந்த வாலிபர் கஞ்சா பண்டல்களை கடலில் வீசினார். இருந்த போதிலும் உடனடியாக கடலில் குதித்த கடற்படையினர் 34 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.
மேலும் அந்த பைபர் படகை சுற்றிவளைத்து அதில் இருந்த வாலிபரை கைது செய்தனர். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 304 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி எனவும், கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வாலிபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் கஞ்சா போதை பொருளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனைக்கு பின் விடுதலை ஆனவர் என்று கூறப்படுகிறது.
- மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
- நாளை மதியம் 2.00 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்பமனுவை சமர்ப்பிக்கலாம்.
தமிழக பாஜக துணைத் தலைவரும், மாநில அதிகாரியுமான சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது கட்சியின் அமைப்பு தேர்தலின் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்கண்ட தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாளை 11.04.2025, வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மாநில தலைவருக்கான தேர்தல்
மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் E பூர்த்தி செய்ய வேண்டும்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன் மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும்.
இவ்வாறு சக்ரவர்த்தி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
12ஆம் தேதி மாலை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழுஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
- கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.
இதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது. எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.
மாணவி வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பின்னர், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
மேலும், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்து தேர்வு எழுத்த வைத்த விவகாரத்தை அடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை செங்குட்டைபாளையம் சுவாமி சித்பவானந்தர் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தியை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
- காந்தி மார்க்கெட் சப் ஜெயில் ரோட்டில் தனியாக நடந்து சென்ற முதியவரை 3 சிறுவர்கள் தாக்கி வழிப்பறி.
- முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, என்எஸ்பி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடப்பதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் வியாபாரிகளை தாக்கி வழிப்பறி செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்தநிலையில் காந்தி மார்க்கெட் சப் ஜெயில் ரோட்டில் தனியாக நடந்து சென்ற முதியவரை 3 சிறுவர்கள் தாக்கி வழிப்பறி செய்யும் காட்சி வைரலாகி உள்ளது.
இந்த சம்பவம் கடந்த 4ம் தேதி மாலை 3 மணிக்கு நடந்துள்ளது. முதியவர் அப்பகுதியில் நடந்து செல்லும் போது மூன்று சிறுவர்கள் அவரை பின்தொடர்ந்து தாக்கி கீழே தள்ளி விடுகின்றனர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்து செல்கின்றனர்.
இந்த காட்சிகள் அங்குள்ள கடை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி வணிகர்கள் கூறும்போது, மாநகரில் கஞ்சா, போதை ஊசி மாத்திரை பழக்கத்துக்கு அடிமையாக்கி உள்ள சிறுவர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தர்மதுரை, இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, வால்டின் ஜோப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களை யாராவது கண்டித்தாலோ தட்டி கேட்டாலோ அவர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. ஆகவே போலீசார் இது போன்ற சமூக விரோத கும்பலை ஒடுக்கி, வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.
- பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தி செல்வதும் அதனை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ரெயில்வே போதை பொருள் தடுப்பு போலீசார் ரெயில்களில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயிலில் இன்று காலை போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது கேட்பாரற்று கிடந்த ஒரு கைப்பையை எடுத்து சோதனை செய்தபோது அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் அதற்கு யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.
இதையடுத்து கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ரெயில்வே போலீசார் கஞ்சா கடத்தி கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சவுந்தரவல்லி சமேத ஸ்ரீ பேட்டராய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு ராமபாண நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிாவசன், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஓசூர் மேயர் சத்யா, அ.தி.மு.க. நிர்வாகி ஜெயபிரகாஷ், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகேஷ், 17-வது வார்டு கவுன்சிலர் மாது, பழனிசாமி, செயல் அலுவலர் மஞ்சுநாத், ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
இதில் பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செண்டை மேள இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேர்த்திருவிழாவையொட்டி இன்று அன்னதானம், நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மேல் சம்பூர்ண ராமாயண நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இன்னிசை கச்சேரியும், வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
தேர்த்திருவிழாவையொட்டி தேன்கனிக்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டது.
- ஏப்ரல் 14-ம் நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.
- படைப்புகளை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 13.4.2022 அன்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் "வடக்கே உதித்த சமத்துவச் சூரியன், பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்" நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் நாளை, "சமத்துவ நாளாக" கொண்டாடுவது என்று 110 விதியின் கீழ் அறிவித்தார்.
அதனடிப்படையில், ஏப்ரல் 14-ம் நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "சமத்துவம் காண்போம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் சமூக ஊடகங்களான எக்ஸ் தளம் (எக்ஸ்), படவரி (இன்ஸ்டாகிராம்), முகநூல் (பேஸ்புக்), புலனம் (வாட்ஸ்அப்), வலையொளி (யூடியூப்) வாயிலாக இன்று முதல் 30-ந்தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
"சமத்துவம் காண்போம்" என்கிற முழக்கம் சமூகநீதி என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இப்போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
எனவே, பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் இப்போட்டிகளில் பங்கேற்கு மாறும், தங்களது படைப்புகளை அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அரசு அறிவித்துள்ளது.
போட்டி 1 :- ஒரு கதை சொல்லட்டுமா?
சமூகநீதி அல்லது கல்வியின் முக்கியத்துவம் (அல்லது) உங்களுக்குப் பிடித்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எது? என்பது குறித்துக் கதைக ளைப் பதிவிட வேண்டும். வடிவங்கள் : ரீல்ஸ் (1 நிமிடம்) அல்லது ஒரு பக்கக் கதை.
போட்டி 2: ஓவியம் வரைதல் போட்டி, சமத்துவம் காண்போம், அளவு : 1 எம்பி
போட்டி 3: வினாடி - வினாப் போட்டி, அடிப்படை உரிமைகள் (அல்லது) இந்திய அரசியல் அமைப்பு - அடிப்படைகள்.
போட்டி 4: மீம்ஸ் போட்டி
போட்டியாளர்கள் பெண் கல்வி, சமத்துவம் அடிப்படையில் மீம்ஸ்களை உருவாக்கி அனுப்ப வேண்டும். அளவு : அளவு1 எம்பி
போட்டி 5: வலையொலி, "நான் அண்ணல் அம்பேத்கராக இருந்தால்" - நீங்கள் அண்ணல் அம்பேத்கராக மாறினால், தற்போதைய உலகில் எந்தெந்த மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்? (அல்லது) அண்ணல் அம் பேத்கரின் கொள்கைகள் - இன்றைய காலத்திற்கேற்ற அதன் பங்கு. அளவு : 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 எம்பி), படைப்பாளிகள் தங்களது படைப்பினை ஒலி வடிவில் (தமிழில்) பகிர்ந்து கொள்ள வேண்டும்.
போட்டி 6: உரிமைகளுக்கான ராப் பாடல் அனைவரும் சமம் என்ற தலைப்பில் பிரீ ஸ்டைல் ராப் செய்து ஒலி வடிவில் அனுப்ப வேண்டும். அளவு : 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 எம்பி)
போட்டி 7: செல்பி மற்றும் ஹாஷ்டாக் போட்டி அண்ணல் அம்பேத்கர் சிலை அல்லது போஸ்டர்க ளுடன் செல்பி "இந்திய அரசியலமைப்பு" புத்தகத்து டன் செல்பி, அரசியல் அமைப்பின் முன்னுரையுடன் செல்பி என்ற ஹாஷ்டாக்குடன் பதிவு களை உங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டு, tndipr சமூக ஊடகக் கணக்கை குறிச்சொல் செய்ய வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் பின் தொடர்பவர்களும் சமத்துவத்திற்கான உயர்வு என்ற ஹாஷ்டாக்குடன் இப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். (அளவு: 1 எம்பி)
போட்டி 8: சமூக ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு பங்கேற்பா ளர்கள் தங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ் டாகிராம் ஸ்டோரியில் அண்ணல் அம்பேத்கரின் மேற்கோள்கள் அல்லது அரசியலமைப்பின் முன்னுரையைப் பதிவிட வேண்டும். அதைத் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும் பத்தினரையும் பகிர்ந்து கொள்ளச் செய்யவேண்டும்.
அதிக எண்ணிக்கையிலான ஸ்டேட்டஸ் ஸ்கிரீன்சார்ட் பகிரப்பட்ட தன் அடிப்ப டையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேற்கண்ட இப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் tndiprmhsamathuvamkanbom @gmail.com என்ற மின்ஞ்சல் மற்றும் (கியூ ஆர் கோடு) வாயிலாகத் தங்கள் படைப்புகளை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2 நாள் பயணமாக சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
- அமித்ஷாவின் வருகை குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார். 2 நாள் பயணமாக சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
இதனை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அமித்ஷாவின் வருகை குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பனர்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமித்ஷா சென்னை வருகைக்கும் பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கும் சம்மந்தமில்லை.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அமித்ஷா சென்னை வருகிறார்.
ஏற்கனவே பீகார் மாநிலத்திற்கும் அமித்ஷா சென்று வந்திருக்கிறார்.
உச்சநீதிமன்ற உத்தரவு ஆளுநருக்கு பின்னடைவு இல்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதற்காக வருகிறார் என்பது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
பாமக தலைவர் மாற்றம் தொடர்பான கேள்விக்கு எதுவாக இரு்நதாலும் ராமதாஸ், அன்புமணி நல்ல முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
- பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.
கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.
இதற்கு பள்ளி நிர்வாகம், எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.
பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளியிலும், மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். தவறு உறுதியானால் விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு தனியார் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி இயக்குநர் வடிவேல் விசாரணை நடத்தினார்.
மாணவியிடமும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
- மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
- 7915 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோடை கால மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஏப்ரல் மாதம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 1300 மெகாவாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2610 மெகாவாட், மே மாதத்தில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 650 மெகாவாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 1080 மெகாவாட் கொள்முதல் செய்ய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.






