என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் முதியவரை தாக்கி பணம் பறித்த சிறுவர்கள்- 3 பேர் கைது
- காந்தி மார்க்கெட் சப் ஜெயில் ரோட்டில் தனியாக நடந்து சென்ற முதியவரை 3 சிறுவர்கள் தாக்கி வழிப்பறி.
- முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, என்எஸ்பி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடப்பதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் வியாபாரிகளை தாக்கி வழிப்பறி செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்தநிலையில் காந்தி மார்க்கெட் சப் ஜெயில் ரோட்டில் தனியாக நடந்து சென்ற முதியவரை 3 சிறுவர்கள் தாக்கி வழிப்பறி செய்யும் காட்சி வைரலாகி உள்ளது.
இந்த சம்பவம் கடந்த 4ம் தேதி மாலை 3 மணிக்கு நடந்துள்ளது. முதியவர் அப்பகுதியில் நடந்து செல்லும் போது மூன்று சிறுவர்கள் அவரை பின்தொடர்ந்து தாக்கி கீழே தள்ளி விடுகின்றனர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்து செல்கின்றனர்.
இந்த காட்சிகள் அங்குள்ள கடை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி வணிகர்கள் கூறும்போது, மாநகரில் கஞ்சா, போதை ஊசி மாத்திரை பழக்கத்துக்கு அடிமையாக்கி உள்ள சிறுவர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தர்மதுரை, இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, வால்டின் ஜோப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களை யாராவது கண்டித்தாலோ தட்டி கேட்டாலோ அவர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. ஆகவே போலீசார் இது போன்ற சமூக விரோத கும்பலை ஒடுக்கி, வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.






