என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கொடைக்கானல் மலைப்பகுதியில் அரியவகை பூச்செடிகள், தாவரங்கள், மரங்கள் உள்ளன.
- டிசம்பர், ஜனவரி மாதங்களில் பேர்டப் பேரடைஸ் எனப்படும் பறவைகள் சரணாலயம், செர்ரிமரம் ஆகியவை பூத்துக் குலுங்குவது வழக்கம்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது ஆப் சீசன் நடந்து வருகிறது. வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போதே நகர் பகுதியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் ஸ்டார், கிறிஸ்துமஸ் குடில்கள், பல்வேறு வண்ண அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட ஏராளமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால். தற்போதே பல்வேறு தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்துள்ளனர். அரையாண்டு விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அரியவகை பூச்செடிகள், தாவரங்கள், மரங்கள் உள்ளன. குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் பேர்டப் பேரடைஸ் எனப்படும் பறவைகள் சரணாலயம், செர்ரிமரம் ஆகியவை பூத்துக் குலுங்குவது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் சிலுவை வடிவிலான பூக்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன.
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் கொத்துக் கொத்துதாகபூத்துக் குலுங்கும் இப்பூக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
- எம்.எஸ்.யோக விக்னேஷ்வரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
- யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.க.விற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ்.யோக விக்னேஷ்வரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.வினோத்குமார் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை. எல்லைக்கல் தான்.
- மனுதாரர் உள்நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மனு மீது ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை தொடங்கியது.
நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் விசாரிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு உண்மையிலேயே தீர்வு காண வேண்டுமெனில் அமைதியாக இருங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதி மறுத்த நீதிபதிகள் அமைதியாக இருக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினர். வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதி கோரிய நிலையில் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.
தமிழக அரசு தரப்பு வாதத்தில்,
ஆண்டுதோறும் கார்த்திகை தினத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளே இந்தாண்டும் திருப்பரங்குன்றத்தில் பின்பற்றப்பட்டது. வழக்கம்போல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இந்தாண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கோவில் நிர்வாகத்தில் தொடர்பில்லா ஒருவர் தாக்கல் செய்த மனுவை பொதுநல வழக்கு போல் பாவித்து தனிநீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். கோவில் நிர்வாகத்தில் தொடர்பில்லாதவரின் மனுவை விசாரித்து அதன் மூலம் கோவில் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவிட இயலாது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை. எல்லைக்கல் தான். 73 ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் ஒரு இடத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை தினத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளே இந்தாண்டும் திருப்பரங்குன்றத்தில் பின்பற்றப்பட்டது. வழக்கம்போல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இந்தாண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் 1912-க்கு பின்னர் இருமுறை மதப்பிரச்சனை எழுந்துள்ளது.
இந்தாண்டு தனிநீதிபதி மலை மீது தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தபோது நிலவிய சீரற்ற நிலைமையை சீர் செய்யவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தனிநபர் தீபமேற்ற முடியாது. சிக்கந்தர் தர்கா அருகில் உள்ளது தீபத்தூண் அல்ல.
மனுதாரர் உள்நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம் என்பது அழுத்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டது.
உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள தீபத்தூணில் தான் ஏற்றுவது வழக்கம். திருப்பரங்குன்றத்தில் தேவஸ்தானமே தீபம் ஏற்ற முடியும் என்று அரசு தரப்பில் விவாதம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலையில் சர்வே நடத்தியதில் தீபத்தூண் தான் என உறுதி செய்தீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மலையில் உள்ள நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானவை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.
- தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது.
சர்வதேச அளவில் உண்மையான பொருட்களை அங்கீகரித்து சந்தைப்படுத்த புவிசார் குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் 1999-ம் ஆண்டு இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு புவிசார் குறியீடு (GI) வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வரை, 658 பொருட்கள், இலட்சினைக்களுக்கு GI வழங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் பூர்வீகத்தையும், அதன் சிறப்புத் தன்மையையும் உலகறியச் செய்து, அதைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்.
புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் . புவிசார் குறியீடு பெரும் பொருட்களுக்கான உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், அத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான பொருளாதார தேவையும் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

பண்ருட்டி பலாப்பழம் - கும்பகோண வெற்றிலை
தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு சிறப்பான உற்பத்தி, கைவினை அல்லது விவசாயப் பொருட்கள் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகும் மொத்தம் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருந்தது. சமீபத்தில், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 74-ஐ எட்டியுள்ளது.
இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற சில முக்கிய பொருட்கள்: பண்ருட்டி பலாப்பழம், கும்பகோண வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வற்றல் மிளகாய், உறையூர் பருத்தி சேலைகள், தூயமல்லி அரிசி போன்ற பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு - மாவட்டம்
ஈத்தாமொழி நெட்டைத் தேங்காய் - கன்னியாகுமாரி
நீலகிரி டீ - நீலகிரி
விருப்பாச்சி வாழை - திண்டுக்கல்
சிறுமலை மலை வாழைப்பழம் - திண்டுக்கல்
ஈரோடு மஞ்சள் -ஈரோடு
மதுரை மல்லி - மதுரை
கொடைக்கானல் மலை பூண்டு - திண்டுக்கல்
கன்னியாகுமரி கிராம்பு - கன்னியாகுமரி
ராமநாதபுரம் குண்டு மிளகாய் - ராமநாதபுரம்
வேலூர் முள் கத்திரிக்காய் - வேலூர்
ஆத்தூர் வெற்றிலை - தூத்துக்குடி
கம்பம் பன்னீர் திராட்சை - தேனி
சோழவந்தான் வெற்றிலை - மதுரை
மட்டி வாழைப்பழம் - கன்னியாகுமரி
மதுரை மரிக்கொழுந்து - மதுரை
கும்பகோணம் வெற்றிலை - தஞ்சாவூர்
பண்ருட்டி பலாப்பழம் - பண்ருட்டி
பண்ரூட்டி முந்திரி - பண்ருட்டி
புளியங்குடி எலுமிச்சை - தென்காசி
சம்பா மிளங்காய் வந்தல் - விருதுநகர்
சிட்டிகுளம் சின்ன வெங்காயம் - பெரம்பலூர்
சித்திரை கார் அரிசி - ராமநாதபுரம்
ஸ்ரீவில்லுபுத்தூர் பால்கோவா - விருதுநகர்
கோவில்பட்டி கடலை மிட்டாய் - தூத்துக்குடி
பழனி பஞ்சாமிர்தம் - திண்டுக்கல்
மணப்பாறை முறுக்கு - திருச்சி
ஊட்டி வர்க்கி - நீலகிரி
உடன்குடி பனங்கருப்பட்டி - தூத்துக்குடி
சேலம் ஜவ்வரிசி - சேலம்
மார்த்தாண்டம் தேன் - கன்னியாகுமரி
சேலம் சுங்குடி - சேலம்
காஞ்சிபுரம் பட்டு - காஞ்சிபுரம்
பவானி ஜமக்காளம் - ஈரோடு
மதுரை சுங்குடி - மதுரை
தஞ்சாவூர் ஓவியம் - தஞ்சாவூர்
தஞ்சாவூர் கலைத்தட்டு - தஞ்சாவூர்
சுவாமிமலை வெண்கலக் சின்னங்கள் - தஞ்சாவூர்
நாகர்கோவில் கோவில் நகைகள் - கன்னியாகுமரி
ஆரணி பட்டு - திருவண்ணாமலை
கோவை கோரா பருத்தி - கோயம்புத்தூர்
சேலம் பட்டு - சேலம்
தஞ்சை தலையாட்டி பொம்மை - தஞ்சாவூர்
தோடா பூந்தையல் - நீலகிரி
பத்தமடைப் பாய் - திருநெல்வேலி
நாச்சியார்கோவில் குத்துவிளக்கு - தஞ்சாவூர்
செட்டிநாடு கொட்டான் - சிவகங்கை
தஞ்சாவூர் வீணை - தஞ்சாவூர்
கண்டாங்கி சேலை - சிவகங்கை
தஞ்சாவூர் நெட்டி சேலை - தஞ்சாவூர்
மாமல்லபுரம் கல் சிற்பங்கள் - செங்கல்பட்டு
அரும்பாவூர் மரச்சிற்பம் - பெரம்பலூர்
திருபுவனம் பட்டுப் புடவை - தஞ்சாவூர்
தஞ்சாவூர் கலைத்தட்டு லோகோ - தஞ்சாவூர்
சுவாமிமலை வெண்கலச் சின்னம் லோகோ - தஞ்சாவூர்
நாகர்கோவில் கோவில் நகை லோகோ - கன்னியாகுமரி
கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் - அரியலூர்
கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் - கள்ளக்குறிச்சி
நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் - தஞ்சாவூர்
திண்டுக்கல் பூட்டு - திண்டுக்கல்
மைலாடி கல் சிற்பம் - கன்னியாகுமரி
மானாமதுரை மண்பாண்டம் - சிவகங்கை
தைக்கால் பிரம்பு கைவினைப் பொருட்கள் - மயிலாடுதுறை
ஜடேரி நாமக்கட்டி - திருவண்ணாமலை
நெகமம் காட்டன் சேலை - கோயம்புத்தூர்
செடிபுட்டா சேலை - திருநெல்வேலி
விளாச்சேரி களிமண் பொம்மை - மதுரை
தோவாளை மாணிக்க மாலை - கன்னியாகுமரி
கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் - கோயம்புத்தூர்
கிழக்கிந்திய தோல் பொருட்கள் - திருச்சி
உறையூர் பருத்தி சேலை - திருச்சி
கவிந்தபாடி நாட்டு சர்க்கரை - ஈரோடு
நாமக்கல் மாக்கல் பாத்திரங்கள் - நாமக்கல்
பாரம்பரிய தூயமல்லி அரிசி - தஞ்சாவூர்
அம்பாசமுத்திரம் சொப்பு சாமான் - திருநெல்வேலி
- திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
- நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இன்று 76-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது.
- அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய ரேசன் கடைகளை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ரேசன் கார்டுதாரருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் சரியான நேரத்தில் அறிவித்து வருகிறார். குறை எதுவும் இல்லாத ஆட்சியை அவர் நடத்தி வருகிறார்.
2026 தேர்தலில் 210 தொகுதிகளில் பெற்றி பெறுவோம் என அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு போட்டியிடுவதற்கு அவர்களுக்கு இடம் இல்லை. அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது. அவ்வாறு உள்ள நிலையில் இவர்கள் எப்படி 210 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்? தி.மு.க. ஆட்சி காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊராட்சி துறையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முழுவதும் 22 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 2 லட்சம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. பழைய வீடுகளுக்கு பதிலாக 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க. எதுவும் செய்யவில்லை. 20 ஆண்டு காலமாக பழுது நீக்காமல் இருந்த வீடுகள் எல்லாம் ரூ.2 ஆயிரம் கோடியில் பழுது நீக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய வீட்டில் வசித்த மக்கள் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு காலனியிலும் எவ்வளவு வீடு பழுது பார்க்கப்பட்டுள்ளது, மக்கள் எப்படி வாழ்ந்து வருகின்றனர் என்பதை அ.தி.மு.க.வினர் விசாரிக்க வேண்டும். நாங்கள் எந்த திட்டத்துக்கும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலை பார்க்கவில்லை. தேர்தலுக்காக லேப்டாப் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறுகின்றனர். சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பைத்தான் நிறைவேற்றி வருகிறோம். விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் பணம் வீடு தேடி வரும். விடுபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முதலமைச்சர் தயாராக உள்ளார் என்றார்.
- ரம்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- 3-வது மாதம் என்பதால் வழக்கம் போல் தனியார் ஸ்கேன் மையத்திற்கு ரம்யாவை அழைத்து சென்றுள்ளனர்.
ஏரியூர்:
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி ரம்யா (வயது 26). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார். கடந்த 1-ந் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களை நம்ப வைத்துள்ளார்.
இந்த நிலையில் ரம்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையில் ரம்யாவிற்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அவரது கணவர் கண்ணன் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பரிசோதிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
அதன்படி சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த நர்சு சுகன்யா (35), புரோக்கர் வனிதா (35) ஆகியோருடன் சேர்ந்து ஸ்கேன் மூலம் ரம்யாவுக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டு உள்ளார். இதையடுத்து 3-வது மாதம் என்பதால் வழக்கம் போல் தனியார் ஸ்கேன் மையத்திற்கு ரம்யாவை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் பரிசோதிக்கப்பட்டதில், அவருக்கு 3-வதும் பெண் குழந்தை என்பதை நர்சு சுகன்யா உறுதிப்படுத்தி கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து நர்சு சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகியோருடன் சேர்ந்து ரம்யாவிற்கு வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்திட கண்ணன் திட்டமிட்டு உள்ளார். அதன்படி வீட்டில் கருக்கலைப்பின்போது ரம்யாவிற்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மாடிப்படியில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்து காயம் அடைந்து விட்டதாக கூறி உள்ளனர். இதையடுத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியபோது வழியில் கர்ப்பிணி இறந்து விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக ரம்யாவின் கணவர் கண்ணன், நர்சு சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகிய 3 பேரையும் கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
- பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார்.
வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வரும் அமித்ஷா கூட்டணி விரிவாக்கம், தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தமிழகம் வரும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் கூற வாய்ப்பு உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த அதே நேரத்தில், வெள்ளி விலையும் அசூர வேகத்தில் அதிகரித்தது. கடந்த அக்டோபர் மாதம் வரை 'கிடுகிடு'வென உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை கடந்த மாதம் சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை இருக்கிறது.
அந்த வகையில் தங்கம் விலை ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் அப்படியே இருந்து வருகிறது. வெள்ளி விலையோ, 'டாப் கியர்' போட்டு பறக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் அதிகரித்திருந்த சூழலில், நேற்றும் விலை உயர்ந்து காணப்பட்டதை பார்க்க முடிந்தது.
நேற்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இது, இதுவரை இல்லாத புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனதுதான் உச்சபட்சமாக இருந்தது. தற்போது அதனை தாண்டி, வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
வெள்ளி ஆபரண உலோகமாக மட்டுமல்லாமல், தொழில்துறை தேவை சார்ந்த உலோகமாக அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து வருகிறது.
தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.215-க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,400
10-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,240
09-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-12-2025- ஒரு கிராம் ரூ.209
10-12-2025- ஒரு கிராம் ரூ.207
09-12-2025- ஒரு கிராம் ரூ.199
08-12-2025- ஒரு கிராம் ரூ.198
07-12-2025- ஒரு கிராம் ரூ.199
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- போலீஸ் குடியிருப்புகள், சரண்யா நகர், சர்மா நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.12.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
குன்றத்தூர்: திருநீர்மலை மெயின் ரோடு, மகா நகர், குன்றத்தூர் கோவில் வேவ் , போலீஸ் குடியிருப்புகள், சரண்யா நகர், ஏஆர் எடைபாலம், சர்மா நகர், மேத்தா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
- விளையாட்டில் பெண்கள் முத்திரை பதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக வயதான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
சென்னை:
தமிழக அரசின் 'விடியல் பயணம்' திட்டத்தின் கீழ் சராசரியாக தினந்தோறும் 57 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.888 போக்குவரத்து செலவு மிச்சமாகிறது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை போன்று பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்காக சமூக நலத்துறை சார்பில் குறைந்த வாடகையில் நவீன வசதிகளுடன் 'தோழி விடுதி' என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.
சென்னை, ஓசூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் தோழி விடுதி இயங்கி வருகிறது. விளையாட்டிலும் பெண்கள் முத்திரை பதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று பெண்களின் முன்னேற்றத்துக்காக கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி, கடன் உதவி, பெண் தொழில் முனைவோர் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக வயதான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணியளவில் நடைபெறுகிறது.
விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
இதில் சமூக சேவகியான 'பத்மஸ்ரீ' விருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், 2022-ம் ஆண்டு சீனாவில் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய துளசிமதி முருகேசன் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள், முக்கிய பெண் பிரபலங்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
- குளிர் அதிகமாக இருக்கும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும்.
- 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இதமான குளிர்காற்று ஊடுருவி இதமான சூழலை ஏற்படுத்தும். அந்த வகையில் வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக, வறண்ட வாடை காற்றின் ஊடுருவல் தென் இந்திய பகுதிகளில் வலுவடைந்து இருக்கிறது.
இந்த தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் குளிர் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஆகிய 4 நாட்களுக்கு இரவு, அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரித்து குளிரும் வாட்டி வதைக்கும், பனிமூட்டமும் உருவாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் 18 செல்சியஸ் அதாவது 64.4 டிகிரி முதல் 21 செல்சியஸ் (69.8 டிகிரி) வரையிலும், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் 16 செல்சியஸ் (60.8 டிகிரி) முதல் 18 செல்சியஸ் (64.4 டிகிரி) வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை காணப்படும். அதாவது குளிர் அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும் என்றும் மேலும் அவர் கூறினார்.
இதுதவிர நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 செல்சியஸ் (46.4 டிகிரி) முதல் 10 செல்சியஸ் (50 டிகிரி) வரை இருக்கும் எனவும், சில இடங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.






