என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
    • புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.

    சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட 2ம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் பேசிய பெண்களின் பேச்சை கேட்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.

    வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் உள்ளத்தில் இருந்து பேசிய அனைவருக்கும் நன்றி.

    தனது 100 வயதில் பொது வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் கிருஷ்ணம்மாள்.

    2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் முன்னோடி திட்டங்களை செயல்படுத்த தொடங்கினேன்.

    நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்று உள்ளது. வரலாற்றை திருத்தி எழுதக் கூடிய திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது.

    திராவிட மாடல் அரசின் பல்வேறு அரசுத்திட்டங்களால் பலர் பயன் அடைந்து வெற்றி பெற்றுள்ளனர்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வெற்றியின் உச்சம் அண்டை மாநிலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தான்.

    மகாராஷ்டிரா, சத்தீர்கர், கர்நாடகா உள்பட 10 மாநிலங்களில் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்டம்.
    • விடுபட்ட மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்டம் 2ம் கட்ட விரிவாக்கம்.

    தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் தற்போது ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை பெறுகின்றனர்.

    இதில், விடுபட்ட மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்டம் 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தால் மேலும் 17 லட்சம் பேர் உரிமைத்தொகையை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • போட் கிளப் நிலையம் நோக்கி அதன் இரண்டாவது சுரங்கம் அமைக்கும் பணியை இன்று தொடங்கியது.

    மயில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்கா நிலையம்- போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    "மயில்" சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் UG-01 மற்றும் UG-02 என இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 4 கி.மீ. இரட்டை சுரங்கப்பாதைகளைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இரு திசைகளிலும் தோராயமாக 16 கி.மீ. நீளத்தில் மொத்த சுரங்கப்பாதையை முடிக்க, 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    வழித்தடம் 4-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில் பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரையிலான (downline) 1898 மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை இன்று 12.12.2025 தொடங்கியுள்ளது.

    இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன் (கட்டுமானம்), பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் குழுத் தலைவர் திரு.சி.முருகமூர்த்தி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம், பொது ஆலோசகர்கள், AEON கன்சோர்டியம் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.

    இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் "மயில்", முதலில் வழித்தடம்-4-ல் மே 02, 2024 அன்று பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நிலையம் நோக்கி சுரங்கம் தோண்டும் பணியயை தொடங்கி, 2 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஆற்காடு சாலையில் மீனாட்சி கல்லூரிக்கு அருகில் கோடம்பாக்கம் நிலையத்தை 23.07.2025 அன்று வந்தடைந்தது.

    அந்த துளையிடும் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அது பயன்பாட்டில் உள்ள இரயில் பாதைக்கு இணையாக சுரங்கப்பாதையை துளையிட வேண்டியிருந்தது.

    இதனை தொடர்ந்து, சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில், கோடம்பாக்கம் நிலையத்தில் பிரித்தெடுக்கப்பட்டு, மீண்டும் பனகல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பனகல் பூங்கா நிலையத்தில் மறுசீரமைக்கப்பட்டது. பின்னர் இது போட் கிளப் நிலையம் நோக்கி அதன் இரண்டாவது சுரங்கம் அமைக்கும் பணியை இன்று தொடங்கியது.

    இந்தப் பிரிவில் இரட்டை சுரங்கப்பாதைகளில் ஒரு சுரங்கப்பாதையை அமைப்பதற்காக தொடங்கப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் இதுவாகும். இந்தச் சுரங்கப்பணியில் குறிப்பிடத்தக்க பொறியியல் சவால்கள் அடங்கும். குறிப்பாக, நந்தனம் மெட்ரோ நிலையம் அருகே ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் முதல் கட்ட மெட்ரோ சுரங்கப்பாதைகளுக்கு அடியில் சுரங்கம் தோண்ட வேண்டியுள்ளது. இந்த சுரங்கப் பாதை, தரை மட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 30.2 மீட்டர் (100 அடி) ஆழம் வரை செல்கிறது.

    சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில் வழித்தடம்-4-ல் (Down Line) பனகல் பூங்காவிலிருந்து நந்தனத்தை நோக்கி நகர்ந்து, இறுதியாக போட் கிளப் நிலையத்தை வந்தடையும். இந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணியானது நவம்பர் 2026-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
    • "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு கர்நாடகா அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு, இன்றைய தினம் அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

    தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பொம்மை முதல்வர் மு.க.ஸடாலின்-ன் தலைமையிலான விடியா திமுக அரசு தமிழகத்தின் சார்பில் வலிமையான வாதங்களை வழக்கறிஞர்கள் மூலம் எடுத்து வைக்காமல், "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

    திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது. திமுக தலைமை தங்களுடைய சுயநலத்திற்காக, தங்களின் குடும்பத் தொழிலை பாதுகாக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுக-வின் இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

    இனியாவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக ஆட்சி இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இரண்டாம் கட்ட உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்.
    • எஞ்சிய மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை தருவது மக்கள் மீதான அக்களையால் இல்லை தேர்தல் நாடகம்.

    சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே எஞ்சிய மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை தரப்படுவதாக அதிமுக விமர்சித்துள்ளது.

    இதுகுறித்து அதிமுக சார்பில் வௌியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம் என அடிக்கடி முழங்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!

    எப்போது கொடுத்தீர்கள்.?

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்துதான் உரிமைத்தொகை கொடுத்தீர்கள்.

    இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு என அறிவித்துவிட்டு அதிலும் 13 லட்சம் பேரை தவிர்த்துவிட்டு 17 லட்சம் பேருக்கு மட்டும் விதிகளைத் தளர்த்தி உரிமைத்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளீர்கள்.

    இது இன்னும் எவ்வளவு மாதம் கொடுக்க முடியும்? வெறும் நான்கு மாதங்கள் மட்டும்தான், அப்படியென்றால் மீதமுள்ள 56 மாதங்களுக்கான உரிமைத்தொகை?

    தற்போதும் விடியா திமுக அரசு குடும்பத்தலைவிகளின் கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் விதியைத் தளர்த்தி ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.

    அனைத்தும் தேர்தலை மனதில் வைத்து தான்,மக்கள் மீதுள்ள அக்கறையினால் அல்ல. உங்கள் நாடகம் மக்கள் அறியாமல் இல்லை. உங்களுக்கான முடிவுரையை மக்கள் எழுதாமல் இருக்கப் போவதும் இல்லை.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விளையாட்டில் பெண்கள் முத்திரை பதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக வயதான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    தமிழக அரசின் 'விடியல் பயணம்' திட்டத்தின் கீழ் சராசரியாக தினந்தோறும் 57 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.888 போக்குவரத்து செலவு மிச்சமாகிறது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை போன்று பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது.

    தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்காக சமூக நலத்துறை சார்பில் குறைந்த வாடகையில் நவீன வசதிகளுடன் 'தோழி விடுதி' என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.

    சென்னை, ஓசூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் தோழி விடுதி இயங்கி வருகிறது. விளையாட்டிலும் பெண்கள் முத்திரை பதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோன்று பெண்களின் முன்னேற்றத்துக்காக கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி, கடன் உதவி, பெண் தொழில் முனைவோர் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக வயதான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை தொடங்கியது.

    விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

    இதில் சமூக சேவகியான 'பத்மஸ்ரீ' விருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், 2022-ம் ஆண்டு சீனாவில் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய துளசிமதி முருகேசன் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள், முக்கிய பெண் பிரபலங்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டடமலையில் அமைந்துள்ளது.
    • இந்த நிகழ்வில் வேலு ஆசான் உடன் 100-க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் பறை இசைத்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டடமலையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் புதிதாக துவங்கியுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை தமிழக ஆளுநர் ரவி இன்று திறந்து வைத்தார்.

    திறப்பு விழாவுக்கு வந்த ஆளுநர் ரவியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்தரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    இந்த நிகழ்வில் வேலு ஆசான் உடன் 100-க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் பறை இசைத்தனர்.

    இதன்பின் ஆளுநர் ஆர்.என்.ரவி பறையை இசைத்தார். பின்னர் பண்பாட்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி ஆளுநர் ரவி திறந்து வைத்தார்.

    இந்த நிலவில் பேசிய அவர் பறை இசை பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்றும் பறை இசை குறித்து ஆய்வு படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியறுத்தினார்.

    • தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு இருப்பது குடும்ப தலைவிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    • தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு போட்டியாக வெள்ளியின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் தங்கம் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்து அவ்வப்போது வரலாற்று சாதனை படைத்து வருகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.57,200-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு பவுன் தங்கம் அதிகபட்சமாக ரூ.97,360க்கு விற்கப்பட்டது. இதையடுத்து தங்கம் விலை தீபாவளிக்குள் பவுன் ரூ.1 லட்சத்தை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கம் விலை அதற்கு பிறகு உயரவில்லை.

    தீபாவளி பண்டிகைக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறையத் தொடங்கியது. தீபாவளி பண்டிகை முடிந்த சில நாட்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.90 ஆயிரமாக குறைந்தது. இதனால் பெண்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    ஒரு மாதத்துக்கும் மேலாகவே தங்கம் விலை பவுன் ரூ.90 ஆயிரம் என்ற அளவிலேயே சற்று ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. கடந்த மாதம் 5-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.89,080-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு விலை அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தங்கம் விலையில் திடீர் உயர்வு காணப்பட்டது. தினமும் விலை உயர்ந்து வந்தது. சென்னையில் கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.96 ஆயிரமாக அதிகரித்தது. மறுநாள் 6-ந்தேதி ரூ.96,320 ஆக அதிகரித்தது. 3 நாட்கள் அதே விலையில் நீடித்தது.

    கடந்த 9-ந்தேதி மீண்டும் பவுன் ரூ.96 ஆயிரமாக குறைந்தது. அதன் பிறகு நேற்று முன்தினம் முதல் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.96,240 ஆக அதிகரித்தது. நேற்று மேலும் உயர்ந்து ரூ.96,400-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று புதிய உச்சம் தொட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.98 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக தங்கம் ரூ.98 ஆயிரத்தை எட்டிப்பிடித்துள்ளது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்து உள்ளது.நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,050-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.12,250-க்கு விற்கப்படுகிறது.

    இந்நிலையில் இன்று 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.120 உயர்ந்து ரூ.12,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து 98,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு இருப்பது குடும்ப தலைவிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ஒரு கிராம் தங்கம் ரூ.250-ம், ஒரு பவுன் ரூ.2 ஆயிரமும் அதிகரித்து உள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டிவிடும் என்று கருதப்ப டுகிறது.

    தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு போட்டியாக வெள்ளியின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கடந்த 5-ந்தேதி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.196 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1 லட்சத்து 96 ஆகவும் இருந்தது. பின்னர் அது படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.209 ஆகவும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் ஆகவும் இருந்தது.

    இன்று ஒரு கிராம் வெள்ளி மேலும் ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.216 ஆகவும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ஆகவும் அதிகரித்து உள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.19-ம், ஒரு கிலோ ரூ.19 ஆயிரமும் அதிகரித்து உள்ளது.

    • முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவையின் முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
    • தலைவர் கலைஞர் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டு நட்பு பாராட்டிய அவரது மறைவு வேதனையைத் தருகிறது.

    சென்னை:

    முன்னாள் ஒன்றிய உள்துறை மந்திரியும், மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவையின் முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். பொதுவாழ்வில் அரைநூற்றாண்டுகால அனுபவம் கொண்ட அவர், மக்களவைத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் தமது கடமையைத் திறம்பட ஆற்றியவர்.

    தலைவர் கலைஞர் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டு நட்பு பாராட்டிய அவரது மறைவு வேதனையைத் தருகிறது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • குறிப்பாக சிவப்பு நிற இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
    • கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.40 ஆக இருந்த ஒரு இளநீர் விலை படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.23-க்கு குறைந்து விட்டது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 55 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

    பொள்ளாச்சி இளநீருக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

    பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி மதுரை, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், மகாராஷ்டிரா, அசாம், அரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக சிவப்பு நிற இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.40 ஆக இருந்த ஒரு இளநீர் விலை படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.23-க்கு குறைந்து விட்டது. இவ்வாறு விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இதுகுறித்து இளநீர் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

    இளநீர்விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீர் டிசம்பர் 8-ந்தேதி முதல் ரூ.23 ஆகவும், ஒரு டன் இளநீரின் விலை ரூ.10 ஆயிரம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வடமாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் குளிர்ந்த தட்ப வெப்பநிலை நிலவுவதாலும், பொள்ளாச்சி பகுதியில் பரவலாக மழை பெய்ததாலும், இளநீர் வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதன் காரணமாகவும் இந்த வாரம் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்றார். 

    • தமிழகத்தில் 1 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய நிலைமை இருக்கிறது.
    • மக்கள் ஆதரவே இல்லாத மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர்கள் எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை.

    தூத்துக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.

    பின்னர் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குளிர்கால கூட்டத்தொடர் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்திருக்கிறோம். வாக்கு திருட்டு பீகாரிலேயே பா.ஜ.க. அணியினருக்கு வெற்றி வாகையை தந்திருக்கிறது. 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 47 லட்சம் பேரும் அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவியவர்களா என்றால் இல்லை. ஒருவர் கூட அப்படி இல்லை என்பதுதான் வேதனைக்குரியது.

    இந்த நாட்டின் மக்களின் வாக்குரிமை பறிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை அமைந்துள்ளது. அவர்களுடைய நோக்கம் என்னவென்று விளங்கவில்லை. எஸ்.ஐ.ஆர். திருத்தத்தை பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது.

    தமிழகத்தில் 1 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. அந்த 1 கோடி பேர் வாக்குரிமையை பறி கொடுப்பதோடு குடியுரிமையையும் பறிகொடுக்கக் கூடிய அச்சம் ஏற்படுகிறது. தேர்தல் ஆணையம் பா.ஜ.க. அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது. சுதந்திரமாக இயங்க முடியாத நிலை இருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட மக்களவையில் பதிவு செய்திருக்கிறோம்.

    ஆனால் ஆளுங்கட்சி அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலை அளிக்கிறது. குடிமக்களின் வாக்குரிமை மட்டுமின்றி குடியுரிமையும் பறிக்கக்கூடிய ஆபத்தான அரசியல் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. நாடு எந்த திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று கவலை மேலோங்கி உள்ளது.

    பீகாரில் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்றது போல் தமிழகத்திலும் வெற்றி பெறுவதற்கு சதி திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அமித்ஷா மக்களவையிலேயே உரத்து பேசுகிறார். தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம் என்பது விதைக்காமல் அறுவடை செய்கிற ஒரு முயற்சி அது.

    மக்கள் ஆதரவே இல்லாத மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர்கள் எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை. எனவே வாக்கு திருட்டு என்பதை மட்டுமே மூலதனமாக வைத்து எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் மூலம் எதிர்ப்பு வாக்குகளை எல்லாம் பட்டியலில் இருந்து வெளியேற்றிவிட்டு அவர்கள் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டியது, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். குடிமக்களின் கடமையாகும் என்றார். 

    • இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
    • திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது.

    இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ந்தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.

    இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராம கிருஷ்ணன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

    அதன்படி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை 10:30 மணி அளவில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது சில வக்கீல்கள் ஆஜராகி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த கோர்ட்டு வழங்கிய அவகாசம் நிறைவடைந்து விட்டது என்றனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரையில் அனைவரும் அமைதியை காக்கும் பட்சத்தில் உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என கருத்து தெரிவித்தனர்.

    பின்னர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தன.

    அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் கோவில் மிகவும் பழமையானது பல ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டு வரும் இடத்தில் தான் இந்த ஆண்டும் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்றப்பட்டு உள்ளது. இதே பகுதியில் மலை மீது சிக்கந்தர் தர்காவும் உள்ளது. மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனிநபர் விடுத்த கோரிக்கையை ஏற்புடையதல்ல என்பதால் அவர்களுடைய மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு எதிராக அவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த வழக்கு பொதுநல மனுவை போல விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ராம ரவிக்குமார் மனுவின் அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட இயலாது. இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட கலெக்டர் பிறப்பித்து இருந்தார். சிலர் சிக்கந்தர் தர்காவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று துண்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். அந்த தர்காவின் அருகில் உள்ள தூண் தீபத்தூண் அல்ல. இதன் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.

    அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இவ்வாறு விவாதம் நடந்து வருகிறது.

    ×