என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு சாமி ஊர்வலம் சென்றது.
- பட்டாசு வெடித்து சிதறியதில் செல்வராஜ் உள்பட 8 பேர் சிக்கிக் கொண்டனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து வருகிறது. இந்த விழாவில் 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் கஞ்சநாயக்கன்பட்டி, பூசாரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு இருந்தது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே ஒவ்வொரு கிராம மக்கள் மட்டும் அல்லாமல் தனிப்பட்ட குழுவாகவும் பட்டாசுகள் வாங்கி கோவில் விழாவில் ஆங்காங்கே மக்கள் வெடிப்பார்கள்.
அந்த வகையில் கஞ்சநாயக்கன்பட்டி பக்கத்து ஊரான கோட்டமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ், லோகநாதன் உள்பட 3 பேர் தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டிக்கு சென்று பட்டாசுகளை வாங்கியதாக தெரிகிறது. அந்த பட்டாசுகளை ஒரு மூட்டையில் கட்டி மொபட்டில் கஞ்சநாயக்கன்பட்டிக்கு கொண்டு வந்தனர்.
பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு சாமி ஊர்வலம் சென்றது. அப்போது மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன. இந்த நிலையில் சாலையோரம் பற்றி எரிந்த தீயில், செல்வராஜ் சென்ற மொபட் பட்டாசுகளுடன் திடீரென நிலைதடுமாறி சாய்ந்து விழுந்தது.
இதில் மூட்டையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பட்டாசு வெடித்து சிதறியதில் செல்வராஜ் உள்பட 8 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் செல்வராஜ் மற்றும் 12 வயது சிறுவன் உள்பட 4 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடல் சிதறி பலியான 4 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
- 2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கிலும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்த உள்ளார்.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத் தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதில் ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கு இன்றும், கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான கருத்தரங்கு நாளையும் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கோவையில் முகாமிட்டு செய்து வருகிறார்.
கருத்தரங்கில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு கோவை வருகிறார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க உள்ளனர். அதை ஏற்றுக் கொள்ளும் அவர், கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
அதன்பிறகு அவர் மதியம் 3 மணிக்கு கருத்தரங்கு நடைபெறும் இடத்துக்கு காரில் செல்கிறார். அங்கு அவர், கருத்தரங்கில் பங்கேற்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு நடைபெறும் கருத்தரங்கிலும் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார். இதனிடையே, இன்று கோவை வரும் விஜய் ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கிலும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த கருத்தரங்கில் த.வெ.க.வை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதற்காக முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறும்போது, கோவையில் 2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் தலா 8 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இதில் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது.
12 ஆண்டுகளுக்கு பிறகு கருத்தரங்கில் பங்கேற்க தலைவர் விஜய் இன்று கோவை விமான நிலையம் வருவதால், அங்கு அவரை வரவேற்க நிர்வாகிகள் திரண்டு வர வேண்டும் என்றனர்.
- மலர் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் மே மாதம் 3-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பல்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது.
- ஊட்டிக்கு கூடுதலாக 500 சுற்றுலா வாகனங்களுக்கும், கொடைக்கானலுக்கு கூடுதலாக 300 வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கலாம்.
சென்னை:
ஊட்டி, கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் வருவதால் உள்ளூர் மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகினர். வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறையை கட்டாயமாக்கி உத்தரவிட்டனர்.
இதற்கு எதிரான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி காட்சி வாயிலாக ஆஜரான நீலகிரி கூடுதல் கலெக்டர், கோடை காலத்தில் ஊட்டியில் மலர், பழம், காய்கறி, ரோஜா கண்காட்சிகள் நடைபெறும். அதனால், சுற்றுலா வாகனங்களுக்கு கூடுதல் அனுமதி வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும், கல்லூரி, பள்ளி மாணவர்களின் கல்விச்சுற்றுலா வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கும் முறையில் முன்னுரிமை வழங்கவேண்டும்.
மலர் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் மே மாதம் 3-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பல்வேறு தேதிகளில் நடைபெற உள்ளதால், இந்த கண்காட்சிகள் நடைபெறும் தினங்களில் மட்டும், ஊட்டிக்கு கூடுதலாக 500 சுற்றுலா வாகனங்களுக்கும், கொடைக்கானலுக்கு கூடுதலாக 300 வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கலாம்.
வெளிமாவட்ட பதிவு எண்களை கொண்ட வாகனங்களை வைத்திருக்கும் உள்ளூர்வாசிகளிடம் முறையான ஆவணங்களை பெற்று பரிசோதித்து, உள்ளூர் வாகன இ-பாஸ் வழங்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
- மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
- நாள்தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது. சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த ரெயில் காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கி துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.
மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
பின்னர், கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர், இரவு கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நாள்தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் இயக்கப்படும் ஏ.சி. மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை - செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.45 மணிக்கு செல்லும் ஏ.சி. பெட்டி கொண்ட மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
சென்னை:
சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 43வது லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட தொடரை விட்டு வெளியேறிய சூழ்நிலை காணப்பட்டாலும், பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சற்றே இருக்கத்தான் செய்கிறது.
தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் நீடிக்கும் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் அதிக வெற்றிகளை பெறவேண்டும். இதனால் இரு அணிகளும் 20 புள்ளிகளைத் தாண்டினால் கீழ் வரிசையில் இருக்கும் அணிக்கு அது சாதகமாக மாறும்.
புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணி அதிக வெற்றியைப் பெறுவதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளைப் பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.
பெங்களூரு, மும்பை, பஞ்சாப், லக்னோ அணிகள் வரும் போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவ வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, சிஎஸ்கே அணி எஞ்சியுள்ள 5 போட்டிகளில் அதிக ரன் ரேட்டில் கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை அணி 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஐதராபாத் அணியின் ஹர்ஷல் படேல் அசத்தலாகப் பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் தொடர் தோல்வியின் எதிரொலியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடித்து வருகிறது.
குஜராத் முதல் இடத்திலும், டெல்லி 2வது இடத்திலும், பெங்களூரு 3வது இடத்திலும், மும்பை அணி 4வது இடத்திலும் நீடித்து வருகின்றனர்.
பஞ்சாப் 5வது இடத்திலும், லக்னோ 6வது இடத்திலும், கொல்கத்தா 7வது இடத்திலும், ஐதராபாத் 8வது இடத்திலும், ராஜஸ்தான் 9வது இடத்திலும் உள்ளனர்.
- முதலில் ஆடிய சி.எஸ்.கே. 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஐதராபாத் 155 ரன்கள் எடுத்து வென்றது.
சென்னை:
சேப்பாக்கத்தில் நடைபெற்ற 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த சென்னை அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு சென்னை அணி கேப்டன் தோனி பேசியதாவது:
நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். முதல் இன்னிங்சில் விக்கெட் சற்று சிறப்பாக இருந்தது. 154 ரன்கள் எடுத்தது போதுமான ஸ்கோராக இல்லை.
இரண்டாவது இன்னிங்சில் கொஞ்சம் உதவி இருந்தது. எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் தரம் இருந்தது. அவர்கள் சரியான பகுதிகளில் பந்து வீசினர். ஆனால் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக இருந்தோம்.
பிரேவிஸ் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார். மிடில் ஆர்டரில் எங்களுக்கு அது தேவைப்பட்டது என நினைக்கிறேன்.
சுழற்பந்து வீச்சாளர்கள் வரும்போது நாங்கள் சற்று சிரமப்பட்ட மிடில் ஆர்டரில் நமக்கு அது போன்ற பேட்ஸ்மேன் தேவை. பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்ய வேண்டும், அங்குதான் நாங்கள் பற்றாக்குறையாக இருக்கிறோம்.
இதுபோன்ற ஒரு போட்டியில் ஒன்று அல்லது இரண்டு பகுதிகள் இடைவெளிகளை அடைப்பது நல்லதுதான். பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படாதபோது மாற்றங்களைச் செய்யாமல் தொடர்ந்து முன்னேற முடியாது. நாங்கள் போதுமான ரன்களை பலகையில் வைக்கவில்லை என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சென்னை:
ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மாத்ரே 19 பந்தில் 30 ரன்கள் விளாசி அவுட்டானார். பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ், உனத்கட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 44 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட், அனிகெட் வர்மா தலா 19 ரன்கள் எடுத்தார்.
கமிந்து மெண்டிஸ், நிதிஷ்குமார் ரெட்டி ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், ஐதராபாத் 18.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ஐதராபாத் அணிக்கு கிடைத்த 3-வது வெற்றி ஆகும். சென்னை அணிக்கு கிடைத்த 7-வது தோல்வி இது.
- கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் மறைவையொட்டி நாளை அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
- உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று காலை தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நாளை அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாடிகன் வருகை தருகின்றனர்.
தற்போது போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பொதுமக்கள், உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவர்.
இந்நிலையில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் கோவா துணை சபாநாயகர் ஜோசுவா பீட்டர் டி சௌசா ஆகியோர் 2நாள் பயணமாக இன்று வாடிகன் கிளம்பியுள்ளனர். நாளை போப் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்துவார்கள்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் மறைவையொட்டி நாளை அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
இந்நிலையில், நாளைய தினம் (ஏப். 26) போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கையொட்டி தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அரசு நிகழ்ச்சிகள் கூடாது என உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
- கஸ்தூரி ரங்கன் (84) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
- சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது இன்று அவரது உயிர் பிரிந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் (84) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது இன்று அவரது உயிர் பிரிந்தது.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் இஸ்ரோ முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் கஸ்தூரி ரங்கன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன்.
விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் கஸ்தூரிரங்கன் அவர்கள் மிகச் சிறந்த அறிவியலாளராக இருத்ததோடு மட்டுமில்லாமல், மாநிலங்களவை உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் எனப் பல உயர்நிலைகளிலும் தனது அறிவாற்றலால் அப்பொறுப்புகளுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆந்திரா மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர் கணேச சர்மா டிராவிட்.
- ரிக், யஜூர், சாம வேதங்கள் மற்றும் சாஸ்திர படிப்புகளை படித்து புலமை பெற்றவர்.
காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதியாக 20 வயதான துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச சர்மா டிராவிட் தேர்வாகியுள்ளார்.
ஆந்திரா மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர் கணேச சர்மா டிராவிட்.
2006ல் வேதம் கற்க தொடங்கியதில் இருந்தே காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியை பெற்றவர்.
ரிக், யஜூர், சாம வேதங்கள் மற்றும் சாஸ்திர படிப்புகளை படித்து புலமை பெற்றவர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் கணேச சர்மா டிராவிட் பணிபுரிந்து வந்தவர்.
- மிரட்டல் அரசியல் பாஜகவின் டி.என்.ஏ.வில்தான் ஊறிக் கிடக்கிறது.
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டைத் துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார். இந்த மாாநாடு இன்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்'' எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். இதற்கு முன்பு ஆளுநர் ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற துணை வேந்தர்கள் இப்போது ஏன் பங்கேற்கவில்லை? இந்தக் கேள்விக்குப் பட்டம் படித்து மேதாவியாக இருக்க வேண்டியதில்லை.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததால், அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்குக் காலக்கெடு நிர்ணயித்த நீதிபதிகள், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தனர்.
இந்தத் தீர்ப்புக்கு பிறகுதான் தமிழ்நாடு அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டைத் துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பாகும்?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சட்டமும் துணை வேந்தர்களுக்குத் தெரிகிறது. ஆனால், எல்லாம் தெரிந்தும் ஆளுநர்தான் வீம்புக்கு அரசியல் செய்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சட்டத்துக்குப் புறம்பாகத் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டியிருக்கிறார்.
அதில் பங்கேற்பது சட்டத்திற்கு எதிராக அமையும் எனக் கருதி, துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஆளுநர் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள் என்றால், துணை வேந்தர்களும் அப்படியே நடக்க வேண்டுமா என்ன?
அண்மையில் கூட தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். அரசியல் செய்ய ஆசைப்பட்டால், ஆளுநர் ரவி அந்தப் பதவியில் போய் அமர்ந்திருக்கலாமே! எதற்கு ஊட்டிக்குப் போனார்?
அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித் துறை, என்.ஐ.ஏ. போன்ற அதிகார அமைப்புகளை வைத்துத்தான் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு எதையும் சட்ட ரீதியாகத்தான் எதிர்கொள்வோம். அப்படித்தான் மசோதாக்கள் விவகாரத்தில் வெற்றி பெற்றோம்.
ஆளுநர்கள் அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தராகச் செயல்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர்கள் இருப்பதைப் பற்றி அரசமைப்புச் சட்டத்தில் எதுவும் சொல்லவில்லை.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை எல்லாம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கும் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், குடியரசுத் துணை தலைவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு வந்திருக்கிறார் ஆளுநர் ரவி.
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போட்ட வழக்கு ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே! என அடிவயிறு எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு வைத்த மசோதாக்களால்தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அந்தத் தீர்ப்பை விமர்சிக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர். இவர் மேற்கு வங்க ஆளுநராக இருந்த போது முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை இந்த நாடு பார்த்தது. அவர் வழியொற்றி நடக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
"மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் பூஞ்சி கமிஷன் அறிக்கையின் படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது.
ஆனால், மன்மோகன் சிங் அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல; மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையும் ஆளுநராக நியமிக்கிறது" எனச் சொன்னவர் யார் தெரியுமா? குஜராத் முதல்வராக இருந்த மோடிதான்!
மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க.வுக்குப் பிடிக்காத, அவர்களை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம்தான் குடைச்சலைக் கொடுத்து கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது.
பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகளைத்தான் ஆளுநர்களாக மோடி நியமித்தார். மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்தபோதுதான் சசிகலாவை முதலமைச்சர் பதவி ஏற்கவிடாமல் எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் ஒன்றாகக் கைகோத்து இணைத்து வைத்தார்.
பன்வாரிலால் புரோகித்தையும் ஆர்.என்.ரவியையும் ஆளுநர்களாக நியமித்து தமிழக அரசுக்குக் குடைச்சலைக் கொடுத்தார்கள்.
மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில்தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டி.என்.ஏவில் இருக்கலாம்; துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டி.என்.ஏவில் இருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






