என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ராமனின் மோதிரத்தை அனுமன் சீதைக்கு காட்டியதை போல் வைகோவின் முகம் பதித்த மோதிரமே எனது அடையாளம்.
    • துரை வைகோ - மல்லை சத்யா விவகாரம் குறித்து பேச இன்று அவசரமாக ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூடுகிறது.

    ம.தி.மு.க.வில் துரை வைகோவின் ஆதரவாளர்கள், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு இடையே உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்து உள்ளார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு கூட்டம் இன்று கூடுகிறது.

    இந்த நிலையில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள பதிவில்,

    * ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சேனாதிபதி நான்.

    * ராமனின் மோதிரத்தை அனுமன் சீதைக்கு காட்டியதை போல் வைகோவின் முகம் பதித்த மோதிரமே எனது அடையாளம்.

    * வைகோ முகம் பதித்த மோதிரம், சட்டை பாக்கெட்டில் வைகோ புகைப்படம் இதுவே என் அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.

    மல்லை சத்யாவுக்கு எதிராகவே, கட்சி பதவியை துரை வைகோ துறந்ததாக கூறப்படும் நிலையில் இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

    துரை வைகோ - மல்லை சத்யா விவகாரம் குறித்து பேச இன்று அவசரமாக ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூடுகிறது.

    • யானையை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • தொரப்பள்ளி பஜாரில் உலா வந்த காட்டு யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி, முதுமலை புலிகள் காப்பகம் இணையும் பகுதியில், மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி பஜார் அமைந்து உள்ளது.

    இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். பொதுவாக இந்த சாலையில் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    இதன்காரணமாக ஊட்டிக்கு தாமதமாக வரும் சுற்றுலா பயணிகள் தொரப்பள்ளி பஜாரில் வாகனங்களை நிறுத்தி மறுநாள் காலை 6 மணி வரை காத்திருந்து பின்னர் புறப்பட்டு செல்வார்கள். மேலும் கனரக வாகன டிரைவர்கள் தொரப்பள்ளியில் வண்டியை நிறுத்திவிட்டு வாகனத்தில் படுத்து தூங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை நேற்று இரவு தொரப்பள்ளி பஜாருக்கு வந்தது. பின்னர் அந்த யானை அங்கு நின்றிருந்த வாகனங்களில், சாப்பிட எதாவது உள்ளதா என தேடிப்பார்த்தது.

    இதற்கிடையே தொரப்பள்ளி பஜாரில் யானையை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொரப்பள்ளி பஜாரில் உலா வந்த காட்டு யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர்.

    • மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.
    • மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலைகிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து ஆசனூர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வந்தது.

    நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதிப்பட்டு வந்தனர்.

    மூன்றாவது நாளாக இன்றும் மின்சாரம் இன்றி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கேர்மாளம், திங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட காடட்டி, சுஜில் கரை, கோட்டமாளம், பூதாளபுரம், தொட்டி என 50 மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.

    மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமலும் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு மின்சாரம் இல்லாததால் இயக்கப்படாததால் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    செல்போன் சார்ஜ் செய்ய முடியாமல் அவசர தேவைக்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின்கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறுகின்றனர்.

    எனவே மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
    • அந்த பகுதியில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன்தெரு, பனிக்கன்தெரு, காமாட்சி அம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கூறி அந்த பகுதி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.

    பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று குடிநீர் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.

    இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலரிடம் புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 4½ வயது பெண் குழந்தை மற்றும் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிர் இழந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணன் கூறுகையில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து இறந்ததாக கூறப்படும் 4½ வயது குழந்தை வண்ணாங்கோவில் பகுதியில் பாரம்பரிய முறையில் ஓதல், வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை வழங்கப்பட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் கோவில் திருவிழாவின்போது நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    மேலும் குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் எந்திரங்களை கொண்டு, குடிநீர் வினியோகம் செய்யும் குழாயில் ஆய்வு மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் வயிற்றுப்போக்கு உண்டான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மாநகராட்சி மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக்கெள்ளப்படுகிறது என்றார்.

    • மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்?
    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர்.

    மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்?

    இந்த பொம்மை முதலமைச்சரைப் பார்த்து நான் கேட்கிறேன்- அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா இல்லையா?

    ஆட்சிக்கு வருவதற்கு முன் மனுக்களை வாங்கி ஒரு பெட்டியில் போட்டார்; இதனை நான் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை என்றால் கோட்டைக்குள் வந்து என் கதவைத் தட்டிக் கேள்வி கேளுங்கள் என்றார். அந்த மனுக்களையே அவர் இன்னும் நிறைவேற்றிய பாடில்லை!

    இப்படிப்பட்ட முதல்வர் ஆளும் அரசும், அதே போன்று மக்களின் மனுக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத அரசாகவே இருக்கிறது!

    மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்ற வக்கில்லாத இந்த தி.மு.க. அரசு, ஒரு Coma அரசு!

    உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்தவர் இயேசு கிறிஸ்து.

    இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடந்தன.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்தவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கைதான சங்கரநாராயணன் மீது பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. கடந்த 2023-ம் ஆண்டு சாதி ரீதியிலான தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார். இவர் தற்போது நெல்லை திருமால்நகர் குடியிருப்பில் வசித்து வருவதுடன், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 16-ந் தேதி நெல்லை கொக்கிரகுளம் வசந்தம் நகர் விரிவாக்கம் பகுதிக்கு தனது இன்ஸ்டாகிராம் நண்பரை பார்க்க சென்றார். அப்போது அவரை அடையாளம் தெரியாத 4 பேர் தாக்கியதுடன், செல்போனையும் பறித்துச் சென்றனர்.

    ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவன் மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    போலீசாரின் விசாரணையில் பாலகிருஷ்ணன் மகன் பரமேஸ் (வயது 20) என்பவர் தலைமையில், அவருடைய நண்பர்கள் சங்கர நாராயணன் (23), சக்திவேல் (19), சண்முக சுந்தரம் மற்றும் வேல்முருகன் ஆகியோர் சின்னத்துரையிடம் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு, அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு சம்பவ இடத்துக்கு வரவழைத்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் சக்திவேல், சங்கரநாராயணன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சங்கரநாராயணன் மீது பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பரமேஸ், சண்முகசுந்தரம், வேல்முருகன் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே மாணவன் சின்னத்துரையை காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசி ஆறுதல் கூறி, நிதிஉதவியும் வழங்கினர்.

    பின்னர் ரஞ்சன் குமார் கூறுகையில், 'நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சின்னத்துரைக்கு வீடு வசதி, கல்வி வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடந்து வருகிறது. பாளையங்கோட்டை பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் அரிவாளால் வெட்டப்பட்டது கண்டிக்கத்தக்கது. சாதி ரீதியான வன்முறைகளுக்கு எதிராக சிறப்பு தனி சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    • தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த விதியில் தமிழக அரசு சில திருத்தங்களை செய்துள்ளது.
    • அரசு ஊழியர் தனது அலுவல் நேரம் அல்லது பதவி செல்வாக்கை பயன்படுத்தி புத்தக விற்பனையை ஊக்குவிக்கக்கூடாது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் ஒரு அரசு ஊழியர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும். மேலும், இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர்கள், பதிப்பகத்தாரிடமிருந்து ஊதியம் பெறும்போது உடனடியாக நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.

    தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த விதியில் தமிழக அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள், அரசின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகள் தொடர்பான புத்தகங்களைத் தவிர, இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை மற்றும் தொழில்முறை மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை எழுதி வெளியிடுவதற்கு முன்னரே அனுமதி பெற வேண்டியதில்லை. ஆனால் தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிடலாம்.

    அந்த புத்தகத்தில் மாநிலத்திற்கு எதிரான எந்தவொரு விமர்சனமோ, தாக்குதலோ இல்லை மற்றும் புத்தகத்தில் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய உரையோ, உள்ளடக்கமோ இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சுய அறிவிப்பையும் சமர்ப்பிக்க வேண்டும். புத்தகம் மூலம் பதிப்பகத்தாரிடம் இருந்து ஒருமுறை தொகை அல்லது ராயல்டி பெறுவதற்கு முன்னரே அனுமதி பெறவேண்டும்.

    அரசு ஊழியர் தனது அலுவல் நேரம் அல்லது பதவி செல்வாக்கை பயன்படுத்தி புத்தக விற்பனையை ஊக்குவிக்கக்கூடாது. இந்த புத்தகம் அரசின் கொள்கை, செயல்பாடுகளை எதிர்க்காமல், சமூக ஒற்றுமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இந்த சட்டத்திருத்தம் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளதால் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    • தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து குளிர்வித்தது.
    • நேற்று தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் சதமடித்தது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து குளிர்வித்தது. இந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெப்பம் கொளுத்தியது. இது, அடுத்த 10 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். நேற்று தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 104.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

    அதன்விவரம் வருமாறு:-

    வேலூர் - 104.09 (40.5 செல்சியஸ்)

    திருத்தணி - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)

    மதுரை விமான நிலையம் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

    கரூர் பரமத்தி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    மதுரை நகரம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)

    ஈரோடு - 100 டிகிரி (38 செல்சியஸ்)

    • அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடிகிறது.
    • இனி வருகிற காலங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும்.

    ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் விவரம் வருமாறு:-

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:

    உலகெங்கிலும் வாழும் கிறிஸ்துவ பெருமக்கள் இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்வினை நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். கிறிஸ்துவ சமுதாயத்து மக்கள் இந்நாளில் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக அளிக்கின்றனர். இதனால், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடிகிறது.

    கிறிஸ்துவ சமுதாயமே மக்கள் மீது அன்பும், பரிவும் காட்டுவதில் அளப்பரிய பங்காற்றி வருகிறது. முதியோர் இல்லங்கள், ஏழை, எளியவர்களுக்கு இலவச கல்வி, மருத்துவ உதவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு புகலிடம் வழங்குவது ஆகியவை இச்சமுதாயத்தின் மிகச் சிறந்த நற்பணிகளாக விளங்கி வருகின்றன. இயேசு பிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்துவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன்.

    கிறிஸ்துவ சிறுபான்மை சமுதாயத்தினர் ஒன்றிய பா.ஜ.க. அரசால் பாரபட்சத்தோடு நடத்தப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகிறார்கள். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

    மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சி கிறிஸ்துவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆதரவாக எப்போதும் செயல்பட்டு வருகிறது. இனி வருகிற காலங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

    அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை மட்டுமே போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கும் உள்ள கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும் என்பது உறுதி.

    இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதும், பின்னர் உயிர்த்தெழுந்து வந்ததும் தனிமனிதரின் வாழ்க்கை அனுபவமல்ல. அது உலகிற்கே சொல்லப்பட்ட பாடம் ஆகும். வாழ்க்கையில் எப்போதும் நன்மையையே செய்யுங்கள்; அதனால் இடையில் சோதனைகள் வந்தாலும் நிறைவில் நன்மையே நடக்கும் என்று உலக மக்களுக்கு நற்செய்தி சொல்வதற்கான நிகழ்வு தான் புனித வெள்ளியும், உயிர்த்தெழுதல் திருநாளும் ஆகும். அதுமட்டுமின்றி, இருள் விரைவாகவே நீங்கும் என்பதும் ஈஸ்டர் திருநாள் சொல்லும் செய்தியாகும்.

    ஈஸ்டர் திருநாளின் நோக்கத்தைப் போலவே தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும்; வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் என்று கூறி, கிறித்தவ சொந்தங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:

    ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகின் இன்றையத் தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாள் தான் ஈஸ்டர் திருநாள் ஆகும்.

    ஈஸ்டர் நாளில் பரிசளிக்கப்படும் முட்டைகளில் இனிப்புகளும், மிட்டாய்களும் நிறைந்திருக்கும். அவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை. மாறாக, சமூகத்திற்கு வழங்கப்படும் ஈஸ்டர் முட்டைகளில் அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை நிறைந்திருக்க வேண்டும். அது தான் ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.

    ஈஸ்டர் திருநாள் தெரிவிக்கும் செய்தியை பின்பற்றும் வகையில் நாம் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்; தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும். அத்துடன், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தழைக்க பாடுபடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:

    மூப்பர்களாலும், வேத பாலகர்களாலும் பழி தூற்றப்பட்டு, இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, கன்னத்தில் அறைந்து, வாரினால் அடித்துச் சித்திரவதை செய்து, கபாலஸ்தலம் எனும் கொல்கொதாவில், ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.

    கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது.

    இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. அதுபோலவே, ஈழத்திலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

    அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

    தியாகச்சுடர் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி

    மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாடிநத்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பின் அடையாளமாக விளங்கும் இயேசுபிரான், கொடூரமான முறையில் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் திருநாளாக உலகெங்கிலும் உள்ள

    கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.

    இந்நாளில் கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று அன்பின் திருவுருவான இயேசுபிரானின் கருணைகளை நினைவுகூர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் செடீநுவார்கள்.

    இயேசுபிரானின் போதனைகளான அன்பு, சகோதரத்துவம், சமாதானம், தொண்டு போன்ற உயரிய பண்புகளை அனைவரும் பின்பற்றி, வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன்

    வாடிநந்திட வேண்டுமென்ற என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்துக் கொண்டு, அனைத்து கிறிஸ்துவப் பெருமக்களுக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாடிநத்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன்:

    கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான "ஈஸ்டர் திருநாளை" மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானின் "ஈஸ்டர் திருநாள்" மனித நேயமிக்க கிறிஸ்தவப் பெருமக்கள் மகிழ்வுறும் இனிய நாள்.எத்தகைய துயரங்களையும் தாங்கும் இதயம் கொண்ட இயேசு பெருமானின் மன தைரியத்துடன் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் "சுய சுகாதார பாதுகாப்புடனும்" மகிழ்ச்சியுடனும் "ஈஸ்டர் திருநாளை" கொண்டாடிட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    • விசைத்தறி நெசவாளப் பெருமக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தேன்.
    • விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்வேன் எனவும் உறுதியளித்தேன்.

    கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோயம்புத்தூர் அருகே சோமனூரில் கூலி உயர்வு மற்றும் உழைப்புக்கேற்ற ஊதிய கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் வலியுறுத்தி கடந்த சில தினங்களாக போராடி வரும் விசைத்தறி நெசவாளப் பெருமக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தேன்.

    தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து தங்களது உடலை வருத்திக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொண்டதோடு, கூட்டத்தில் உரையாடுகையில், சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசி தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவேன் எனவும், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி அவர்களையும் சந்தித்து விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்வேன் எனவும் உறுதியளித்தேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன்.
    • தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்.

    என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன் என்றும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு துரை வைகோ கூறியதாவது:-

    இது உட்கட்சி விவகாரம். நம் இயக்க தலைமை அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு இது. என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்.

    கட்சியில் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். நிர்பந்தத்தாலேயே அரசியலுக்கு வந்தேன். தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்.

    பதவியில் இருப்பதால்தான் பிரச்சினை வருகிறது. தொண்டனாக தொடர்வேன். இது உள்கட்சி விவகாரம், வெளியில் விவாதிக்க முடியாது. தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×