என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நாடு முழுவதும் நீட் தேர்வு முறை கொண்டு வந்தது தி.மு.க.
    • டாஸ்மாக்கில் ஊழல் செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் சிறை செல்வது உறுதி.

    பழனி:

    பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பழனிக்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுத சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆளுநரை மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான தபால்காரர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல. நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என கூறி இருப்பது அவருடைய சொந்த கருத்து. மேலும் அ.தி.மு.க. தொடர்பான கேள்விகள் வேண்டாம் என்றார்.

    பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் நீட் தேர்வு முறை கொண்டு வந்தது தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி. நீட் தேர்வை முன் மொழிந்தது தி.மு.க. எம்.பி.யாக இருந்த காந்தி செல்வன். தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியின்போது 2013ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்றது.

    உச்ச நீதிமன்றம் தீர்ப்பு காரணமாகவே நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு செய்யாமல் முதலமைச்சர் நாடகமாடுகிறார். டாஸ்மாக்கில் ஊழல் செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் சிறை செல்வது உறுதி. டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மதுபான ஊழலில் சிறை சென்றார். அதே போல் தமிழகத்திலும் நடக்கும். தமிழகம் முழுவதும் வளைத்து வளைத்து கஞ்சாவை பிடிக்கும் தமிழக போலீசார் சிந்தடிக் போதைப் பொருட்களை கண்டுகொள்ளவில்லை என்று தமிழக ஆளுநர் கேட்ட கேள்விக்கு இதுவரை தமிழக முதலமைச்சர் பதில் சொல்லாதது ஏன்? என்றார். அவருடன் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். 

    • துரை வைகோ மற்றும் மல்லை சத்யாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் ஆங்காங்கே மல்லை சத்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடப்பது பற்றி பேசப்பட்டது.
    • ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகியது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே உருவான மோதலில் துரை வைகோ திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்றைய நிர்வாக குழு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பதாகவும், வருங்காலத்தில் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

    அவரது இந்த முடிவு கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ம.தி.மு.க.வில் இருந்து மூத்த நிர்வாகிகள் பலர் விலகிய போதும் கடந்த 32 ஆண்டுகளாக வைகோவுடன் இருப்பவர் மல்லை சத்யா. வைகோவின் நிழலாக இருப்பவர், மூத்த நிர்வாகி என்பதால் கட்சியில் அவருக்கென்று தனி செல்வாக்கும் இருக்கிறது.

    ஆனால் துரை வைகோவின் வருகைக்கு பிறகு நிலைமை மாறியது. துரை வைகோவுக்கும் ஆதரவாக சிலர் மாறினார்கள். அதே நேரம் மல்லை சத்யா கட்சிக்குள் பெயர் வாங்குவது பிடிக்கவில்லை.

    இதை அடுத்து அவரை மட்டம் தட்டும் வேலைகள் ரகசியமாக தொடங்கியது. சென்னையில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் மல்லை சத்யாவை அழைக்க கூடாது. அவரது போட்டோவையும் பேனர்களில் போடக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

    இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுத்த இந்த ஆவேச 'பொறி'க்கு துரை வைகோவின் ஆதரவு வட்டாரங்கள் நெய் ஊற்றி எரிய வைத்தன. அதன் தொடர்ச்சியாக மாவட்டங்களில் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானங்கள் போட தொடங்கினார்கள்.

    இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தாயகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மல்லை சத்யா கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக துரை வைகோ நேரடியாகவே குற்றம் சாட்டினார். அவ்வாறு மோதிக் கொண்டது வைகோவுக்கும் பிடிக்கவில்லை. இதை அடுத்து கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்து பிரச்சனைக்கு தீர்வு காணத்தான் இன்று நிர்வாக குழு கூட்டத்தை வைகோ கூட்டினார்.

    ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடந்தது. வைகோ தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துரை வைகோ, அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ், துரை வைகோ, துணை பொதுச் செயலா ளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, முருகன், உதயா, ராஜேந்திரன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் துரை வைகோ மற்றும் மல்லை சத்யாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் ஆங்காங்கே மல்லை சத்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடப்பது பற்றி பேசப்பட்டது.

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகியது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    துரை வைகோவின் விலகல் குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் துரை வைகோவின் விலகல் கடிதத்தை ஏற்கக்கூடாது. முதன்மை செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    மேலும் தேர்தல் பணிகள், கட்சி வளர்ச்சி பணிகள், மாநாடுகள், போராட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டன.

    • கடந்த 19-ந் தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் கிலோ நூல்கள் பயன்படுத்தப்படுகிறது.

    பல்லடம்:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில், மின் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழில் நலி வடைந்துள்ளது. கடந்த 2022 நெசவு கூலி உயர்வு ஒப்பந்தத்தின்படி கூலி உயர்வு வழங்க வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த 19-ந் தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    விசைத்தறிகள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் மறு சுழற்சி நூல் மில்களில் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேக்கமடைந்துள்ளது.

    இது குறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு மாநில தலைவர் ஜெயபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேக்கமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் 1,700 ஸ்பின்னிங் நூற்பாலைகளும், 650 ஓ.இ.மில் என்கின்ற மறுசுழற்சி நூற்பாலைகளும், 5.5 லட்சம் விசைத்தறிகளும் உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்பில் 5.50 லட்சம் கிலோ நூல்கள் உற்பத்தியாகின்றது.

    இதில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் கிலோ நூல்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தால் நூற்பாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேங்கியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இதனை விசைத்தறியாளர்கள்-ஜவுளி உற்பத்தியாளர்கள் பிரச்சனை என்று பாராமல், ஒட்டு மொத்த ஜவுளி தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்பதனை கருத்தில் கொண்டு உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார்.
    • பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் பக்கத்து வீட்டு அருகே குப்பை கொட்டியதால் அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் மோதல் ஏற்பட்டது.

    குப்பை கொட்டியதில் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த தகராறு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை தேடி வருகின்றனர்.

    • கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள்.
    • உலகெங்கும் வெறுப்பும், வன்முறையும் நீங்கி நல்லிணக்கம் செழித்திட இயேசு பெருமகனாரின் போதனைகள் வழிகாட்டட்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் நற்குணம் ஆகியவற்றின் பேருருவமான இயேசு பிரானின் வழியைப் பின்பற்றி நடக்கும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள்.

    உலகெங்கும் வெறுப்பும், வன்முறையும் நீங்கி நல்லிணக்கம் செழித்திட இயேசு பெருமகனாரின் போதனைகள் வழிகாட்டட்டும்.

    அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசின் உடனடி நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.
    • விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

    கோவை:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து விசைத்தறியாளர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அதன்படி விசைத்தறியாளர்கள் கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் பகுதியில் தங்கள் குடும்பத்தினருடன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவையில் நடந்த விழாவுக்கு வருகை தந்த பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சோமனூரில் போராட்டத்தில் ஈடுபட்டு விசைத்தறியாளர்களை நேரில் சந்தித்தார்.

    அப்போது அவர் தரையில் அமர்ந்து விசைத்தறியாளர்களுடன் பேசினார். அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அவர், நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராடும் உங்களுக்கு பா.ஜ.க உறுதுணையாக இருக்கும் என கூறி தங்களது ஆதரவை தெரிவித்தார்.

    பின்னர் அவர் விசைத்தறியாளர்கள் மத்தியில் பேசியதாவது:-

    விசைத்தறியாளர்களின் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் தங்களின் உரிமைக்காக போராடி வருகின்றனர்.

    எனவே விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

    ஒரு மாத காலமாக நடந்து வரும் இந்த போராட்டம் விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    அரசின் உடனடி நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர். எனவே விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது.
    • பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இதனை சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தினார்.

    இதனையடுத்து, பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். வேடத்தில் பாஜக கொடியுடன் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலையுள்ளது.

    அதிமுக கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆர். வேடத்தில் இருந்த இருந்த நபர் பாஜக கொடியுடன் நடனமாடிய விவகாரம் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நெல்லையில் இருந்து நாளை இரவு 10.15 மணிக்கு டெல்லிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு இன்றும், மதுரையில் இருந்து நாளை (21-ந்தேதி) யும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06057), வருகிற செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி சென்றடையும். மறுமாா்க்கமாக பகத் கீ கோதியில் இருந்து வருகிற 23-ந்தேதி அதிகாலை 5.30-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06058), மறுநாள் இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இதில் 3 ஏ.சி. வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், வா்தா, அகோலா, ஜல்கான், நந்தூா்பாா், உத்னா (சூரத்), வடோதரா, சபா்மதி பிஜி, ஜலோா், லூனி வழியாக இயக்கப்படும்.

    மதுரையில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06067) 23-ந்தேதி பிற்பகல் 12.30 மணிக்கு பகத் கீ கோதி சென்றடையும். மறுமாா்க்கமாக பகத் கீ கோதியில் இருந்து 24-ந்தேதியில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06068), 26-ந்தேதி காலை 8.30 மணிக்கு மதுரை வந்தடையும்.

    இதில் 12 மூன்றடுக்கு ஏ.சி. வகுப்பு பெட்டிகள், 6 எக்கனாமிக் ஏ.சி. வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், வா்தா, அகோலா, ஜல் கான், நந்தூா்பாா், உத்னா (சூரத்), வடோதரா, சபா்மதி பிஜி, ஜலோா், லூனி வழியாக இயக்கப்படும்.

    நெல்லையில் இருந்து நாளை இரவு 10.15 மணிக்கு டெல்லிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (எண். 06161), வருகிற 24-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு டெல்லி ஹசரத் நிஜா முதீனுக்கு சென்றடையும். இதில் படுக்கை வசதி கொண்ட 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மரு வத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், போ பால், குவாலியர், ஆக்ரா, மதுரா வழியாக இயக்கப்படும்.

    இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    • ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.
    • விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராஜபாளையம்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அந்த கட்சியின் முதன்மை செயலாளராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று திடீரென்று அறிவித்தார். இதனால் கட்சியினரிடையே பரபரப்பு நிலவியது. ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் ராஜினாமாவை துரை வைகோ வாபஸ்பெற வேண்டும், இயக்கத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியில் விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், செட்டியார்பட்டி செயலாளர் நாகப்பன், சேத்தூர் செயலாளர் அயனப்பன், ராஜபாளையம் ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருநெல்வேலி ரோட்டில் முறம்பு பகுதியிலும் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    • துரை வைகோவின் ஆதரவாளர்கள், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
    • திடீரென கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார்.

    சென்னை:

    மறுமலர்ச்சி தி.மு.க.வை கடந்த 1994-ம் ஆண்டு வைகோ தொடங்கினார்.

    கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ, தொடக்க காலங்களில் அரசியலில் ஈடுபடாமல் பொது சேவைகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தார்.

    கட்சியினரின் விருப்பம் காரணமாக கட்சிக்குள் வந்த துரை வைகோ, சாதாரண தொண்டராகவே இருந்தார். பின்னர் தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த ம.தி.மு.க.வின் 29-வது பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிருப்தி அடைந்த அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினார்கள்.

    இதற்கிடையே, துரை வைகோவின் ஆதரவாளர்கள், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

    சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதேபோல, பல்வேறு மாவட்டங்களிலும் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டனர்.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, இதுபோன்ற தீர்மானம் ஏதும் நிறைவேற்றக்கூடாது என்றும், இதுகுறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்க ஏப்ரல் 20-ந் தேதி (அதாவது இன்று) கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

    இதையடுத்து திடீரென கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார்.

    இந்த நிலையில், ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக வந்த நிலையில் இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். சாலை யோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • மல்லை சத்யா மட்டும் வைகோவின் சேனாதிபதி என சொந்தம் கொண்டாட முடியாது.
    • ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகியதில் மாற்றம் இல்லை.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராகவே, கட்சி பதவியை துரை வைகோ துறந்ததாக கூறப்படும் நிலையில் பொதுச்செயலாளர் வைகோவின் சேனாதிபதி நான் என மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இதுதொடர்பாக எம்.பி. துரை வைகோ கூறுகையில்,

    * வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதியில்லை.

    * மல்லை சத்யா மட்டும் வைகோவின் சேனாதிபதி என சொந்தம் கொண்டாட முடியாது.

    * ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகியதில் மாற்றம் இல்லை.

    * ம.தி.மு.க.வுக்காகவும், வைகோவுக்காகவும் உழைத்த தொண்டர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர் என்று கூறினார்.

    ×