என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கட்சி பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ - ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் கூடியது
    X

    கட்சி பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ - ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் கூடியது

    • துரை வைகோவின் ஆதரவாளர்கள், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
    • திடீரென கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார்.

    சென்னை:

    மறுமலர்ச்சி தி.மு.க.வை கடந்த 1994-ம் ஆண்டு வைகோ தொடங்கினார்.

    கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ, தொடக்க காலங்களில் அரசியலில் ஈடுபடாமல் பொது சேவைகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தார்.

    கட்சியினரின் விருப்பம் காரணமாக கட்சிக்குள் வந்த துரை வைகோ, சாதாரண தொண்டராகவே இருந்தார். பின்னர் தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த ம.தி.மு.க.வின் 29-வது பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிருப்தி அடைந்த அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினார்கள்.

    இதற்கிடையே, துரை வைகோவின் ஆதரவாளர்கள், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

    சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதேபோல, பல்வேறு மாவட்டங்களிலும் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டனர்.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, இதுபோன்ற தீர்மானம் ஏதும் நிறைவேற்றக்கூடாது என்றும், இதுகுறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்க ஏப்ரல் 20-ந் தேதி (அதாவது இன்று) கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

    இதையடுத்து திடீரென கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார்.

    இந்த நிலையில், ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×