என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை.
- ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களின் ஒருவன் என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம் வருமாறு:-
'தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோளுண்டு' என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் ஏந்தி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம் பாதையில் தடைக்கற்களை அள்ளி அள்ளிப் போட்டாலும், அதனை எதிர்கொள்ளும் தடந்தோள்களுடனும் வலி மை மிக்க கால்களுடனும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம் மக்கள் நலன் காக்கும் சாதனைத் திட்டங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் சட்டமன்றத்தில் எந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அது முந்தைய ஆட்சியைப் போல வெறும் மேசையைத் தட்டுவதற்கான அறிவிப்பாக மட்டும் இருப்பதில்லை. அறி விக்கப்பட்டவை செயல்வடிவம் பெறவேண்டும் என்ற உறுதியுடன், கடைக்கோடி கிராமம் வரை அது சென்று சேரும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் ஓய்வதில்லை.
எல்லார்க்கும் எல்லாம் என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்படும் திராவிட மாடல் அரசில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், அவர்களுக்கான நியமனப் பதவிகளை உருவாக்கும் வகையில் இரண்டு சட்டப்பிரிவுகளில் திருத்தம் செய்வதற்கான சட்டமுன்வடிவையும் உங்களில் ஒருவனான நான் பேரவையில் கொண்டு வந்து அவற்றைச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியதை வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.
அப்போது பார்வையாளர்கள் மாடத்திலிருந்த மாற்றுத் திறனாளிகள் உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்த காட்சி இன்றும் மனதில் நிறைந்தி ருக்கிறது.
ஆட்சிச் சக்கரத்தைச் சுழல வைக்கும் கைகளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே தனி அக்கறை கொண்ட இயக்கமாகும். முந்தைய ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகத்தினால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில், நிதி நிலையைச் சீர் செய்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை திராவிட மாடல் அரசு நிறைவேற்றும் என்று உத்தரவாதம் அளித்திருந்தேன். மாநில அரசின் சொந்த நிதி வருவாயினைப் பெருக்கி, அவர்களின் 9 முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மூலமாக 1 கோடியே 16 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன் பெற்று வருகிறார்கள். இந்தத் திட்டத்தில் மேலும் பயன் கிடைக்க வேண்டிய தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளியிட்டுள்ளேன். இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்படவிருக்கின்றன.
நன்மைகள் தரும் அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டதுடன், ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்டம் போன்ற தீமைகளைத் தடுக்கும் வகையிலான தீர்மானங்களையும் திராவிட மாடல் அரசின் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளோம். இந்தியாவின் ஒருமைப்பாடும் நாட்டின் பாதுகாப்பும் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்ற இதயப்பூர்வமான அக்கறையுடன் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்ற தீர்மானத்தையும் ஒருமனதாக நிறைவேற்றி உள்ளோம்.
சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகள், தனி மனித விரோதங்களால் ஏற்பட்ட பழிக்குப்பழிகள் இவற்றை முதன்மை எதிர்க்கட்சியும் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களும் பூதாகரமான பிரச்சினையைப் போல காட்ட முயன்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க நினைத்தாலும், அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில்கள் பேரவையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டன.
அனல் பறக்கும் வாதங்களில் கடுஞ்சொற்கள் எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும், அந்த நிலை தொடரக் கூடாது என்பதில் எப்போதும் நான் அக்கறையுடன் இருக்கிறேன். இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் அந்த நிலை கடைப்பிடிக்கப்பட்டது.
கூட்டத் தொடர் நிறைவடைந்த நாளில், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வராததால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் தோழமைக் கட்சி உறுப்பினர்களுக்கும் கை குலுக்கி நன்றி தெரிவித்து விடைபெற்றேன்.
ஆம்.. நாம் நாகரிகமாகத்தான் நடந்து கொள்கிறோம். நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை. இது நம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களிடம் நாம் வெளிப்படுத்தும் பொறுப்புணர்வு. ஜனநாயக நாட்டில் மக்களே எஜமானர்கள்.
ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் நான் குறிப்பிட்டேன். "மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் மதில் சுவர்கள் என்பது போல ஒரு பக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி எனப் பல தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வருகிறோம்" என்று திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை. சந்திக்காத சவால்கள் கிடையாது. சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை உடன்பிறப்புகளான நீங்கள் இத்தனை காலம் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க என்பது தமிழ் நாட்டின் நலனை மட்டுமின்றி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் என்பதை எதிரிகளின் மன சாட்சியும் சொல்லும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! மக்களின் பேராதரவுடன் தி.மு.கவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதனால் இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, இன்று முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
- பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
தஞ்சாவூர்:
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி புறப்பாடும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி தஞ்சை மேல வீதியில் உள்ள பெரிய கோவில் தேர் நிலையில் பந்தக்கால் முகூர்த்தம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது. முன்னதாக பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரில் பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் சத்யராஜ், கண்காணி ப்பாளர் ரவி, ஆய்வாளர் பாபு மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- ரெயில் நிலையத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்து மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மதுரை மல்லிகை பூவை ரெயில் பயணிகள் வாங்கும் வகையில் ரெயில் நிலையத்தில் ஏற்பாடு.
மதுரை ரெயில் நிலையத்தில் முதன்முறையாக பூக்கடைக்கு தெற்கு ரெயில்வே அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, மதுரை ரெயில் நிலையத்தில் மதுரையின் பிபலமாக மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்து மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி, மிகவும் பிரபலமான மதுரை மல்லிகை பூவை ரெயில் பயணிகள் வாங்கும் வகையில் ரெயில் நிலையத்தில் விற்பனை தொடங்குகிறது.
இதனால், மதுரைக்கு வரும் மக்கள் ஊரின் சிறப்பம்சமான மதுரை மல்லிகையை சிரமமின்றி வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
- பெயர், முகவரி தெரியாத ஆண் நபர் ஒருவர் 8 மாத ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறி சென்றுவிட்டார்.
- குழந்தையின் பெற்றோர் யார்? என கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:
நாகர்கோவில்- பெங்களூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 17236) மதுரை, கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக நாகர்கோவிலுக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு 7.15 மணி அளவில் நாகர்கோவில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டு பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. இதில் உள்ள கடைசி பொது பெட்டியில் பயணம் செய்து வந்த வீரமணி (வயது 29) என்பவரிடம் மதுரை ரெயில் நிலைய நடைமேடையில் வண்டி நிற்கும்போது பெயர், முகவரி தெரியாத ஆண் நபர் ஒருவர் 8 மாத ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறி சென்றுவிட்டார்.
அதற்குள் ரெயில் புறப்பட்டு சென்றது. அடுத்த ரெயில் நிலையமான திண்டுக்கல் வந்தும் குழந்தையை கேட்டு யாரும் வராததால் இது குறித்து வீரமணி உதவி எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் ரெயில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டபானி, பெண் போலீஸ் ரம்யா ஆகியோர் வீரமணி என்பவரிடம் இருந்து குழந்தையை பெற்று போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் குழந்தைகள் நல காப்பக களப்பணியாளரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர் யார்? என கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
- வடசென்னை பகுதியில் 4 மேம்பால பணிகள் நடக்கிறது.
- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்திற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணைமேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில், மண்டல தலைவர் நேதாஜி கணேசன் பேசும்போது, நேதாஜி நகர், 1, 2 மற்றும் மெயின் தொகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் அங்கு விரைவாக மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும். வடசென்னை பகுதியில் 4 மேம்பால பணிகள் நடக்கிறது.
இந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். கொருக்குபேட்டை மேம்பாலப் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்றார். கவுன்சிலர் கதிர் முருகன் (அ.தி.மு.க.) கூறும்போது குழந்தைகள் பிறப்பு சான்றிதழில் பிழைகள் இருப்பதால் பள்ளியில் சேர்ப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இவற்றை சரி செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
அதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், மருத்துவமுகாம் நடத்துகின்றபோது அதனுடன் சேர்ந்து பிறப்பு - இறப்பு சான்றிதழ் திருத்தம் செய்வதற்கான முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்திற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது. காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட திட்ட தளங்களில் வெளிப்புற இடங்களில் தூசி, குப்பைகள் பரவுவதை தடுக்க தகரம், உலோக தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். புதிய கட்டுமானம் அல்லது இடிக்கப்படும் அனைத்து கட்டமைப்புகளில் இருந்து வெளிவரும் தூசி, துகள்கள் பரவுவதை தடுக்க துணி, தார்ப்பாய், பச்சை வலையால் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
கட்டுமானத்தின்போது உருவாகும் எந்த ஒரு கழிவு பொருட்களையும் திறந்த வெளியில் காற்றில் பரவுவதை தவிர்க்க மூடப்பட்ட தட்டுகள் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 18 பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு கொண்ட தளங்களில் வழிகாட்டு மீறுதல்களுக்கு ரூ.5 லட்சம் அபராதமும், 300 ச.மீ. மேல் 20 ஆயிரம் ச.மீ. பரப்பளவில் உள்ள தளங்களுக்கு ரூ.25 ஆயிரமும், 300 ச.மீ. முதல் 500 ச.மீ. பரப்பளவில் அமைந்துள்ள தளங்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மழைக் காலங்களில் ஓட்டேரி நல்லா நீர்வழி கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய்களில் மழைநீர் தங்கு தடையின்றி சீராக செல்ல இந்த கால்வாய்களை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. ஓட்டேரி நல்லா கால்வாய் பணிக்கு ரூ.65 கோடியும், விருகம்பாக்கம் கால்வாய்க்கு ரூ.30 கோடியும் செல்வாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிக்கு தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை மதிப்பீட்டுத் தொகை ரூ.95 கோடிக்கு அரசின் அனுமதி மற்றும் நிதி ஆதாரம் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட உஸ்மான் சாலையில் கட்டப்பட்டு உள்ள புதிய மேம்பாலத்திற்கு மறைந்த மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் பெயரை சூட்டுவது, 'மாமேதை கார்ல் மார்க்ஸ்' சிலையை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் அமைக்க அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தடையில்லா சான்றிதழ் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தீர்மானம் உள்பட 236 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
- இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமலன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். எனது வழக்கறிஞர் அறைக்கு சென்றபோது எனது பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அதை பிரித்து படித்த போது காவல்துறை கண்காணிப்பாளர் மீது நான் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்ததாகவும், அந்த புகாருக்கு நான் நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து சம்மன் வந்திருந்தது.
இதைப் பார்த்து எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் இதுபோன்று எந்தவித காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகார் மனு கொடுக்கவில்லை. எனவே இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
அப்பொழுது தான் தெரிந்தது எனக்கு நடந்தது போல் பல வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்களின் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு போலியான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும், அந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்து.
இதுபோன்று பிற வழக்கறிஞர்கள் பெயர்களை பயன்படுத்தி புகார்கள் அனுப்புவதால் மூத்த வழக்கறிஞர்கள் மிகுந்த சங்கடத்திற்கு ஆளாகுகிறார்கள். மேலும் தனிப்பட்ட முறையில் பகைமையும் உண்டாகிறது. உயர் அதிகாரிகளின் நேரம் வீணடிக்கப்படுகிறது. எனவே பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த புகார் போல் அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் அரசு வழக்கறிஞர்கள் பெயரை பயன்படுத்தி பல புகார்கள் அனுப்பப்பட்டு உள்ளது. நீதிபதிகளுக்கும் இது போன்று புகார் சென்றுள்ளது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல்துறை ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
- கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
- அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து அளித்தும் உபசரித்தார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இதற்காக பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள அவர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியுடன் இருந்து வருகிறார்.
இதற்காக கட்சி நிர்வாகிகளுடன் அவர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அவர் விருந்து அளித்தும் உபசரித்தார்.
இந்த நிலையில் நாளை மறுநாள் (2-ந்தேதி) ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரங்களை மக்கள் மத்தியில் விளக்கி கூறியும் தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை எடப்பாடி பழனிசாமி பிறப்பிக்க உள்ளார்.
கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சி பணியாற்றவேண்டும் என்றும் அப்போதுதான் கூட்டணி பலத்துடன் நாம் ஆட்சியை பிடிக்க முடியும் என்றும் நாளைய கூட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி பல்வேறு கருத்துகளை தெரிவிக்க இருப்பதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- விஜயின் பிறந்தநாள் ஜூன் 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- பல்வேறு இடங்களிலும் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. இதற்காக கட்சி தலைவர் விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த 26,27-ந்தேதிகளில் கோவையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கு பிரமாண்டமாக நடந்தது. இதில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்டமாக 4 மண்டலங்களிலும் பூத் கமிட்டி கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த பூத் கமிட்டி கூட்டத்தை நெல்லையில் நடத்த வேண்டும் என நெல்லை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் கட்சி தலைமைக்கு தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் விஜய்யை நெல்லைக்கு வருமாறு அழைப்பு விடுத்து இன்று நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
நெல்லை மாநகரப் பகுதியான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், களமும் நமதே.. இனிவரும் காலமும் நமதே.. விஜய் அவர்களே நெல்லை சீமை உங்களை அன்போடு அழைக்கிறது என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் உள்ளது. விஜயின் பிறந்தநாள் ஜூன் 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டியும் அந்த போஸ்டர்களில் விஜய்யை வாழ்த்தி வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி நெடுஞ்சாலை துறை பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
- இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
மதுரை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் பதிவு பெற்ற அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறோம். எங்களுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களும், 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது.
பட்டியலின, மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். இந்நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள எங்களது கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி நெடுஞ்சாலை துறை பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை செய்து தமிழகத்தில் நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, ஊரக மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சி, சாதிய இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கொடி மரங்கள், கல்வெட்டு தூண்கள் அகற்ற உத்தரவிட்டதன் அடிப்படையில் எங்களது கட்சி கொடி மரங்களை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது. எனவே அரசியல் கட்சி கொடி மரங்களை அகற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் இந்த வழக்கை விரிவான விசாரணைக்காக ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
- நடிகர் அஜித்துக்கு நேற்று முன்தினம் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
- சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.
சென்னை:
நடிகர் அஜித்துக்கு நேற்று முன்தினம் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. விழாவுக்கு குடும்பத்துடன் சென்ற அஜித் நேற்று மாலை சென்னை திரும்பினார்.
இந்நிலையில் நடிகர் அஜித் இன்று காலை திடீரென ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அவரது தரப்பில் விசாரித்தபோது, நடிகர் அஜித் பத்மபூசன் விருது பெறுவதற்காக டெல்லிக்கு சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சிரித்தபடி கடந்து சென்றார்.
இந்த நிலையில் காயம் காரணமாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என கூறினர்.
- தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும்.
- பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு தனி திட்டங்களை வகுத்து அந்த மாவட்டங்களை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
"தமிழகத்தில் மே 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பா.ம.க. இளைஞர் பெருவிழா மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மிகப்பெரிய எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் குறிப்பாக தம்பி, தங்கைகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சமூக நீதி என்பது ஆகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்.
இந்த கோரிக்கை மூலமாக தமிழகத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு அவரவர் சமூகத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். எனவே தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளது.
இதில் 20 மாவட்டங்கள் மிக மிக பின் தங்கியுள்ளது. இந்த பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு தனி திட்டங்களை வகுத்து அந்த மாவட்டங்களை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும்.
இதில் 15 மாவட்டங்கள் வட மாவட்டங்களாக உள்ளது. இங்கு கல்வி, சுகாதார வேலைவாய்ப்பு, தொழில்கள் அனைத்துமே மந்தகதியில் உள்ளது. ஆனால், டாஸ்மாக் கடை விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.






