என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மே 1 - உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள்!
    • உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்தோடு விடுமுறை - மே தின பூங்கா - தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம்.

    மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளர். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    மே 1 - உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள்!

    உலக உழைப்பாளர் தினமான இன்று உழைப்பால் உலகை இயக்கும் அத்தனை தோழர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்றைக்கு உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தின் பலனே இன்றைக்கு உழைப்பாளர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகள்.

    உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்தோடு விடுமுறை - மே தின பூங்கா - தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம்.

    கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசும் தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    உழைப்பாளர் ஒற்றுமை ஓங்கட்டும்! உழைக்கும் மக்களின் உரிமைகளை என்றென்றும் பாதுகாப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.
    • வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் கடந்த 1-ந் தேதி வணிக சிலிண்டரின் விலையில் ரூ.41 குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்தநிலையில், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்து ரூ.1906-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • மாதவரம் - தாம்பரம் செல்லும் பஸ்சின் 121எப் என்ற தடம் எண் 170ஏ என மாற்றப்பட்டுள்ளது.
    • அய்யப்பன் தாங்கல் - பிராட்வே செல்லும் பஸ்சின் 11ஜி இடி என்ற தடம் எண் 11எம் என மாற்றம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பயணிகள் நலன் கருதி தற்போது உள்ள பஸ் தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, 7 வழித்தட எண்களை கீழ்கண்டவாறு மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் 1-ந் தேதி (இன்று) முதல் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, மாதவரம் - தாம்பரம் செல்லும் பஸ்சின் 121எப் என்ற தடம் எண் 170ஏ என மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று, கவியரசு கண்ணதாசன் நகர் - தாம்பரம் செல்லும் பஸ்சின் 121எச் என்ற தடம் எண் 170டி எனவும், அய்யப்பன் தாங்கல் - பிராட்வே செல்லும் பஸ்சின் 11ஜி இடி என்ற தடம் எண் 11எம் எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.

    மேலும், பிராட்வே - கிளாம்பாக்கம் செல்லும் பஸ்சின் 18ஏ.எக்ஸ் என்ற தடம் எண் 18ஏ எனவும், திருவான்மியூர் - கிளாம்பாக்கம் செல்லும் பஸ்சின் 91கே என்ற தடம் எண் 91 எனவும், பூந்தமல்லி - கூடுவாஞ்சேரி செல்லும் பஸ்சின் 66எக்ஸ் என்ற தடம் எண் 66பி.எக்ஸ் எனவும், கவியரசு கண்ணதாசன் நகர் - கிளாம்பாக்கம் செல்லும் பஸ்சின் 121எச் இடி என்ற தடம் எண் 170டி.எக்ஸ் எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெருக்கடி காலத்திற்கு பிறகு நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை.
    • கருணாநிதி தலைமையில் 5 முறை ஆட்சிக்கு வந்தோம்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மயிலாப்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வேலுவின் மகள் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை தாங்கி நடத்தி வைத்–தார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை நாம் சொல்லி இருக்கிறோமோ, அந்த வாக்குறுதிகளை படிப்படியாக இன்றைக்கு எப்படியெல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இப்போது சொல்லப்பட்டிருக்கும் அந்த உறுதிமொழிகளும் விரைவாக, நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றப்படும்.

    இங்கு சிலர் பேசும்போது 2026-ம் ஆண்டு தேர்தலில் 200 அல்ல 220 வரும் என்று சொன்னார்கள். அதில் என்ன கஞ்சம்? 234 என்றே சொல்லுங்கள். வந்தாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், செல்லும் இடங்களில் எல்லாம் அந்த வரவேற்பைப் பார்க்கிறேன்.

    1975-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்துகின்றபோது அதை எதிர்த்து இந்தியாவில் முதல் குரல் கொடுத்தவர் நம்முடைய தலைவர் கருணாநிதி. நெருக்கடி நிலையை ரத்துசெய்ய வேண்டும். அவசர நிலையை ரத்துசெய்ய வேண்டும் என்று அன்றைக்கு தீர்மானம் போட்டார். தீர்மானம் போட்ட அடுத்த விநாடியே நம்முடைய ஆட்சி கவிழ்க்கப்படுகிறது. அதைப்பற்றி கவலைப்படவில்லை.

    நெருக்கடி காலத்திற்கு பிறகு நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். கருணாநிதி தலைமையில் 5 முறை ஆட்சிக்கு வந்தோம். அதற்கு பிறகு 6-வது முறையாக என்னுடைய தலைமையில் நீங்களெல்லாம் ஆட்சியை உருவாக்கித் தந்து இருக்கிறீர்கள். 7-வது முறையும் இந்த ஆட்சியை தொடர வைப்பீர்கள் என்ற நம்பிக்கை நிரம்ப உண்டு என தெரிவித்தார்.

    • சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

    புதுடெல்லி:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை 19.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 72 ரன் எடுத்தார்.

    இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

    முதலிடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், 3வது இடத்தை மும்பையும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.

    சென்னை அணி 10 போட்டியில் 2 வெற்றி, 8 தோல்வி என கடைசி இடத்தில் நீடிப்பதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறவில்லை

    • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய சி.எஸ்.கே. 190 ரன்களைக் குவித்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். தொடரின் 49-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளேயில் மீண்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஷேக் ரஷித் 11 ரன்னும், ஆயுஷ் மாத்ரே 7 ரன்னும், ஜடேஜா 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன் - பிரேவிஸ் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. 78 ரன்கள் சேர்த்த நிலையில் பிரேவிஸ் 32 ரன்னில் அவுட்டானார்.

    சாம் கர்ரன் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 47 பந்தில் 88 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைக்கவில்லை.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பஞ்சாப் அணி சார்பில் 19வது ஓவரை வீசிய சாஹல் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங், யான்சென் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.

    பிரியான்ஷ் ஆர்யா 23 ரன்னும், நேஹல் வதேரா 5 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் 6வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

    • சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும்.
    • இந்தியாவில் இன்று வரை இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், இதற்கு வரவேற்பு அளிக்கும் வகையில், " சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு" என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியாவில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும்.

    தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

    இப்படி ஓர் அறிவிப்பு எப்போது வரும் என பல பத்தாண்டுகளாக காத்திருந்தவன் என்ற முறையில் மத்திய அரசின் இந்த முடிவு எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படவிருக்கும் இந்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இனிவரும் காலங்களில் இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை தகர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சமூகநீதிப் புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    இந்தியாவில் கடைசியாக 1931-ம் ஆண்டு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் தான் இந்தியாவில் இன்று வரை இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அண்மைக்காலத்திய சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டியே பல சமூகங்களுக்கும் உள் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. அந்த சமூகநீதிக்கு இந்தக் கணக்கெடுப்பு முடிவு கட்டும்.

    தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதிவாரி மக்கள்தொகை நடத்தப்பட வேண்டும் என்று சுமார் அரை நூற்றாண்டு காலமாக குரல் கொடுத்து வந்தது வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான்.

    45 ஆண்டுகளுக்கு முன் 1980-ம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கிய போது நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனடிப்படையில் இட ஒதுக்கீடு நடத்தப்பட வேண்டும் என்பது தான்.

    அன்று தொடங்கி இன்று வரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக பல நூறு போராட்டங்கள், கருத்தரங்குகள், மக்கள் இயக்கங்கள் என ஏராளமான முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டிருக்கிறது.

    வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டதற்கு பிந்தைய 45 ஆண்டுகளில் இராஜிவ் காந்தி, வி.பி.சிங் , வாஜ்பாய், மன்மோகன்சிங், நரேந்திர மோடி ஆகிய 5 பிரதமர்களை மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    பலமுறை கடிதங்கள், கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் என பல வடிவங்களில் மருத்துவர் அய்யா அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இடைவிடாமல் மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சிகளுக்குத் தான் இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி பெருமிதம் கொள்கிறது.

    அதேநேரத்தில் மத்திய அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதைக் காரணம் காட்டி, தமிழக அரசு அதன் பங்குக்கு சாதிவாரி சர்வே நடத்தும் கடமையிலிருந்து தப்பிவிட முடியாது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படும் என்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது எவ்வளவு விவரங்கள் சேகரிக்கப் பட்டனவோ, அதை விட கூடுதலாக ஓபிசி சாதி குறித்த விவரம் சேகரிக்கப்படும். இது சாதிவாரி மக்கள்தொகையை அறிவதற்கு மட்டும் தான் பயன்படுமே தவிர, சமூகநிலையை அறிவதற்கு உதவாது.

    2011&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்தமாக 30 வினாக்கள் மட்டுமே எழுப்பப்பட்டு விவரங்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை பிறப்பு விவரம், முகவரி, குடும்ப உறுப்பினர் விவரங்கள், எழுத்தறிவு, இடம் பெயர்ந்தவரா? தொழில் ஆகியவை தான். ஒருவரின் சமூக பின்தங்கிய நிலையை அறிவதற்கு இந்த புள்ளி விவரங்கள் மட்டுமே போதுமானவை அல்ல.

    அதனால் தான் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு மாநில அளவிலும் சாதிவாரி சர்வே எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். தேசிய அளவில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு மனித தலைகளை சாதிவாரியாக எண்ணும் நடைமுறை தான்.

    இது சமூகநீதி சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்கு மட்டுமே பயன்படும். மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை. அதனால் தான் தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில் 56 முதன்மை வினாக்கள், 19 துணை வினாக்கள் என மொத்தம் 75 வினாக்கள் எழுப்பி விவரங்கள் பெறப்பட்டன.

    தமிழ்நாட்டில் பல சாதிகள் உள் இட ஒதுக்கீடு கோருகின்றன. அவற்றுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால், அந்த சாதி மக்களின் சமூ பின்தங்கிய நிலை தரவுகளின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, மாநில அரசின் சார்பில் சாதிவாரி சர்வே நடத்தப்பட்டு இத்தகைய விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

    அதற்காக 2008&ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப் படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மறைந்த போப் ஆண்டவருக்கு இதயப்பூர்வ அஞ்சலி செலுத்துகிறேன்.
    • போப் பிரான்சிஸ் அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக திகழ்ந்தவர்.

    சென்னை லயோலா கல்லூரியில் மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போப் பிரான்சிஸ் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    மறைந்த போப் ஆண்டவருக்கு இதயப்பூர்வ அஞ்சலி செலுத்துகிறேன்.

    போப் பிரான்சிஸ். அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக திகழ்ந்தவர்.

    கிறிஸ்தவ மதத் தலைவராக இருந்தாலும், அனைவராலும் போற்றப்பட்டவர், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.

    இரு மதங்களுக்கு இடையேயான மோதல்களை நிறுத்தியவர் போப் பிரான்ஸிஸ்.

    மதங்களை கடந்த தன்மை அனைத்து மதங்களையும் ஒன்றாக கருதும் தன்மை கொண்டவர்.

    அணு ஆயுதங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்ந்தவர்.

    அன்பு தான் மதங்களின் அடையாளமாக மாற வேண்டும் என்று விரும்பியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும், இது ஒரு கடின உழைப்பால் பெறப்பட்ட வெற்றி.
    • மற்றவர்கள் மாநில அளவிலான சாதி கணக்கெடுப்புகளுக்கு அழைப்பு விடுத்தாலும், நாங்கள் உறுதியாக இருந்தோம்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதனை வரவேற்கும் வகையில், "சாதிவாரி கணக்கெடுப்பு திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு வெற்றி" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், "சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்?" எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    மிகவும் அவசியமான சாதி கணக்கெடுப்பை மறுத்து தாமதப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், மத்திய பாஜக அரசு இறுதியாக வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை - மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்?

    நேரம் தற்செயலானது அல்ல. பீகார் தேர்தல் கதையில் சமூகநீதி ஆதிக்கம் செலுத்தி வருவதால், இந்த திடீர் நடவடிக்கை அரசியல் நோக்கத்திற்காக என்கிற வாடை வீசுகிறது. ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாக குற்றம் சாட்டிய அதே பிரதமர், இப்போது அவர் மீண்டும் மீண்டும் அவதூறு செய்த கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்.

    புறநிலை கொள்கை வகுத்தல், இலக்கு வைக்கப்பட்ட நலன் மற்றும் உண்மையான சமூக நீதியைப் பின்தொடர்வதற்கு சாதி கணக்கெடுப்பு அவசியம் - விருப்பத்திற்குரியது அல்ல. அநீதியை முதலில் அதன் அளவை அங்கீகரிக்காமல் சரிசெய்ய முடியாது.

    தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும், இது ஒரு கடின உழைப்பால் பெறப்பட்ட வெற்றி. சாதி கணக்கெடுப்பு கோரி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முதலில் நிறைவேற்றியவர்கள் நாங்கள்.

    இந்த நோக்கத்தை ஒவ்வொரு மன்றத்திலும் நாங்கள் வலியுறுத்தினோம். பிரதமருடனான ஒவ்வொரு சந்திப்பிலும், பல கடிதங்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினோம்.

    மற்றவர்கள் மாநில அளவிலான சாதி கணக்கெடுப்புகளுக்கு அழைப்பு விடுத்தாலும், நாங்கள் உறுதியாக இருந்தோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு யூனியன் பாடமாகும்.

    மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டுமே சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட சாதி கணக்கெடுப்பை வழங்க முடியும், வழங்க வேண்டும். எங்கள் நிலைப்பாடு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    திராவிட மாதிரியின் கொள்கைகளால் இயக்கப்படும் எங்கள் கடினமான சமூக நீதிப் பயணத்தில் திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு மற்றொரு வெற்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கட்சி வேட்டி ஏன் கட்டவில்லை? என சிலர் கேட்டனர்.
    • என்னைக்கு கரை வேட்டி கட்டணும்னு கேப்டன் சொல்வாரு, அன்றைக்கு நான் கட்டுறேன்

    அரசியலில் முதல்முறையாக பேன்ட் சர்ட் போட்டது நான்தான் என்று தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    தருமபுரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், "கட்சி வேட்டி ஏன் கட்டவில்லை? என சிலர் கேட்டனர். அரசியலில் முதன் முதலில் பேன்ட் - ஷர்ட் போட்டவன் நான் தான். அதற்கு அப்புறம்தான், அண்ணாமலை அண்ணணா இருக்கட்டும், சீமான் அண்ணணா இருக்கட்டும், முதலமைச்சர் ஸ்டாலின் முதல் விஜய் வரை எல்லாரும் பேன்ட்-ஷர்ட்தான் போடுறாங்க. அதனால, லுக்-அ பார்க்காதீங்க. உள்ளத்தை பாருங்க. என்னைக்கு கரை வேஷ்டி கட்டணும்னு கேப்டன் சொல்வாரு, அன்றைக்கு நான் கட்டுறேன்" என்று தெரிவித்தார். 

    • கலை நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது.
    • பயிற்சி வகுப்பு மே 1- 25ம் தேதி சதுரங்கம் (மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை).

    பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்பில் கோடை கொண்டாட்டம் 2025 நடைபெறுகிறது.

    அதன்படி, அண்ணா நூற்றாண்டு நூலக குழந்தைகள் பிரிவில் விடுமுறைக்கால திருவிழா நடைபெறுகிறது. நாளை முதல் தொடங்கும் இத்திருவிழாவில் 4 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    அதன்படி, மே-1 நாளை சென்னை ஸ்டோரி டெல்லர்ஸ் மற்றும் சக்திவேல் சார்பில் பாரம்பரிய விளையாட்டுகள், கதை செல்லுதல் மற்றும் மாயாஜாலக் காட்சி நடைபெறுகிறது.

    மே 2- இந்திரதானு வால்டோர்ஃப் பள்ளியில் கலையின் மூலம் கதை செல்லுதல் நடைபெறுகிறது.

    மே 3- திருமிகு.பிரியசகி சார்பில் மாயக்குரல் கதை, மே 4- திருமதி மமதி சாரி சார்பில் மாயாஜால சாகசங்கள் மற்றும் பழமை ஞானம் நடைபெறுகிறது.

    மே 5- திருமிகு. அமல்ராஜ் ஓரிகாமி நடைபெறுகிறது. மே 6- திருமிகு, அமல்ராஜ் சார்பில் மாயக்குரல் கதை நடைபெறுகிறது.

    மே 7- திருமணி லட்சுமி தலைமையில் கிங் ஆப் ஆர்ட்டுடன் விளையாடலாம், மே 8- நூலகக் குழு சார்பில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

    இதேபோல், மே 9ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

    மே 9ம் தேதி சென்னை ஸ்டோரி டெல்லர்ஸ் சார்பில் பொம்மலாட்டம், காகித சிற்பி தலைமையில் கிரிகாமி.

    மே 11ம் தேதி கதைசொல்லி சதீஷ் சார்பில் கோமாளி நிகழ்ச்சி.

    மே 12ம் தேதி திருமணி கமர்கட்டு சக்தி சார்பில் பாரம்பரிய உணவுகள்.

    மே 13ம் தேதி கவுசல்யா பாரி, பத்மப்பிரியா சுரேஷ் மற்றும் சூர்யா காயத்ரி ஆகியோர் தலைமையில் கப் ஆப் கதை.

    மே 14ம் தேதி உமா சந்திரசேகரன் சார்பில் நினைவாற்றல் நுட்பங்கள்.

    மே 15ம் தேதி நூலகக் குழு சார்பில் ஓவிய போட்டி.

    மே 16ம் தேதி ஜெயகுமார் சார்பில் டிரம்ஸ் வகுப்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகிறது.

    மேலும், மே 17ம் தேதி அறிவரசன் தலைமையில் அறிவியல் சோதனை.

    மே 18- சந்திரமோகன் தலைமையில் நாடகம்.

    மே 19- சுந்தரமூர்த்தி தலைமையில் நாட்டுப்புறக் கலைகள்.

    மே 20- விஜயராணி பிஜூ சார்பில் இலக்கியப் பரிசோதனைகள்.

    மே 21- விஜயலட்சுமி சார்பில் படங்கள் மூலம் விளையாட்டு.

    மே 22- நூலகக் குழு சார்பில் தமிழ் பாடல் போட்டி- பாரதியார், பாரதிதாசன் மற்றும் தேசப்பற்று பாடல்கள்.

    மே 23- நூலகக் குழு சார்பில் விவாத போட்டி, மகிழ்ச்சி தருவது இணையவழியில் படிப்பதா? வகுப்பறையில் படிப்பதா?.

    மே 24- முனைவர் சங்கர சரவணன் சார்பில் குழந்தைகள் வினாடிவினா நடைபெறுகிறது.

    மேலும், மே 25 முதல் மே 31ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    மே 25- தாமோதரன் சார்பில் நகைச்சுவை அறிதல்.

    மே 26- அறிவரசன் சார்பில் அறிவியல் பரிசோதனை.

    மே 27- நீதிமணி சார்பில் கோமாறி நிகழ்ச்சி.

    மே 28- உமா கார்த்திகேயன் சார்பில் "பை"வரையும் கலை.

    மே 29- நூலகக் குழு சார்பில் மாறுவேடப் போட்டி.

    மே 30- நூலகக் குழு சார்பில் தமிழ் வார்த்தை விளையாட்டு.

    மே 31- நூலகக் குழு சார்பில் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா நடைபெறுகிது.

    இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

    இவற்றை தவிர, பயிற்சி பட்டறை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    அதன்படி, மே 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை ரமேஷ் வைத்யா சார்பில் தமிழில் கதை எழுதுதல்.

    மே 12- 16ம் தேதி வரை விஷ்ணுபுரம் சரவணன் சார்பில் தமிழில் கதை சொல்லுதல்.

    மே 12- 16 வரை விஜய் ஆனந்த் சார்பில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி திரைப்படம் தயாரித்தல்.

    மே 19- 23ம் தேதி வரை சுரேந்தர் சார்பில் பாவனை நாடகம், தாமோதரன் தலையைில் ஆங்கிலத்தில் கதை எழுதுதல்.

    மே 26- 30ம் தேதி வரை விஷ்வநாதன் தேவராஜ் சார்பில் கார்ட்டூன் தயாரித்தல் நடைபெறுகிறது.

    கலை நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது.

    மே 7- பொம்மலாட்டம், மே 10- பாசப் பயணம் நாடகம், மே 17- நாட்டுப்பற நடனம், மே 24- பாவனை நாடகம் நடைபெறுகிறது.

    பயிற்சி வகுப்பு:

    மே 1- 25ம் தேதி சதுரங்கம் (மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை).

    மே 1- 10ம் தேதி முதல் மே 11- 20ம் தேதி வரை ரோபோடிக்ஸ் குழு- 1 மற்றும் 2 (மாலை 4 மணி முதல் 6 மணி வரை).

    மே 5- 14ம் தேதி முதல் நாட்டுப்புற நடனம் (காலை 10.30 மணி முதல்- 12.30 மணி வரை), மே 5- 14ம் தேதி வரை நாடகப் பயிற்சி (காலை 10.30 மணி முதல்- பிற்பகல் 12.30) வரை நடைபெறுகிறது.

    • மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அறிவிப்பு.
    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படம் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் பாராட்டு, வாழ்த்து.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு அளித்துள்ளார்.

    அப்போது, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற அறிவிப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்றார்.

    மேலும் அவர், "சுமார் 93 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசால் சாரிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை வரவேற்கிறேன்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படம் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் பாராட்டு, வாழ்த்து.

    அதிமுக ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக அரசு கைவிட்டுவிட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஏற்கனவே மாண்புமிகு அம்மாவின் அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.

    தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

    சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்.

    ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அதிமுக

    சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×