என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டசபையில் எதிர்க்கட்சிகள் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில்களை தெரிவித்தோம்- மு.க.ஸ்டாலின்
    X

    சட்டசபையில் எதிர்க்கட்சிகள் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில்களை தெரிவித்தோம்- மு.க.ஸ்டாலின்

    • நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை.
    • ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களின் ஒருவன் என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம் வருமாறு:-

    'தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோளுண்டு' என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் ஏந்தி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம் பாதையில் தடைக்கற்களை அள்ளி அள்ளிப் போட்டாலும், அதனை எதிர்கொள்ளும் தடந்தோள்களுடனும் வலி மை மிக்க கால்களுடனும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம் மக்கள் நலன் காக்கும் சாதனைத் திட்டங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    திராவிட மாடல் ஆட்சியில் சட்டமன்றத்தில் எந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அது முந்தைய ஆட்சியைப் போல வெறும் மேசையைத் தட்டுவதற்கான அறிவிப்பாக மட்டும் இருப்பதில்லை. அறி விக்கப்பட்டவை செயல்வடிவம் பெறவேண்டும் என்ற உறுதியுடன், கடைக்கோடி கிராமம் வரை அது சென்று சேரும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் ஓய்வதில்லை.

    எல்லார்க்கும் எல்லாம் என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்படும் திராவிட மாடல் அரசில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், அவர்களுக்கான நியமனப் பதவிகளை உருவாக்கும் வகையில் இரண்டு சட்டப்பிரிவுகளில் திருத்தம் செய்வதற்கான சட்டமுன்வடிவையும் உங்களில் ஒருவனான நான் பேரவையில் கொண்டு வந்து அவற்றைச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியதை வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.

    அப்போது பார்வையாளர்கள் மாடத்திலிருந்த மாற்றுத் திறனாளிகள் உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்த காட்சி இன்றும் மனதில் நிறைந்தி ருக்கிறது.

    ஆட்சிச் சக்கரத்தைச் சுழல வைக்கும் கைகளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே தனி அக்கறை கொண்ட இயக்கமாகும். முந்தைய ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகத்தினால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில், நிதி நிலையைச் சீர் செய்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை திராவிட மாடல் அரசு நிறைவேற்றும் என்று உத்தரவாதம் அளித்திருந்தேன். மாநில அரசின் சொந்த நிதி வருவாயினைப் பெருக்கி, அவர்களின் 9 முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மூலமாக 1 கோடியே 16 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன் பெற்று வருகிறார்கள். இந்தத் திட்டத்தில் மேலும் பயன் கிடைக்க வேண்டிய தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளியிட்டுள்ளேன். இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்படவிருக்கின்றன.

    நன்மைகள் தரும் அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டதுடன், ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்டம் போன்ற தீமைகளைத் தடுக்கும் வகையிலான தீர்மானங்களையும் திராவிட மாடல் அரசின் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளோம். இந்தியாவின் ஒருமைப்பாடும் நாட்டின் பாதுகாப்பும் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்ற இதயப்பூர்வமான அக்கறையுடன் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்ற தீர்மானத்தையும் ஒருமனதாக நிறைவேற்றி உள்ளோம்.

    சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகள், தனி மனித விரோதங்களால் ஏற்பட்ட பழிக்குப்பழிகள் இவற்றை முதன்மை எதிர்க்கட்சியும் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களும் பூதாகரமான பிரச்சினையைப் போல காட்ட முயன்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க நினைத்தாலும், அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில்கள் பேரவையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டன.

    அனல் பறக்கும் வாதங்களில் கடுஞ்சொற்கள் எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும், அந்த நிலை தொடரக் கூடாது என்பதில் எப்போதும் நான் அக்கறையுடன் இருக்கிறேன். இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் அந்த நிலை கடைப்பிடிக்கப்பட்டது.

    கூட்டத் தொடர் நிறைவடைந்த நாளில், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வராததால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் தோழமைக் கட்சி உறுப்பினர்களுக்கும் கை குலுக்கி நன்றி தெரிவித்து விடைபெற்றேன்.

    ஆம்.. நாம் நாகரிகமாகத்தான் நடந்து கொள்கிறோம். நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை. இது நம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களிடம் நாம் வெளிப்படுத்தும் பொறுப்புணர்வு. ஜனநாயக நாட்டில் மக்களே எஜமானர்கள்.

    ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் நான் குறிப்பிட்டேன். "மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் மதில் சுவர்கள் என்பது போல ஒரு பக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி எனப் பல தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வருகிறோம்" என்று திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை. சந்திக்காத சவால்கள் கிடையாது. சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை உடன்பிறப்புகளான நீங்கள் இத்தனை காலம் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க என்பது தமிழ் நாட்டின் நலனை மட்டுமின்றி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் என்பதை எதிரிகளின் மன சாட்சியும் சொல்லும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! மக்களின் பேராதரவுடன் தி.மு.கவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×