என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய்கள் ரூ.95 கோடியில் சீரமைக்க முடிவு- மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    X

    ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய்கள் ரூ.95 கோடியில் சீரமைக்க முடிவு- மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

    • வடசென்னை பகுதியில் 4 மேம்பால பணிகள் நடக்கிறது.
    • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்திற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணைமேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில், மண்டல தலைவர் நேதாஜி கணேசன் பேசும்போது, நேதாஜி நகர், 1, 2 மற்றும் மெயின் தொகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் அங்கு விரைவாக மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும். வடசென்னை பகுதியில் 4 மேம்பால பணிகள் நடக்கிறது.

    இந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். கொருக்குபேட்டை மேம்பாலப் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்றார். கவுன்சிலர் கதிர் முருகன் (அ.தி.மு.க.) கூறும்போது குழந்தைகள் பிறப்பு சான்றிதழில் பிழைகள் இருப்பதால் பள்ளியில் சேர்ப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இவற்றை சரி செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

    அதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், மருத்துவமுகாம் நடத்துகின்றபோது அதனுடன் சேர்ந்து பிறப்பு - இறப்பு சான்றிதழ் திருத்தம் செய்வதற்கான முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

    பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்திற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது. காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

    ஒரு ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட திட்ட தளங்களில் வெளிப்புற இடங்களில் தூசி, குப்பைகள் பரவுவதை தடுக்க தகரம், உலோக தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். புதிய கட்டுமானம் அல்லது இடிக்கப்படும் அனைத்து கட்டமைப்புகளில் இருந்து வெளிவரும் தூசி, துகள்கள் பரவுவதை தடுக்க துணி, தார்ப்பாய், பச்சை வலையால் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

    கட்டுமானத்தின்போது உருவாகும் எந்த ஒரு கழிவு பொருட்களையும் திறந்த வெளியில் காற்றில் பரவுவதை தவிர்க்க மூடப்பட்ட தட்டுகள் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 18 பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு கொண்ட தளங்களில் வழிகாட்டு மீறுதல்களுக்கு ரூ.5 லட்சம் அபராதமும், 300 ச.மீ. மேல் 20 ஆயிரம் ச.மீ. பரப்பளவில் உள்ள தளங்களுக்கு ரூ.25 ஆயிரமும், 300 ச.மீ. முதல் 500 ச.மீ. பரப்பளவில் அமைந்துள்ள தளங்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    மழைக் காலங்களில் ஓட்டேரி நல்லா நீர்வழி கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய்களில் மழைநீர் தங்கு தடையின்றி சீராக செல்ல இந்த கால்வாய்களை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. ஓட்டேரி நல்லா கால்வாய் பணிக்கு ரூ.65 கோடியும், விருகம்பாக்கம் கால்வாய்க்கு ரூ.30 கோடியும் செல்வாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிக்கு தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை மதிப்பீட்டுத் தொகை ரூ.95 கோடிக்கு அரசின் அனுமதி மற்றும் நிதி ஆதாரம் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

    தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட உஸ்மான் சாலையில் கட்டப்பட்டு உள்ள புதிய மேம்பாலத்திற்கு மறைந்த மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் பெயரை சூட்டுவது, 'மாமேதை கார்ல் மார்க்ஸ்' சிலையை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் அமைக்க அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தடையில்லா சான்றிதழ் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தீர்மானம் உள்பட 236 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×