என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா.

    அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர். இந்த கூட்டத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், போன் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.

    இதனை தொடர்ந்து, அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே 4 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு மேல் இருந்தாலும் இப்போதே தேர்தல் பணிகளை தி.மு.கவும், அ.தி.மு.க.வும் தொடங்கி விட்டன. குறிப்பாக பூத் கமிட்டி ஏஜெண்டுகளை தயார்ப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

    நடிகர் விஜய்யும் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்தி தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இதனால் தேர்தல் களம் விறுவிறுப்பாக தொடங்கி இருக்கிறது.

    இந்த நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா.

    அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு விளக்கம் அளித்து துணை பொதுச்செயலாளர்கள் பேசுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசுகிறார். 

    • மாநில அளவில் துணைச்செயலாளர் பதவிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • அனகை முருகேசன் விஜயகாந்த் மன்றத்தை தொடங்கிய காலத்தில் இருந்து அவரோடு பயணித்து வந்தவர் ஆவார்.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் தே.மு.தி.க. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து தே.மு.தி.க.வில் புதிய நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதா நியமித்துள்ளார்.

    மீண்டும் பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பொருளாளராக எல்.கே. சுதீஷ், செயலாளராக பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளராக விஜய காந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மாநில அளவில் துணைச்செயலாளர் பதவிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில், இந்த புதிய பதவிகள் நியமனத்தால் இரண்டு தே.மு.தி.க. முன்னாள் எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.

    தே.மு.தி.க. செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக இருந்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன் விஜயகாந்த் மன்றத்தை தொடங்கிய காலத்தில் இருந்து அவரோடு பயணித்து வந்தவர் ஆவார்.

    விஜயகாந்த் தே.மு.தி.க. தலைவராக இருந்தபோது பொருளாளர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

    இந்த நிலையில் மாவட்ட செயலாளராக இருந்து வரும் அவருக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் பொறுப்பு வகித்து வந்த அவர் இந்த முறை மீண்டும் அதுபோன்ற ஒரு பதவி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அதுபோன்ற பதவி எதுவும் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் காரணமாக அனகை முருகேசன் கட்சியிலிருந்து விலகி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இது பற்றி அனகை முருகேசனை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-

    கேப்டன் மன்றம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே நான் பணியாற்றி வருகிறேன். 43 ஆண்டுகளுக்கும் மேலாக மன்றம் மற்றும் தே.மு.தி.க. பணிகளில் ஈடுபட்டு கட்சிக்காக விசுவாசத்தோடு செயல்பட்டு வருகிறேன். விஜயகாந்த் தலைவராக இருந்த போது பொருளாளராகவும் தலைமை நிலைய செயலாளராகவும் இருந்திருக்கிறேன்.

    தற்போது மாநில அளவில் பொறுப்புகளில் இருப்பவர்கள் என்னைவிட இளையவர்கள்தான்.

    மாநில அளவில் பொறுப்பு கிடைக்காததில் எனக்கு சிறிய மனம் வருத்தம் உள்ளது. என்னுடன் பயணிக்கும் தே.மு.தி.க.வினருக்கும் அந்த வருத்தம் உள்ளது.

    இதற்கெல்லாம் கட்சி வேண்டாம் என்று வெளியில் செல்வதற்கு நான் தயாராக இல்லை. தே.மு.தி.க.விலேயே தொடர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான நல்ல தம்பியும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர் வகித்து வந்த இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நல்ல தம்பிக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பதவியை நல்ல தம்பி ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதாவுக்கு நல்ல தம்பி பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தர்மபுரியில் நடந்த பொதுக்குழுவில் நாமெல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த கேப்டனின் மறுஉருவமும் கேப்டனின் நிழலாகவும் இருக்கின்ற அன்புதம்பி விஜயபிரபாகரனை கழக இளைஞரணி செயலாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமாற வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தம்பியின் குரல் தமிழக சட்டசபையில் கழக தலைவர் கேப்டனின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்தி மகிழ்கிறேன்.

    எனவே எங்களின் காவல் தெய்வம் அண்ணியின் கவனத்திற்கு அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை, என்றைக்கும் நான் கழகத்தின் கடைக்கோடித் தொண்டன் எனபதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும்.

    நீங்கள் வெளியிட்ட அறிவிப்பில் எனக்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி விடுவிக்காதபட்சத் தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவித மனவருத்தத்திலும் கூறவில்லை. மன மகிழ்ச்சியோடுதான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு நல்லதம்பி கூறியுள்ளார்.

    தே.மு.தி.க.வில் 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தே.மு.தி.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தே.மு.தி.க.வில் இருந்து ஏற்கனவே பலர் விலகி மாற்று கட்சிகளில் சேர்ந்துள்ள நிலையில் 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேத மந்திரம் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரமோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும் சாமிக்கும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பல்லக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. வருகிற 7-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடைபெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 10-ந்தேதி காலை வெண்ணைத் தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் விழா வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார். பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாடவீதியில் சென்று வந்து நிலை அடையும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு தீர்த்த வாரி அவரோகணம், 12-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதியுலா, 13-ந் தேதி புஷ்ப யாகம், 14-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) வேல்விழி மற்றும் நிர்வாகத்தினர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
    • கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3.65 கோடி முறை பெண்கள் நகரப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய திட்டமாக மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மகளிர் விடியல் பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3.65 கோடி முறை பெண்கள் நகரப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக ஏப்ரல் மாதத்தில 28-ந்தேதியில் மட்டும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 13.59 லட்சம் முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

    மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

    • அணையின் நீர்மட்டம் 107.95 அடியாக உயர்ந்து உள்ளது.
    • தற்போது அணையில் 75.52 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

    மேட்டூர்:

    கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 2323 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3619 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 107.95 அடியாக உயர்ந்து உள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 75.52 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

    • தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.
    • இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.

    கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.

    அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.

    தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 100°F க்குமேல் வெப்பம் பதிவாகிவரும் நிலையில், நாளை முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெயிலை நினைத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நேற்று நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் கர்நாடகா, தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்து உள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 6 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கு விற்கப்பட்டது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 22-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 23-ந்தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.72,120-க்கு விற்கப்பட்டது.

    மறுநாள் தங்கம் விலை ரூ.72,040 ஆக குறைந்தது. தொடர்ந்து 4 நாட்கள் அதே விலையே நீடித்தது. கடந்த 28-ந்தேதி தங்கம் விலை மேலும் குறைந்து ரூ.71,520-க்கு விற்கப்பட்டது. 29, 30-ந்தேதிகளில் சற்று உயர்ந்து ரூ.71,840-க்கு விற்பனையானது.

    அட்சய திருதியை முடிவடைந்த நிலையில் தங்கம் விலை நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கும் சவரன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது. 

    அதே நேரத்தில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.108-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    01-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200

    30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    29-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-05-2025- ஒரு கிராம் ரூ.109

    01-05-2025- ஒரு கிராம் ரூ.109

    30-04-2025- ஒரு கிராம் ரூ.111

    29-04-2025- ஒரு கிராம் ரூ.111

    28-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு.
    • எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்

    கோவை:

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற கல்வியாண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது.

    கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு 14 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்த திருநங்கை இந்திரஜா (வயது 22) உள்பட 6,994 பேர் எழுதுகிறார்கள். இந்திரஜா தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதும் முதல் திருநங்கை ஆவார்.

    இதுகுறித்து திருநங்கை இந்திரஜா கூறும்போது, மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு. கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்தேன். நான் கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதினேன். அதில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

    இருந்தபோதிலும் எனக்கு மருத்துவ சீட்டுக்கான இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத உள்ளேன். இதில் எனக்கு 1.1 சதவீதம் இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ சீட்டு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு கோவை தடாகம் ரோடு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன். எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவலர் கதிரவன் மார்க்ஸூக்கு மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • த.வெ.க. கட்சி துண்டை அணிந்துகொண்டு விஜயின் வரவேற்பு கொண்டாட்டத்தில் காவலர் கலந்து கொண்டுள்ளார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை பார்க்க சென்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலரான கதிரவன் மார்க்ஸ், விளக்குத்தூண் காவல் நிலையத்தில் மாற்றுப்பணியில் இருந்தார்.

    காவலர் கதிரவன் மார்க்ஸூக்கு மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

    அந்த நேரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்ல சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து இருந்தார்.

    த.வெ.க. தலைவர் விஜயை பார்ப்பதற்காக காவலர் கதிரவன் மார்க்ஸ் வேறு காரணம் கூறி, முன் அனுமதி (Permission) கேட்டு மதுரை விமான நிலையம் வந்துள்ளார்.

    சீருடை இல்லாமல், த.வெ.க. கட்சி துண்டை அணிந்துகொண்டு விஜயின் வரவேற்பு கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ மாநகர காவல் ஆணையாளர் லோகநாதனுடைய பார்வைக்கு சென்ற நிலையில், காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளர்.

    • சென்னையில் மட்டும் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 1½ லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட 7 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    சென்னையில் மட்டும் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் உள்பட மின்னணு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகளை தேர்வர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்திருக்கிறது. மாணவர்கள், கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    ×