என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
- தற்போது மேட்டூர் அணையில் 82.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு மே மாத இறுதியிலேயே தொடங்கியது. இதன் காரணமாக கடலோர மற்றும் மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பல்வேறு ஆறுகள், நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 908 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 6 ஆயிரத்து 234 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113 அடியை எட்டியுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் தான் அணையின் நீர்மட்டம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் ஜூன் மாத முதல் வாரத்திலேயே 113 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 82.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
- சிறப்பு கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி அதே ரூ.300 ஆக நீடிக்கிறது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. இங்கு கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளையின்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி சாதாரண கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி அதே ரூ.300 ஆக நீடிக்கிறது.
இந்த தகவலை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- ஆகாஷ் நகர், கெருகம்பாக்கம், மணிமேடு, தாரப்பாக்கம்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர்: மில்லினியம் டவுன் கட்டம் 1,2,3, பார்க் சாலை, யு.ஆர்.நகர், பாலாஜி நகர், குப்புசாமி தெரு, ஜெமி காம்பவுண்ட், கலெக்டர் நகர், எம்.எம்.எம். மருத்துவமனை, எஸ்.எம். நாராயணன் நகர், ராம் நகர், கலைவாணர் காலனி, 11 கே.வி. பம்பிங் ஸ்டேஷன், ஹெச்.டி. சர்வீஸ், வடக்கு அவென்யூ சாலை, கொரட்டூர் ரெயில்வே, ஸ்டேஷன் புக்கிங் அலுவலகம், கொரட்டூர் பேருந்து நிலையம், 61 முதல் 72-வது தெரு, துரைசாமி 1 மற்றும் 2வது தெரு, தனபால் செட்டி 1 மற்றும் 2-வது தெரு, ரெயில் நிலைய சாலை, வி.ஓ.சி. 1 முதல் 2-வது தெரு மற்றும் லட்சுமி முதலை 1 முதல் 3-வது தெரு.
கோவூர்: தண்டலம், ஆகாஷ் நகர், கெருகம்பாக்கம், மணிமேடு, தாரப்பாக்கம், சி.பி.கார்டன், பாரதியார் தெரு, அம்பாள் நகர், ரோஸ் கார்டன், வணிகர் தெரு.
கொரட்டூர்: ரெட்டி தெரு, பாரதி நகர், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, திருமுல்லைவாயல் ரோடு, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு ரோடு, எம்.டி.எச்.ரோடு.
ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு பகுதி, காரனோடை, முனிவேல்நகர், ஆத்தூர், தேவனேரி, பஸ்தாபாளையம், விஜிபி மேடு பகுதி முழுவதும் ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஈடுபட்டு வருகிறது.
சென்னை:
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொழில் துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகளுடன் அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 3 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று 6 ஆயிரம் கனஅடியாகவும் வந்தது.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 3 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று 6 ஆயிரம் கனஅடியாகவும் வந்தது.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்தானது வினாடிக்கு சுமார் 6000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
- கடந்த விழாவில் நீட் குறித்தும், பெரியார் குறித்தும் விஜய் பேசி இருந்தார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
இந்த நிலையில், த.வெ.க. சார்பில் இன்று 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற உள்ளது.
இதில் 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையையும் த.வெ.க. தலைவர் விஜய் வழங்க உள்ளார். மேலும் மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.
இதற்காக ஓட்டலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த விழாவில் நீட் குறித்தும், பெரியார் குறித்தும் விஜய் பேசி இருந்தார். மேலும் 2026 தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்டப்போகிறார்கள் என விஜய் விமர்சித்து இருந்தார்.
- சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னை:
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், மாம்பலம், கிண்டி,ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
புறநகர் பகுதிகளான பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
- ஞானசேகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
- தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது எனக்கூறிய தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஞானசேகரன் சம்பவம் நடந்த அன்றும், மறுநாளும் யார் யாரிடம் தொலைபேசியில் பேசினான் என்ற விவரங்களையும் அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடந்த அன்றும், அதற்கு அடுத்த தினமும், யார் யாருடன் தொலைபேசியில் பேசினான், அவனுடன் பேசியவர்கள் வேறு யார் யாருடன் பேசினார்கள் என்ற முழு விவரங்களையும், எனது காணொளியில் கூறியிருந்த பின்னரும், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, அதே தகவல்களை ஏன் வெளியிடவில்லை என கேட்கிறார். அதிலும், குறிப்பாக அவர் ஏன் இத்தனை பதட்டம் அடைகிறார் என்று தெரியவில்லை.
ஒரு பொதுப் பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு. செல்வப்பெருந்தகை எனது காணொளியை முழுமையாகக் காணும்படி கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றால், அவருக்கு வாட்ஸ் அப்பில் அந்தக் காணொளியை அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- திருநகர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
- கொங்கனகிரி கோவில், ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
அனுப்பர்பாளையம்:
கே.வி.வேலம்பாளையம், திருநகர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
இதனால் ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்னு நகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்னபுரி லே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன் பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டி.டி.பி.மில், திரு நகர்,
பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எடுகாடு ஒரு பகுதி, கே.வி.ஆர்.நகர் பிரதான சாலை, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ். கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கே.ஆர்.ஆர். தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், தொடக்கப்பள்ளி 1-வது மற்றும் 2-வது தெரு, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துச்சாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்.நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாத்திமா நகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க. நகர், எல்.ஐ.சி. காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ. காலனி, குமரப்பாபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைபாளையம், ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் நகர், கொங்கனகிரி கோவில், ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வெகுநேரமாக சாலையிலேயே யானை கூட்டம் சுற்றியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
- யானைகள் கூட்டம் மோட்டார் சைக்கிளின் அருகே வந்து அதனை காலால் மிதித்து சேதப்படுத்தியது.
வால்பாறை:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரை சேர்ந்த நண்பர்கள் 2 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று நண்பர்கள் 2 பேரும் கொடுங்கலூரில் இருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் வால்பாறைக்கு புறப்பட்டனர்.
அதிரப்பள்ளி வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக வால்பாறைக்கு வந்து கொண்டிருந்தனர். ஆணகயா என்ற இடத்தில் வந்த போது சாலையில் யானைகள் கூட்டம் நின்றிருந்தது.
இதையடுத்து அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டனர்.
சாலையில் நின்றிருந்த யானைகள் கூட்டம் திடீரென இவர்களை நோக்கி வேகமாக வந்தன.
இதனால் அதிர்ச்சியான நண்பர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களை அந்தந்த வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே நிறுத்தி விட்டனர்.
யானைகள் கூட்டம் மோட்டார் சைக்கிளின் அருகே வந்து அதனை காலால் மிதித்து சேதப்படுத்தியது. வெகுநேரமாக சாலையிலேயே யானை கூட்டம் சுற்றியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் நடமாடிய யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர். பின்னர் வாகனத்தையும் மீட்டனர். அதன்பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
யானைகள் கூட்டம் சாலையில் வழிமறித்து நிற்பதையும், மோட்டார் சைக்கிளை சேதப்படுத்துவதையும், அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2 தினங்களாக முலுக்கப்பாறை பகுதியில் இருந்து அதிரப்பள்ளி செல்லக்கூடிய சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து வாகனங்களை வழிமறித்து நிற்கிறது. எனவே வனத்துறையினர் மிக கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கனரக வாகனங்களுக்கு பின்னால் சிறிய வாகனங்கள் வர வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.
- வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை:
மருத்துவப் படிப்பிற்காக நீட் நுழைவுத் தேர்வு (இளநிலை) 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு தேவை என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை எனவும் மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர். இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்தமுடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
- மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கோவை:
நீலாம்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (4-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானைப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேசன் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.






