என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ராமதாசை அன்புமணி சந்தித்தது சந்தோஷம், மகிழ்ச்சி அளிக்கிறது.
- பா.ம.க. வலிமையான கட்சி.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் சுமார் 25 நாட்களுக்கு பிறகு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி சந்தித்தார். இது குறித்து பா.ம.க. கவுரவதலைவர் ஜி.கே.மணியிடம் கேட்டபோது கூறியதாவது:-
டாக்டர் ராமதாசை அன்புமணி சந்தித்தது சந்தோஷம், மகிழ்ச்சி அளிக்கிறது. 2 பேரும் சுமூகமாக செயல்பட முயற்சி செய்தேன். பா.ம.க. வலிமையான கட்சி. இந்த கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி சோதனையானது டாக்டர் ராமதாசை அன்புமணி சந்தித்தது எனக்கும் மட்டுமின்றி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு விரைவில் தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 3 ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்-அக்னீஸ்வரசாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் வாஸ்துக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு பூஜை செய்து வீடு கட்டுதல் மற்றும் கட்டிடங்கள் கட்டும்போது விரைவில் பணிகள் நிவிர்த்தி பெறும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் பழமையான இந்த கோவிலில் பக்தர்கள் வாஸ்துக்கான பூஜைகள் செய்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி சிவ வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து கடம்புறப்பாடு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 3 ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.
மேலும் 250 கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்துக்கள், ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, அப்படி எங்களை சொல்பவர்கள் இதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் சர்வ மதத்தினரையும் மதிக்கக்கூடியவர்கள் என்றார்.
- 69 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சாதிவாரி மக்கள் தொகை விவரங்கள் தேவையாகும்.
- மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேசிய அளவிலான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
2027-ம் ஆண்டில் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்பதால், 2030-ம் ஆண்டு வரை சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை. மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள மக்களின் முழுமையான விவரங்கள் வெளிவராது என்றாலும் கூட, 69 சதவீதம் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காவது அந்த விவரங்கள் பயன்படும்.
ஆனால், அந்த விவரங்கள் கூட இன்னும் ஐந்தரை ஆண்டுகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை எனும் சூழலில் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 69 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். அந்த வழக்குகளின் விசாரணையின் போது, 69 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சாதிவாரி மக்கள் தொகை விவரங்கள் தேவையாகும்.
மத்திய அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு மாநில அளவிலும் சாதிவாரி சர்வே எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். தேசிய அளவில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு மனித தலைகளை சாதிவாரியாக எண்ணும் நடைமுறை தான். மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை. அதனால் தான் மாநில அளவில் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.
இப்போது மத்திய அரசின் சார்பில் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில், தமிழக அரசு சூழலின் தீவிரத்தன்மையை புரிந்து கொண்டு, 2008-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும். அதேபோல், மத்திய அரசும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், மக்கள் தொகை அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்று இருந்தார்.
- நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு இந்த தொகையை வழங்கவில்லை.
விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்று இருந்தார். இதனை விஷாலுக்கு பதிலாக லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் செலுத்தியது. நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு இந்த தொகையை வழங்கவில்லை.
தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தமானது.
இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பி தர உத்தரவிடக்கோரி விஷாலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்த வேண்டும் என நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டனர்.
- கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
- அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் - பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக 07.06.2025 அன்று காலை நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித்துறையை கேலிக்கூத்தாக்கியிருக்கும் அவலநிலையை உருவாக்கியிருப்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனை.
- அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு, மாத ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை.
சென்னை:
முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, மே மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பேராசிரியர்களும், ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு, போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கல்வித்துறையை கேலிக்கூத்தாக்கியிருக்கும் அவலநிலையை உருவாக்கியிருப்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனை.
திமுக ஆட்சியில், வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் கடன் சுமை, ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமாகிவிட்டது. ஆனால், அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு, மாத ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?
உடனடியாக, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற நிலையில், ஆசிரிய பெருமக்களை நிறுத்த வேண்டாம் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் உள்ளது.
- 7 வன உயிரின காப்பகங்கள் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வனத்துறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* காடுகள் என்றால் மேப்பில் உள்ளதை போன்று பச்சை திட்டுகள் என யாரும் நினைத்து விடக்கூடாது.
* காடுதான் புவி மூச்சுவிட உதவும் நுரையீரல், காடுகளை எளிதாக நினைக்க கூடாது.
* நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் உள்ளது.
* சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
* கடந்த 4 ஆண்டுகளாக தொலைநோக்குடன் பல முன்னெடுப்புகளை தமிழக அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது.
* இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்கள் கிடையாது.
* ராம்சார் அங்கீகாரம் பெற்ற 21 ஈர நிலங்கள் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என சாதனை பெற்றுள்ளோம்.
* இப்போது நாம் செய்யும் செயல்களை பொறுத்துதான் குழந்தைகளின் எதிர்காலம் அமையும்.
* தமிழ்நாட்டில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
* சதுப்பு நில காடுகளை மீட்டு எடுத்திருக்கிறோம்.
* பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கு மேலான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. புதிய அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. வனப்பரப்பை அதிகரித்துள்ளோம்.
* அருகி வரும் உயிரினங்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்.
* யானைகள், புலிகள் போன்ற வன உயிரினங்களை பாதுகாப்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது தமிழகம்.
* காடுகளின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் வனத்துறையினர்.
* 7 வன உயிரின காப்பகங்கள் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
* 1 ட்ரில்லியன் பொருளாதாரம் என்பது பசுமை பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்பது தான் இலக்கு.
* 2021-ல் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து போராட மீண்டும் மஞ்சப்பை திட்டம் உருவாக்கினோம்.
* நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம் என்பதுதான் இந்தாண்டின் சுற்றுச்சூழல் விழாவுக்கான மையக்கருத்து.
* வீட்டை விட்டு வெளியேறும்போது செல்போன் சார்ஜ் போட்டு எடுத்து செல்வதைபோல், மஞ்சப்பை எடுத்துச் செல்ல வேண்டும்.
* ஐரோப்பிய நாடுகளை போல் நமது நாடு மாற வேண்டும் என்றால் அந்த மக்கள் போல் நாமும் சுய ஒழுக்கத்துடன் மாற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புலி நடமாட்டம் குறித்து வனத்துறை சார்பில் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து வருகின்றனர்.
- பொதுமக்கள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
ஊட்டி:
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக்கோட்டம், சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட மாவனல்லா பகுதியில் உலா வரும் புலி கடந்த சில நாட்களில் இரண்டு மாடுகளை தாக்கி கொன்றது.
பகல் நேரத்தில் உலா வந்த அந்த புலியை சிறுவன் உள்ளிட்ட சிலர் பார்த்துள்ளனர். அச்சமடைந்த பொதுமக்கள், புலியைப் பிடிக்க வலியுறுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து, வனச்சரகர் தனபால் தலைமையில் 20 வன ஊழியர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 24 தானியங்கி கேமராக்கள் வைத்துள்ளனர். மேல்கம்மநல்லி கிராம மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் தங்கள் வாகனங்களில் பள்ளிக்கு அழைத்து சென்று வருகின்றனர்.
புலி நடமாட்டம் குறித்து வனத்துறை சார்பில், நேற்று காலை முதல் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள முட்புதர்களை வன ஊழியர்கள், பொக்லைன் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில் புலி நடமாட்டம் குறித்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முட்புதர்கள் அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தானியங்கி கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகவில்லை. பொது மக்கள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
- பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 26-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவியை பார்வையிடவும் வனத்துறை தடை விதித்தது.
- தொடர்ந்து மழை நீடித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது.
நெல்லை:
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. அதன் தொடக்கத்தில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது.
இதன் காரணமாக அம்பாசமுத்திரம் அருகே வனப்பகுதிக்குள் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 26-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவியை பார்வையிடவும் வனத்துறை தடை விதித்தது.
தொடர்ந்து மழை நீடித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் மணி முத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான நிலையில் 10 நாட்கள் விதிக்கப்பட்டிருந்த தடைக்கு பின்னர் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை குறைந்த நிலையிலும் மாஞ்சோலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 3 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 5 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 9 மில்லி மீட்டரும், ஊத்தில் 6 மில்லி மீட்டரும் இன்று மழை பதிவாகி உள்ளது.
- அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது.
- பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
வாழப்பாடி:
சேலத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. இங்குள்ள கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆண்டி. டெய்லர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 3 மகள்களும், ஸ்ரீகணேஷ் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் ஜெகதீஸ்வரி சங்ககிரியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆண்டி திடீரென இறந்து விட்டார். இதையடுத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்த அவரது மகன் ஸ்ரீ கணேஷ் தந்தையின் தொழிலான டெய்லரிங் வேலை செய்து வருகிறார். 2-வது மகள் ராஜேஸ்வரி கருமந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் கருமந்துறையில் உள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்தார். மாணவி ராஜேஸ்வரி 10-ம்வகுப்பு தேர்வில் 438 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு தேர்வில் 521 மதிப்பெண்களும் பெற்றார்.

கருமந்துறையில் வசித்து வரும் மாணவியின் வீடு.
ராஜேஸ்வரி பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
- ராமதாஸ்- அன்புமணி மோதலால் ஏற்பட்டுள்ள நிலை கவலை அளிக்கிறது.
- ஆறுதலை தெரிவிக்கவே எனது சகோதரர் ராமதாஸை சந்தித்தார்.
கடலூர்:
பா.ம.க.வில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறியதாவது:-
* ஆறுதலை தெரிவிக்கவே எனது சகோதரர் ராமதாஸை சந்தித்தார். இதில் எந்த அரசியலும் இல்லை.
* ராமதாஸ்- அன்புமணி மோதலால் ஏற்பட்டுள்ள நிலை கவலை அளிக்கிறது.
* பா.ம.கவில் நான் இணைய உள்ளதாக பத்திரிகைகள் கூறும் செய்தி உண்மைக்கு புறம்பானவை.
* பா.ம.க.வில் ஒரு போதும் இணையமாட்டேன் என்றார்.
- முதல் மெட்ரோ ரெயில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
- மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரெயில்களும் செப்டம்பர் 2027 முதல் மே 2028 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ. 1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 32 மெட்ரோ ரெயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் Alstom Transport India நிறுவனத்திற்கு ரூ. 1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) 28.04.2025 அன்று Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் இயக்குநர் பராக் நந்தலால் கோஹெல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ. ஆர். ராஜேந்திரன், (மெட்ரோ ரெயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), இணை பொது மேலாளர் பி. தியாகராஜன் (மெட்ரோ ரெயில்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர் AEON மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரெயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.
இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரெயில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து 14 மாதங்களுக்கு கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரெயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். இதில் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு சோதனை மற்றும் சேவை சோதனைகள் அடங்கும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரெயில்களும் செப்டம்பர் 2027 முதல் மே 2028 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மேற்கண்ட ஒப்பந்தம், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை கொள்முதல் செய்வதற்கான மூன்றாவது மற்றும் இறுதி ஒப்பந்தமாகும். முதல் இரண்டு ஒப்பந்தங்கள் முன்பே வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






