என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
- 69 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சாதிவாரி மக்கள் தொகை விவரங்கள் தேவையாகும்.
- மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேசிய அளவிலான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
2027-ம் ஆண்டில் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்பதால், 2030-ம் ஆண்டு வரை சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை. மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள மக்களின் முழுமையான விவரங்கள் வெளிவராது என்றாலும் கூட, 69 சதவீதம் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காவது அந்த விவரங்கள் பயன்படும்.
ஆனால், அந்த விவரங்கள் கூட இன்னும் ஐந்தரை ஆண்டுகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை எனும் சூழலில் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 69 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். அந்த வழக்குகளின் விசாரணையின் போது, 69 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சாதிவாரி மக்கள் தொகை விவரங்கள் தேவையாகும்.
மத்திய அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு மாநில அளவிலும் சாதிவாரி சர்வே எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். தேசிய அளவில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு மனித தலைகளை சாதிவாரியாக எண்ணும் நடைமுறை தான். மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை. அதனால் தான் மாநில அளவில் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.
இப்போது மத்திய அரசின் சார்பில் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில், தமிழக அரசு சூழலின் தீவிரத்தன்மையை புரிந்து கொண்டு, 2008-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும். அதேபோல், மத்திய அரசும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், மக்கள் தொகை அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






