என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி
- அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது.
- பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
வாழப்பாடி:
சேலத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. இங்குள்ள கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆண்டி. டெய்லர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 3 மகள்களும், ஸ்ரீகணேஷ் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் ஜெகதீஸ்வரி சங்ககிரியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆண்டி திடீரென இறந்து விட்டார். இதையடுத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்த அவரது மகன் ஸ்ரீ கணேஷ் தந்தையின் தொழிலான டெய்லரிங் வேலை செய்து வருகிறார். 2-வது மகள் ராஜேஸ்வரி கருமந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் கருமந்துறையில் உள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்தார். மாணவி ராஜேஸ்வரி 10-ம்வகுப்பு தேர்வில் 438 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு தேர்வில் 521 மதிப்பெண்களும் பெற்றார்.
கருமந்துறையில் வசித்து வரும் மாணவியின் வீடு.
ராஜேஸ்வரி பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.






