என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோவில் அர்ச்சகர்களின் ஆபாச நடன வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
- உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் ஆபாச நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
கோவில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் வீட்டில் மது அருந்து ஆபாச நடனம் ஆடினர்.
அர்ச்சகர்களின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த பக்தர்கள் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தற்காலிக அர்ச்சகர்கள் உட்பட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரிய மாரியம்மன் கோவிலில் பணி நீக்கம் செய்யப்பட்ட 3 பேரும் பூஜையில் ஈடுபடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய கோவில் அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
- கார் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கார்கள் சர்வீஸ் செய்வதற்கும் பழுது நீக்குவதற்கும் கொண்டு வரப்படும். நேற்று 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். காவலாளிகள் 2 பேர் பணியில் இருந்தனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் கார் ஷோரூமில் இருந்து திடீரென தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த காவலாளிகள் அங்கிருந்த தீயணைப்பு கருவி மூலமாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

தீ மளமளவென்று பரவியது. காரில் இருந்த பெட்ரோல் டீசல் டேங்கில் வெடித்து சிதறியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. உடனே காவலாளிகள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தீ வேகமாக எரிந்து கொண்டு இருந்தது. தீயை கட்டுப்படுத்த அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். 2 தீயணைப்பு வண்டிகளில் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து தக்கலை, கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். 4 வண்டிகளில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்க முயன்றனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சர்வீஸ் ஸ்டேஷன் நிறுத்தப்பட்ட 16 கார்கள் எரிந்து சேதமடைந்தது.

காரின் இருக்கைகள் உள்பட அனைத்து பகுதிகளும் எரிந்து சேதம் ஏற்பட்டது. தீயில் எரிந்து சாம்பலான கார்கள் எலும்புக்கூடுகள் போல உள்ளது. 25-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் இன்றி தப்பியது. இது பற்றி தகவல் அறிந்ததும் நேசமணிநகர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கார் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு, அந்த முடிவு இன்னும் வரவில்லை.
- பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது.
தைலாபுரம்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* செய்தியாளர்கள் எந்த கேள்வி எழுப்பினாலும் பதிலளிக்கத் தயார்.
* அன்புமணி மன்னிப்பு கேட்பது இங்கு பிரச்சனை இல்லை, நான் தொடங்கிய கட்சியில் நான் கூறியது படிதான் நடக்க வேண்டும்.
* என்னோடு தொடக்கத்தில் இருந்து பயணித்தவர்களுக்கு பதவி கொடுத்திருக்கிறேன்.
* எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு, அந்த முடிவு இன்னும் வரவில்லை.
* கலைஞர் பாணியில் என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பா.ம.க.விற்கு தலைவர், அன்புமணி செயல்தலைவர் தான்.
* கலைஞர் தி.மு.க. தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எந்த முணுமுணுப்பையும் செய்யவில்லை.
* எந்த போஸ்டர்களையும் கிழிப்பது நாகரிகமான செயல் அல்ல.
* பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது.
* நான் நியமித்தவர்கள் அனைவரும் நிரந்தர பொறுப்பாளர்கள்.
* 60-வது மணிவிழாவிற்கு அன்புமணி வராதது வருத்தமான மனநிலையை ஏற்படுத்தியது.
* பெரியாரையும் அண்ணாவையும் விமர்சித்திருப்பது வருத்தத்துக்குரியது
* தேர்தல் நெருங்கும் சமயத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டப்படும்
* கூட்டணி குறித்து பொதுக்குழுவில் தான் முடிவெடுக்கப்படும் என்றார்.
- திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
- உண்மை நிலை ஏமாற்றமும், வேதனையும் அளிப்பதாகவே உள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அவர்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. தமிழ்நாட்டு மக்களில் ஒரு தரப்பினரின் வாக்குகளை வாங்குவதற்காக வாக்குறுதிகளை அளித்து விட்டு, வெற்றி பெற்ற பிறகு அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஆகும். இதை தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக அரசு செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 37,328 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை கூட்டுறவுத் துறை, உணவுத் துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் செயல்பட்டு வருவதால், அதில் பணியாற்றும் பணியாளர்களின் பணிச்சூழல், ஊதியம் உள்ளிட்டவற்றில் பாகுபாடுகள் காணப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தால் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளும் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி (வாக்குறுதி எண் 236) அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதனால் நியாயவிலைக்கடை பணியாளர்களின் துயரங்கள் தொடருகின்றன. அவர்களுக்கான ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் கேட்பாரற்று கிடக்கின்றன. அனைத்துப் பொருள்களும் பொட்டலம் செய்து வழங்கப்படும் (வாக்குறுதி எண் 238), ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்- நிறுத்தப்பட்ட உளுந்து மீண்டும் வழங்கப்படும் (வாக்குறுதி எண் 240) என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் திமுக அரசு கடைக்கண் கொண்டும் பார்க்கவில்லை.
கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்து, மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்த திமுக, அவற்றில் 10 விழுக்காட்டைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 90% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்; 99% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்; இனி நிறைவேற்றுவதற்கு வாக்குறுதிகளே இல்லை என்றெல்லாம் கதை கட்டி வருகின்றனர். ஆனால், உண்மை நிலை ஏமாற்றமும், வேதனையும் அளிப்பதாகவே உள்ளது.
ஆட்சியாளர்கள் செய்யவே கூடாத குற்றங்களில் முதன்மையானது மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் துரோகம் ஆகும். ஆனால், அதைத் தான் திராவிட மாடல் அரசு தொழிலாகவும், வாடிக்கையாகவும் வைத்திருக்கிறது. தமிழகத்தை ஆளும் முதலமைச்சருக்கு மனசாட்சியும், நேர்மை உணர்வும் இருந்தால் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாய் முகப்போவியத்தை அறிமுகம் செய்கிறேன்.
- ஓவியம் வரைந்தவர் பெருங்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர்.
கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். வரும் ஜூலை 13-ந் தேதி இந்த நூலை வெளியிட இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று அந்தப் புத்தகத்தின் முகப்போவியத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
உலகத் தமிழ் உறவுகளே!
வணக்கம்.
வள்ளுவர் மறை வைரமுத்து உரை
ஜூலை 13-ல் வெளியாகிறது.
பன்னிரெண்டு வயதில் நான் கண்ட கனவு 72 வயதில் நனவாகிறது.
உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாய் முகப்போவியத்தை அறிமுகம் செய்கிறேன்.
ஓவியத்தில் ஐயன் வள்ளுவரையே மையப்படுத்தி இருக்கிறேன். தமிழர்கள் காலங்காலமாக பெற்ற வெற்றி உட்காரும் நெற்றி, சூரியனை வெட்டி ஒட்டி வைத்த கண்.
இந்தியாவின் தெற்கை போல் கூரிய நாசி,
ஒரு வனாந்தரத்தின் ரகசியம் பேசும் மீசை,
முன்தோன்றிய மூத்த குடியின் தொன்மை சொல்லும் கல் உருவம் இவற்றின் தொகுப்போவியமாக வந்திருக்கிறது முகப்போவியம்.
ஓவியம் வரைந்தவர் பெருங்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர். முதலில் ஓவியம் படைக்கிறேன். ஜூலை 13-ல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன். இதோ நீங்கள் முத்தமிட்டு மகிழ முகப்போவியம் என்று தெரிவித்துள்ளார்.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.9,070-க்கும், ஒரு சவரன் ரூ.72,560-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560
24-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840
22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-06-2025- ஒரு கிராம் ரூ.119
24-06-2025- ஒரு கிராம் ரூ.120
23-06-2025- ஒரு கிராம் ரூ.120
22-06-2025- ஒரு கிராம் ரூ.120
21-06-2025- ஒரு கிராம் ரூ.120
- மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர்.
- படுகாயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செந்தில், சுரேஷ் ஆகிய இருவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர்.
கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- நடிகர் கிருஷ்ணாவிற்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
- நடிகர் கிருஷ்ணாவிடம் 17 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணா நேற்று போலீசார் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
போலீஸ் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில்,
நடிகர் ஸ்ரீகாந்தும் நானும் நல்ல நண்பர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டுள்ளோம். ஆனால் என்னை பற்றி ஸ்ரீகாந்த் சொன்னது தவறான தகவல். நான் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது. போதைப் பொருள் கும்பலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு இரைப்பை அழற்சி நோய் இருக்கிறது. இதயத் துடிப்பு பிரச்சனையும் உள்ளது. அதனால் நான் போதைப் பொருள் எடுத்துக்கொள்ள முடியாது. என்னை பற்றி வந்த தவறான தகவல்களை மறுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
நடிகர் கிருஷ்ணாவிடம் 17 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள அவரது வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. நடிகர் கிருஷ்ணா வீட்டில் அவர் பயன்படுத்தும் மருந்துகளை ஆய்வுக்காக போலீசார் எடுத்து சென்றனர்.
- ஸ்ரீகாந்த், சிறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- சிறையில் தன்னை யாரும் பார்க்க வராததால் ஸ்ரீகாந்த் மிகவும் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது.
சென்னை:
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் - நடிகைகளை போலீசார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த், சிறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிறையில் வழங்கப்படும் உணவை மறுப்பு தெரிவிக்காமல் சாப்பிட்டு வருகிறாராம். போலீசார் நடத்திய விசாரணைக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், போதைப்பொருள் பழகத்துக்கு தான் அடிமையானது குறித்து எவ்வித ஒளிவுமறைவும் இன்றி அனைத்தையும் வெளிப்படையாக பேசினாராம். இதனால் உயர் அதிகாரிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். ஸ்ரீகாந்த் சொன்ன தகவல் அடிப்படையில்தான் நடிகர் கிருஷ்ணாவும் போலீஸ் வலையில் சிக்கியுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமின் கேட்டு இன்னும் கோர்ட்டுக்கு போகவில்லை. ஜாமின் மனு தாக்கல் செய்தால் அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சிறையில் தன்னை யாரும் பார்க்க வராததால் ஸ்ரீகாந்த் மிகவும் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது. ஸ்ரீகாந்தை போதைப்பொருள் பழக்கத்தில் தள்ளிய பட அதிபரும், அ.தி.மு.க. முன்னாள் பிரமுகருமான பிரசாத் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆனால் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை முடிந்துவிட்டது என்றும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்துவோர் பட்டியலில் பிரபல முன்னணி நடிகர், இளம் இசையமைப்பாளர் உள்ளிட்ட 10 நடிகர்-நடிகைகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இதற்காக உதவி கமிஷனர் ஒருவரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- உளுந்தம்பருப்பு விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மொத்த மார்க்கெட்டில் ரூ.125-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.115-க்கு விற்பனை ஆனது.
- அண்டை மற்றும் வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால், அதன் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
சென்னை:
மளிகை பொருட்களில் முக்கியமான இடத்தில் பருப்பு வகைகள் இருக்கின்றன. மொத்த மார்க்கெட்டில் துவரம் பருப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.175-க்கும், கடந்த ஆண்டில் ரூ.150-க்கும் விற்பனை ஆனது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.130 என்ற நிலைக்கு வந்தது. தற்போது அதன் விலை மேலும் குறைந்து தற்போது ரூ.105 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் இதைவிட சற்று அதிகம் விற்கப்பட வாய்ப்புள்ளது.
இதேபோல், உளுந்தம்பருப்பு விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மொத்த மார்க்கெட்டில் ரூ.125-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.115-க்கு விற்பனை ஆனது. இதுதவிர பாசிப் பருப்பை எடுத்துக் கொண்டால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.5 ஆயிரத்து 800 வரை விற்கப்பட்டது. தற்போது அதன் விலை ரூ.5,200 என்ற நிலைக்கு வந்திருக்கிறது. இப்படியாக பருப்பு வகைகளின் விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருந்த விலையைவிட கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.
அண்டை மற்றும் வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால், அதன் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது.
- வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதேநேரம், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்து இருந்தது. நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- சுமார் 18 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
- பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
வால்பாறை:
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் குடியிருப்பில் தங்கியிருந்து தேயிலை தோட்டத்திற்கு தனது மனைவியுடன் வேலைக்கு சென்று வருகிறார்.
கடந்த வாரம் மோனிகா தேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அதன் அருகே அவரது மகள் ரோஷினிகுமாரி நின்றிருந்தார்.
குடம் நிறைந்ததும் மோனிகா தேவி, தனது மகளை குழாயின் அருகே நிற்க கூறி விட்டு வீட்டிற்குள் சென்றார். சிறுமி ரோஷினி குமாரி மட்டும் வெளியில் நின்றிருந்தார்.
அப்போது தேயிலை தோட்டத்திற்குள் மறைந்து இருந்த சிறுத்தை ஒன்று திடீரென வெளியே வந்து, அங்கு நின்றிருந்த சிறுமி ரோஷினி குமாரியின் மீது பாய்ந்து கழுத்தை கவ்வி தரதரவென இழுத்து சென்றது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே மோனிகா தேவி வெளியில் ஓடி வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை, மோனிஷாகுமாரியை கவ்வி இழுத்து சென்றதை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி அழுதார்.
அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் ரத்தகறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. ஆனால் சிறுமியின் உடலை காணவில்லை.
இதையடுத்து வனத்துறையினர் குடியிருப்பையொட்டி உள்ள தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 18 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்து கூண்டில் சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.






