என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
- நடிகர் கிருஷ்ணாவிற்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
- நடிகர் கிருஷ்ணாவிடம் 17 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணா நேற்று போலீசார் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
போலீஸ் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில்,
நடிகர் ஸ்ரீகாந்தும் நானும் நல்ல நண்பர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டுள்ளோம். ஆனால் என்னை பற்றி ஸ்ரீகாந்த் சொன்னது தவறான தகவல். நான் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது. போதைப் பொருள் கும்பலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு இரைப்பை அழற்சி நோய் இருக்கிறது. இதயத் துடிப்பு பிரச்சனையும் உள்ளது. அதனால் நான் போதைப் பொருள் எடுத்துக்கொள்ள முடியாது. என்னை பற்றி வந்த தவறான தகவல்களை மறுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
நடிகர் கிருஷ்ணாவிடம் 17 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள அவரது வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. நடிகர் கிருஷ்ணா வீட்டில் அவர் பயன்படுத்தும் மருந்துகளை ஆய்வுக்காக போலீசார் எடுத்து சென்றனர்.






