என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போதைப்பொருள் விவகாரம்: கண்காணிப்பு வளையத்துக்குள் 10 நடிகர்-நடிகைகள்
    X

    போதைப்பொருள் விவகாரம்: கண்காணிப்பு வளையத்துக்குள் 10 நடிகர்-நடிகைகள்

    • ஸ்ரீகாந்த், சிறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
    • சிறையில் தன்னை யாரும் பார்க்க வராததால் ஸ்ரீகாந்த் மிகவும் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் - நடிகைகளை போலீசார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

    நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த், சிறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிறையில் வழங்கப்படும் உணவை மறுப்பு தெரிவிக்காமல் சாப்பிட்டு வருகிறாராம். போலீசார் நடத்திய விசாரணைக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், போதைப்பொருள் பழகத்துக்கு தான் அடிமையானது குறித்து எவ்வித ஒளிவுமறைவும் இன்றி அனைத்தையும் வெளிப்படையாக பேசினாராம். இதனால் உயர் அதிகாரிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். ஸ்ரீகாந்த் சொன்ன தகவல் அடிப்படையில்தான் நடிகர் கிருஷ்ணாவும் போலீஸ் வலையில் சிக்கியுள்ளார்.

    நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமின் கேட்டு இன்னும் கோர்ட்டுக்கு போகவில்லை. ஜாமின் மனு தாக்கல் செய்தால் அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சிறையில் தன்னை யாரும் பார்க்க வராததால் ஸ்ரீகாந்த் மிகவும் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது. ஸ்ரீகாந்தை போதைப்பொருள் பழக்கத்தில் தள்ளிய பட அதிபரும், அ.தி.மு.க. முன்னாள் பிரமுகருமான பிரசாத் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஆனால் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை முடிந்துவிட்டது என்றும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்துவோர் பட்டியலில் பிரபல முன்னணி நடிகர், இளம் இசையமைப்பாளர் உள்ளிட்ட 10 நடிகர்-நடிகைகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    இதற்காக உதவி கமிஷனர் ஒருவரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×