என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காலையில் கனமழை விடாமல் பெய்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர்.
- பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.21 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்றும் பல இடங்களில் கனமழை கொட்டியது.
நாகர்கோவிலில் இன்று காலை வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. காலை 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கியது. பின்பு அவ்வப்போது கனமழை கொட்டியபடி இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் சாலை, கோட்டார் சாலை, அசம்பு ரோடுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
காலையில் கனமழை விடாமல் பெய்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். சுசீந்திரம், அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்று மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியிலும் மழை பெய்தது.
சிற்றாறு 1-ல் அதிகபட்சமாக 60.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
ஏற்கனவே அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கூடுதல் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே குழித்துறை ஆறு, கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.21 அடியாக இருந்தது. அணைக்கு 1,285 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதகுகள் வழியாக 753 கன அடி தண்ணீரும், உபரிநீராக 131 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று 69.45 அடியாக இருந்தது. அணைக்கு 900 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழையின் காரணமாக சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருக்கின்றன.
மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டி நிரம்பி வழிகின்றன. தொடர் மலையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரங்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்தமழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 40.6, பெருச்சாணி 19.8, சிற்றாறு1-60.4, சிற்றார்2-24.2, மயிலாடி 3.6, நாகர்கோவில் 3.4, கன்னிமார் 33.6, ஆரல்வாய்மொழி 10.4, பூதப்பாண்டி 16.4, முக்கடல் 20.2, பாலமோர் 31.6, தக்கலை 2.4, குளச்சல் 4, இரணியல் 6, அடையாமடை 22.2, மாம்பழத் துறையாறு 12, ஆணைக்கிடங்கு 11.6, களியல் 18, குழித்துறை 2.4, புத்தன்அணை 19.6, சுருளோடு 22.6, திற்பரப்பு மற்றும் முள்ளங்கினாவிளை 10.8.
- பதவி சுகத்தை நான் விரும்பி இருந்தால் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் சென்றிருப்பேன்.
- எல்லா பொறுப்புகளுக்கும் முக்கிய பொறுப்பு செயல் தலைவர் பொறுப்பு தான்.
திண்டிவனம்:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. ஆனால் அந்த முடிவு இன்னும் வரவில்லை.பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பா.ம.க. விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கிறது.
என்னால் தொடங்கப்பட்ட பா.ம.க. வளர்த்தது நான் தான். என் மூச்சு இருக்கும் வரை தலைவராக செயல்படுவேன். நிர்வாகிளுக்கு நான் வழங்கிய பொறுப்பு தான் நிரந்தர பொறுப்பு. பா.ம.க. இணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அருள் தொடர்ந்து மாவட்ட செயலாளராவும் செயல்படுவார். 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். அந்த கட்சிக்கு நான் தலைவராக செயல்பட கூடாதா?
கருணாநிதி பாணியில் பா.ம.க.வின் தலைவராக நான் தான் இருப்பேன். ஸ்டாலின் பாணியில் அன்புமணி செயல்தலைவராக இருக்கட்டும். கருணாநிதி தி.மு.க. தலைவராக இருந்தபோது ஸ்டாலின் எந்த முணுமுணுப்பையும் செய்யவில்லை. என் மனசாட்சி நீ மூச்சு இருக்கும் வரை தலைவராக இரு என கூறியது.
மனசாட்சி சொன்னதால் மூச்சு உள்ளவரை நானே தலைவராக செயல்படுவேன். எனக்கு பிறகு அவர் தானே தலைவராக இருக்க போகிறார். எல்லா பொறுப்புகளுக்கும் முக்கிய பொறுப்பு செயல் தலைவர் பொறுப்பு தான். நான் நாகரீகமாக, நளினமாக இருக்க கற்றுக்கொண்டது கருணாநிதியிடம் தான். பல்வேறு கட்டங்களில் பல்வேறு சோதனைகளை எல்லாம் கடந்து நாகரீகமாக நளினமாக நான் கற்று கொண்டிருக்கிறேன். இந்த கட்சியை கொண்டு வர என்னை போல் இந்தியாவிலே எந்த தலைவரும் பாடுபட்டு இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நான் பாடுபட்டு இருக்கிறேன்.
பதவி சுகத்தை நான் விரும்பி இருந்தால் எந்த பதவிக்கு வேண்டுமானலும் சென்றிருப்பேன். 4,5 பிரதமரிடம் நான் பழகியிருக்கிறேன். அரசு கட்டிலுக்கு நான் போகமாட்டேன். சுயம்புவாக இருந்து தனிமனிதனாக இந்த கட்சியை நான் உருவாக்கினேன். இப்போது எனக்கு மனசு சொல்கிறது. அதனால் தான் தலைவர் பதவியில் நீடிக்க விரும்புகிறேன். குடிக்கிறவனுக்கு 2 வருடம் தண்டனை என்றால் சாராயம் விக்கிறவர்களுக்கு 4 வருடம் தண்டனை தர வேண்டும்.
எந்த போஸ்டர்களையும் கிழிப்பது நாகரிகமான செயல் அல்ல. தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. பேனர்கள் கிழிக்கப்பட்டது சில விஷமிகள் செயல். கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தலைவர்களை கொச்சப்படுத்தக்கூடாது. மதுரை முருகர் பக்தர் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு விடுவில்லை. மதுரை முருகர் பக்தர் மாநாட்டில் பெரியாரையும் அண்ணாவையும் விமர்சித்திருப்பது வருத்தத்துக்குரியது.
என்னோடு தொடக்கத்தில் இருந்து பயணித்தவர்கள் தான் பதவி கொடுத்திருக்கிறேன். பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. செயல்தலைவர் என்பது சிறந்த பொறுப்பு. அதனை அன்புமணி ஏற்க மறுக்கிறார். எனது 60-வது மணிவிழாவிற்கு அன்புமணி வராதது வருத்தமான மனநிலையை ஏற்படுத்தியது.
தேர்தல் நேரத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டப்படும். அப்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
உங்களது 60-வது மணிவிழாவிற்கு அன்புமணி வராதது குறித்த கேள்வி கேட்ட போது டாக்டர் ராமதாஸ் கண்கலங்கினார்.
- ஒரே நேரத்தில் 1500 பஸ்கள் நிறுத்தும் வகையில் 3 தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.
- திருச்செந்தூர் நகரத்தை சுற்றி பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வருகிற 7-ந்தேதி காலை 6.15 மணிக்கு நடைபெற உள்ளது.
இதற்காக நடைபெற்று வந்த பல்வேறு கட்ட திருப்பணிகள் முடிவுற்று நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற 30-ந்தேதிக்குள் 90 சதவீதம் வேலைகள் முடிவடையும் என கூறப்படுகிறது.
கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்களை வரவேற்க கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட 'கருணைக் கடலே கந்தா போற்றி' பதாகை நேற்று இரவு பூஜை செய்து திறந்து வைக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் ஒருவழி பாதை வழியாக வந்து எளிதாக செல்லும் வகையில் கடற்கரையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் 1500 பஸ்கள் நிறுத்தும் வகையில் 3 தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. அதில் கழிப்பிடம், குடிநீர் வசதி இருக்கும். 824 தற்காலிக கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மார்க்கமாக வரும் பக்தர்கள் வாகனங்கள் ஜெஜெநகர் பகுதியில் நிறுத்த தற்காலிக வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் பக்தர்கள் அந்த பகுதி நத்தக்குளம் வடிகால் கால்வாயை கடந்து செல்ல தற்காலிக மேம்பாலம் அமைக்கப்பட்டு பக்தர்கள் அந்த வழியாக நேராக கோவிலுக்கு வரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
அதே போல் நெல்லை மார்க்கமாக வரும் பக்தர்கள் வாகனங்கள் வேட்டையாடி மடம் அருகில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதை போல் நாகர்கோவில் மார்க்கமாக வரும் பக்தர்கள் வாகனங்கள் நுகர்பொருள் வாணிப கழகம் அருகில் வாகன நிறுத்தம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பக்தர்களை கட்டணமின்றி அரசு பஸ்களில் ஏற்றி வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் நகரத்தை சுற்றி பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இயக்கப்படும் பஸ்கள் போக கூடுதலாக 855 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
யாகசாலையில் 64 ஓதுவார்கள் மூலம் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட செந்தமிழ் வேதங்கள் ஒலிக்கும். 20 இடங்களில் டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அறுசுவை உணவுடன் அன்னதானம் நடைபெற உள்ளது. இதனை 10-ம் தேதி வரை நீட்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளது.
கோவில் நிர்வாகம் சார்பில் 20 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தமிழ்நாட்டு மக்களை தங்களால் பிரிக்க முடியாததால் அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது.
- அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் ரூ.174 கோடி மதிப்புள்ள முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய முதலமைச்சர், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசியல் காரணங்களுக்காக கடவுள் பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர்.
* தமிழ்நாட்டு மக்களை தங்களால் பிரிக்க முடியாததால் அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது.
* இன்று கட்சியை அடமானம் வைத்தவர்கள் நாளை தமிழ்நாட்டை அடகு வைக்க அனுமதிக்கக்கூடாது.
* மக்களுக்காக கவலைப்படாமல் மதத்திற்காக கவலைப்படுகின்றன பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும்.
* தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த முயற்சிக்கிறது பா.ஜ.க.
* தி.மு.க. அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்ததை பார்த்து, மதவாத அரசியல் செய்பவர்களுக்கு பற்றி எரிகிறது.
* தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என அ.தி.மு.க.வை வைத்துக்கொண்டே பேசுகிறது பா.ஜ.க.
* பா.ஜ.க.வால் அ.தி.மு.க.வுக்குத்தான் ஆபத்து.
* அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூமாப்பட்டி தொடர்பான வீடியோக்கள் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
- கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு பலரும் படையெடுத்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் திடீரென இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
dark_ night_ tn84 என்ற இன்ஸ்டா ஐடியில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் அருமை பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
'மன அழுத்தமா?, விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனி தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்... என்று பேசிய வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கூமாபட்டியில் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்துள்ளது. கூமாபட்டியில் நிலங்கள் விற்பனைக்கு உள்ளது என்கிற ரீல்ஸ் எஸ்டேட் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
இதனிடையே கூமாபட்டியில் வெறிநாய் கடித்து 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆலங்காயம் ஊராட்சியில் உள்ள மேக்னா மலையில் ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும்.
- திருப்பத்தூர் நகர மைய பகுதியில் ரூ.18 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் ரூ.174 கோடி மதிப்புள்ள முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய முதலமைச்சர், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூருக்கு 5 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.
* ஆலங்காயம் ஊராட்சியில் உள்ள மேக்னா மலையில் ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும்.
* குமாரமங்கலம் பகுதியில் சீராக மின்விநியோகம் செய்யும் வகையில் ரூ.6 கோடியில் புதிய துணைமின் நிலையம் அமைக்கப்படும்.
* நல்லகொண்டா பகுதியில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் ரூ.200 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
* திருப்பத்தூர் நகர மைய பகுதியில் ரூ.18 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும்.
* ஆம்பூரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.
- தி.மு.க. பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. நிர்வாகி முத்துபாலகிருஷ்ணனை, தி.மு.க. நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்று செய்திகள் வருகின்றன.
இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு கடந்து செல்ல முனையுமா?
தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு தி.மு.க.-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?
சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.
முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள தி.மு.க. பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- விருதுநகருக்கு சென்று, அங்கிருந்து சென்னை செங்கோட்டை செல்லும் ரெயில் திருவாரூருக்கு வீர பிரசாத் செல்ல இருந்துள்ளார்.
- அந்தியோதயா ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் இ.பி. காலனியை சேர்ந்தவர் வீர பிரசாத் (வயது 28). இவர் திருவாரூரில் உள்ள கூட்டுறவு சொசைட்டியில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். நேற்று வீர பிரசாத் தனது மனைவி பிருந்தா மற்றும் 1½ வயது ஆண் குழந்தையுடன் திருவாரூர் செல்வதற்காக கோவில்பட்டி ரெயில்வே நிலையத்துக்கு வந்துள்ளார். சென்னை தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரெயில் மூலமாக விருதுநகருக்கு சென்று, அங்கிருந்து சென்னை செங்கோட்டை செல்லும் ரெயில் திருவாரூருக்கு வீர பிரசாத் செல்ல இருந்துள்ளார்.
வழக்கமாக வரும் நேரத்தை விட 15 நிமிடம் தாமதமாக அந்தியோதயா ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையம் 2-வது நடைமேடையில் வந்து கொண்டு இருக்கும்போது நிற்பதற்குள். ரெயிலில் வீர பிரசாத் ஏற முயன்றுள்ளார். அப்போது கால் தவறி நடைமேடைக்கும் ரெயிலுக்கு இடையில் சிக்கி கொண்டார். நல்வாய்ப்பாக ரெயில் நின்றதால் பெரும் விபத்து ஏற்படவில்லை. சிக்கி கொண்ட அவரால் வெளியே வர முடியாமல் பரிதவித்து கொண்டிருந்தார்.
இதையடுத்து நடைமேடையை எந்திரம் மூலமாக உடைத்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வீர பிரசாத் மீட்கப்பட்டார். இதில் அவருக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்தியோதயா ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. இந்த சம்பவம் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசால் கூட நமது வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.
- தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி பரவ வேண்டும் என்பதே நோக்கம்.
திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் ரூ.174 கோடி மதிப்புள்ள முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.273.83 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,000,168 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்த்தில் ரூ.68.76 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* நேற்று காட்பாடிக்கு ரெயிலில் வந்து இறங்கியதில் இருந்து மக்களின் வரவேற்பால் மனம் நிறைந்துள்ளேன்.
* இதுவரை இந்த அளவுக்கு கூட்டத்தை பார்த்ததே கிடையாது என துரைமுருகன் கூறினார்.
* ஆம்பூர் பிரியாணி என பல சிறப்பு கொண்ட திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி.
* தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாத கடந்த கால ஆட்சியால் சீரழிந்த தமிழகத்தின் வளர்ச்சியை 4 ஆண்டில் மீட்டெடுத்துள்ளோம்.
* ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசால் கூட நமது வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.
* மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்.
* 2026, 2031, 2036 என என்றுமே தி.மு.க. தான் நாட்டை ஆளப்போகிறது என இறுமாப்புடன் பெருமையுடன் தெரிவிக்கிறேன்.
* தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி பரவ வேண்டும் என்பதே நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீலகிரி, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தாலும் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. நீலகிரி, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.06 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து உள்ளது. நேற்று காலை அணைக்கு 4, 966 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 15 ஆயிரத்து 199 கன அடியாக அதிகரித்து வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும், தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 450 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீரும் என மொத்தம் 1,355 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தாலும் மற்ற அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.50 அடியாக உள்ளது. இதே போல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 22.47 அடியாக சரிந்து உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.35 அடியாக சரிந்து உள்ளது.
- காட்டுப்பகுதிக்குள் செல்லாமல் யானை நின்று கொண்டிருந்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- யானை ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பூதப்பாண்டி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதியான மோதிரமலை, குற்றியார் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகவே யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் யானைகள் அட்டகாசம் செய்து வந்தன. இந்தநிலையில் இன்று காலையில் யானை ஒன்று அந்த பகுதியில் உள்ள மரங்களை சேதப்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது.
அதில் பங்குதந்தை வசித்து வருகிறார். இன்று காலை அங்கு வந்த யானை அவர் தங்கி இருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த பங்குத்தந்தை தொலைபேசி மூலமாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் யானையை விரட்டினார்கள். ஆனால் யானை செல்லவில்லை. இதையடுத்து பட்டாசுகளை வெடித்து யானை அங்கிருந்து விரட்டினார்கள். அங்கிருந்து சென்ற யானை சிறிது தூரம் சென்று நின்று கொண்டிருந்தது. காட்டுப்பகுதிக்குள் செல்லாமல் யானை நின்று கொண்டிருந்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
யானை ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்புதான் யானை திடல், தெள்ளந்தி பகுதிகளில் விளை நிலங்களை சேதப்படுத்திருந்த நிலையில் தற்போது கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் புகுந்து சேதப்படுத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரடி ஒன்று புகுந்து பொது மக்களை அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்துகிறார்.
- கலைஞர் கருணாநிதி படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.
சென்னை:
தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது 20 வயது முதல் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுவதும் எழுத்தாகவும், பேச்சாகவும் மூச்சாகவும் வாழ்ந்து உள்ளார்.
80 ஆண்டுகாலம் பொது வாழ்வு, 5 முறை முதலமைச்சராக ஆட்சிபுரிந்தது மட்டுமல்லாமல், 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்களையும், 15 புதினங்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.
"நண்பனுக்கு", "உடன் பிறப்பே" எனும் தலைப்புகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களும் "கரிகாலன்" என்னும் பெயரில் கேள்வி பதிலும் எழுதி இருக்கிறார்.
இதைத் தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன. இவற்றின் பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால், ஏறத்தாழ 7 லட்சம் பக்கங்களுக்கு மேல் இருக்கும்.
பள்ளிப் பருவம் தொடங்கி அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் பாராட்டுக்குரியவை. கவித்துவமும் இலக்கியத் திறனும் கொண்ட கருணாநிதியின் படைப்பாற்றலைப் போற்றும் வண்ணம் சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லா ல்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்த முதன்முறையாக "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்", நாளை மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடத்த உள்ளது.
தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்துகிறார்.
விழாவில், சாகித்திய அகாடமி செயலர் முனைவர் கே. ஸ்ரீனிவாசராவ், வரவேற்புரையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கலைவாணர் அரங்கம் 3-ம் தளத்தில் உள்ள சிற்றரங்கில் "கவிதை" என்கிற அமர்வு நடைபெறுகிறது.
இதேபோன்று, 28-ந்தேதி (சனிக்கிழமை) 2-ம் நாள் நிகழ்வில் "நாடகம்" என்கிற அமர்வு நடை பெறுகிறது. நிறைவு விழாவில், கனிமொழி கருணாநிதி எம்.பி. பங்கேற்று பேசுகிறார்.






