என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குமரி மாவட்டம் முழுவதும் இன்றும் கனமழை கொட்டியது - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    குமரி மாவட்டம் முழுவதும் இன்றும் கனமழை கொட்டியது - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • காலையில் கனமழை விடாமல் பெய்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர்.
    • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.21 அடியாக இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்றும் பல இடங்களில் கனமழை கொட்டியது.

    நாகர்கோவிலில் இன்று காலை வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. காலை 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கியது. பின்பு அவ்வப்போது கனமழை கொட்டியபடி இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் சாலை, கோட்டார் சாலை, அசம்பு ரோடுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    காலையில் கனமழை விடாமல் பெய்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். சுசீந்திரம், அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்று மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியிலும் மழை பெய்தது.

    சிற்றாறு 1-ல் அதிகபட்சமாக 60.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கூடுதல் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே குழித்துறை ஆறு, கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.21 அடியாக இருந்தது. அணைக்கு 1,285 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதகுகள் வழியாக 753 கன அடி தண்ணீரும், உபரிநீராக 131 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று 69.45 அடியாக இருந்தது. அணைக்கு 900 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழையின் காரணமாக சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருக்கின்றன.

    மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டி நிரம்பி வழிகின்றன. தொடர் மலையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரங்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்தமழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 40.6, பெருச்சாணி 19.8, சிற்றாறு1-60.4, சிற்றார்2-24.2, மயிலாடி 3.6, நாகர்கோவில் 3.4, கன்னிமார் 33.6, ஆரல்வாய்மொழி 10.4, பூதப்பாண்டி 16.4, முக்கடல் 20.2, பாலமோர் 31.6, தக்கலை 2.4, குளச்சல் 4, இரணியல் 6, அடையாமடை 22.2, மாம்பழத் துறையாறு 12, ஆணைக்கிடங்கு 11.6, களியல் 18, குழித்துறை 2.4, புத்தன்அணை 19.6, சுருளோடு 22.6, திற்பரப்பு மற்றும் முள்ளங்கினாவிளை 10.8.

    Next Story
    ×