என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

7-ந்தேதி மகா கும்பாபிஷேகம் - திருச்செந்தூர் கோவிலில் நிறைவு கட்டத்தை எட்டிய திருப்பணிகள்
- ஒரே நேரத்தில் 1500 பஸ்கள் நிறுத்தும் வகையில் 3 தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.
- திருச்செந்தூர் நகரத்தை சுற்றி பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வருகிற 7-ந்தேதி காலை 6.15 மணிக்கு நடைபெற உள்ளது.
இதற்காக நடைபெற்று வந்த பல்வேறு கட்ட திருப்பணிகள் முடிவுற்று நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற 30-ந்தேதிக்குள் 90 சதவீதம் வேலைகள் முடிவடையும் என கூறப்படுகிறது.
கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்களை வரவேற்க கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட 'கருணைக் கடலே கந்தா போற்றி' பதாகை நேற்று இரவு பூஜை செய்து திறந்து வைக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் ஒருவழி பாதை வழியாக வந்து எளிதாக செல்லும் வகையில் கடற்கரையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் 1500 பஸ்கள் நிறுத்தும் வகையில் 3 தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. அதில் கழிப்பிடம், குடிநீர் வசதி இருக்கும். 824 தற்காலிக கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மார்க்கமாக வரும் பக்தர்கள் வாகனங்கள் ஜெஜெநகர் பகுதியில் நிறுத்த தற்காலிக வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் பக்தர்கள் அந்த பகுதி நத்தக்குளம் வடிகால் கால்வாயை கடந்து செல்ல தற்காலிக மேம்பாலம் அமைக்கப்பட்டு பக்தர்கள் அந்த வழியாக நேராக கோவிலுக்கு வரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
அதே போல் நெல்லை மார்க்கமாக வரும் பக்தர்கள் வாகனங்கள் வேட்டையாடி மடம் அருகில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதை போல் நாகர்கோவில் மார்க்கமாக வரும் பக்தர்கள் வாகனங்கள் நுகர்பொருள் வாணிப கழகம் அருகில் வாகன நிறுத்தம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பக்தர்களை கட்டணமின்றி அரசு பஸ்களில் ஏற்றி வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் நகரத்தை சுற்றி பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இயக்கப்படும் பஸ்கள் போக கூடுதலாக 855 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
யாகசாலையில் 64 ஓதுவார்கள் மூலம் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட செந்தமிழ் வேதங்கள் ஒலிக்கும். 20 இடங்களில் டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அறுசுவை உணவுடன் அன்னதானம் நடைபெற உள்ளது. இதனை 10-ம் தேதி வரை நீட்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளது.
கோவில் நிர்வாகம் சார்பில் 20 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






