என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வள்ளுவர் மறை வைரமுத்து உரை - முகப்போவியத்தை வெளியிட்டார் கவிஞர் வைரமுத்து
- உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாய் முகப்போவியத்தை அறிமுகம் செய்கிறேன்.
- ஓவியம் வரைந்தவர் பெருங்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர்.
கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். வரும் ஜூலை 13-ந் தேதி இந்த நூலை வெளியிட இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று அந்தப் புத்தகத்தின் முகப்போவியத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
உலகத் தமிழ் உறவுகளே!
வணக்கம்.
வள்ளுவர் மறை வைரமுத்து உரை
ஜூலை 13-ல் வெளியாகிறது.
பன்னிரெண்டு வயதில் நான் கண்ட கனவு 72 வயதில் நனவாகிறது.
உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாய் முகப்போவியத்தை அறிமுகம் செய்கிறேன்.
ஓவியத்தில் ஐயன் வள்ளுவரையே மையப்படுத்தி இருக்கிறேன். தமிழர்கள் காலங்காலமாக பெற்ற வெற்றி உட்காரும் நெற்றி, சூரியனை வெட்டி ஒட்டி வைத்த கண்.
இந்தியாவின் தெற்கை போல் கூரிய நாசி,
ஒரு வனாந்தரத்தின் ரகசியம் பேசும் மீசை,
முன்தோன்றிய மூத்த குடியின் தொன்மை சொல்லும் கல் உருவம் இவற்றின் தொகுப்போவியமாக வந்திருக்கிறது முகப்போவியம்.
ஓவியம் வரைந்தவர் பெருங்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர். முதலில் ஓவியம் படைக்கிறேன். ஜூலை 13-ல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன். இதோ நீங்கள் முத்தமிட்டு மகிழ முகப்போவியம் என்று தெரிவித்துள்ளார்.






