என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது.
    • சிறப்பான முறையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராகி உள்ளார். அவர் தலைவராக வருவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் என்பதை பொது வெளியில் சொல்ல முடியாது.

    அவர்கள் முதலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்துவிட்டு கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சி அமைப்பார்களா? என்பதை முடிவு செய்துவிட்டு எங்களை பற்றி பேசட்டும்.

    பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது. பொதுப்பணித்துறையால் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகையை வழங்கி அவர்கள் கடையை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்து விட்டோம். ஆனால் தனிநபர் ஒருவர் தொடர்ந்து நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த பிரச்சனை எழுந்துள்ளது. தற்போது அந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக வியாபாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    வருகிற 8-ந்தேதி நடைபெறும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதலமடைந்த சாலைகளை செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பான முறையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • ஒரு தனிப்படை போலீசார், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டது. அதன்படி அவர் விசாரணைக்கு ஆஜரானார். ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடந்த 27-ந்தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    முன்ஜாமின் மனு தள்ளுபடியானதால் ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் ஒரு தனிப்படை போலீசார், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மேலும் இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.

    • காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.
    • பெண் போலீஸ் அபராதம் விதித்ததுடன் அந்த காரை உடனடியாக நகர்த்தவும் நடவடிக்கை எடுத்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ராக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் தினேஷ். இவர் புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் விடுதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக தனக்கு சொந்தமான காரில் வந்தார்.

    காரை வேறு ஒரு டிரைவர் ஓட்டினார். தினேஷ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்ட நிலையில் டிரைவர் அந்த காரை போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. அந்த இடத்தில் கார் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.

    பொதுமக்கள் சத்தம் போட்டும் அந்த காரில் இருந்த டிரைவர் வாகனத்தை விட்டு இறங்காமல் இருந்ததோடு, வாகனத்தை நகர்த்தாமலும் இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் கஸ்தூரி அங்கு வந்தார். காரை எடுக்க சொல்லி கஸ்தூரி வற்புறுத்தினார். அதற்கு இது போலீஸ்காரர் கார் என்று டிரைவர் கூறியதாக தெரிகிறது.

    உடனே பெண்போலீஸ் காயத்ரி யார் காராக இருந்தாலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியது தவறு என கூறி 2 பிரிவுகளில் அந்த வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்தார். அந்த காரில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் இருந்தபோதிலும் தனது கடமையில், கருத்தாக செயல்பட்டு பெண் போலீஸ் அபராதம் விதித்ததுடன் அந்த காரை உடனடியாக நகர்த்தவும் நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதனால் அந்த பெண் போலீஸ் காயத்ரிக்குக்கு பாராட்டுகள் குவிகிறது. விழா முடிந்து வந்த போலீஸ்காரர் தினேஷ் தனது டிரைவரை கண்டித்தார். பின்னர் அங்கிருந்து காரை எடுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பல்வேறு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடக்கிறது.
    • ஒரே கட்சியிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டியது இல்லை.

    கோவை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். நான் ஏற்கனவே சொன்னது போல் கடலூரில் ஜனவரி 9-ந் தேதி மாநாடு நடக்கிறது. அன்றைய தினம் கூட்டணி குறித்து தெளிவாக அறிவிக்கப்படும்.

    2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதை வரவேற்கிறோம். அதேசமயம் தமிழகத்தில் உள்ள ஒரு கட்சியின் தலைமையில் ஆட்சி இருந்தால் நல்லது. பல்வேறு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடக்கிறது. ஒரே கட்சியிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டியது இல்லை.

    காங்கிரஸ் கட்சி சார்பான விழாவில் சுதீஷ் கலந்து கொண்டது தவறு இல்லை. பல ஆண்டுகாலமாக, தொடரும் நட்பின் வெளிப்பாடாக சுதீஷ் விழாவில் கலந்து கொண்டார். இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை.

    போதைப்பொருள் இல்லாத, டாஸ்மாக் இல்லாத, கள்ளச்சாராயம் இல்லாத தமிழ்நாட்டை தி.மு.க. அரசு உருவாக்க வேண்டும். அ.தி.மு.க. தரப்பில் விருப்பம் இருந்தாலும் கூட்டணியில் இடம்பெறுவது பற்றி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
    • காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    தமிழக சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது முக்கிய கேவில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

    இதனை அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி தொடங்கி வைத்தனர்.

    இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி பழனி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மண்டல இணை ஆணையர் .குமரதுரை, துணை ஆணையர், செயல் அலுவலர் சித்ராதேவி, உதவி ஆணையர் கார்த்திகேயன், கோவில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி சீனிவாசன், குன்றத்தூர் முருகன் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டு மக்களின் சமய நம்பிக்கையை அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்த நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சிகள் தகர்ந்து தவிடு பொடியாகும்.

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார்.

    கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தீர்மானம் : 1

    ஈரோட்டில் ஜூன் 22-ந்தேதி நடைபெற்ற கழகத்தின் 31 ஆவது பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தின்படி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும், கழகம் எடுத்த முடிவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிப்பது என்று கழக நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.

    தீர்மானம் : 2

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருக்கும் மதச்சார்பற்ற, சோசலிச எனும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்டிராவை உருவாக்க முனைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் செயல் திட்டங்களை ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும்.

    தீர்மானம் : 3

    இந்தியா முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய அரசின் நீர்வளத் துறை செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

    அந்த நீரை அழுத்தத்தை பயன்படுத்தி உழவர்களின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். அங்கிருந்து உழவர்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தடி நீரைப் பெறலாம். எவ்வளவு நீரை உழவர்கள் பெறுகிறார்களோ, அவ்வளவு நீருக்கு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வேளாண் பயன்பாட்டுக்கு விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டம் செயல்படுத்தப் போவதாக பா.ஜ.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்தே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

    ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உண்மை சரிபார்ப்பு அமைப்பு அளித்துள்ள விளக்கத்தில் இது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறது.

    ஆனால் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை இது குறித்து உரிய விளக்கம் அளிக்கவில்லை.

    நாடு முழுதும் கொந்தளித்துள்ள உழவர்களின் கவலையைப் போக்க, வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

    தீர்மானம் : 4

    மதுரையில் ஜூன் 22-ந்தேதி இந்துத்துவ அமைப்புகள் முன்னின்று நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட இயக்கக் கோட்பாடுகளை இழிவு படுத்தியும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்களை சிறுமைப் படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெறச் செய்ததற்கு மறுமலர்ச்சி திமுக நிர்வாகக் குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    தமிழ்நாட்டு மக்களின் சமய நம்பிக்கையை அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்த நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சிகள் தகர்ந்து தவிடு பொடியாகும்.

    தீர்மானம் : 5

    பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா மாநில மாநாடு செப்டம்பர் 15 அன்று திருச்சியில் நடத்துவது என கழகப் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கும், சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் ஜூலை 1-ந்தேதியில் இருந்து ஜூலை 17-ந்தேதி வரையில் நடைபெற இருக்கும் மண்டல வாரியான கழக செயல்வீரர்கள் கூட்டங்களை திட்டமிட்டு சிறப்பாக நடத்துவதற்கு மாவட்டக் கழகங்கள் முனைந்து செயலாற்ற வேண்டும் என்று கழக நிர்வாக குழுத் தீர்மானிக்கிறது.

    தீர்மானம் : 6

    தமிழகத்தில் மேல்நிலை வகுப்பில், பொறியியல், மருத்துவம், விவசாயம், கைவினைத் தொழில்கள் உள்ளிட்ட பல துறையின் உட்பிரிவான செவிலியர் பயிற்சி, பயிர் பாதுகாப்பு, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், தையல் உள்ளிட்ட, 15 வகையான தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன.

    தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவங்கியபோது, 4,000க்கும் மேற்பட்ட பகுதி நேர, முழுநேர, ஒரு பகுதி நேரம், இரு பகுதி நேரம் ஆகிய நான்கு நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

    1978 இல் 4,324 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2007 இல் 250 பேருக்கு பணி நிரந்தரம் அளிக்கப்பட்டது. அதன்பின், இதுவரை புதிய நியமனம் நடைபெறவில்லை. இந்நிலை தொடர்ந்தால், 2030க்குள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவே இல்லாத நிலை உருவாகும்.

    கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களே, தொழிற்கல்வி பிரிவை தேர்வு செய்கிறார்கள். இது, இடைநிற்றலைத் தவிர்க்கவும், சுயதொழில் துவங்கவும் வழிவகுக்கிறது.

    எனவே இதனைக் கருத்தில் கொண்டு தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அப்பணியிடத்தை நிரப்பக்கூடாது; அந்த பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது; அந்த ஆண்டோடு அப்பாடப்பிரிவை, மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கழக நிர்வாக் குழு வலியுறுத்துகிறது.

    • தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைந்து மீன் பிடிப்பது தவிர்க்க முடியாதது.
    • தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16-ந் தேதி முதல் தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்திருப்பார்கள் எனும் நிலையில், இருமுறை அவர்கள் மீது இலங்கை அரசின் ஆதரவுடன் இயங்கி வரும் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இப்போது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது.

    தமிழக மீனவர்களை கைது செய்வதன் மூலமும், அவர்களிடம் உள்ள பொருள்களை கொள்ளையடிப்பதன் மூலமும் அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைப்பது தான் சிங்கள் அரசின் நோக்கம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த சில நாள்களில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலும், இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையும் பா.ம.க.வின் நீண்ட நாள் குற்றச்சாட்டை உறுதி செய்திருக்கிறது. இது தொடரக்கூடாது.

    தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதி மிகவும் குறுகலாக இருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைந்து மீன் பிடிப்பது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழலில் இரு தரப்பு மீனவர்களும் பயனடையும் வகையில் வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான திட்டத்தை வகுப்பது தான் சரியானதாக இருக்கும். இதை மத்திய அரசு தான் செய்ய முடியும் எனும் நிலையில், அதற்கான அழுத்தத்தை தமிழக அரசு தான் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

    ஆனால், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். மீனவர்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன.

    தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது, சிறையில் அடைப்பது, தண்டம் விதிப்பது போன்ற அத்துமீறல்கள் நடப்பாண்டிலும் தொடரக் கூடாது. அதற்காக தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதற்கான அழுத்தத்தை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நல்லூர் ஊராட்சி சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • போராட்டம் காரணமாக அந்த வழியாக சாலையின் இரு புறம் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நல்லூர் ஊராட்சி சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். ஆனாலும் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இன்று காலை அந்த பகுதி சேர்ந்தயை 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் புளியம்பட்டி-சத்தியமங்கலம் ரோடு பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக சாலையின் இரு புறம் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் புளியம்பட்டி போலீசார் மற்றும் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாரி இந்திராணி, உங்கள் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட அங்கிருந்து கலந்து சென்றனர்.

    சுமார் ஒரு மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • புதிய மின் கட்டண உயர்வு என்ற தகவலால் அதிர்ச்சி.
    • மின்கட்டண சலுகை போன்ற சிறப்பு திட்டங்களை வழங்குவதன்மூலம் இந்த பின்னலாடை தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய முடியும்.

    நல்லூர்:

    புதிய மின்கட்டண உயர்வை தவிர்க்க வேண்டும் என திருப்பூர் தொழில் துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது:-

    திருப்பூரில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் மூலம் 75சதவீத பின்னலாடை உற்பத்தி பணிகள் நடைபெறுகின்றன. மீதமுள்ள பெரிய நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் வளர்ந்து வருகிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, மழை, நூல் விலை உயர்வு, பஞ்சு கிடைக்காமல் தவிப்பு, தொழிலில் உள்ள கடன், வராக்கடன் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சிறு,குறு, நடுத்தர தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.

    தற்போது மின்சார கட்டணம் உயரப்போகிறது என்ற தகவல் வெளி வந்துள்ளது. ஏற்கனவே 'பீக் ஹவர்ஸ்' பிரச்சினை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள், தற்போது புதிய மின் கட்டண உயர்வு என்ற தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளன.

    தற்போது இந்திய ஜவுளித்தொழில் துறையினருக்கு சர்வதேச அளவில் நல்ல பிரகாசமான வர்த்தக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. போட்டி நாடுகளில் உள்ள பிரச்சினைகள், தரம், விலை போன்ற பிரச்சினைகளாலும், அமெரிக்க நாடு விதித்துள்ள வரி விகிதத்தாலும் இந்தியாவுக்கு பல சாதகமான விஷயங்கள் கிடைத்துள்ளன.

    இந்த சமயத்தில் எளிமையான வங்கிக்கடன், மின்கட்டண சலுகை போன்ற சிறப்பு திட்டங்களை வழங்குவதன்மூலம் இந்த பின்னலாடை தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய முடியும்.

    ஆனால் புதிய மின்கட்டண உயர்வு அறிவிக்கப்படும் போது தொழில் துறையினர் சோர்வு அடைவது உறுதி. மகாராஷ்டிரா அரசு அங்கு மின்கட்டணத்தில் 10சதவீதத்தை குறைத்து அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

    குறைந்தபட்சம் மின்கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தாலாவது திருப்பூர் பின்னலாடைத்தொழில் துறையினர் நிம்மதியாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெயினருவி மற்றும் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • வெள்ள கட்டுப்பாட்டு அறையில், நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியதால் 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

    கடந்த 25-ந் தேதி 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 26-ந் தேதி காலை 60 ஆயிரம் கன அடியாகவும், நேற்று இரவு 8 மணியளவில் 85 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.

    இரவு 8 மணி நிலவரப்படி கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய 2 அணைகளிலிருந்தும் விநாடிக்கு 86 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 அணைகளில் இருந்தும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 58 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் அங்குள்ள மெயினருவி மற்றும் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 80 ஆயிரத்து 984 கன அடியில் இருந்து 68 ஆயிரமாக குறைந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக உள்ளது. முழு கொள்ளளவை 120 அடியை எட்டி உள்ளதால் இன்று காலை உபரி நீர் வெளியேறும் 16 கண் மதகிலிருந்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீர் பாசனம் பெறும் மாவட்ட கலெக்டர்களுக்கு அணை உபகோட்ட உதவி பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.

    சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில், நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உபரி நீர் வெளியேறும் மதகுப்பகுதியில் ஷிப்ட் முறையில் பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கேற்ப மதகுகளை இயக்குவதற்கு பணியாளர்கள் தயாராக உள்ளனர்.

    • கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    தருமபுரி:

    கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட முன்பாக தொடங்கியது.

    மழை தீவிரமாக பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதுபோல் காவிரி படுகையில் உள்ள மைசூரு, குடகு மாவட்டங்களிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 39 ஆயிரத்து 689 கனஅடி நீர் வந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரத்து 548 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    கபினி அணைக்கு நேற்று இரவு நீர்வரத்து 30ஆயிரத்து 853 கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் 55 ஆயிரத்து 548 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது.

    இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பாறைகளே தெரியாத அளவுக்கு ஐந்தருவிகளை முழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையின் மீது 2 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 4-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள். 

    • அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 900 இடங்களும் உள்ளன.
    • மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 5 ஆயிரத்து 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9 ஆயிரத்து 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. பி.டி.எஸ். படிப்பை பொறுத்தவரையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 900 இடங்களும் உள்ளன.

    இந்த சூழலில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற்றது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட காலஅவகாசம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் கடைசி நேர பதற்றத்தை தணிக்க, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

    ×