என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸ் விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ் - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
- பல்வேறு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடக்கிறது.
- ஒரே கட்சியிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டியது இல்லை.
கோவை:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். நான் ஏற்கனவே சொன்னது போல் கடலூரில் ஜனவரி 9-ந் தேதி மாநாடு நடக்கிறது. அன்றைய தினம் கூட்டணி குறித்து தெளிவாக அறிவிக்கப்படும்.
2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதை வரவேற்கிறோம். அதேசமயம் தமிழகத்தில் உள்ள ஒரு கட்சியின் தலைமையில் ஆட்சி இருந்தால் நல்லது. பல்வேறு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடக்கிறது. ஒரே கட்சியிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டியது இல்லை.
காங்கிரஸ் கட்சி சார்பான விழாவில் சுதீஷ் கலந்து கொண்டது தவறு இல்லை. பல ஆண்டுகாலமாக, தொடரும் நட்பின் வெளிப்பாடாக சுதீஷ் விழாவில் கலந்து கொண்டார். இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை.
போதைப்பொருள் இல்லாத, டாஸ்மாக் இல்லாத, கள்ளச்சாராயம் இல்லாத தமிழ்நாட்டை தி.மு.க. அரசு உருவாக்க வேண்டும். அ.தி.மு.க. தரப்பில் விருப்பம் இருந்தாலும் கூட்டணியில் இடம்பெறுவது பற்றி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






