என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. தலைவராவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் தெரியுமா?- கே.என்.நேரு
- பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது.
- சிறப்பான முறையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராகி உள்ளார். அவர் தலைவராக வருவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் என்பதை பொது வெளியில் சொல்ல முடியாது.
அவர்கள் முதலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்துவிட்டு கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சி அமைப்பார்களா? என்பதை முடிவு செய்துவிட்டு எங்களை பற்றி பேசட்டும்.
பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது. பொதுப்பணித்துறையால் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகையை வழங்கி அவர்கள் கடையை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்து விட்டோம். ஆனால் தனிநபர் ஒருவர் தொடர்ந்து நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த பிரச்சனை எழுந்துள்ளது. தற்போது அந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக வியாபாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
வருகிற 8-ந்தேதி நடைபெறும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதலமடைந்த சாலைகளை செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பான முறையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






