என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாட்டின் சொத்தான கனிமவளம், கொள்ளை போவதை தடுப்பது அதிகாரிகளின் கடமை.
- திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் செயல்படாமல் தடுக்க வேண்டும்.
சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத குவாரிகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நாட்டின் சொத்தான கனிமவளம், கொள்ளை போவதை தடுப்பது அதிகாரிகளின் கடமை.
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் செயல்படாமல் தடுக்க வேண்டும்.
சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
- முகாம்களுக்கு காலையில் இருந்தே பொது மக்கள் ஏராளமான பேர் வந்து மனு கொடுத்தனர்.
- மனுக்களை வாங்கும் அதிகாரிகள் 45 நாட்களில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களுடைய இல்லங்களுக்கே சென்று வழங்கும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குறிப்பிட்ட சில வார்டுகளில் சுழற்சி முறையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று தண்டையார்பேட்டை சி.எச்.எஸ்.எஸ். படேல்நகர் பள்ளி ஸ்ரீமகாவீர் ஜெயின் பவன் திருவல்லிக்கேணி உள்பட வார்டு 25, வார்டு 76, 109, 114, 143, 168 ஆகிய 7 இடங்களில் முகாம் நடந்தது.
இந்த முகாம்களுக்கு காலையில் இருந்தே பொது மக்கள் ஏராளமான பேர் வந்து மனு கொடுத்தனர்.
அதிலும் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு ஏராளமான பெண்கள் மனு கொடுத்த னர். நீண்ட வரிசையில் பெண்கள் வெயிலில் காத்துக் கிடந்து விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இது தவிர ரேஷன் அட்டை, ஆதார் அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்க, பெயர் சேர்க்க- நீக்க, முகவரி மாற்ற விண்ணப்பித்தனர். முக்கியமாக ஆன்லைன் பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் குறித்தும் விண்ணப்பம் கொடுத்தனர்.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10,949 மனுக்கள் முகாம்களில் பெறப்பட்டு உள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 7,518 பெண்கள் மனு கொடுத்து உள்ளனர்.
அதில் 25-வது வார்டில் 856 பேர்களும், வார்டு 38-ல் 1432 பேர், வார்டு 76-ல் 822 பேர், வார்டு 109-ல் 1435 பேர், வார்டு 114-ல் 905 பேர், வார்டு 143-ல் 1230 பேர், வார்டு 168-ல் 838 பேர் என மொத்தம் 7518 பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னையில் இன்று வார்டு 1, 20, 79, 94, 167, 179 ஆகிய இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் வாங்கப்பட்டது. காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது.
எண்ணூர் விநாயகர் கோவில் அருகில், மணலி மண்டப அலுவலகம், அம் பத்தூர் விஜயலட்சுமிபுரம், வில்லிவாக்கம் சிட்கோ நகர், நங்கநல்லூர் ஸ்கேட்டிங் மையம், திருவான்மியூர் குப்பம் கடற்கரை சாலை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
மனுக்களை வாங்கும் அதிகாரிகள் 45 நாட்களில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொறுமையுடன் பொது மக்களுக்கு பதில் அளித்தனர்.
- அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசி உள்ளார்.
- சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சென்னை:
அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா, பொதுச்செயலாளர் ராதிகா ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா பற்றி குறிப்பிட்டு பேசும்போது, பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப்பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல், எங்கே போய் படுத்து கிடக்கிறார்கள்? கஞ்சா, கொகைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா? அல்லது டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கிடக்கிறார்களா? என அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசி உள்ளார்.
எனவே சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
- பிரசித்தி பெற்ற அல்வா கடை மீது எழுந்துள்ள இந்த புகார் பொதுமக்கள் மத்தியிலும் அல்வா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுகந்தன் அன்பு. இவர் கடந்த 13-ந்தேதி நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு அல்வா கடையில் 4 கிலோ அல்வா பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பிறகு அல்வாவை பிரித்து பார்த்தபோது அல்வாவில் சிறிய அளவில் தேள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவர் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையிலான குழுவினர் இன்று சந்திப்பு பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அல்வா கடையில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் உள்ள குடோனில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அல்வாவில் தேள் எவ்வாறு விழுந்தது? என்பது குறித்து உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டதாகவும், நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற அல்வா கடை மீது எழுந்துள்ள இந்த புகார் பொதுமக்கள் மத்தியிலும் அல்வா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வரும் 18-ந்தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- வரும் 20-ந்தேதி தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வரும் 18-ந்தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வரும் 19, 20 ஆகிய தேதிகளில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வரும் 20-ந்தேதி தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும்.
- அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார்.
நெல்லை:
தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி நாளை மறுநாள் காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 4-ம் திருவிழாவான 21-ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
10-ம் திருநாளான வருகிற 27-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.
தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
- அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார்.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று காலை 5 மணிக்கு உகப்படிப்பு, 6 மணிக்கு கொடி பட்டம் பதியை சுற்றி வந்து கொடியேற்றம் நடக்கிறது. அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார்.
தொடர்ந்து அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது. காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, பணிவிடை, தொடர்ந்து அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப் படிப்பு,பணிவிடை 5மணிக்கு புஷ்ப வாகன பவனி, தொடர்ந்து அன்ன தர்மம் நடக்கிறது.
11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை பால் அன்ன தர்மம், உச்சிப் படிப்பு, பணிவிடை நடக்கிறது.
மாலை 5 மணிக்கு புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகன பவனி நடக்கிறது
விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. அன்று காலை 6மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை, பால் அன்ன தர்மம், 9மணிக்கு அன்ன தர்மம், நடக்கிறது. அன்று இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் கோபால் நாடார், துணை தலைவர் அய்யா பழம், இணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை செயலாளர்கள், ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், வரதராஜ பெருமாள், சுதேசன், இணைத்தலைவர்கள் விஜயகுமார், செல்வின், பால்சாமி, ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- தி.மு.க. அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறது.
- தேர்தல் வரும்போது மட்டும் எப்படி தி.மு.க.வுக்கு மக்கள் மீது திடீர் திடீரென்று காதல் வருகிறது.
திருச்சி:
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
உங்களோடு ஸ்டாலின் திட்டம் மூலமாக ஒரு அரசு தனது அரசு எந்திரத்தை முழுமையாக தேர்தல் பரப்புரைக்கு, கட்சி வேலைக்கு பயன்படுத்துகிறது.
தி.மு.க. அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறது.
குடும்பத் தலைவிக்கு ஆயிரம் என்று தேர்தலுக்கு முன்பு சொன்னார்கள். வென்று ஆட்சிக்கு வந்த பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு என கூறினார்கள். இப்போது தேர்தலுக்கு ஆறு மாதம் இருக்கும் நிலையில் விடுபட்டவர்களுக்கு உரிமைத்தொகை தருவோம் என்று சொல்கிறார்கள்.
தேர்தல் வரும்போது மட்டும் எப்படி தி.மு.க.வுக்கு மக்கள் மீது திடீர் திடீரென்று காதல் வருகிறது. பள்ளம் மூடப்படுகிறது?. சாலை போடப்படுகிறது.
உங்களோடு முதல்வர் என பல திட்டங்களை கொண்டு வரும் தி.மு.க. அரசின் முதல்வர் இதுவரை எங்கே இருந்தார்?
50 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க. பா.ஜ.க.வை பார்த்து எதற்கு பயப்பட வேண்டும்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது முந்தைய நிலைப்பாடு. இப்போது மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் குடும்ப ஆட்சி என்று மாறி உள்ளது.
எங்களுக்கு பல்லாயிரம் வழிகாட்டிகள் இருக்கிறார்கள். பெரியார் எங்களுக்கு தேவையில்லை.
அடுத்த (ஆகஸ்ட்) மாதம் 17-ந்தேதி மரங்கள் மாநாடு நடத்த இருக்கிறோம். மரங்களோடு பேசுவோம் மரங்களுக்காக பேசுவோம். மரம் மண்ணின் வளம். மரம் நடுவது மனிதனின் அறம் என்பது எங்களுடைய கொள்கை.
ஆடும் மாடும் இல்லாமல் ஒரு நாடு எப்படி வளம்பெறும். உயர்திணை சரியாக வாழ வேண்டும் என்றால் அகர்தினை வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும்.
- மொத்தம் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மையம் அமைந்துள்ளது.
மதுரை:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு அடுத்த மாதம் ஆகஸ்ட் 25-ந்தேதி மதுரை அருப்புக்கோட்டை சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் நடைபெற உள்ளது. மாநாட்டையொட்டி பந்தல் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.
இதில் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாநாட்டிற்கு அனுமதி வழங்கும்படியும் மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மதுரை 3 மாவட்ட பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. அரவிந்திடம் புஸ்ஸி ஆனந்த் கோரிக்கை மனு அளித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆகஸ்ட் 25-ந் தேதி 2-வது மாநாடு நடத்துவதாக எங்கள் தலைவர் அறிவித்திருக்கிறார். இன்று காவல்துறையிடம் அனுமதி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு நடத்துவதற்கு விதிக்கப்படும் விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு இடையூறு இல்லாமல் சிறப்பாக நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கண்டிப்பாக வெற்றி மாநாடாக இருக்கும். தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும். முதல் மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களை விட 2-வது மாநாட்டில் அதிகளவில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மையம் அமைந்துள்ளது. தமிழ்நாடு தமிழக வெற்றி கழகத்திற்கு சாதகமாக இருக்கும் என தெரிவித்தார்.
- குறள் 123 லிருந்து திருடி, திருத்தி இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தரம் தாழ்ந்த செயல்.
- போலிச் சித்திரம், போலிக் குறள்... இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்?
சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
13-7-2025 அன்று 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற நூலைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது.
அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது என்று படித்தேன். அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலி 'குறள்' பொறிக்கப்பட்டிருந்தது என்பது தான் அதிர்ச்சிச் செய்தி.
'குறள் 944' என்று பொறிக்கப்பட்ட 'குறள்' திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தால் அது போன்ற பாடலே நூலில் இல்லை என்று தெரிய வருகிறது
குறள் 123 லிருந்து திருடி, திருத்தி இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தரம் தாழ்ந்த செயல்.
காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை 'குறள்' என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல்.
போலிச் சித்திரம், போலிக் குறள்... இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? என்று பதிவிட்டுள்ளார்.
- அரசு ஊழியர்கள் அரசுக்காக அரசியல்வாதியாக மாறிவிடக்கூடாது.
- பா.ம.க.வில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகளில் நாங்கள் தலையிட முடியாது.
சிதம்பரம்:
சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விளம்பர மாடல் ஆட்சி என கூறினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* அரசு ஊழியர்கள் அரசுக்காக அரசியல்வாதியாக மாறிவிடக்கூடாது.
* எனக்கு விவசாயம் தொழில் தான் உள்ளது. எனக்கென கம்பெனி எல்லாம் கிடையாது. மக்கள் பிரச்சனைக்காக தான் டெல்லி செல்வோம்.
* 2001-ல் பா.ஜ.க.வுடன் தான் தி.மு.க. கூட்டணி வைத்தது. அப்போது ஏன் இவ்வாறு பேசவில்லை.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அறிவித்ததால் முதலமைச்சருக்கு பயம்.
* எங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தான் அமித்ஷா கூறிவிட்டார்.
* அதிமுக, பாஜக, கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி கிடையாது. எங்கள் கூட்டணியை பொறுத்தவரை நான் சொல்வது தான்.
* பா.ம.க.வில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகளில் நாங்கள் தலையிட முடியாது என்றார்.
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு காலம் கடந்துவிட்டதாக பதில் கூறினார்.
- தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, பை - பை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
- உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து இ.பி.எஸ். அவதூறு பரப்பி வருகிறார்.
மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* விமர்சனம் என்கிற பெயரில் நமக்காக விளம்பரம் செய்யும் இ.பி.எஸ்-க்கு நன்றி.
* தேர்தலுக்கு முன் பெட்சீட் போட்டு வாங்கிய மனுக்களை எக்ஸல் ஷீட்டாக மாற்றி வொர்க் ஷீட்டாக மாற்றினேன்.
* மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களையும் சென்றடைகிறது.
* தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, பை - பை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
* சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
* சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் இ.பி.எஸ். வாயிலிருந்து பொய்யாக வருகிறது.
* உங்கள் குடும்ப நலனுக்காக டெல்லி சென்று அ.தி.மு.க.வை அடகுவைத்தவர் எடப்பாடி பழனிசாமி.
* ரெய்டில் இருந்து குடும்பத்தை காக்கவே இ.பி.எஸ். அமித்ஷா வீட்டின் கதவை தட்டினாரே தவிர நமது மக்களுக்காக அல்ல.
* சொந்த கட்சியினரான அ.தி.மு.க.வினரே எடப்பாடி பழனிசாமியை நம்பாதபோது தமிழக மக்கள் எப்படி நம்புவர்?
* குடும்பத்தை காப்பாற்ற டெல்லியின் சதுரங்க வேட்டையில் சிக்கி தொண்டர்களை ஏமாற்றினார் இ.பி.எஸ்.
* தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் அ.தி.மு.க.-வினர் வீட்டுக்கும் போவதை இ.பி.எஸ்.-ஆல் மறுக்க முடியுமா?
* உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து இ.பி.எஸ். அவதூறு பரப்பி வருகிறார்.
* நம்மை ஒருபோதும் ஸ்டாலின் கைவிட மாட்டார் என தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
* தமிழகத்தில் அடுத்து அமைய போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் என்பதை உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்






