என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அல்வாவில் தேள் கிடந்த விவகாரம்: அல்வா கடை, குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு
- வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
- பிரசித்தி பெற்ற அல்வா கடை மீது எழுந்துள்ள இந்த புகார் பொதுமக்கள் மத்தியிலும் அல்வா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுகந்தன் அன்பு. இவர் கடந்த 13-ந்தேதி நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு அல்வா கடையில் 4 கிலோ அல்வா பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பிறகு அல்வாவை பிரித்து பார்த்தபோது அல்வாவில் சிறிய அளவில் தேள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவர் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையிலான குழுவினர் இன்று சந்திப்பு பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அல்வா கடையில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் உள்ள குடோனில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அல்வாவில் தேள் எவ்வாறு விழுந்தது? என்பது குறித்து உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டதாகவும், நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற அல்வா கடை மீது எழுந்துள்ள இந்த புகார் பொதுமக்கள் மத்தியிலும் அல்வா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






