என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி பரவலாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள், கண்மாய்கள், குளங்கள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதன் பிறகு மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த 1 வாரமாக மீண்டும் பரவலாக தீவிரமடைந்து வருகிறது.

    தற்போது தேனி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இதனால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க இன்று 5ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்பதை கருத்தில் கொண்டு வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுருளி அருவிக்கு அமாவாசை நாட்களில் அதிக அளவு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.

    இந்நிலையில் 5-வது நாளாக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை ஆடி அமாவாசை அன்று பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே மேகமலை அடுத்துள்ள சின்னச்சுருளி அருவியில் 4 நாட்களுக்கு பிறகு இன்று பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் ஏராளமானோர் ஆனந்தமாக நீராடிச் சென்றனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 64.80 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதும் 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்பதால் தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 869 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4586 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.10 அடியாக உள்ளது. நீர் வரத்து 2132 கன அடி. திறப்பு 1861 கன அடி. இருப்பு 4720 மி.கன அடி. முல்லைப்பெரியாறு அணையில் 34.4, தேக்கடி 26.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் 66 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பிரதமர் தூத்துக்குடி வருகையையொட்டி 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது 2 விமான நிறுவனங்கள் மூலம் சென்னை, பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யும் வகையில் ரூ.380 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதனால் விமான நிலையத்தில் இதுவரை 1,350 மீட்டர் அளவில் இருந்த விமான ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணி காரணமாக தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும்.

    விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு திறந்து வைக்கிறார். இதற்காக விமான நிலைய முகப்பு பகுதியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் ரூ.4,500 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதோடு புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் மற்றும் அங்குள்ள மத்திய பாதுகாப்பு படையினரும் உடன் இருந்தனர்.

    பிரதமர் தூத்துக்குடி வருகையையொட்டி 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான எஸ்.பி.ஜி. குழுவினர் இன்று தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் வந்து செல்லும் பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.

    மேலும் பாதுகாப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடி வருகின்றன.

    தொடர்ந்து தமிழக பாதுகாப்பு படையினர், கமான்டோ படையினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்கின்றனர். பிரதமர் வருகையொட்டி இன்று முதல் நிகழ்ச்சி நடைபெறும் 26-ந் தேதி வரை தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. மேலும் மரைன் போலீசார், இந்திய கடலோர காவல் படை, கடற்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • தேசிய சராசரியை விஞ்சினோம்!
    • அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!

    மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தேசிய சராசரியை விஞ்சினோம்!

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!

    அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயன்பாடு இன்றி 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • தீ விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த அரசு போக்குவரத்து பணிமனை வளாகத்தில் 65-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பயன்பாடு இன்றி 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை பணிமனையில் இருந்து கடலூருக்கு இயக்கப்பட இருந்த அரசு பஸ் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ வேகமாக பரவி மளமளவென எரிய தொடங்கியது.

    இதனை பார்த்த ஊழியர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பணிமனை வளாகத்தில் வேறு எந்த பகுதிக்கும் தீ பரவவில்லை. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்து சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து பணிமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • நேற்று ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. விலை கிடுகிடுவென உயருவது, பின்னர் அவ்வப்போது குறைவதுமான நிலை இருக்கிறது. இதில் பெரும்பாலான நாட்களில் விலை ஏற்றத்தையே காண முடிகிறது.

    அந்த வகையில் கடந்த மாதம் (ஜூன்) 2-வது வாரம் வரை விலை அதிகரித்து வந்து, பின்னர் குறையத் தொடங்கியது. இப்படியாக விலை குறைந்து வந்த தங்கம் விலை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஏறத் தொடங்கியது. தொடர்ந்து விலையில் மீண்டும் ராக்கெட் வேகம் தெரிந்தது.

    கடந்த வாரத்தில் சற்று வேகம் குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் எகிறி, மீண்டும் உயருவதற்கான அச்சாரத்தை போட்டு இருக்கிறது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 180-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 285-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,380 ரூபாய்க்கும் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 75,040 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 129 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,280

    21-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,440

    20-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    19-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    18-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-07-2025- ஒரு கிராம் ரூ.128

    21-07-2025- ஒரு கிராம் ரூ.126

    20-07-2025- ஒரு கிராம் ரூ.126

    19-07-2025- ஒரு கிராம் ரூ.126

    18-07-2025- ஒரு கிராம் ரூ.125

    • பள்ளிக்கட்டிடம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரால் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    • அனைத்து அரசுப்பள்ளிக் கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு அரசுப் பள்ளிக்கட்டிடங்களின் தரத்தை மேம்படுத்த செலவு செய்ய வேண்டுமே தவிர பள்ளிக்கட்டிடங்கள் தரமற்றதாக இருக்க செலவு செய்யக்கூடாது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20-ந்தேதி அன்று இடிந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் விடுப்பில் இருந்த காரணத்தால் அவர்கள் இந்த இடிபாடுகளில் சிக்கவில்லை. இந்த பள்ளிக்கட்டிடம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரால் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கெல்லாம் அரசு பள்ளிகளில் கட்டிடங்களின் தரத்தை மேம்படுத்த அல்லது புதிய கட்டிடங்கள் கட்ட செலவிடப்பட்டதோ அதெல்லாம் முறையாக செலவிடப்பட்டதா என ஆய்வு செய்து, அனைத்து அரசுப்பள்ளிக் கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    எனவே தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளிக்கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை அவ்வப்போதே எடுத்து அனைத்து தரப்பு குடும்பத்தினரின் பிள்ளைகளும் அரசுப்பள்ளிகளை தேடி வரக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
    • கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

    அவர் கொடுத்த "மதயானை" எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!

    நன்றி தலைவா

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும்.
    • 1-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்கசிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 6-வது நாளான நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.

    வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்பட்டு 8 மணிக்கு சாத்தப்படும். இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது மதியம் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 7-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி தேரோட்டமும், 9-ம் நாளான 27-ந்தேதி காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. 11-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

    ஆகஸ்டு 4-ந்தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் கோவிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • சாத்தான்குளம் வழக்கு விசாரணை ஏறக்குறைய நிறைவு பெற்று, தீர்ப்பு வழங்கப்படும் நிலையை எதிர்நோக்கி உள்ளது.
    • என்னை தவிர்த்து மற்ற போலீசார் செய்த அனைத்து செயல்களையும், உண்மைகளையும் கோர்ட்டில் தெரிவிக்க விரும்புகிறேன்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஏறக்குறைய நிறைவு பெற்று, தீர்ப்பு வழங்கப்படும் நிலையை எதிர்நோக்கி உள்ளது.

    இந்த நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி முத்துகுமரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், "இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், அரசாங்கத்திற்கும், காவல்துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து மற்ற போலீசார் செய்த அனைத்து செயல்களையும், உண்மைகளையும் கோர்ட்டில் தெரிவிக்க விரும்புகிறேன். எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை, மகனை இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்று கூறப்பட்டு இருந்தது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    தீர்ப்பு வழங்கும் நிலையில் உள்ள இந்த வழக்கில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தது இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கமாகவே இருக்கும் என சட்டவல்லுனர்கள் கூறினர். மேலும் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், அரசு தரப்பு சாட்சியாக மாறுவேன் என மனுத்தாக்கல் செய்திருப்பது வழக்கை திசைமாற்றும் செயலாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

    • மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது.
    • 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன.

    சென்னை:

    நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 72 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. அதில் 10 லட்சத்து 21 ஆயிரம் பள்ளிகள் அதாவது 69.14 சதவீதம் அரசு பள்ளிகள் ஆகும். அதேபோல மொத்தமுள்ள 24 கோடியே 80 லட்சம் பள்ளி மாணவர்களில் 12 கோடியே 75 லட்சம் பேர் அதாவது 51.4 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால் ஆண்டுக்கு, ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி கடந்த 2021-22-ம் ஆண்டின் நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14.32 கோடியாக இருந்தது. ஆனால் இது தற்போது 1 கோடியே 54 லட்சம் குறைந்து போய் 12 கோடியே 78 லட்சம் ஆகி இருக்கிறது.

    மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 574 பேர் படிக்கின்றனர். 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் தலா 1.58 கோடி மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். 10-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 48 லட்சத்து 40 ஆயிரத்து 34 மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.

    ஆனால் தமிழகத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் 53 லட்சத்து 14 ஆயிரத்து 845 மாணவர்களும், 2022-23-ம் ஆண்டுகளில் 50 லட்சத்து 42 ஆயிரத்து 26 மாணவர்களும் அரசு பள்ளிகளில் படித்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.

    • அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது திராவிட மாடல் அரசு!
    • கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் எனப் பெரும்புகழ் எய்திய தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது திராவிட மாடல் அரசு!

    அவரது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளையும் கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன். காண்போரைக் கவர்ந்திடும் வண்ணம் அது எழுந்து வருகிறது.

    இவற்றின் தொடர்ச்சியாக, இராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்! என்று தெரிவித்துள்ளார். 



    • தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    ×