என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு ஏற்பாடுகள்"

    • ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி சமீபத்தில் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலியாகினர்.
    • பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை, தீ தடுப்பு வசதிகள், அவசரகால வெளியேறும் வசதிகள், மின் இணைப்பு போன்றவை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தை தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி சமீபத்தில் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர்.

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வை உறுதி செய்வதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை மற்றும் குழந்தைகள் தொடர்பான வசதிகள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்வதையும் உள்ளடக்கியதாகும்.

    குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவசரகால தயார்நிலை குறித்து பயிற்சி அளித்தல், ஆலோசனை மற்றும் சக நெட்வொர்க்குகள் மூலம் உளவியல் ரீதியான ஆதரவை வழங்குதல் போன்றவை ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை, தீ தடுப்பு வசதிகள், அவசரகால வெளியேறும் வசதிகள், மின் இணைப்பு போன்றவை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    வெளியேற்றும் பயிற்சிகள், முதலுதவி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்ட அவசரகால தயார் நிலை குறித்து ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பயிற்சி பெற்றிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தீயணைப்பு துறை, போலீஸ் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் ஆகிய உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் கால பயிற்சிகள் மற்றும் ஒத்திகைகளை அடிக்கடி நடத்த வேண்டும்.

    மேலும் உடல் பாதுகாப்பு மட்டுமின்றி மனநலம் மற்றும் உணர்வு பாதுகாப்புக்கு என ஆலோசனை சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

    மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு ஆபத்தான சூழ்நிலை, விபத்து உள்ளிட்ட சம்பவம் குறித்து 24 மணி நேரத்திற்குள் அதற்காக நியமிக்கப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேச அதிகாரியிடம் தெரிவிக்கப்பட வேண்டும். தாமதம், அலட்சியம் அல்லது நடவடிக்கை எடுக்கத்தவறிய சம்பவங்களில் கடுமையான பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.

    பெற்றோர், பாதுகாவலர், சமூக தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதை உறுதி செய்வதுடன், பள்ளிகள், பொது இடங்களில் பாதுகாப்பற்ற சூழல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக தகவல் அளிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    மேற்கண்ட நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் தாமதமின்றி செயல்படுமாறு கல்வித்துறை, பள்ளி வாரியம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பிரதமர் தூத்துக்குடி வருகையையொட்டி 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது 2 விமான நிறுவனங்கள் மூலம் சென்னை, பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யும் வகையில் ரூ.380 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதனால் விமான நிலையத்தில் இதுவரை 1,350 மீட்டர் அளவில் இருந்த விமான ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணி காரணமாக தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும்.

    விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு திறந்து வைக்கிறார். இதற்காக விமான நிலைய முகப்பு பகுதியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் ரூ.4,500 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதோடு புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் மற்றும் அங்குள்ள மத்திய பாதுகாப்பு படையினரும் உடன் இருந்தனர்.

    பிரதமர் தூத்துக்குடி வருகையையொட்டி 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான எஸ்.பி.ஜி. குழுவினர் இன்று தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் வந்து செல்லும் பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.

    மேலும் பாதுகாப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடி வருகின்றன.

    தொடர்ந்து தமிழக பாதுகாப்பு படையினர், கமான்டோ படையினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்கின்றனர். பிரதமர் வருகையொட்டி இன்று முதல் நிகழ்ச்சி நடைபெறும் 26-ந் தேதி வரை தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. மேலும் மரைன் போலீசார், இந்திய கடலோர காவல் படை, கடற்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கொண்டத்து காளியம்மன் கோவிலில் வருகிற 4-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
    • பக்தர்களுக்கு தடுப்பு கட்டைகள், கழிவறைகள், குடிநீர் வசதி, தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் வருகிற 4-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. குண்டம் இறங்குவதற்கு அவினாசி, குன்னத்தூர், ஊத்துக்குளி, திருப்பூர் மாநகர பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிய உள்ளனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு தடுப்பு கட்டைகள், 30-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள், பக்தர்களுக்கு குடிநீர் வசதி ,வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு, தங்கும் வசதி, சிறப்பு பஸ்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு சசாங் சாய் கோவிலுக்கு வருகை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பவுல்ராஜ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் பக்தர்கள் கூட்டத்தில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 4 கண்காணிப்பு கோபுரம், 5 பகுதிகளில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் அவினாசி தீயணைப்புத்துறையினரும் ஈடுபட உள்ளனர். ஆய்வின் போது பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, கோவில் செயல் அலுவலர் காளிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கன்வர் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி துவங்கி, ஆகஸ்ட் 2-ந்தேதி சிவராத்திரி நாளில் நிறைவு செய்ய உள்ளனர்.
    • கடந்த காலங்களில் கன்வர் மேளாவை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ளது.

    கன்வர் யாத்திரை என்பது வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்றதாகும். தென்னிந்தியாவில் முருகப் பெருமானுக்கு காவடி சுமந்து, பாத யாத்திரையாக பல கி.மீ., தூரம் நடந்தே வருவது போல், வடக்கில் சிவபெருமானுக்காக பாதயாத்திரை மேற்கொள்வதாகும். இதை இந்துக்களின் தவக்காலம் என்றே குறிப்பிடுகிறார்கள். இந்த ஆண்டு கன்வர் யாத்திரை செல்வதற்கு ஏராளமான பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

    கன்வர் யாத்திரை மேற்கொள்பவர்களை கன்வரியார்கள் என அழைப்பதுண்டு. வெகு தொலைவில் இருந்து பாத யாத்திரையாக வரும் இவர்கள் கங்கையில் புனித நீரை சேகரித்து, தோளில் சுமந்து சென்று பல்வேறு சிவாலயங்களிலும் அபிஷேகம் செய்வார்கள்.

    இதற்காக ஒரு மாத காலம் கடுமையான விரதம் இருந்து, இவர்கள் பாதயாத்திரை மேற்கொள்வார்கள். இந்த கன்வர் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி துவங்கி, ஆகஸ்ட் 2-ந்தேதி சிவராத்திரி நாளில் நிறைவு செய்ய உள்ளனர்.

    இந்நிலையில் கன்வர் யாத்திரை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உத்தரகாண்ட் டிஜிபி அபினவ் குமார் கூறுகையில்,

    கன்வர் மேளா யாத்திரையின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் மக்களின் மத நம்பிக்கை ஆகியவற்றின் பார்வையில் உத்தரகாண்ட் காவல்துறைக்கு ஒரு முக்கியமான சவாலாக உள்ளது.

    இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஜூலை 1-ந்தேதி 8 மாநில காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினோம். இந்த கூட்டத்தில் மத்திய ஏஜென்சிகள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை (CAPF) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    இந்த முறை கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசலை தடுக்க கண்காணிப்பு நோக்கங்களுக்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்த உள்ளோம்.

    கடந்த காலங்களில் கன்வர் மேளாவை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து நமக்கு கிடைத்து வரும் ஒத்துழைப்பு, ஆதரவு கொண்டு இதை வெற்றிகரமாக முடிப்போம் என்பதில் உறுதியாக உள்ளோம். யாத்ரா நல்லபடியாக நடக்கும் என்று கூறினார்.

    ×