என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பது கட்டாயம்- மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
    X

    பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பது கட்டாயம்- மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

    • ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி சமீபத்தில் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலியாகினர்.
    • பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை, தீ தடுப்பு வசதிகள், அவசரகால வெளியேறும் வசதிகள், மின் இணைப்பு போன்றவை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தை தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி சமீபத்தில் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர்.

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வை உறுதி செய்வதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை மற்றும் குழந்தைகள் தொடர்பான வசதிகள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்வதையும் உள்ளடக்கியதாகும்.

    குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவசரகால தயார்நிலை குறித்து பயிற்சி அளித்தல், ஆலோசனை மற்றும் சக நெட்வொர்க்குகள் மூலம் உளவியல் ரீதியான ஆதரவை வழங்குதல் போன்றவை ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை, தீ தடுப்பு வசதிகள், அவசரகால வெளியேறும் வசதிகள், மின் இணைப்பு போன்றவை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    வெளியேற்றும் பயிற்சிகள், முதலுதவி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்ட அவசரகால தயார் நிலை குறித்து ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பயிற்சி பெற்றிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தீயணைப்பு துறை, போலீஸ் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் ஆகிய உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் கால பயிற்சிகள் மற்றும் ஒத்திகைகளை அடிக்கடி நடத்த வேண்டும்.

    மேலும் உடல் பாதுகாப்பு மட்டுமின்றி மனநலம் மற்றும் உணர்வு பாதுகாப்புக்கு என ஆலோசனை சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

    மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு ஆபத்தான சூழ்நிலை, விபத்து உள்ளிட்ட சம்பவம் குறித்து 24 மணி நேரத்திற்குள் அதற்காக நியமிக்கப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேச அதிகாரியிடம் தெரிவிக்கப்பட வேண்டும். தாமதம், அலட்சியம் அல்லது நடவடிக்கை எடுக்கத்தவறிய சம்பவங்களில் கடுமையான பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.

    பெற்றோர், பாதுகாவலர், சமூக தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதை உறுதி செய்வதுடன், பள்ளிகள், பொது இடங்களில் பாதுகாப்பற்ற சூழல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக தகவல் அளிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    மேற்கண்ட நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் தாமதமின்றி செயல்படுமாறு கல்வித்துறை, பள்ளி வாரியம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×