என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் தூத்துக்குடியில் வைகோ பேச உள்ளார்.
    • ஆகஸ்டு 18-ந்தேதி திருப்பூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பேசுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்றத்தில் 30 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் 8 இடங்களில் மாநில வாழ்வாதாரங்களை பாதுகாக்க பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி தூத்துக்குடியில் அவரது இந்த பிரசாரம் தொடங்குகிறது. ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் அவர் தூத்துக்குடியில் பேச உள்ளார்.

    ஆகஸ்டு 10-ந்தேதி கடையநல்லூரில் மதச்சார்பின்மையும், கூட்டாட்சியும் என்ற தலைப்பிலும், 11-ந்தேதி கம்பத்தில் முல்லை பெரியாறும், நியூட்ரினோவும் என்ற தலைப்பிலும், 12-ந்தேதி திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் என்ற தலைப்பிலும் பேச உள்ளார்.

    ஆகஸ்டு 13-ந்தேதி கும்பகோணத்தில் மேகதாதுவும் மீத்தேனும் என்ற தலைப்பிலும், 14-ந்தேதி நெய்வேலியில் நிலக்கரி நிறுவனம் பற்றியும் பேசுகிறார். ஆகஸ்டு 18-ந்தேதி திருப்பூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பேசுகிறார்.

    ஆகஸ்டு 19-ந்தேதி சென்னை திருவான்மியூரில் சமூக நீதியும், திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் பேசுகிறார். அவருடன் அனைத்து கூட்டங்களிலும் ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன், கவிஞர் மணிவேந்தன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • இருகட்சிகளும் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார்.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதே தயாராகிவிட்டன. இதனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மேலும் சில கட்சிகளுடன் மற்ற கட்சிகள் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் முறிந்த கூட்டணியை சட்டசபை தேர்தலை நோக்கி புதுப்பித்த அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது. கூட்டணி அறிவித்ததில் இருந்து இருகட்சிகளும் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    கூட்டணி ஆட்சியா? முதலமைச்சர் வேட்பாளர் யார்? போன்ற கேள்விகளால் கூட்டணிக்குள் கருத்துவேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.

    இப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் திடீர் திடீரென சலசலப்பு ஏற்பட்டு கொண்டு இருக்கும் நிலையில், பா.ஜ.க.வுடன் பாராளுமன்ற தேர்தலில் இருந்து கூட்டணியில் தொடரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இடம் பெறும் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் டி.டி.வி. தினகரன் கூறியது குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, சிரித்துக்கொண்டே... அவருக்கு எல்லாம் பதில் சொல்ற அளவுக்கு கேட்க வேண்டாம். தயவு செய்து வேறு கேளுங்கள் என்றார்.

    மேலும், பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கிறதா சொல்கிறார்கள் சார்... என்ற கேள்விக்கு, அவர் இருக்கிறதா சொல்கிறார். அதற்கு நாங்கள் ஒன்னும் சொல்லலையே. நாங்கள், அ.தி.மு.க-பா.ஜ.க.கூட்டணி என்று கூறினார். 

    • மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடற்கரை பகுதியில் கரையை கடக்கக் கூடும்.
    • கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கவனத்துடன் மீன்பிடிக்குமாறு மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்:

    வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் நேற்று காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதையடுத்து இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம் வடக்கு ஒடிசா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடற்கரை பகுதியில் கரையை கடக்கக் கூடும் எனவும், இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று காலை முதலே, ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 45-50 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    இதையடுத்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கவனத்துடன் மீன்பிடிக்குமாறு மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
    • மருத்துவமனையில் மேலும் சில தினங்கள் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று சுவாசத்தை சீராக்க ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு எந்த குறைபாடும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் மேலும் சில தினங்கள் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    இன்று காலை அவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு சந்தித்து பேசினார்கள். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஏ.கே.விஜயன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.

    • 2026-ல் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.
    • கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்.

    புதுக்கோட்டை:

    தி.மு.கவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக என்ற அ.தி.மு.க. வின் புதிய பிரசார திட்டங்களை புதுக்கோட்டையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் பதில் சொல்லுங்க அப்பா என்ற தலைப்பில் பெண்களின் பாதிப்புகள் குறித்த காணொலியையும் வெளியிட்டார்.

    தி.மு.க. அளித்த வாக்குறுதிகளின் உண்மை நிலையை அறிய மக்களுக்கு ரிப்போர்ட் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்து தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று மக்களிடம் கொடுக்கப்பட உள்ள ரிப்போர்ட் கார்டையும் வெளியிட்டார்.

    இதன்பின் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * 2026-ல் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    * தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது.

    * நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல.

    * அ.தி.மு.க கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வரவேண்டுமோ அப்போது வரும்.

    * கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்.

    * தி.மு.க.வினர் சென்று பிரதமரின் வீட்டு கதவை தட்டினால் மட்டும் சரியா? என்றார்.


    • கடந்த 7-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதே தயாராகிவிட்டன. அந்த வகையில் எதிர்கட்சியான அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக களப்பணியை தற்போதே தொடங்கி விட்டனர். அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் இருந்து தொடங்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிறைவு செய்தாா். தொடர்ந்து 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்கினார். அவர் கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.

    நேற்று கந்தர்வகோட்டை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசினார். அப்போது ஏராளமான பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.

    இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திற்கு சென்றவர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

    அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கட்டுக்கட்டாக பணம் விநியோகம் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • மீனவர் பகுதியில் அதிகளவு கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் ஊர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
    • அரசு சார்பில் 2023-ல், ரூ.25 கோடி செலவில் கடலில் தூண்டில் வளைவு அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் ரூ.6078.40 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது ஆலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளால் அருகில் குடியிருக்கும் மீனவர் பகுதியில் அதிகளவு கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் ஊர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    அரசு சார்பில் 2023-ல், ரூ.25 கோடி செலவில் கடலில் தூண்டில் வளைவு அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது. இன்று வரை பணிகள் ஏதும் தொடங்கவில்லை.

    இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் 150 மீனவர் குடும்பத்தினர் இன்று மீன்பிடிப்பை தவிர்த்தனர். பின்னர் தங்களின் உயிர் பாதுகாப்பிற்கு, அரசு விரைவில் தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கையை வைத்து, நெம்மேலி குப்பம் மீனவர் பஞ்சாயத்து சார்பில் 300-க்கும் மேற்பட்டோர், ஊருக்குள் நுழையும் சாலையில் அமர்ந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    போராட்டம் நடத்தியவர்களிடம் திருப்போரூர் தாசில்தார் சரவணன், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஆசனூர் வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்தது.
    • வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதைப்போல் கரும்பு லோடுகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளையும் ருசிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று ஒன்று கடந்து சில நாட்களாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லோடுகளை ஏற்றி வரும் லாரியை வழிமறித்து கரும்புகளை ருசித்து வருகிறது.

    இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஆசனூர் வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்தது. அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி கரும்பு கட்டுதல் உள்ளதா என தேடியது. ஒவ்வொரு வாகனத்தையும் வழிமறித்து சாலையின் நடுவே நின்றதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

    அப்போது அந்த வழியாக கரும்பு லோடுகளை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி தனது தும்பி கையால் கரும்பு கட்டிகளை கீழே போட்டு அந்த ஒற்றை யானை கரும்பை சுவைத்தது. ஒரு மணி நேரமாக சாலையில் நின்று கொண்டிருந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது. சமீப காலமாக ஆசனூர் வனப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை இன்னும் வழங்கப்படவில்லை.
    • விழித்துக்கொள்ளுமா விடியல் அரசு?

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஜூலை மாதமே முடியவிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை வழங்கக்கூட அரசிடம் பணம் இல்லையா? அல்லது மனம் இல்லையா?

    தினமொருமுறை ஞாபகப்படுத்தினால் தான் ஆசிரியர்களின் நலனை திராவிட மாடல் அரசு கண்டுகொள்ளும் என்றால் அதை செய்யவும் எங்கள் தமிழக பா.ஜ.க. தயாராக உள்ளது! விழித்துக்கொள்ளுமா விடியல் அரசு? என்று வினவியுள்ளார். 



    • அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1865 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65.49 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்துக்கு முன்பாகவே தொடங்கி பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்தது.

    ஆனால் ரூல் கர்வ் முறைப்படி அதற்கு மேல் தண்ணீர் தேக்க முடியாது என்பதால் உபரி நீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த 1 வாரமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தால் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முல்லைப்பெரியாறு அணையின் நீர்வரத்து 2131 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 4001 கன அடியாக அதிகரித்தது.

    இன்று காலை மேலும் நீர்வரத்து உயர்ந்து 4574 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. நேற்று நீர்மட்டம் 130.90 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 131.90 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1865 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ரூல் கர்வ் விதிப்படி ஜூலை 31 வரை அணயில் 137 அடி வரை தண்ணீர் தேக்கலாம். தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் முழு அளவில் இயக்கப்பட்டு 168 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65.49 அடியாக உள்ளது. நீர் வரத்து 1837 கன அடி. நீர் திறப்பு 869 கன அடி. இருப்பு 4738 மி.கன அடியாக உள்ளது. 66 கன அடியை எட்டியதும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்பதால் அணையின் நீர்மட்டத்தை நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்காக 72,743 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
    • போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டதால் 25 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் 30-ந்தேதி தொடங்கும் நிலையில் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்காக 72,743 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    கடந்த ஆண்டை விட கூடுதலாக 29,680 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 4,062 மாணவர்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க போலி ஆவணம் மூலம் 25 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டதால் 25 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னதாக 20 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • மெயின் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி யாக தொடர்ந்து 3 தினங்களாக அதே அளவு நீடித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×