என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய தாழ்தள மின்சார பஸ்கள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
- பங்கு பெறுவதற்கு தகுதியான ஆவணங்களுடன் ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
தமிழக போக்குவரத்து துறைக்கு 100 மின்சார ஏ.சி. தாழ்தள பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
கால நிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நகர்ப்புறங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய தாழ்தள மின்சார பஸ்கள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதை செயல்படுத்தும் விதமாக இப்போது 100 ஏ.சி. மின்சார பஸ்கள் வாங்குவதற்கு அரசு டெண்டர் கோரி உள்ளது. மின்சார பஸ்களுடன் சார்ஜிங் தீர்வு மற்றும் டிப்போ மேம்பாடு பணிகளுக்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரிக் ஏ.சி. பஸ்கள் வழங்கும் நிறுவனம், சார்ஜிங் மையம் மற்றும் சர்வீஸ் மையத்தையும் அமைத்து தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பங்கு பெறுவதற்கு தகுதியான ஆவணங்களுடன் ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
+2
- தி.மு.க. உள்பட 14 மாணவர் அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகம் எதிரே கருப்பு கொடியுடன் திரண்டனர்.
- பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் கவர்னர் வரும் பாதைகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதில் தொடர்புடைய பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மற்றும் 2 பேராசிரியர்கள் தலைமறைவாக உள்ளனர். போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அங்கு நடைபெற்ற அலுவலர் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் வந்தார். பின்னர் சேலத்தில் இருந்து காரில் கோவை செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார்.
இதற்கிடையே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ள துணைவேந்தரை கவர்னர் சந்திக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தி.மு.க. மாணவர் அணி, திராவிட மாணவர் கழகம் உள்பட 14 மாணவர் சங்கங்கள் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவோம் என்று அறிவித்திருந்தனர்.
அதன்படி தி.மு.க. உள்பட 14 மாணவர் அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகம் எதிரே கருப்பு கொடியுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
இதற்கிடையே கவர்னர் வரவுள்ள நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீசார் இன்று காலை 10 மணி முதல் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை வேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம், பூட்டர் பவுண்டேசன், அறிவியல் துறை உள்ளிட்ட 6 இடங்களில் சூரமங்கலம் துணை கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் தனித்தனியாக பிரிந்து இந்த சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண்சுந்தர் தயாள் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து வருகிறார். அவர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து வருகிறார். கவர்னர் பல்கலைக்கழகத்திற்கு வரும் நேரத்தில் போலீசார் ஒருபுறம் சோதனை நடத்தி வருவதும், நிதித்துறை கூடுதல் செயலாளர் ஆய்வு செய்து வருவதாலும் பல்கலைக் கழக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
கவர்னர் வருகையையொட்டி பல்கலைக் கழக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.
- மேல்முறையீட்டு மனு தொடர்பாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
சென்னை:
கடந்த 2022 ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி சில உத்தரவுகளை பிறப்பித்தார். பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே, அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ். மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்தார். மேலும் வழக்கை நவம்பர் 30-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் நவம்பர் 8-ந்தேதி, தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்து விட்டதால் வழக்கை நவம்பர் 10-ந்தேதி விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்தபிறகும்கூட, வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே, இன்றைக்கே இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணை தொடங்கி நடத்தப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன், தகுதி நீக்கம் செல்லும் என ஏற்கனவே 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது.
தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு. கொடி, சின்னம் பயன்படுத்தக்கூடாது என்ற தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு சமமானது. இடைக்கால உத்தரவின் அடிப்படையில் தடை விதிக்க முடியாது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கீல் விஜயின் நாராயண் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தடையை நீக்கக் கோரும் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் இன்று காலை தீர்ப்பளித்தனர்.
அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. அந்த தடையை நீக்க முடியாது.
எனவே இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இந்த விவகாரத்தில் நிவாரணம் வேண்டி, தனி நீதிபதியிடமே ஓ.பன்னீர்செல்வம் முறையீடு செய்யலாம்.
அதுபோன்று அவர் மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் அந்த மனுவை தனி நீதிபதி சட்ட ரீதியாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
அ.தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் ஐகோர்ட்டு நீதிபதிகள் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மேலும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் அ.தி.மு.க. கொடி மற்றும் கட்சி பெயரை பயன்படுத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. தனி நீதிபதியின் தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வமும் அவரது அணியினரும் கடந்த 2½ மாதங்களாக அ.தி.மு.க. கொடி சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
- வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமில்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,810-க்கும் சவரன் ரூ.46,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமில்லை. ஒரு கிராம் ரூ.77.50-க்கும் பார் வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
- 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற இருக்கும் முகவர்களின் கூட்டம் தொகுதி வாரியாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.
இதேபோல் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் கட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இப்போது மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) மாவட்ட கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான "சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு" நடைபெறுகிறது.
இப்பயிற்சி வகுப்பில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணவி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புனித லூர்து அன்னை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக அண்ணாமலை சென்றார்.
- சம்பவத்தின் போது அண்ணாமலையும் வாலிபர்களுடன் காட்டமாக பேசினார்.
சென்னை:
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண்... என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி அவர் நடைபயணத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பொம்மிடி என்ற பகுதியில் பி.பள்ளி பட்டியில் உள்ள புனித லூர்து அன்னை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக அண்ணாமலை சென்றார்.
அவரை உள்ளே விடாமல் வாலிபர்கள் சிலர் வழி மறித்து தகராறு செய்தனர். மணிப்பூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி, நீங்கள் உள்ளே செல்லக்கூடாது என்றும், அன்னையின் சிலைக்கு மாலை அணி வித்து வணங்கக்கூடாது என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பொம்மிடி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அண்ணாமலையுடன் தகராறு செய்து மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் போது அண்ணாமலையும் வாலிபர்களுடன் காட்டமாக பேசினார்.
மணிப்பூர் சம்பவத்தை ஏன் இங்கு தொடர்புபடுத்தி பேசுகிறீர்கள். அது வேறு, இது வேறு என்று அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் போலீசார் தலையிட்டதை தொடர்ந்து வாலிபர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் அண்ணாமலை கிறிஸ்தவ ஆலயத்துக்குள் சென்று வழிபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் என்பவர் பொம்மிடி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ சாதி மத உணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், 504-அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், 505 (2), வழிபாட்டு தலங்களில் வெறுப்புணர்வோடு நடந்து கொள்ளுதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோயம்புத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் (எண்.06086) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.
- பெங்களூரு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் நாளை (12-ந்தேதி) இயக்கப்படுகிறது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் கோவை மார்க்கங்களில் இயக்கப்படுகின்ற ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.
சிறப்பு ரெயில்கள் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் இடங்கள் நிரம்பிவிட்டன.
இந்த நிலையில் கோவையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இன்று அறிவிக்கப்பட்டன. 16, 17-ந்தேதிகளில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் (எண்.06086) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.
தாம்பரத்தில் இருந்து 17, 18-ந்தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடைகிறது.
இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் வழியாக தாம்பரம் வந்து சேருகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.
பெங்களூரு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் நாளை (12-ந்தேதி) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பெங்களூருவில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து 12-ந்தேதி அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு பகல் 12 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில், பங்கார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி கோட்டை வழியாக செல்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
- தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து ஏற்கனவே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- ஆலோசனையில் கூட்டணி, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை மற்றும் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்களுடன் தொகுதி வாரியாக நாளை மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை தொடங்குகிறார். தொகுதி வாரியாக தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் நாளை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனையில் கூட்டணி, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து ஏற்கனவே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது குறிப்பிட்டத்தக்கது.
- அமைச்சரின் நண்பரான ராயனூர் சுப்பிரமணியத்தின் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ்ஸில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.
கரூர்:
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் குமார் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரின் நண்பரான ராயனூர் சுப்பிரமணியத்தின் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ்ஸிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி, அந்த மெஸ்சுக்கு சீல் வைத்தனர்.
பின்னர் சமீபத்தில் அதிகாரிகள் ஒப்பதலுடன் சீல் அகற்றப்பட்டு மெஸ் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 7 வருமான வரித்துறை அதிகாரிகள் கொங்கு மெஸ் நிர்வாகத்தினர் பழைய மெஸ் கட்டிடம் அருகாமையில் புதிதாக புதிதாக கட்டி வரும் 4 மாடி கட்டிடத்தை பொறியாளர்களை வைத்து அளந்தனர். மேலும் கட்டிட மதிப்பீட்டை பொறியாளர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று (வியாழக்கிழமை) வருமான வரித்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். இதில் 2 கார்களில் வந்த 9 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வீட்டிலும் ஏற்கனவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அங்கு இல்லாததால் சம்பந்தப்பட்டவர் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீசும் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜியின் நண்பரின் ஓட்டல் கட்டிடத்தை தொடர்ந்து அவரது சகோதரர் கட்டும் புதிய வீட்டினை வருமானவரித்துறை அதிகாரிகள் அளவீடு செய்து மதிப்பீடு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
- அதிகாலை முதலே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாமக்கல்:
அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று (வியாழக்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. அதிகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
- நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது.
- பருவமழை தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் தற்போது பெய்து வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த கால கட்டங்களில் 44 செ.மீ. மழை பதிவாகும். இது இயல்பான மழை அளவாக சொல்லப்படுகிறது.
அந்தவகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் மாதத்தில் பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பு இல்லாத சூழல் இருந்தது.
அதன் பின்னர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. அதிலும் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி வட கடலோர மாவட்டங்களிலும், 16, 17, 18-ந் தேதிகளில் தென் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியது.
இந்த மழையால், தமிழ்நாடு, புதுச்சேரியில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பைவிட 2 செ.மீ. மழை அதிகமாக பதிவானது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, பருவமழை தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் தற்போது பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், அதன் பின்னர் வறண்ட வானிலையே தமிழகத்தில் நிலவும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி பார்க்கையில் வடகிழக்கு பருவமழை காலம் விடைபெறும் தருவாய்க்கு வந்துவிட்டதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஓரிரு நாட்களில் அதற்கான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
- இந்திய மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'யு' கர்டர் ஸ்பான் ஆகும்.
இந்திய மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 மீட்டர் உயரத்திற்கு 30 மீட்டர் யு கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து இந்திய மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் இந்திய மெட்ரோ திட்டங்களில், முதன்முறையாக மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 20 மீ உயரத்திற்கு 30 மீ யு கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தி, சென்னை மெட்ரோ ரெயில் மைல்கல்லில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோ ரெயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'யு' கர்டர் ஸ்பான் ஆகும்.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கனரக வாகனம் 12 அச்சுகளில் தலா 8 டயர்களுடன் மொத்தம் 96 டயர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ இரயில் கட்டுமானத்தில் U Girder பணிக்கு தேவையான தடையற்ற போக்குவரத்து, எடை விநியோகம் நிலைத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்ற பணிகள் உறுதி செய்யப்படும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட குழுவினர் இணைந்து இந்த புல்லர் ஆக்சில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 30மீ நீளமுள்ள 185 மெட்ரிக் டன் எடை கொண்ட U-கர்டரைக் வெற்றிகரமாக நிறுவியுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டக் குழு இதுபோன்ற புதுமையான தீர்வுகளை கட்டுமான பணிகளில் பயன்படுத்துவதால், இந்திய மெட்ரோ துறையின் வரலாற்று மைல்கல் சாதனையை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், சிக்கலான மற்றும் லட்சியத் திட்டங்களைத் துல்லியமாகவும் நிபுணத்துவத்துடனும் செயல்படுத்த பெரிதும் உதவுகிறது.
ஒக்கியம்பேட்டை மற்றும் காரப்பாக்கம் இடையே முதல் நீளமான 'யு' கர்டர் ஸ்பான் இன்று (10.01.2024) அமைக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில்
நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.







