என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் விளைவித்தவர் அவர்.
    • கோர்ட்டு மூலமாக கிடைத்த தண்டனையாகவே இதனை பார்க்கிறோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயப்பேட்டை தலைமைக்கழகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என்பதுடன் அ.தி.மு.க. கரை வேட்டியையும் கட்டக்கூடாது என்று ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது. இந்த தடையை அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள்.



    அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் விளைவித்தவர் அவர். அடியாட்கள் மற்றும் குண்டர்களோடு சென்று தலைமைக்கழகத்தை அடித்து நொறுக்கி, கொள்ளையடித்துச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடியை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம்.

    கோர்ட்டு மூலமாக கிடைத்த தண்டனையாகவே இதனை பார்க்கிறோம். குழம்பிய குட்டையில் ஓ.பி.எஸ். மீன்பிடிக்க நினைக்கிறார். அது பலிக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி தேர்வு நடைபெற்றது.
    • 55 ஆயிரம் பேர் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தனர்.

    டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி குரூப் 2 முதன்மை தேர்வை நடத்தியது. ஆனால், முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

    இதனால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஒருநாள் முன்னதாக இன்று குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 10 1/2 மாதங்கள் கழித்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு நடத்தப்பட்டபோது 5486 இடங்களுக்கு 55 ஆயிரம் பேர் தேர்வு எழுந்தியிருந்தனர். தற்போது காலிபணியிடங்கள் 6157 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு மே மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல் நிலை தேர்வு நடைபெற்றது.

    • சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காத வகையில் மழை நீர் வடிகால் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள்.
    • தி.மு.க. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அதிக கனமழை பெய்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

    சேலம்:

    சேலம் ஓமலூரில் அ.தி.முக. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கே தேர்தலில் பேட்டியிட சீட் வழங்கப்படும். அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். சென்னையில் கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. முதலமைச்சர், அமைச்சர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காத வகையில் மழை நீர் வடிகால் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள். இதனை மக்களும் நம்பினார்கள். இந்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். உடமைகள் எல்லாம் பெரும் சேதத்திற்கு ஆளாகியது. 2, 3 நாட்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர். இப்படி நிலைமை இருக்க இந்த அரசாங்கம் முழுமையான வடிகால் வசதியை செய்து கொடுக்கவில்லை.


    இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மாவட்டங்களில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என அறிவித்தது. இது பற்றி செய்தி வெளியிடப்பட்டது. அப்படி இருந்தும் தி.மு.க. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அதிக கனமழை பெய்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அரசு வேகமாக துரிதமாக போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு என்ன என்ன தேவை என்பதை உணர்ந்து உடனுக்குடன் செயல்பட்டு இருந்தால் மக்களுடைய கோபத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். இதையும் இந்த அரசு செய்ய தவறி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 வயது முதல் 17 வயது வரை உள்ள 1,124 மாணவ-மாணவிகளிடம் உடல் எடை மற்றும் உயரம் கணக்கிடும் பி.எம்.ஐ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • துரித உணவு பழக்கமே (பாஸ்ட்புட்) உடல் குண்டாவதற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை நகரில் உள்ள பள்ளி மாணவர்களில் 5 பேரில் ஒருவர் உடல் பருமனாகவும், அதிக எடை கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    தனியார் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவமனை ஆகியவை பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் எடை குறித்து ஆய்வு நடத்தியது. 5 வயது முதல் 17 வயது வரை உள்ள 1,124 மாணவ-மாணவிகளிடம் உடல் எடை மற்றும் உயரம் கணக்கிடும் பி.எம்.ஐ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 584 பேர் மாணவிகள் ஆவார்கள்.

    இந்த ஆய்வில் 40 சதவீத மாணவ-மாணவிகள் வயதுக்கு மிஞ்சிய கூடுதல் எடையுடன் உடல் பருமனாக இருப்பது தெரியவந்துள்ளது. 667 பேருக்கு (59.43 சதவீதம்) உடல் எடை இயல்பாக இருக்கிறது. 237 பேர் (21.08 சதவீதம்) அதிக எடையிலும், 220 பேர் (19.5 சதவீதம்) உடல் பருமனாகவும் உள்ளனர்.

    அதிக எடை அல்லது உடல் பருமன் பாதிப்பு இந்தியாவில் உள்ள பல பள்ளி ஆய்வுகளில் காணப்பட்டதைவிட இது அதிகமாக உள்ளது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.


    துரித உணவு பழக்கமே (பாஸ்ட்புட்) உடல் குண்டாவதற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும்போது, "உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, துரித உணவுகளை அதிகப்படியாக பயன்படுத்துவது, செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது, வீடுகளில் இருந்து வாகனங்களிலேயே பள்ளிக்கு செல்வது உள்ளிட்ட காரணங்கள் பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்தது" என்றார்.

    • 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.
    • புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் வழக்கு விசாரணை இன்று நடைபெற இருந்தது.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதில் அவரது மனைவி ரம்யாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல்குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.

    இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது மொத்தம் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.

    புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற இருந்தது.

    ஆனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த வழக்கை மீண்டும் ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

    • காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழும் இந்திய மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒற்றுமையாக பழகி வருகிறார்கள்.
    • மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் போற்றி பாதுகாத்தும் வருகிறார்கள்.

    சென்னை:

    அயோத்தியில் வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. பா.ஜனதா கோவில் திறப்பு விழாவை அரசியலுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளார்கள்.

    காங்கிரசின் இந்த புறக்கணிப்பு முடிவை கட்சிக்குள்ளேயே சிலர் விமர்சித்து வருகிறார்கள். குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தார்.

    தமிழகத்திலும் காங்கிரஸ் விவசாயப் பிரிவு காங்கிரஸ் தலைமையின் முடிவை விமர்சித்துள்ளது. இது தொடர்பாக விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழும் இந்திய மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒற்றுமையாக பழகி வருகிறார்கள். மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் போற்றி பாதுகாத்தும் வருகிறார்கள். எனவே ராமர் கோவில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தம் என்பதால் வருகிற 22-ந்தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு சார்பில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50 ராமர் பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு எனது தலைமையில் அயோத்தி சென்று ராமரை வணங்கி வழிபட உள்ளோம்.

    மேலும் இந்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மத தலைவர்களையும் எதிர்க்கட்சி தலைவர்களையும் தவிர்க்காமல் விருப்பு வெறுப்பு இல்லாமல் இந்த நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முறையான அழைப்பு கொடுத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பஸ்சில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக அரசு பஸ் ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை பேசின் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் 3 பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கிய பைக் ஓட்டுநர் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சக வாகன ஓட்டிகள் மீட்டதால் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது.

    பஸ்சில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக அரசு பஸ் ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார்.

    விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 25 ஊராட்சிகளை 20 பேரூராட்சிகளுடன் இணைத்துக்கொள்ள பேரூராட்சிகள் இயக்குநரகம் மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு அனுப்பி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
    • நகரப் பகுதிகளுடன் இணைக்க கருத்துரு அனுப்பப்பட்டு உள்ள 25 ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலைமை ஏற்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் டிசம்பர் 2024-ல் முடிவடைய உள்ளதால் அதற்குப் பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கலாம் என்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மூலம் கருத்துரு அனுப்புமாறு அரசு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    பொதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் அவ்வூராட்சியில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையிலும், தேவைகளின் அடிப்படையிலும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதன்படி,

    சி.எப்.சி. மத்திய நிதி கமிஷன் நிதி (இது பேரூராட்சி/நகராட்சிகளுக்குக் கிடையாது)

    100 நாள் வேலை திட்ட நிதி இரண்டு விதமாக செலவிடப்படுகிறது.

    (இது, பேரூராட்சி/நகராட்சிகளுக்குக் கிடையாது)

    1) கிராமப்புற மகளிருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு அளித்து சம்பளம் வழங்குவது;

    2) இத்திட்டத்தின் கீழ் ஊரணி அமைத்தல்/தூர்வாருதல், கான்கிரீட் சாலை அமைத்தல் போன்ற பணிகளை மத்திய அரசு நிதியில் இருந்து மேற்கொள்ளுதல்;

    பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 100 சதவீத மானியத்தில் கிராமப்புற மக்களுக்கு சொந்த வீடு கட்ட நிதியுதவி-(இது, பேரூராட்சி/ நகராட்சிகளுக்குக் கிடையாது)

    தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்துடன் கழிப்பிடம் திட்டம் (இது பேரூராட்சி/நகராட்சிகளுக்கு முழு மானியம் வழங்கப்படுவதில்லை)

    பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம்-இத்திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மத்திய நிதியில் கிராம சாலைகள் அமைத்தல். ஒருசில மலை கிராமங்களுக்கு 8 கி.மீ. தூரம் வரை (8 கோடி ரூபாய்க்கும் மேல்) சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மாநில அரசு நிதியில் இது சாத்தியமில்லை.

    நபார்டு திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்காக பல திட்டங்கள் (இது பேரூராட்சி/ நகராட்சிகளுக்குக் கிடையாது)

    பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு இதுபோன்ற மத்திய அரசின் நிதி வழங்கப்படுவதில்லை. நகரப் பகுதிகளுக்கு மாநில அரசு வழங்கும் நிதி மற்றும் அவர்கள் வசூலிக்கும் வரி வருவாய் மூலம்தான் பணிபுரிபவர்களுக்கு சம்பளம், சாலைகளை புதுப்பித்தல் மற்றும் புதிதாக சாலைகளைப் போடுதல், தெரு விளக்குகளை பராமரித்தல் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், பல்வேறு நலத் திட்டங்களுக்கும் செலவிட முடியும். மத்திய அரசின் நிதி இல்லாமல், மாநில அரசின் நிதியில் நகரப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது.

    எனவே, தற்போதுள்ள ஊராட்சிகளையோ அல்லது ஊராட்சிகளில் உள்ள கிராமப் பகுதிகளையோ, நகரப் பகுதிகளுடன் இணைப்பதால் மத்திய அரசு, ஊராட்சிகளுக்கு நேரடியாக வழங்கும் நிதி நின்றுபோவதுடன், புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளின்,

    நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயரும்.


    வீட்டுவரி மற்றும் சொத்துவரி பல மடங்கு உயரும்;

    புதிய வீடு கட்ட அனுமதி பெறுவதற்கான செலவு அதிகரிக்கும் என்று, இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிக பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது.

    மாநிலங்களிடமிருந்து பெறப்படும் வரி வருவாய்தான் மீண்டும் மத்திய அரசு நிதியாக அந்தந்த மாநிலங்களில் உள்ள ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. எனவே, ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதன் மூலம் மாநிலத்திற்கு வரும் மத்திய அரசின் நிதி பெருமளவு குறையக்கூடிய அபாயமும் உள்ளது.

    உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் தமிழ்நாட்டிலேயே அதிக அளவு பேரூராட்சிகள், அதாவது 55 பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில் 25 ஊராட்சிகளை 20 பேரூராட்சிகளுடன் இணைத்துக்கொள்ள பேரூராட்சிகள் இயக்குநரகம் மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு அனுப்பி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைவதுடன், அம்மாவட்டத்திற்கு வரும் மத்திய அரசின் நிதி பங்களிப்பு பெருமளவு குறையும். தற்போது நகரப் பகுதிகளுடன் இணைக்க கருத்துரு அனுப்பப்பட்டு உள்ள 25 ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலைமை ஏற்படும்.

    எனவே, தமிழகம் முழுவதும் இதுபோன்று ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதற்கு முன்பு, அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், நலச் சங்கங்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1675 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • திட்டம் மூலம் கடலோர பல்லுயிர் பெருக்கம் மேம்படுத்துதல், கடல் பல்லுயிர்கள் பாதுகாப்பு, உள்ளூர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

    சென்னை:

    உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு பணியை ரூ.1675 கோடி செலவில் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

    2023-24ம் ஆண்டு சட்டசபையில் பட்ஜெட் உரையில், பருவநிலை மாற்றம் மற்றும் பெருகிவரும் மக்கள் தொகையால் ஏற்படும் அழுத்தம் காரணமாக கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் கடலோர மக்களின் வாழ்வாதாரம் ஆகியவை எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு பணியை உலக வங்கி உதவியுடன் அரசு செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்காக கடல் அரிப்பை தடுப்பது, கடல் மாசுபாட்டை குறைப்பது மற்றும் கடல் பல்லுயிரியலை பாதுகாப்பது ஆகிய நோக்கங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1675 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.


    அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு பணியை தொடங்க தமிழ்நாடு அரசு இப்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு நீடிக்கக்கூடிய கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதார திட்டமானது கடலோர வளங்களை பன்முகப்படுத்துவதன் மூலம் மீள்தன்மை மற்றும் நிலையான பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதோடு, இத்திட்டம் மூலம் கடலோர பல்லுயிர் பெருக்கம் மேம்படுத்துதல், கடல் பல்லுயிர்கள் பாதுகாப்பு, உள்ளூர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    • குழந்தைகள் தட்டம்மை போன்ற அறிகுறிகளுடனும், காய்ச்சலுடனும் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.
    • வேக வைக்காத பச்சையான உணவுகளையோ அல்லது வெளியில் சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 9,121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் இறந்துள்ளனர்.

    இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த 8-ந்தேதி வரை 461 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்கு பருவமழை இந்த மாதமும் பெய்யும் என்பதால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும் என்றும், இன்னும் 2 வாரங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை இன்னும் முடியவில்லை. மேலும் தற்போது குளிர்காலமும் தொடங்கி விட்டது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தினமும் 10 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்னும் 2 வாரங்கள் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வயிற்றுப்போக்கு, டைபாய்டு, வைரஸ் காய்ச்சலும் அதிகரித்து வருகிறது.

    மேலும் குழந்தைகள் தட்டம்மை போன்ற அறிகுறிகளுடனும், காய்ச்சலுடனும் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். சுவாச பிரச்சனைகள் மற்றும் நிமோனியா காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. அதற்காக பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். நன்கு காய்ச்சிய வெந்நீரை குடிக்க வேண்டும். வேக வைக்காத பச்சையான உணவுகளையோ அல்லது வெளியில் சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும். இதன் மூலம் காய்ச்சல் பரவலில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    வங்கக்கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 55 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

    மேலும் அவ்வப்போது சுழல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    • மது போதையில் வந்த முருகன், சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் வீட்டை எழுதி தருமாறும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிய ரூ.1,000 பணத்தை கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • கொலை செய்த முருகனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சிவந்திப்பூ (வயது 80).

    இவரது கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகள்களும், முருகன் (50) என்பவர் உள்பட 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    மூதாட்டி சிவந்திப்பூ புளி குத்தும் வேலைக்கு சென்ற தாகவும், அதன் மூலம் வரும் வருமானத்தையும், முதியோர் உதவித்தொகை மூலம் வரும் வருமானத்தையும் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவரிடம் இருக்கும் பணத்தை கேட்டு அவரது மகன் முருகன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவில் மது போதையில் வந்த முருகன், சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் வீட்டை எழுதி தருமாறும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிய ரூ.1,000 பணத்தை கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அதற்கு சிவந்திப்பூ மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், தாய் என்றும் பாராமல் சிவந்தி பூவின் கழுத்தை துணியால் இறுக்கியும், வீட்டினுள் கிடந்த அம்மிக்கல் மற்றும் மற்றொரு கல்லை தலையில் போட்டும் கொலை செய்தார்.

    இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் உயிரிழந்த சிவந்திப்பூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்த முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×