என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நான்கு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
- மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு எனத் தகவல்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை ஆறு மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்றுள்ள அவர் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்தார். என்றபோதிலும் கவர்னர் உரை அப்படியே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அவர் பேசிய சில கருத்துகள் நீக்கப்பட்டன.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி சென்றுள்ளார்.
- கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது
- ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது.
நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக 50 ரூபாய் மதிப்புள்ள தரமான, சுவையான 'பிரிஞ்சி' (வெஜிடபிள் பிரியாணி) ரூபாய் 10க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது
ஊருக்கே உணவு சப்ளை செய்யும் டெலிவரி பாய்கள், கொரியர் மேன்கள், உதவி இயக்குனர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் போன்ற பலருக்கு இந்த உணவகம் தினமும் பசியாற்றி வருகிறது.
லாப நோக்கம் எதுவும் இன்றி ஒரு மக்கள் சேவையாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று 17.04.2024) இந்த உணவகம் தொடங்கி தனது 500-வது நாளை நிறைவு செய்தது.
- 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர்
- நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ வேண்டுமென இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இந்த பழமையான கோயிலை சுமார் 7 கோடி ரூபாய் செலவில் புரணமைக்கும் பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வந்தனர். அதன்படி கோயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் 19-ம் தேதி வரை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாகலூர் பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இதில், ஒரு லட்சம் ரூபாய் பணம், பட்டுச்சேலை, பழங்கள், இனிப்புகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலத் தட்டில் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் அதனை கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். பாகலூர் பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருப்பதை போல நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.
- வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது.
- கல்வித்துறையில் 1,847 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்குள் 60,567 பேருக்கு அரசு பணிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
துறைவாரியாக பணி நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதில், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 4,286 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது.
நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக் கல்வித்துறையில் 1,847 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது.

அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர்களுக்கு பல்லாயிரக் கணக்கில் வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது.
இளைஞர்களுக்கு இந்தியா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கவலை அளிக்கிறது.
- 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைதுகள் அதிகரித்துள்ளன.
இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியறத்தி உள்ளார்.
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கவலை அளிப்பதாகவும் முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைதுகள் அதிகரித்துள்ளன.
மேலும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், மூன்று மீனவர்கள் மீது அநியாயமாக முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் நீண்டகாலமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி அவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டதால் அவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர் அவர்களிடம் இராஜதந்திர ரீதியில் தலையீடு செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக நான் வலியுறுத்துகிறேன்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நமது மீனவர்களை திருப்பி அனுப்புவதையும் அவர்களின் படகுகளை விடுவிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இந்த விஷயத்தை முதன்மைப்படுத்தி, நமது மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம், ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.. என்ற தலைப்பில் லோகோ.
- நிதிநிலை அறிக்கையின் வெற்றியை கூறும் முத்துச்சின்னம்.
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கான லோகோவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

இது நிதிநிலை அறிக்கையின் வெற்றியை கூறும் முத்துச்சின்னம் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே எனும் பழமொழிக்கு ஏற்ப முத்திரை சின்னம் தயார் செய்யப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
- தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி முதல் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் தமிழக காங்கிரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடீர் அதிரடி மாற்றங்கள் புயலை கிளப்பியுள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த கே.எஸ்.அழகிரி தேர்தல் நேரத்தில் மாற்றப்பட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அவரை மாற்றி விட்டு புதிய தலைவராக செல்வபெருந்தகையை நியமனம் செய்துள்ளது.
இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் விஜயதாரணி சேரப்போவதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த செய்திகளை மறுக்காமல் டெல்லியிலேயே முகாமிட்டுள்ள அவர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர உள்ளார். அதற்கான காய்களை அவர் நகர்த்தி வருகிறார்.
இது தொடர்பாகவும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டது பற்றியும் விஜயதாரணி எம்.எல்.ஏ. இன்று மாலைமலர் நிருபருக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விளவங்கோடு தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.தொகுதி மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். குமரி மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதி முன் மாதிரியான தொகுதியாக விளங்கி வருகிறது.
தொகுதி மக்களுக்காக தொடர்ந்து நான் பாடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக முழு மூச்சுடன் உழைத்துள்ளேன்.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் உழைப்புக்கு மரியாதை கிடைக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற தொகுதி தலைவராக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் செய்யப்படும் போது எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்காமலேயே ஆலோசனை செய்யாமல் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
பெண் என்பதால் என்னை தொடர்ந்து புறக்க ணித்து வருகிறார்கள். நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக பேசப்பட்டு வருகிறது. எனது முடிவை விரைவில் முறைப்படி அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டசபையில் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் விஜயதாரணியை போன்று மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களும் விரைவில் கட்சி மாறலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது எம்.பி.யாக உள்ள சிலர் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் எம்.பி.க்கள் சிலரும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்ப தாகவும் தெரிகிறது.
எனவே தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை முடிந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகும் போது எம்.பி.க்கள் சிலரும் பாரதிய ஜனதா பக்கம் சாயலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பான கட் டத்தை எட்டியிருக்கும் நிலையில் தமிழக காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் புகைச்சல் கட்சியினர் மத்தியிலும் தேர்தல் களத்திலும் சூட்டை கிளப்பி இருக்கிறது.
- மறைந்த வி ஏ ஓ லூர்து மகன் மார்ஷல் ஏசுவடியான் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
- உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என என் தந்தை சொல்லிக்கொண்டே இருப்பார். அவரது ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸின் மகன் மார்ஷல் ஏசுவடியான், சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் வென்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
"உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என என் தந்தை சொல்லிக்கொண்டே இருப்பார். அவரது ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றிக்கு எனது குடும்பம் மிகவும் உறுதுணையாக இருந்தது" என ஏசுவடியான் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவருக்கு வயது 55. இவர் மணல் கொள்ளையை தடுப்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்ததால் கோபமடைந்த ஒரு கும்பல் அவரது அலுவலகத்திலேயே கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.
லூர்து பிரான்சிசை வெட்டி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (41) மற்றும் மாரிமுத்து (31) ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அதோடு இருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், மறைந்த வி.ஏ.ஓ லூர்து மகன் மார்ஷல் ஏசுவடியான் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- புறப்பட்ட 30 நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது
- விமானத்தில் ராஷ்மிகாவுடன் ஷ்ரத்தா தாசும் உடன் பயணித்தார்
இந்தியாவின் முன்னணி தொழில்துறை குழுமமான பிரபல டாடா குழுமம் இயக்கி வரும் விமான போக்குவரத்து சேவை நிறுவனம், விஸ்டாரா (Vistara).
விஸ்டாராவிற்கு சொந்தமான விமானம் ஒன்று பயணிகளுடன் மும்பையிலிருந்து ஐதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆனால், புறப்பட்ட 30 நிமிடங்களில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
விமானி உடனடியாக அந்த விமானத்தை மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி வந்து தரையிறக்கினார்.
இந்த விமானத்தில் பிரபல திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) பயணம் செய்தார்.
தனக்கு நேர்ந்த அனுபவத்தை ராஷ்மிகா மந்தனா, சமூக வலைதள கணக்கில் "மரணத்தில் இருந்து இப்படித்தான் தப்பினோம்" என தலைப்பிட்டு பகிர்ந்து கொண்டார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா, கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
விபத்து நேரிடாமல் அதிர்ஷ்டவசமாக ராஷ்மிகா உயிர் தப்பியதால், அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
இதே விமானத்தில் ராஷ்மிகாவுடன், நடிகை ஷ்ரத்தா தாசும் (Shraddha Das) பயணித்தது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் கோளாறு உடனடியாக சரி செய்யப்படாததால், மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
- 1 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
- அடையாள விபரங்கள் சரி பார்க்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மையக் கணினியிலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கோபிச்செட்டிப் பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், 3 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இதில் ஈரோடு மாநில வரிக் கோட்டத்திற்குட்பட்ட இணை ஆணையர் வரி விதிப்பு மற்றும் நுண்ணறிவு கோட்ட அலுவலகம், சேவை மற்றும் சரக்கு வரி மேல் முறையீட்டு அலுவலகம், உதவி ஆணையர், திண்டல், பெருந்துறை மற்றும் சென்னிமலை வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 6 அலுவலகங் களுக்கு ஈரோட்டில் அலுவலகக் கட்டிடம், சத்தியமங்கலம், கோபிச் செட்டிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், துறையூர், புதுக்கோட்டையில் வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், துணை ஆணையர், தூத்துக்குடி சரக அலுவலகம், உதவி ஆணையர், தூத்துக்குடி-1, 2 மற்றும் 3 ஆகிய வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 4 அலுவலகங்களுக்கு தூத்துக்குடியில் 4 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வரித்துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அரகண்டநல்லூரில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவிலும், பழனி பதிவு மாவட்டத்தில், சத்திரப்பட்டி யில், 1 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகலை இணைய வழியாக பெறும் சேவையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பதிவுத்துறை தொடங்கப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்கள் தற்போது ஒளிவருடல் செய்யப்பட்டு மையக் கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன. சொத்து தொடர்பான (உயில், டிரஸ்ட், இதர ஆவணங்களை தவிர்த்து) எந்த ஆவணத்திற்கும் இணைய வழியில் விண்ணப்பிக்கவும், தேவையான கட்டணங்களை இணையவழியிலேயே செலுத்தி பொதுமக்கள் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒளிவருடல் செய்யப் பட்ட ஆவணங்களை சேமிப்பதற்கும், அதிவிரைவாக மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் ஏதுவாக, அதிவிரைவு சேமிப்பு கலன்கள் 31 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு ஆவண நகல்கள் சேமிக்கப்பட்டுள்ளன.
மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்கள் https://tnreginet.gov.in என்ற இணையவழியாக பெறும் சேவையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உயில், டிரஸ்ட் ஆவணங்களின் நகல்கள் சரியான நபருக்கு அவரின் அடையாள விபரங்கள் சரி பார்க்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மையக் கணினியிலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பொதுமக்கள் சொத்து தொடர்பான எந்த ஒரு சான்றிட்ட நகலுக்காகவும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. 1865-ம் ஆண்டு முதல் பதிவுசெய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் நகல்கள் உலகின் எந்த மூலையில் உள்ள பொது மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதிவுத்துறையின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தற்போதுள்ள மூன்று இணையநெறிமுறை புகைப்படக்கருவிகளுடன், 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சார்பதிவகங்களில் உள்ள பதிவறைகளில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள இரண்டு இணைய நெறி முறை புகைப்படக் கருவிகளின் பயன்பாட்டினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிக வரி ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன், பதிவுத் துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கருணை அடிப்படையில் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- தமிழகத்தின் வளர்ச்சியை கிராமம் முதல் நகரம் வரை சீராக திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பகுதியில் இயங்கி வந்த பஸ் நிலையத்தை இடித்து புதிய நவீன பஸ் நிலையமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கியது.
நீதிமன்ற வழக்குகள், கொரோனா காலக்கட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பஸ் நிலைய பணிகள் ரூ.85½ கோடியில் முழுமையாக முடிந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.
மேலும் நெல்லை மாவட் டத்தில் ரூ.436 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
விழாவில் தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.85½ கோடியில் கட்டி முடிக்கப்பட்ட சந்திப்பு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் கருணை அடிப்படையில் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து ரூ.572 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார். கலெக்டர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு திட்ட விளக்கவுரையாற்றினார்.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ. 85.56 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நமது ஆட்சியில் விளையாட்டுத்துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து உள்ளது. தற்போது விளையாட்டு துறை சார்பில் டார்லிங் நகரில் ரூ.6.50 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சியை கிராமம் முதல் நகரம் வரை சீராக திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளம் நெல்லையை புரட்டி போட்டது. மழை வெள்ளத்தால் இந்த பஸ் நிலையம் பாதிக்கப்பட்டது. இரவோடு இரவாக மழை வெள்ள பாதிப்புகளை மேற்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளையும் முதல்வர் முடுக்கிவிட்டார்.
சேலம் மாநாட்டை ரத்து செய்து இங்கேயே அமைச்சர்களும் நானும் 3 நாட்களாக தங்கி இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டோம்.
இன்று பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு தமிழகம் ரூ. 6 லட்சம் கோடியை கொடுத்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு 1.5 லட்சம் கோடியை மட்டுமே தந்துள்ளது.
ஒரு ரூபாய்க்கு மத்திய அரசு 28 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராத நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.
நிகழ் காலத்தில் மட்டு மல்ல எதிர்காலத்திற்கு தேவையான அனைத்தையும் தொலைநோக்கு திட்டத் தோடு முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
சென்னையில் இருப்பது நெல்லையிலும் இருக்க வேண்டும்,நெல்லையில் இருப்பது தென்காசியில் கிடைக்கவேண்டும்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். தி.மு.க. அரசு நெல்லையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் நன்றி கூறினார்.
பஸ் நிலையம் திறப்பு விழாவையொட்டி சுற்றிலும் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. நுழைவு வாயில்களில் வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.
நெல்லை நகர மக்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்து இருந்த சந்திப்பு பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டதால் வியாபாரிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்த னர்.
பஸ் நிலைய நடை பாதைகள் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள நமது நெல்லை செல்பி பாயிண்ட் முன்பு நின்று பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
- 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. கூட்டணியில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கி கொடுப்பது என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒரு தொகுதி கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கூட்டணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களை குறைந்தது, 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் இன்று இரவு சென்னை திரும்புகிறார். வருகிற 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. அன்று கட்சி அலுவலகத்துக்கு சென்று கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.
கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்' என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நாள் பிப்ரவரி 21.
வரும் பிப்ரவரி 21-ந் தேதி நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று நம்மவர் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.
அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகி கள், உறுப்பினர்கள், நம்ம வர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும்!!
வாருங்கள்! ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம். நாடாளுமன்றத்தில் நம்மவர்
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச்' லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளில் ஒன்றே கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கமல்ஹாசன் கை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.






