என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் ஏற்படும் தொடர் விபத்துகள் கவலையளிக்கின்றன.
    • பொதுவாகவே பட்டாசு ஆலைகளின் பெரிய குடோன்களுக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம்தான் அனுமதியளிக்கிறது.

    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 15-ந் தேதி தொடங்கி தீயணைப்புத் துறையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் திருச்சி மத்திய மண்டலம் உள்ளிட்ட மாநிலம் முழுவதுமுள்ள 4 மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் வடக்கு மண்டல அதிக புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. திருச்சி மத்திய மண்டலம் 2 ஆம் இடத்தையும், தெற்கு மண்டலம் 3 ஆவது இடத்தையும் பெற்றன.

    பரிசளிப்பு விழாவில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகம் முழுவதும் தீயணைப்பு நிலையங்களில் மீட்புப் பணிகளுக்காக பைபர் படகுகள், ரோபோக்கள், மற்றும் நவீன சாதனங்களை தேவைக்கேற்ப கொள்முதல் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதுடன் உரிய மாற்றங்களும் செய்யப்படும். சென்னை, மற்றும் தென் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்புகளின்போது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் பணி மகத்தானது எனத் தமிழக முதல்வரே பாராட்டியிருப்பது பெருமை.

    அதே நேரம் தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் ஏற்படும் தொடர் விபத்துகள் கவலையளிக்கின்றன. இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களின்போது தலைமைச் செயலர் ஏராளமான அறிவுரைகளைக் கூறியுள்ளார்.

    அந்த வகையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து, பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும். மேலும் விபத்துகளைத் தடுக்க 6 மாதங்களுக்குள் புதிய விதிமுறைகள் வரையறுக்கப்படும்.

    பொதுவாகவே பட்டாசு ஆலைகளின் பெரிய குடோன்களுக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம்தான் அனுமதியளிக்கிறது. தீயணைப்புத் துறை சார்பில் சிறிய குடோன்கள் மற்றும் ஆலைகளுக்குத்தான் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் விபத்துகள் என வரும்போது தீயணைப்பு மீட்புத் துறைக்கே நெருக்கடி ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஜி. கார்த்திகேயன், மாநகரக் காவல் ஆணையர் ந. காமினி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மத்திய மண்டலத் துணை இயக்குநர் பி. குமார், மாவட்ட அலுவலர் வி. ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • காசி மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார்.
    • இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி (வயது 29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.

    காசி மீது கோட்டார், வடசேரி மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பாலியல் வழக்கு, கந்துவட்டி வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் பதிவானது. பின்னர் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் காசி மீது தொடரப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் காசிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து மீதமுள்ள 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடுத்த பாலியல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 900 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    • 12 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் பூங்கா முழுக்கவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • இதுவரை செய்யாத நடைமுறை என்பதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்கள் மக்கள் பார்வைக்கு விருந்தளித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு மலர் கண்காட்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

    12 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் பூங்கா முழுக்கவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பல வண்ணங்களில், பல வகைகளில் மலர்கள் குறிப்பாக ரோஜா, துலிப், சாமந்தி என பல வகை பூக்கள் கண்களுக்கு விருந்தாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

    கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இதய வடிவிலான மலர் அலங்கார வளைவை காணலாம்.

    கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இதய வடிவிலான மலர் அலங்கார வளைவை காணலாம்.

    இந்த மலர் கண்காட்சியானது சென்னையில் புதிய முயற்சியாக, பூக்கும் பருவத்தில் இருந்த செடிகளை கொண்டு வந்து, அவை பூத்தபின் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை செய்யாத நடைமுறை என்பதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்கள் மக்கள் பார்வைக்கு விருந்தளித்து வருகிறது.

    அதோடு பூக்களை கொண்டு பல அலங்காரங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. யானை, அன்னப்பறவை, பொம்மை, ஆமை என்று உருவ அலங்காரங்களும். அதேபோல் சதுர தூண், இதய வடிவ தூண், மலர் பாதை என பல வகைகளில் அலங்காரத்துடன் இந்த மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று காலை முதலே மக்கள் அதிக அளவில் வர தொடங்கினர். இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விதவிதமான மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் மலர்களுடன் 'செல்பி'களையும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    மலர் கண்காட்சியை பார்வையிட வருபவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் நேற்றும் கலை நிகழ்ச்சி அரங்கேறியது. இதில் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்-சிறுமிகள் பங்கேற்று ஆடிப்பாடி அசத்தினர். 

    மலர் கண்காட்சியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

    மலர் கண்காட்சியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

    அனைவரையும் கவர்ந்த இந்த கண்காட்சி நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. பெரியவர்களுக்கு ரூ.150-ம், சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டுமே இக்கண்காட்சியை 30 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொதுவாக தேர்தல் நேரங்களில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் சற்று கூடுதலாக இடம் பெற்றிருக்கும்.
    • தமிழக பட்ஜெட் ‘7 மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பின் கீழ் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

    இதற்காக பேரவை விதி எண்ணிலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கடந்த 15-ந் தேதி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படு்கிறது.

    காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். சுமார் 1½ மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக தேர்தல் நேரங்களில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் சற்று கூடுதலாக இடம் பெற்றிருக்கும்.

    அந்த வகையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    மேலும், பட்ஜெட் அறிவிப்பின் நிறைவாக வரும் நிதி ஆண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய், வரியல்லாத வருவாய், தமிழகத்தின் கடன் நிலை, வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பற்றிய தகவல்களையும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட இருக்கிறார்.

    தமிழக பட்ஜெட் '7 மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பின் கீழ் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    அதாவது, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய்த்தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 தலைப்புகளில் இந்த பட்ஜெட்டின் சாராம்சம் அமைய உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் விளக்கம் அளிப்பார்.

    நாளை 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 4-வது முறையாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். வேளாண் பட்ஜெட்டிலும் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    இதனையடுத்து 21-ந் தேதி காலை மற்றும் மாலை என 2 வேளை சட்டசபை கூட்டம் நடக்கிறது. அதில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில்பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, 22-ந் தேதி (வியாழக்கிழமை) நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசுகிறார்கள். அத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடையும்.

    அடுத்து பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும்.

    • நான்கு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
    • மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு எனத் தகவல்.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை ஆறு மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்றுள்ள அவர் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    நான்கு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்தார். என்றபோதிலும் கவர்னர் உரை அப்படியே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அவர் பேசிய சில கருத்துகள் நீக்கப்பட்டன.

    இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி சென்றுள்ளார்.

    • கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது
    • ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது.

    நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக 50 ரூபாய் மதிப்புள்ள தரமான, சுவையான 'பிரிஞ்சி' (வெஜிடபிள் பிரியாணி) ரூபாய் 10க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது

    ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது

    ஊருக்கே உணவு சப்ளை செய்யும் டெலிவரி பாய்கள், கொரியர் மேன்கள், உதவி இயக்குனர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் போன்ற பலருக்கு இந்த உணவகம் தினமும் பசியாற்றி வருகிறது.

    லாப நோக்கம் எதுவும் இன்றி ஒரு மக்கள் சேவையாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று 17.04.2024) இந்த உணவகம் தொடங்கி தனது 500-வது நாளை நிறைவு செய்தது.

    • 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர்
    • நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ வேண்டுமென இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    இந்த பழமையான கோயிலை சுமார் 7 கோடி ரூபாய் செலவில் புரணமைக்கும் பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வந்தனர். அதன்படி கோயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் 19-ம் தேதி வரை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாகலூர் பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    இதில், ஒரு லட்சம் ரூபாய் பணம், பட்டுச்சேலை, பழங்கள், இனிப்புகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலத் தட்டில் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் அதனை கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். பாகலூர் பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருப்பதை போல நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

    • வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது.
    • கல்வித்துறையில் 1,847 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்குள் 60,567 பேருக்கு அரசு பணிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    துறைவாரியாக பணி நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதில், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 4,286 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

    ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது.

    நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக் கல்வித்துறையில் 1,847 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது. 

    அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இளைஞர்களுக்கு பல்லாயிரக் கணக்கில் வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது.

    இளைஞர்களுக்கு இந்தியா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    • கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கவலை அளிக்கிறது.
    • 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைதுகள் அதிகரித்துள்ளன.

    இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியறத்தி உள்ளார்.

    இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கவலை அளிப்பதாகவும் முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைதுகள் அதிகரித்துள்ளன.

    மேலும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், மூன்று மீனவர்கள் மீது அநியாயமாக முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் நீண்டகாலமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலை நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி அவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டதால் அவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பிரதமர் அவர்களிடம் இராஜதந்திர ரீதியில் தலையீடு செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக நான் வலியுறுத்துகிறேன்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நமது மீனவர்களை திருப்பி அனுப்புவதையும் அவர்களின் படகுகளை விடுவிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    இந்த விஷயத்தை முதன்மைப்படுத்தி, நமது மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம், ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.. என்ற தலைப்பில் லோகோ.
    • நிதிநிலை அறிக்கையின் வெற்றியை கூறும் முத்துச்சின்னம்.

    தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கான லோகோவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. 

    இது நிதிநிலை அறிக்கையின் வெற்றியை கூறும் முத்துச்சின்னம் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே எனும் பழமொழிக்கு ஏற்ப முத்திரை சின்னம் தயார் செய்யப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
    • தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி முதல் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் தமிழக காங்கிரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடீர் அதிரடி மாற்றங்கள் புயலை கிளப்பியுள்ளன.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த கே.எஸ்.அழகிரி தேர்தல் நேரத்தில் மாற்றப்பட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அவரை மாற்றி விட்டு புதிய தலைவராக செல்வபெருந்தகையை நியமனம் செய்துள்ளது.

    இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார்.

    பாரதிய ஜனதா கட்சியில் விஜயதாரணி சேரப்போவதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த செய்திகளை மறுக்காமல் டெல்லியிலேயே முகாமிட்டுள்ள அவர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர உள்ளார். அதற்கான காய்களை அவர் நகர்த்தி வருகிறார்.

    இது தொடர்பாகவும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டது பற்றியும் விஜயதாரணி எம்.எல்.ஏ. இன்று மாலைமலர் நிருபருக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விளவங்கோடு தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.தொகுதி மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். குமரி மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதி முன் மாதிரியான தொகுதியாக விளங்கி வருகிறது.

    தொகுதி மக்களுக்காக தொடர்ந்து நான் பாடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக முழு மூச்சுடன் உழைத்துள்ளேன்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியில் உழைப்புக்கு மரியாதை கிடைக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற தொகுதி தலைவராக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் செய்யப்படும் போது எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

    ஆனால் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்காமலேயே ஆலோசனை செய்யாமல் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.

    பெண் என்பதால் என்னை தொடர்ந்து புறக்க ணித்து வருகிறார்கள். நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக பேசப்பட்டு வருகிறது. எனது முடிவை விரைவில் முறைப்படி அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக சட்டசபையில் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் விஜயதாரணியை போன்று மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களும் விரைவில் கட்சி மாறலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது எம்.பி.யாக உள்ள சிலர் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் எம்.பி.க்கள் சிலரும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்ப தாகவும் தெரிகிறது.

    எனவே தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை முடிந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகும் போது எம்.பி.க்கள் சிலரும் பாரதிய ஜனதா பக்கம் சாயலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பான கட் டத்தை எட்டியிருக்கும் நிலையில் தமிழக காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் புகைச்சல் கட்சியினர் மத்தியிலும் தேர்தல் களத்திலும் சூட்டை கிளப்பி இருக்கிறது.

    • மறைந்த வி ஏ ஓ லூர்து மகன் மார்ஷல் ஏசுவடியான் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
    • உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என என் தந்தை சொல்லிக்கொண்டே இருப்பார். அவரது ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸின் மகன் மார்ஷல் ஏசுவடியான், சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் வென்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.

    "உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என என் தந்தை சொல்லிக்கொண்டே இருப்பார். அவரது ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றிக்கு எனது குடும்பம் மிகவும் உறுதுணையாக இருந்தது" என ஏசுவடியான் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவருக்கு வயது 55. இவர் மணல் கொள்ளையை தடுப்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்ததால் கோபமடைந்த ஒரு கும்பல் அவரது அலுவலகத்திலேயே கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.

    லூர்து பிரான்சிசை வெட்டி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (41) மற்றும் மாரிமுத்து (31) ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அதோடு இருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில், மறைந்த வி.ஏ.ஓ லூர்து மகன் மார்ஷல் ஏசுவடியான் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ×