என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
    • உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும்.

    அய்யா வைகுண்டரின் அவதார தினம் ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் மாசி 19-ந்தேதி அய்யா விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள பதியில் இருந்தும், சிறையில் அடைக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் இருந்தும் வாகன பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ஊர்வலம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அய்யாவின் தாரக மந்திரமான `அய்யா சிவ சிவ சிவசிவ அரகரா அரகரா' என்ற மந்திரத்தை சொல்லியவரே வருவார்கள்.

    நிலைக்கண்ணாடி

    அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும். அதுதான் உனக்கு தெய்வம் என்கின்ற அய்யாவின் சீரிய கோட்பாட்டின்படி தலைமை பதி உள்ளிட்ட அனைத்து பதிகள் மற்றும் நிழல் தாங்கல்களிலும் நிலைக்கண்ணாடி நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.

    அகிலத்திரட்டு அம்மானை

    அகிலத்திரட்டு அம்மானை நூல் அய்யா வைகுண்டரின் அருள் நூல்களில் ஒன்றாகும். அகிலம் என்றால் உலகம். உலகத்தில் உள்ள அத்தனை யையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.

    மறு அவதாரம் எடுத்த அய்யா வைகுண்டர்

    அய்யா வைகுண்டருக்கு 22 வயதாக இருக்கும் போது திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. எந்த வைத்தியராலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அய்யா வைகுண்டரின் பெற்றோர் கனவில் 'விஷ்ணு' தோன்றினார். மகனை திருச்செந்தூருக்கு அழைத்து வருமாறு கூறி மறைந்தார். இதையடுத்து அய்யா வைகுண்டரை திருச்செந்தூருக்கு அழைத்து சென்றனர்.

    1833-ம் ஆண்டு மார்ச் மாதம் (கொல்லம் ஆண்டு 18 மாசி மாதம்) அப்படியே கடலுக்குள் சென்று மாயமாக மறைந்து போனார். பெற்றோர் மகனை தேடி கரையில் காத்திருந்தனர். 3-வது நாள் திடீரென கடலின் ஒரு பகுதி இரண்டாக பிரிந்து வழிவிட உள்ளிருந்து மகாவிஷ்ணுவின் 10-வது அவதாரமாக அய்யா வைகுண்டர் வெளிப்பட்டார்.

     முத்திரி கிணறு

    அய்யா வைகுண்டர் சாமி தோப்பின் வடக்கு வாசல் பக்கம் இருந்தபடியே நிறைய அற்புதங்களையும், சமூக மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தலானார். தீண்டாமை சிக்கலில் தவித்த மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் கிணறு ஒன்றை உருவாக்கி அதற்கு முத்திரி கிணறு என்று பெயரிட்டு அனைத்து சமுதாயத்தினரும் ஒரே கிணற்றில் நீர் எடுத்து பருக ஆரம்பித்தனர்.

    ஒரு வீட்டு கிணற்று தண்ணீரை மற்றொரு வீட்டுக்காரர் எடுத்து பழகினாலே தீட்டு என்று கருதிய மேற்குடியினர், பல சாதியினரும் ஒரே கிணற்று தண்ணீரை பருகியதை கண்டு ஆச்சரியப்பட்டு தான் போனார்கள்.

    • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கப்பல் காசியில் பயன்படுத்தப்பட இருக்கிறது.
    • 75 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலமாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். தமிழில் வணக்கம் என்று கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.

    * இந்த திட்டங்களால் தமிழகத்தில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    * கடல் வாணிபத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.

    * இன்று தமிழ் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். நான் நேரடியாக குற்றம்சாட்ட விரும்புகிறேன்.

    * இன்று தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள், டெல்லியில் ஆட்சியில் இருந்தார்கள்.

    * மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுக எதையும் செய்யவில்லை.

    * இன்று இந்த வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்திற்கு ஒரு சேவகனாக வந்துள்ளேன்.

    * இன்று இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கப்பல் தன் பயணத்தை தொடங்கி இருக்கிறது.

    * இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கப்பல் காசியில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    * இந்த திட்டங்களால் தூத்துக்குடியும், தமிழகமும் பசுமை எரிசக்தியின் மையமாக மாறும்.

    * இன்று இங்கே சாலை, ரெயில் திட்டங்கள் சிலவும் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

    * தென் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு புதிய ரெயில் தொடங்கப்பட இருக்கின்றன.

    * புதிய ரெயில்களால் பயண நேரம் குறையும், சுற்றுலா பயணிகள் அதிகரிப்பர்.

    * ரெயில்வே, சாலை, நீர்வழி போக்குவரத்து ஆகியவற்றின் நோக்கம் ஒன்றுதான். இந்த திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி அடையும், நாடு வளர்ச்சி அடையும் என்பதே நோக்கம்.

    * இந்த திட்டங்களுக்காக தமிழக மக்களுக்கு எனது பாராட்டு, வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

    * நாட்டின் முக்கியமாக கலங்கரை விளக்கங்களை சுற்றுலா தலமாக மாற்ற முடியும் என கூறியிருந்தேன்.

    * இன்று அந்த கனவு நனவாகி இருக்கிறது. 75 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலமாகி உள்ளது.

    * மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் நவீன போக்குவரத்து வசதி மேம்பட்டுள்ளது.

    * 200 கி.மீ. ரெயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டுள்ளன.

    * ரெயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன.

    * தமிழ்நாட்டில் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் சாலை வசதிக்காக மத்திய அரசு முதலீடு செய்துள்ளது.

    * இது அரசியல் அல்ல, என்னுடைய அரசியல் அல்ல, நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள்.

    * இன்று மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி இவற்றை செய்ய விடாது. இருந்தபோதும் செய்துள்ளோம் என்று கூறினார்.

    • செந்தில் பாலாஜிக்கு எதிரான 30 வழக்குகளில் 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
    • வழக்கை தினசரி அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என உத்தரவு.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து அவர் தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் 'அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜிக்கு எதிரான 30 வழக்குகளில் 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

    போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகள் தவிர மீதமுள்ள 6 வழக்குகள் சுவரொட்டி ஒட்டியது, அப்போதைய முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள் தான். வேலை வாங்கித் தருவதாக ரூ.67 கோடி வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்டது. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்ட காலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

    இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில், 'சுமார் ரூ.67 கோடி வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு கோர்ட்டால் சான்றளிக்கப்பட்ட உண்மையான ஆவணங்கள். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார். சாட்சிகள் அச்சுறுத்தப்படமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது' என்று தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த வாரம் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.

    நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    மனுதாரர் செந்தில் பாலாஜி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதனால், அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று கூறும் குற்றச்சாட்டை ஏற்க தேவையில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை நான் ஏற்க முடியாது.

    துறை இல்லாத அமைச்சராக பதவி வகித்த மனுதாரர், ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு, துறையில்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மனுதாரர் கடந்த 8 மாதங்களாக அமைச்சர் பதவியில் நீடித்துள்ளார்.

    இதன்மூலம், துறையே இல்லாத அமைச்சராக சிறைக்குள்ளே இருந்தார் என்றால், அவர் எவ்வளவு செல்வாக்குமிக்கவர் என்பதும், அவருக்கு மாநில அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதும் நன்கு தெரிகிறது.

    அமைச்சர் பதவியை தற்போது அவர் ராஜினாமா செய்தாலும், ஆட்சி செய்கிற கட்சியின் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர்ந்து நீடித்து வருகிறார். அதனால், தமிழ்நாடு அரசின் செல்வாக்கை தொடர்ந்து மனுதாரர் பெற்று வருகிறார் என்று கூறுவதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை.

    இப்படி ஒரு சூழ்நிலையில், இந்த வழக்கில் சாட்சிகளாக போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் உள்ளனர். எனவே சாட்சிகளை கலைக்கக்கூடும்.

    அதுமட்டுமல்ல, வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்குகளில், புகார்தாரர்களை மனுதாரர் சமரசம் செய்து விட்டார். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்ட பிறகு, அவருக்கு எதிராக வழக்குகளின் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இவை எல்லாம் மனுதாரர் இந்த வழக்கில் நடந்துக் கொண்ட விதத்தை காட்டுகிறது.

    இவர் முன்பு போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளார். பலருக்கு வேலையும் வழங்கியுள்ளார். இதனால், இந்த வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பணம் கொடுத்தவர்கள் போக்குவரத்துத் துறையில் வேலையை கைப்பற்றிக் கொண்டனர்.

    இதன்மூலம் ரூ.67.74 கோடியை சட்டவிரோதமாக மனுதாரர் பெற்றுள்ளதாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டுகிறது.

    இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு ஜாமின் வழங்கினால், அது இந்த சமுதாயத்துக்கு தவறான தகவலை தெரியப்படுத்தும். எனவே, இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன். மனுதாரர் 8 மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

    அதனால், இவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க கால நிர்ணயத்தை கீழ் கோர்ட்டுக்கு வழங்க வேண்டியது உள்ளது. எனவே, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தினந்தோறும் 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு உத்தரவிடுகிறேன்.

    இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    • வருடத்திற்கு 3 முறை திருவிழா நடைபெறுகிறது.
    • 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    இங்கு தினமுமே திருவிழா போன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருடத்திற்கு 3 முறை திருவிழா நடைபெறுகிறது. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆவணி, தை திருவிழாக்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளிலும், வைகாசி திருவிழா தமிழ் மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையும் கொடி ஏறி 11 நாட்கள் நடைபெறும். இதில் 6-ம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்று மாலை சர்ப்ப வாகனம் எடுக்கப்படும். நாகதோஷம் உள்ளவர்கள் தோஷம் நீங்க வந்து வழிபட்டு செல்வார்கள். அய்யாவிற்கு பால், சுருள் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    இதேபோல் 8-ம் திருவிழா அன்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சி யளித்து வருகிறார். 11-ம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறும். நான்கு ரத வீதிகளிலும் அய்யா வழி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருவார்கள்.

    தேர்த் திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு செல்வார்கள்.

    அய்யா வைகுண்டருக்கு வெற்றிலை, பாக்கு, தேங்காய், பன்னீர், பழம், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை சுருளாக வைத்து வழிபடுவார்கள். உப்பும், மிளகும் வாங்கியும் காணிக்கையாக செலுத்துவார்கள்.

    கார்த்திகை மாதம் 17 நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறும். தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அய்யா வைகுண்டசாமி பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    தினமும் அதிகாலை 3 மணிக்கு முத்திரி கிணற்றில் குளித்த பின்பு பணிவிடை செய்து வருகிறார்கள். கருவறை திறக்கப்பட்டு வாகன பவனி நடைபெறும். காலை, மாலை இருவேளையும் நான்கு ரத வீதிகளிலும் வாகன பவனி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனப்பால் வழங்கப்படும். காலை 11 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு நடைபெறும். மாலை 5 மணிக்கு உகப்படிப்பும், அதைத் தொடர்ந்து வாகன பவனியும் நடைபெறும்.

     தலைமை பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் முத்திரி கிணற்றில் பதமிட்டு அங்கிருந்து அய்யா வைகுண்ட சாமி பதிக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். முத்திரி கிணற்றில் பதமிட்டு வழிபட்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். அய்யாவை நினைத்து பக்தர்கள் பதமிட்டு வருகிறார்கள்.

    அன்பில் எல்லோரையும் அரவணைத்து ஆள வேண்டும் என்று அய்யா விரும்பினார். எவருக்கு எவரும் குறைந்தவர் இல்லை, எல்லோரும் இந்த நாட்டின் மன்னர்கள் என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்துவதற்கு அய்யாவழி பக்தர்கள் தலைப்பாகை அணிந்துவர சொன்னார். எனவே தற்போதும் கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் யாராக இருந்தாலும் தலையில் தலைப்பாகை அணிந்தே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வடக்கு வாசலில் பக்தர்களுக்கு நாமம் கொடுப்பதில்லை. மாறாக திருமண்எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புனித மண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடிபட்ட மண் தான். இந்த மண்ணுக்கு அரிய மருத்துவ குணங்கள் உண்டு.அந்த திருமண் வடக்கு வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் திருநாமமாக பூசி வழிபட்டு வருகிறார்கள். மேலும் பதிக்குள் நுழைந்ததும் குருமார்கள் நெற்றியில் நாமம் விட்டு வருகிறார்கள்.

    முந்தைய காலத்தில் கீழ்ஜாதியை சேர்ந்தவர்களுக்கு ஆலயங்களில் நுழைய தடை இருந்தது. ஆனால் அய்யா காலத்தில் அது மாறுதல் அடைந்தது. ஆகவே அடுத்த சீர்திருத்தம் 'தொட்டு நாமம் சாற்றுதல்'என்ற பெயரில் வந்தது. பக்தர்கள் நெற்றியில் ஒருவர் நாமம் இடுவதே அது. பூசாரிகள் ஆலயங்கள் தரப்படும் விபூதியை பிரசாதத்தை தொடாமல் மேலிருந்து தூக்கி போடுவார்கள். ஆகவே நிழல் தாங்கல் அனைத்திலும் நாமம் இடும் வழக்கம் தொடங்கப்பட்டது.

    அங்கிருந்து குருமார்கள் 2 விரல்களை கொண்டு பக்தர்கள் நெற்றியில் ஜோதி போன்ற நாமம் இடுமாறு கட்டளை இட்டார். பக்தர்கள் நாமமிட்ட பிறகு கருவறைக்குள் சென்று வழிபடுவார்கள்.

    அய்யாவை நினைத்து வழிபடுபவர்களுக்கு நினைத்தது கை கூடி வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளார். இதனால்தான் அய்யா வைகுண்டசாமி பதிக்கு பக்தர்கள் அதிக அளவு வருகை தருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    சாமிதோப்பு தலைமை பகுதியில் வைகுண்டருக்கு கை குத்தல் அரிசி மூலம் காய்கறிகளை சேர்த்து சமைக்கப்பட்ட உணவே பணிவிடை செய்யப்படுகிறது. அந்த உணவு மண்பானை கொண்டே சமைக்கப்படுகிறது. சமையலில் பூசணிக்காய், மிளகாய், கத்தரிக்காய், இளவக்காய், வாழைக்காய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அய்யாவிற்கு பக்தர்கள் தென்னங்கன்று மற்றும் கோமாதாவை காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். மேலும் நினைத்தது நடக்க வேண்டி பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்தும் வழிபடுகிறார்கள்.

     சந்தன குடம் எடுக்கும் பக்தர்கள் பதியை சுற்றியுள்ள 4 ரத வீதிகளை சுற்றி வருவார்கள். குழந்தை வரம் வேண்டியும் பலரும் அய்யாவை வழிபட்டு செல்கிறார்கள். அவர்களுக்கு குழந்தை கிடைத்த பிறகு அந்த குழந்தையோடு வந்து அய்யாவை வழிபட்டு செல்கின்றனர். அப்போது அந்த குழந்தைக்கு முடி இறக்கி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    பெண் குழந்தையாக இருந்தால் காதுகுத்தியும் செல்கின்றனர்.அய்யா வைகுண்ட சாமி தலைமை பதியில் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் தேங்காய் எண்ணையையும் காணிக்கையாக வழங்கி வருகிறார்கள்.

    மேலும் பதியில் தங்கி இருப்பவர்களுக்கு வஸ்திரங்கள் வாங்கி கொடுத்து வருகிறார்கள். அன்னதர்மம், கருப்புகட்டி தர்மம், பழ தர்மங்கள் மிகச்சிறந்ததாக விளங்கி வருகிறது. நினைத்தது நிறைவேறியதும் தர்மம் வழங்குவதே இங்கு பிரதான ஒன்றாக உள்ளது.

    நோய்கள் குணமாக சிலர் சாமித்தோப்பு பதிவில் தங்கியிருந்து தினமும் காலை மற்றும் மாலையில் முத்திரி கிணற்றில் பதம் இட்டு வழிபாடு செய்து வருகிறார்கள். நோய் குணமாகிய பிறகு இங்கிருந்து வீடுகளுக்கு திரும்பி செல்கிறார்கள். இதன்மூலம் அய்யாவை நம்பி வந்தவர்களை வாழவைக்கும் புண்ணிய பூமியாக சாமிதோப்பு விளங்கி வருகிறது.

    புண்ணிய பூமியாக விளங்கும் சாமிதோப்பு. நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் அய்யா வைகுண்டர்.

    • தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் தவிர்க்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
    • பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பதட்டம் அடையாமல் தேர்வு எழுதுவதற்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்தடுத்து தொடங்கி நடைபெற உள்ளது. பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசியாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் தவிர்க்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

    தேர்வு கூடங்களில் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    1-ந்தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வு 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதலில் தமிழ் தேர்வும் அதனை தொடர்ந்து 5-ந்தேதி ஆங்கிலம், 8-ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகள், 11-ந்தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், 15-ந்தேதி இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, 19-ந்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 22-ந் தேதி பயாலஜி, தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3, 4 நாட்கள் இடைவெளி உள்ளது.

    பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பதட்டம் அடையாமல் தேர்வு எழுதுவதற்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. வினாத்தாள்கள் கட்டுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுகாப்பாக விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்ததால் அணை நிரம்பி அதன் முழு கொள்ளளவில் நீடித்து வந்தது.
    • பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர் இருப்பும் சரிந்து வருகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அணையை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாசனம் மற்றும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமராவதி ஆறு மூலமாக 29 ஆயிரத்து 387 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் பிரதான கால்வாய் மூலமாக 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, பாம்பாறு, தேனாறு உள்ளிட்ட ஆறுகள் ஓடைகள் மூலம் நீர்வரத்து ஏற்படுகிறது.

    கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்ததால் அணை நிரம்பி அதன் முழு கொள்ளளவில் நீடித்து வந்தது. இதனால் கடந்த மாதம் 25-ந்தேதி ஆறு மற்றும் கால்வாய் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் கோடை காலத்திற்கு முன்னதாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து விட்டதால் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நீர் முற்றிலும் நின்று போனது. இதன் காரணமாக ஓடைகள், ஆறுகளில் படிப்படியாக நீர்வரத்து சரிந்து வருகிறது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் குறைந்து விட்டது.

    அத்துடன் பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர் இருப்பும் சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் -பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 69.49 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 14 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 490 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • ஆண்டுதோறும் மாசி தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும்.
    • தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.

    கோவை:

    கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசித் தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும் வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.

    8-ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு உற்சவர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று பிற்பகலில் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேர்நிலை திடலான ராஜவீதியில் இன்று காலை முதலே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் தேரில் எழுந்தருளிய கோனியம்மனை வழிபட்டுச் சென்றனர். மதியத்துக்கு பிறகு ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரோட்டத்தை கண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கையாக ரத வீதிகளில் மின் தடை செய்யப்பட்டிருந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்பட்டது. மேலும் தண்ணீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.
    • தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழக மேலாண்மை இயக்குனர், மாவட்ட கலெக்டர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.

    கோவை:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளல் பங்கேற்பதற்காக இன்று இரவு கோவை வருகிறார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    நாளை காலை கோவை கொடிசியாவில் நடைபெறும் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழாவில் பங்கேற்று, ஆணைகளை வழங்குகிறார்.

    நான் முதல்வன் வழிகாட்டும் இணைய முகப்பு, நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு, முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சி ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து அதே வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுததுறை சார்பில கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர், தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழக மேலாண்மை இயக்குனர், மாவட்ட கலெக்டர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.

    • ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • நாடு முழுவதும் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    தூத்துக்குடி:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.

    இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வ.உ.சி. துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடில் வந்து இறங்கினார். அங்கிருந்து காரில் புறப்பட்டு அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    விழாவில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதேபோல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், ரூ.1,477 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒட்டுமொத்தமாக தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
    • அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.

    இதற்காகர் பிரதமர் மோடி இன்று காலை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு வந்தார். பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் விழா நடைபெறும் இடத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.


     அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    முதலில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம், தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்றார்.

    • பிரதமருக்கு காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தெரிவித்திருந்தார்.
    • தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் முரளிதரனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அறிவித்திருந்தார். அதன்படி இன்று பிரதமருக்கு காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் முரளிதரனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இதையறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

    அப்போது திரண்ட மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, மாவட்ட செயலாளர் கோபால், மாவட்டத் துணைத் தலைவர்கள், விஜயராஜ், ஜெயஜோதி, மாவட்ட பொதுச்செயலாளர் சாந்திமேரி, இளைஞர் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ராகுல், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, மாவட்ட மீனவர்கள் பிரிவு தலைவர் மைக்கில், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பேரையா, அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர் ஆகியோரையும் போலீசார் கைது செய்து தூத்துக்குடி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    • ஆட்டோமொபைல் துறையில் உலக அளவில் தமிழகம் தன்னிகரற்று சிறப்பாக விளங்கி வருகிறது.
    • நாம் தரத்திலும், நீடித்த நிலையான உற்பத்தி இலக்கிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    மதுரை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் "என் மண் என் மக்கள்" நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுரை வந்தார். மதுரை வீரபாஞ்சானில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் மைதானத்துக்கு வந்திறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பள்ளியில் நடைபெற்ற சிறு, குறு தொழில் முனைவோர் டிஜிட்டல் செயலாக்க திட்ட மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக வாகன தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    நாட்டின் பொருளாதாரத்தில் ஆட்டோமொபைல் தொழில் முக்கிய அம்சமாக விளங்குகிறது. ஒவ்வொரு தொழிலையும் மேம்படுத்த இந்திய அரசு தோளோடு தோள் கொடுத்து ஆதரவு அளித்து வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதத்தை ஆட்டோ மொபைல் தொழில் பகிர்ந்து கொள்கிறது. இது தேசம் தன்னிறைவுடன் திகழ்வதற்கு ஆதாரமான அம்சமாக இத்தொழில் விளங்கி வருகிறது. உற்பத்தியிலும் கண்டுபிடிப்புகளிலும் ஆய்வுகளை ஊக்குவிப்பதில் ஆட்டோ மொபைல் துறையின் பங்கு அளப்பரியது.

    குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் உலக அளவில் தமிழகம் தன்னிகரற்று சிறப்பாக விளங்கி வருகிறது. உலக அரங்கில் இத்தொழிலில் தமிழகம் தனது திறமையை நிரூபித்துள்ளது. இத்தொழிலில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் பங்களிப்பு மிகவும் அபரிமிதமானது. ஆகையால் தான் 45 லட்சத்துக்கும் அதிகமான கார்கள், 2 கோடி மோட்டார் சைக்கிள்கள், 10 லட்சம் வர்த்தக வாகனங்கள், ஒன்றரை லட்சம் ஆட்டோக்கள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    ஒவ்வொரு வாகனத்திலும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் தயாரிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள்தான். உலகில் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் தொழில் முனைவோர்களால் உற்பத்தி செய்யப்படும் உதிரி பாகங்களை பயன்படுத்துகின்றன. உலக அளவிலான விநியோக சங்கிலியில் நமது தொழில் முனைவோர்கள் முக்கிய அங்கமாக செயல்பட்டு அதை வலுவானதாக மாற்றி வருகின்றனர்.

    எனவே நாம் தரத்திலும், நீடித்த நிலையான உற்பத்தி இலக்கிலும் கவனம் செலுத்த வேண்டும். அதே வேளையில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத "குறைவான கார்பன் வெளிப்பாடு, மாசற்ற உற்பத்தி" என்ற கொள்கையோடும் செயல்பட வேண்டும். கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் தொழில் முனைவோர்களின் பங்கு மிகவும் கவனிக்கத்தக்கதாக விளங்கியது. தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்காக முத்ரா, விஸ்வகர்மா போன்ற கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் பல லட்சம் தொழில் முனைவோர்கள் பயனடைந்து வருகின்றனர். சிறுதொழிலின் தரத்தை உயர்த்திட இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தொழில் நுட்பத்தையும், திறன்களின் தேவையிலும் தொழில் முனைவோர்கள் கவனம் செலுத்தி எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிக்க வேண்டும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் மத்திய அரசு அதற்கென தனியான ஒரு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. மின்சார வாகனங்களுக்கான தேவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    ஒரு கோடி வீடுகள் பயன் பெறும் வகையில் இலவச மின்சாரம், கூடுதல் வருவாய் அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அவை மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற (சார்ஜிங்) மையங்களாகவும் திகழும் வாய்ப்பும் உருவாகும். ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்காக ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பி.எல்.ஐ. திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல். முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×