என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற பிரசார பயணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இபிஎஸ் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து, சூரப்பள்ளி அருகே, நொரச்சிவளவு பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
- தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அது புரளி என்றும் தெரிய வந்தது. பின்னர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்மநபர் ஒருவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைதொடர்ந்து, உடனடியாக தேமுதிக அலுவலகத்திற்கு சென்ற வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- நீதித்துறை செயல்முறையை கையாளும் நோக்கில் திட்டமிடப்பட்ட அரசியல் செயல்.
- நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது:-
கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.
ஒரு மனு இறந்தவரின் உண்மையான பிரதிநிதி அல்லாத ஒருவரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, மற்றொன்று அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஆவணங்களில் கையொப்பமிட தவறாக வழிநடத்தப்பட்டதாகத் தோன்றும் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது நீதித்துறை செயல்முறையை கையாளும் நோக்கில் திட்டமிடப்பட்ட அரசியல் செயல். இது மலிவான அரசியல் ஆதாயத்திற்காக துக்கத்தையும் சோகத்தையும் பயன்படுத்துவதற்கான ஆபத்தான முயற்சி.
நீதிமன்றத்தின் மீது திமிர்பிடித்த மோசடியாகத் தோன்றுவதை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் விசாரித்து, அதன் பின்னணியில் உள்ளவர்களை அவர்கள் தகுதியான கடுமையுடன் கையாளும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தீபாவளி, சாத் பண்டிகை, சட்டமன்ற தேர்தல் ஒன்றுசேர வருகிறது.
- ஒருமாதம் விடுமுறையில் சொந்த மாநில செல்ல தயாராகி வருகிறார்கள்.
பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் நிறைந்த திருப்பூரில் பனியன் மற்றும் அதனை சார்ந்த உப நிறுவனங்களில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணிபுரிகின்றனர். ஆண்டு முழுவதும் திருப்பூரில் பணியாற்றும் இவர்கள் தீபாவளி, தசரா, சாத் பண்டிகை, ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அவ்வாறு செல்லும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் 10 நாட்கள் முதல் 2 வாரம் வரை தங்கி இருந்து மீண்டும் திருப்பூர் திரும்புவது வழக்கம். அந்த வகையில் வருகிற 20-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்குள் திருப்பூர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீகார் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவது இன்னும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பீகார் மாநிலத்தில் 2 கட்டமாக நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதிகளில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருப்பூரில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வந்தாலும் பீகார் தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை பணிபுரியலாம் என கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு செல்லும் அவர்கள் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவினை செலுத்தி திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது. மேலும் சிலர் பீகார் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திருப்பூர் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- பிரத்தியேக பிரசார வாகனம் தொடக்க விழா நடைபெறும் மேடைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
- வாகனத்தின் மேற்கூரை பின்னோக்கிச் செல்லும் வகையில் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மேற்கொள்ள இருக்கும் பிரசார பயணத்தின்போது அவர் பயன்படுத்தக்கூடிய பிரத்தியேக பிரசார வாகனம் இன்று மதுரைக்கு கொண்டுவரப்பட்டு தொடக்க விழா நடைபெறும் மேடைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் 4 திசைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பிரசார பயணத்தின் போது ஓட்டுநர் அருகே அமரக்கூடிய நயினார் நாகேந்திரன் அமரும் இடத்தில் சாலையை நோக்கியவாறு ஒரு கண்காணிப்பு கேமர, பிரசார வாகனத்தின் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் தலா ஒரு கேமரா, வாகனத்திற்குள் படிக்கட்டில் ஏறும் இடத்தில் ஒரு கேமரா என மொத்தம் வாகனத்தை சுற்றிலும் 4 கேமராக்களும் வாகனத்திற்குள் ஒரு கேமரா என மொத்தம் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பிரசார வாகனத்திற்குள் கழிப்பறை வசதி மற்றும் வரக்கூடிய தலைவர்களோடு கலந்துரையாடுவதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரசாரத்தின்போது வாகனத்தின் மேற்கூரை பின்னோக்கிச் செல்லும் வகையில் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பிரசார வாகனத்தில் நந்தி சிலை பொறிக்கப்பட்ட செங்கோலுடன் பிரதமர் மோடி இருகரம் கூப்பி வணங்குவது போன்றும், அய்யன் திருவள்ளுவர் சிலை, ராமேசுவரம் பாலம், வந்தே பாரத் ரெயில் உள்ளிட்ட பாஜக-வின் செயல் திட்டங்களை விளக்கும் வண்ணம் படங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.
பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டி ஒன்று பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகார் பெட்டியில், "விடியல, முடியல" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
- சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே குழந்தைகளுக்கான சமையல் கூடங்கள் தயாராகி விடுகின்றன.
- தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிறைந்த வயிறுடன் நாளை தொடங்குகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் காலை உணவு திட்டம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், "முதல் மணி அடிப்பதற்கு முன்பு லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு உணவளிக்கும் பெண்களைப் பற்றியும், தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்தை இயக்கும் சமையலறைகளுக்குள் அடியெடுத்து வைக்கும் பெண்களைப் பற்றியும் செய்தி நிறுவனம் தொடர்ந்த வீடியோவை பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்," காலை உணவு திட்டம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே குழந்தைகளுக்கான சமையல் கூடங்கள் தயாராகி விடுகின்றன.
தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிறைந்த வயிறுடன் நாளை தொடங்குகின்றனர்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
- நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டதாக நடவடிக்கை.
- சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்உஎம்.நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டுள்ளதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
- ஏற்கனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு நேற்று தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசிய மர்மநபர் முதலமைச்சரின் வீட்டில் குண்டு வைத்திருப்பதாக தெரிவித்துவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.
இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் நம்பரை வைத்து துப்பு துலக்கியதில் திருப்போரூரை சேர்ந்த ஐயப்பன் என்ற வாலிபர் சிக்கினார்.
மாற்றுத்திறனாளியான இவர் இதுபோன்று ஏற்கனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட சில இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ள ஐயப்பன் 2021-ம் ஆண்டிலும் முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகி உள்ளார். இந்த நிலையில்தான் தற்போதும் அவர் வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐயப்பன் மாற்றுத்திறனாளி என்பதால் அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை எச்சரித்து அனுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இருப்பினும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
13-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமமைபெய்யவாய்ப்புள்ளது
17-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
18-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதனிடையே இன்று முதல் 16-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் படிப்படியாக குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
- பழமையான கோயில்களைப் புனரமைக்க ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இதுவரை ரூ. 425 கோடி செலவில் 527 கோயில்கள் பட்டியலிடப்பட்டு, புனரமைக்கப்படுகின்றன
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 28 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரூ. 12 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள ரூ. 16 கோடி உபயதாரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.
திருப்பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஆன்மீகவாதிகளில் பொற்காலம் எனப் போற்றுகின்ற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோயில்களைக் கணக்கெடுத்து, இதுவரை 3707 கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மன்னர்கள் விட்டுச் சென்ற திருக்கோயில்களைப் பாதுகாக்கும் வகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களைப் புனரமைக்க ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 425 கோடி செலவில் 527 கோயில்கள் பட்டியலிடப்பட்டு, புனரமைக்கப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியில் 844 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் சேர்த்து 65% நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசின் முக்கிய திட்டமான தங்க முதலீடு திட்டத்தின் மூலம், இறைவனுக்குத் தேவைப்படாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான மும்பையில் உள்ள உருக்காலுக்கு அனுப்பி வைத்து, இதுவரை 1074 கிலோ தங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 17 கோடி வைப்பு நிதி வருவாயாகப் பெறப்படுகிறது. தற்போது நான்கு திருக்கோவில்களில் இருந்து 53 கிலோ தங்கம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 18 கோயில்களில் இருந்து 308 கிலோ தங்கம் இந்த மாத இறுதிக்குள் அனுப்பப்பட உள்ளது. இந்தத் திட்டம் வெற்றியடைந்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ. 17 கோடி வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. உபயதாரர்களிடமிருந்து இந்த ஆட்சியில் சுமார் ரூ. 1512 கோடி நிதி வந்துள்ளது என்றும், இது வேறு எந்த ஆட்சியிலும் வரவில்லை.
காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களுக்கான மதிப்பை அவர்களே குறைத்துக் கொள்வதாகவும், இது இந்து அறநிலையத் துறைக்கு இழுக்கான சூழலை ஏற்படுத்தவில்லை, அவர்களுக்குத் தான் இழுக்கான நிலை ஏற்படுகிறது.
எனவே, பிரச்சனை செய்யாமல் இரு பிரிவினரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்றும், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.
சமயபுரம் கோவில் விவகாரம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கியவர் நீக்கப்பட்டுள்ளார், அவருக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
- வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
- நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.
அவரது மரணம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மாதவரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தீபா விசாரணை நடத்தினார். இதன்பிறகு நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தியவுடன் கொடுங்கையூர் முல்லை நகர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே அவரது 2ஆவது மகன் அஜித் திருமணம் செய்துகொண்டார். அஜித் தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஷகினா என்ற பெண்ணுக்கு தாலி கட்டப்பட்டு மாலை மாற்றி கொண்டனர். துக்க நிகழ்வில் இருவரும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அவர் தாலி கட்டிய அந்த சமயம் அருகாமையில் இருந்து அவரது உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சோகத்தில் கண்கலங்கியப்படி அர்ச்சனையை தூவினர்.
- மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர்.
- நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு இன்று அல்லது நாளை மீண்டும் கரூர் எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர்:
கரூரில் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கினர்.
த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. கடந்த 3, 4-ம் தேதிகளில் த.வெ.க. உள்ளூர் நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதன்பின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் த.வெ.க. கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் மூலம், த.வெ.க. தலைவர் விஜய் காணொலிக் காட்சி (வீடியோ கால்) மூலம் பேசி ஆறுதல் கூறினார். அப்போது, விரைவில் நேரில் வந்து சந்திப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் உறுதியளித்தார்.
இந்த நிலையில், விஜய் கரூருக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற அனுமதி கேட்டு சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. அப்போது, கரூர் எஸ்.பி.யை சந்தித்து தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு மனு அளித்து அனுமதி பெறலாம் என டி.ஜி.பி. அலுவலகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, த.வெ.க. கொள்கை பரப்புச்செயலாளர் அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் நேற்று கரூர் எஸ்.பி. ஜோஷ் தங்கையாவை நேரில் சந்தித்து, வருகிற 17-ந்தேதி விஜய் கரூர் வர அனுமதி கேட்டு கடிதம் அளித்தனர்.
அதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கரூர்-ஈரோடு சாலையில் உள்ள 'கேஆர்வி மெரிடியன் ஹோட்டலுக்கு' வரவழைத்து சந்திப்பதற்கு அனுமதி கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்துக்கு மிக அருகில் அந்த ஹோட்டல் உள்ளதால், அங்கு நிகழ்ச்சி நடத்த காவல் துறை அனுமதி மறுத்துவிட்டதாகவும், வேறு ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர். சேலம் பைபாஸ் சாலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரி அட்லஸ் அரங்கம், ஆட்டம் பரப்பு ஜெயராம் கல்லூரி கலையரங்கம் ஆகிய 2 இடங்களை த.வெ.க. நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில் அட்லஸ் அரங்கத்தை நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த அரங்கம் வாகன நிறுத்தங்களுடன் விசாலமாக உள்ளதால் இதை நிர்வாகிகள் தேந்தெடுத்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு இன்று அல்லது நாளை மீண்டும் கரூர் எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் உள்ளிட்டோர் தவிர வேறு யாரும் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்று கட்சியினர் தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் த.வெ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.






