என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க. தலைவர் விஜய் 17-ந்தேதி கரூர் செல்கிறார்?
    X

    த.வெ.க. தலைவர் விஜய் 17-ந்தேதி கரூர் செல்கிறார்?

    • மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர்.
    • நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு இன்று அல்லது நாளை மீண்டும் கரூர் எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கரூர்:

    கரூரில் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கினர்.

    த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. கடந்த 3, 4-ம் தேதிகளில் த.வெ.க. உள்ளூர் நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதன்பின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் த.வெ.க. கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் மூலம், த.வெ.க. தலைவர் விஜய் காணொலிக் காட்சி (வீடியோ கால்) மூலம் பேசி ஆறுதல் கூறினார். அப்போது, விரைவில் நேரில் வந்து சந்திப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் உறுதியளித்தார்.

    இந்த நிலையில், விஜய் கரூருக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற அனுமதி கேட்டு சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. அப்போது, கரூர் எஸ்.பி.யை சந்தித்து தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு மனு அளித்து அனுமதி பெறலாம் என டி.ஜி.பி. அலுவலகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து, த.வெ.க. கொள்கை பரப்புச்செயலாளர் அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் நேற்று கரூர் எஸ்.பி. ஜோஷ் தங்கையாவை நேரில் சந்தித்து, வருகிற 17-ந்தேதி விஜய் கரூர் வர அனுமதி கேட்டு கடிதம் அளித்தனர்.

    அதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கரூர்-ஈரோடு சாலையில் உள்ள 'கேஆர்வி மெரிடியன் ஹோட்டலுக்கு' வரவழைத்து சந்திப்பதற்கு அனுமதி கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்துக்கு மிக அருகில் அந்த ஹோட்டல் உள்ளதால், அங்கு நிகழ்ச்சி நடத்த காவல் துறை அனுமதி மறுத்துவிட்டதாகவும், வேறு ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

    இதையடுத்து மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர். சேலம் பைபாஸ் சாலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரி அட்லஸ் அரங்கம், ஆட்டம் பரப்பு ஜெயராம் கல்லூரி கலையரங்கம் ஆகிய 2 இடங்களை த.வெ.க. நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில் அட்லஸ் அரங்கத்தை நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த அரங்கம் வாகன நிறுத்தங்களுடன் விசாலமாக உள்ளதால் இதை நிர்வாகிகள் தேந்தெடுத்துள்ளனர்.

    நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு இன்று அல்லது நாளை மீண்டும் கரூர் எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் உள்ளிட்டோர் தவிர வேறு யாரும் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்று கட்சியினர் தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் த.வெ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×