என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை கோவில்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
    • கடந்த மாதம் பல்வேறு பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இமெயிலில் வந்தது.

    சென்னை:

    சென்னையில் பல கோவில்களில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னையில் உள்ள கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் வந்துள்ளது.

    இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புகொண்டு பெங்களூரு போலீசார் தகவல் தெரிவித்தனர். மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் பல்வேறு பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இ-மெயிலில் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் செயல்பட முடிவு.
    • மற்ற விபரங்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கப்படும்.

    பாராளுமன்ற தேர்தலில் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக முக்கிய கட்சிகளில் கூட்டணி அமைத்து வருகிறது.

    அந்த வகையில், அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாக அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

    இதைதொடர்ந்து, மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜனா, தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சரத்குமாரை சந்தித்து பேசி வருகின்றனர்.

    இந்நிலையில், நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் இணைந்து செய்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    மற்ற விபரங்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கப்படும் எனவும் சரத்குமார் கூறியுள்ளார்.

    • சமவெளி பகுதியில் உள்ள யானைகள், போதிய தண்ணீர் மற்றும் உணவை தேடி மலைப்பகுதிக்கு செல்கின்றன.
    • தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அருவங்காடு:

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள காட்டு யானைகள் மலை அடிவாரத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அதேநேரத்தில் சமவெளி பகுதியில் உள்ள யானைகள், போதிய தண்ணீர் மற்றும் உணவை தேடி மலைப்பகுதிக்கு செல்கின்றன.

    இதற்கிடையே கே.என்.ஆர் மரப்பாலம் பகுதியில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள், நேற்றிரவு குன்னூர் ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதிக்கு வந்தன. பின்னர் அவை அங்கிருந்த இலை-தளைகளை தின்றுவிட்டு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குடித்துவிட்டு, பின்னர் ரெயில் தண்டவாள பாதைகளில் முகாமிட்டு நடமாடி வருகிறது.

    இதனால் குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரெயில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகவும் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்டு யானைகள் கூட்டம் சாலையோரம் உள்ள ரெயில் குகையினுள் புகுந்தால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்பதால், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் ஊழியர்கள், தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மலை ரெயில்பாதை மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுதவிர நீலகிரி மலைப்பாதையில் செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக பயணம் செல்ல வேண்டும், வனவிலங்குகளை கண்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அருகில் சென்று புகைப்படம் எடுக்கக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க.வுக்கு மிக முக்கியமானது.
    • அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை ராம்நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, முன்னாள் எம்.பி. கார்வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து எஸ்.ஜி. சூர்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட உள்ளதால் பாரதிய ஜனதாவினர் உற்சாகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு தலைமையிடம் ஒப்படைக்கப்படும்.


    கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க.வுக்கு மிக முக்கியமானது. கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க. 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறக் கூடிய தொகுதி இது.

    எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டால் மீண்டும் அவரை தோற்கடிக்க பா.ஜ.க. தயாராக உள்ளது.

    பா.ஜ.க.விற்கு ஓட்டு போட்டால் செல்லாத ஓட்டுக்கு சமம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசி உள்ளார். செல்லாத ஓட்டாக இருந்த பா.ஜ.க. தான் கடந்த 2014 தேர்தலில் 3-வது அணி அமைத்து 20 சதவீத வாக்குகளை பெற்றது. எனவே யார் செல்லாத ஓட்டு என்பது தேர்தலுக்கு பிறகு தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை நந்தனம் கூட்டத்தில் இந்தியில் பேசினார்.
    • சமூக வலைதள பக்கங்களை பாரதிய ஜனதா அளவுக்கு வேறு எந்த கட்சியும் பயன்படுத்தவில்லை.

    தேர்தல் பிரசாரங்களில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்துவதில் எப்போதுமே பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது. கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு தேர்தல்களில் சமூக வலைதள பக்கங்களை பாரதிய ஜனதா அளவுக்கு வேறு எந்த கட்சியும் பயன்படுத்தவில்லை.

    தற்போது இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மேலும் ஒருபடி மேலே சென்று ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி பிரதமர் மோடி நாடு முழுவதும் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் மற்ற மொழிகளிலும் வெளியிட செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இதனால் பிரதமர் மோடி ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்தல் பிரசாரம் செய்தால் அதை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, ஒடியா ஆகிய 8 மொழிகளில் ஒரே நேரத்தில் கேட்க முடியும். பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை நந்தனம் கூட்டத்தில் இந்தியில் பேசினார். அது உடனடியாக தமிழில் சமூகவலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.

    அது பெரும்பாலான தமிழர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. வீடியோக்கள் மூலம் அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார உரை ஒரே நேரத்தில் 8 மொழிகளில் வெளியாகும் போது நாடு முழுவதும் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.

    • ஒன்பது பேரும் ஜாமின் கேட்ட மனுக்கள் தள்ளுபடி ஆகி இருந்தன.
    • மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவிற்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறி போலீஸ்காரர் வெயிலுமுத்து மனு தாக்கல் செய்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டில் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் வெயிலு முத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஒன்பது பேரும் ஜாமின் கேட்ட மனுக்கள் தள்ளுபடி ஆகி இருந்தன. இந்த நிலையில் தனது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நாளை (7-ந்தேதி) நடக்க இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறி மதுரை ஐகோர்ட்டில் போலீஸ்காரர் வெயிலுமுத்து மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரருக்கு இன்று மாலை 6 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    • தமுஎகச ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
    • சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான்" என அவர் கூறியிருந்தார்.

    சனாதன பேச்சு தொடர்பான வழக்கில், அமைச்சர் உதயநிதி பேசியது தவறு, ஆனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2-ம் தேதி தமுஎகச ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. நீங்கள் `சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு' என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.

    உதாரணமாக கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியம் ஆகும். எனவே இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான்" என அவர் கூறியிருந்தார்.

    திமுக எம்.பி ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அதில், அமைச்சர் உதயநிதி பேசியது தவறு. ஆனால் எந்த விதமான உத்தரவும் இந்த வழக்கில் பிறப்பிக்க முடியாது என்று இந்த வழக்குகளை முடித்து வைத்தார். எதன் அடிப்படையில் அமைச்சர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என கேள்வி எழுப்ப முடியாது எனவும் நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்தார். 

    • முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
    • நீதிபதி தொடர்ந்து பல முறை இதே காரணத்தை கூறி வருவதாக அதிருப்தி தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் டெல்லி சி.பி.ஐ. வழக்கை விசாரித்து வருகிறது.

    இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த சி.பி.ஐ. இவர்களுக்கு எதிராக சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் டி.ஜி.பி., சென்னை காவல் துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்து சி.பி.ஐ.யிடம் நீதிமன்றம் திரும்ப அளித்தது.

    இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

    இந்த வழக்கு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. தரப்பில் கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யவும் நீதிமன்ற விசாரணைக்கும் இன்னும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதி தொடர்ந்து பல முறை இதே காரணத்தை கூறி வருவதாக அதிருப்தி தெரிவித்தார்.

    பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து விசாரணை அதிகாரி அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும்.
    • போதையில்லா தேசத்திற்கு பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில், புதுச்சேரி சிறுமி படுகொலை விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கமல்ஹாசவன் கூறியிருப்பதாவது:-

    இந்த சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது.

    போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம்.

    போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தை சீரழிக்கும் போதை கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும்.

    போதையில்லா தேசத்திற்கு பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பழைய சித்த மருத்துவ விதிகளின்படி குறைந்த பட்சம் இந்த கல்லூரிக்கு 25 ஏக்கர் இடம் வேண்டும்.
    • கல்லூரி வளர்ச்சிக்கான நிதி வீணடிக்கப்படுவதாகவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் வளர்ச்சிக்காக கடந்த 2016-ம் ஆண்டு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இடப் பற்றாக்குறையால் வேறு இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு பதிலாக அப்போது இருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடங்கள் அங்கு கட்டப்பட்டது. இந்நிலையில் அந்த ஆண்டிலேயே கல்லூரிக்கு கூடுதல் இடத்தை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என்றும், கல்லூரி வளர்ச்சிக்கான நிதி வீணடிக்கப்படுவதாகவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதி, அரசு சித்த மருத்துவக்கல்லூரியின் எதிர்கால நலனுக்காக தகுதி வாய்ந்த புதிய இடத்தை தேர்வு செய்து விதிகளின்படி புதிய கல்லூரியை உருவாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் சுமார் 8 ஆண்டுகள் கடந்த பின்பும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது அரசு சார்பில் கல்லூரியின் பாழடைந்த வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவமனை சார்ந்த கட்டிடங்களை கட்ட ரூ.40 கோடி அறிவிக்கப்பட்டு ஓராண்டாகியும் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்பன உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து நேற்று போராட்டம் நடத்திய நிலையில் இன்று 3-வது நாளாக மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரி முதல்வர் அறை முன்பு அமர்ந்து கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    பழைய சித்த மருத்துவ விதிகளின்படி குறைந்த பட்சம் இந்த கல்லூரிக்கு 25 ஏக்கர் இடம் வேண்டும். ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கும் போது இடப்பற்றாக்குறையால் ஏற்கனவே கட்டிய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட முடிகிறது.

    எனவே கூடுதலாக சித்த மருத்துவ கல்லூரிக்கு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் உள்ளூர் தலைமை அலுவலகத்தின் முன்பு நாளை பிற்பகல் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
    • நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாட்டின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற முக்கியமான துறைகளுக்கு மோடி அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதோடு, அந்த அமைப்புகளை தன் அரசியல் லாபத்திற்காக தவறாக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. உண்மைகளை மூடிமறைக்க மோடி தலைமையிலான இந்த பா.ஜ.க. அரசு செய்த பொய் பித்தலாட்டங்கள் அனைத்தும் நேற்று எஸ்.பி.ஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த கால நீட்டிப்பு மனுவின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பா.ஜ.க. பாரத ஸ்டேட் வங்கியை தன் கைப்பாவையாக பயன்படுத்தி இதுவரை செய்த முறைகேடுகள் மற்றும் சதிகளை கண்டித்து இன்றும், நாளையும் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் மாநிலம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் என் தலைமையில் இன்று மயிலாடுதுறையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையின் முன்பு மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரி வெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ். ராஜேஷ்குமார் மற்றும் முன்னணி தலைவர்கள், அனைத்து நிலை காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும், அந்தந்த மாவட்டங்களிலும் அதேபோல் வட்டார அளவிலும் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு பா.ஜ.க.வுக்கு சாதகமாக செயல்பட்டுவரும் வங்கியின் முறைகேடுகளை கண்டித்து பெருந்திரள் போராட்டம் நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், நடுவண் அரசின் முன்னாள் அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், பாராளுமன்ற சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கமிட்டியின் அனைத்து நிலை நிர்வாகிகள், வட்டார கமிட்டியின் அனைத்து நிலை நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும்.

    எனது தலைமையில் சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் உள்ளூர் தலைமை அலுவலகத்தின் முன்பு நாளை பிற்பகல் 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    இதில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 9 மாதங்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு 24-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மார்ச் 11-ம் தேதிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப் பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டபோது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஜாமின் கோரினார். சென்னை முதன்மை அமர்வு மன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். அப்போதும் ஜாமின் வழங்கப்படவில்லை. பின்னர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அப்போதும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தனது வாதங்களை முன்வைத்தது.

    அதேபோல் ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.

    இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு 24-வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேலும், செந்தில் பாலாஜி வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என ஏற்கனவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டதற்கு, செந்தில் பாலாஜி தரப்பு இன்று நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து, தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை மார்ச் 11-ம் தேதிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    ×