search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Temples"

    • சென்னை கோவில்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
    • கடந்த மாதம் பல்வேறு பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இமெயிலில் வந்தது.

    சென்னை:

    சென்னையில் பல கோவில்களில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னையில் உள்ள கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் வந்துள்ளது.

    இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புகொண்டு பெங்களூரு போலீசார் தகவல் தெரிவித்தனர். மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் பல்வேறு பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இ-மெயிலில் வந்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னை மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள மாரிச் செட்டித் தெருவில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னை மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள மாரிச் செட்டித் தெருவில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் உள்ளது. சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த பத்மசாலியர் குலத்தவர்கள், தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் சிறிய சன்னிதியில் மூலவர் வெங்கடேசப் பெருமாளை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர்.

    சில காலங்கள் கழித்து, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் உற்சவ சிலைகளை மூலவர் சன்னிதியில் எழுந்தருளச் செய்தனர். இதையடுத்து துவஜஸ்தம்பமும், பலிபீடமும் ஏற்படுத்தப்பட்டது. பெரிய திருவடி (கருடன்) மூலவர் விக்கிரகம், அலர்மேல் மங்கைத் தாயார், ஆண்டாள் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளை தனிச் சன்னிதிகளில் பிரதிஷ்டை செய்தனர். அனுமனுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் 30 வருடங்களுக்கு முன் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டன.

    இந்த ஆலயத்தில் பேயாழ்வார், விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், முதலியாண்டான், மணவாள மாமுனிகள் ஆகியோரது உற்சவ திருமேனிகளும் உள்ளன. தவிர ஆண்டாள் சன்னிதியில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் திருமேனிகள் காணப்படுகின்றன. 2001-ம் ஆண்டு ஆலயத்திற்கு நேர்த்தி சேர்க்கும் வகையில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.

    ஆலயத்தின் ராஜகோபுரம், பலிபீடம், துவஜஸ்தம்பம், கருடாழ்வார் சன்னிதியைக் கடந்து சென்றால், அர்த்த மண்டபம் உள்ளது. கல் கட்டடமான இந்த மண்டபத்தின் மேற்கூரையில், சதுரமான அமைப்பில் 12 ராசிகள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறை முன்பு துவாரபாலகர்களை நாம் தரிசிக்கலாம். கருவறை முகப்பில் திருமால் சயனக் கோலம், வலது பக்கம் பாவணா மகரிஷி, இடது பக்கம் மார்க்கண்டேய ரிஷி ஆகியோரது சுதைச் சிற்பங்களை நாம் காணலாம். இதையடுத்து நாம் கருவறையில் மேற்கு திருமுகமாக நின்ற திருக்கோலத்தில் சதுர்ப்புஜங்களுடன் தனிச் சன்னிதியில் சேவை சாதிக்கிறார். மூலவருக்கு முன்னால் உற்சவ மூர்த்தியாய் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் காட்சி தருகிறார்.

    சுவாமி கருவறையை விட்டு வெளியே வந்தால், வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அலர்மேல் மங்கைத் தாயார் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயார் மூலவர் மற்றும் உற்சவராக எழுந்தருளியுள்ளார். முகத்தில் புன்னகை மலர நான்கு கரங்களுடன், இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடன் காணப்படுகிறார். தாயாரின் கனிவான பார்வையில் நமது மனக் குறைகள் நீங்குகிறது.

    தென்கிழக்கு மூலையில் ஆண்டாள் சன்னிதி உள்ளது. ஆண்டாள் இரு திருக்கரங்களுடன் ஒரு திவ்யமான சேவையை அளிக்கின்றார். ஆண்டாளுக்கு சற்று முன்னால் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ராமர் சன்னிதிக்கு நேர் எதிரில் தென்மேற்கு மூலையில் ஆஞ்சநேயர் சிறிய உருவ வடிவில் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். வட மேற்கு மூலையில் தனிச்சன்னிதியில் மூலவராக முன்புறம் சக்கரத்தாழ்வாரையும், பின்புறம் யோக நரசிம்மரையும் கண்டு சேவிக்கலாம்.

    இந்த ஆலயத்தில் திருமணம் கைகூடுவதற்கும், வாழ்வில் மேன்மை பெறவும் பெருமாள் சன்னிதியில் வழிபாடு செய்கிறார்கள். எதிரிகளால் ஏற்படும் தொல்லை அகலவும், பயம் நீங்கவும் சக்கரத்தாழ்வாரை வழிபடுகிறார்கள். செல்வம் பெருக அலர்மேல் மங்கை தாயாரையும், வியாபார தடை நீங்குவதற்கு ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்கிறார்கள்.

    பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், சித்திரை மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று ராமானுஜருக்கும், புனர்பூசம் நட்சத்திர நாளில் முதலியாண்டானுக்கும் சாற்றுமுறை நடக்கிறது. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் நம்மாழ்வார் சாற்றுமுறை நடைபெறும். ஆடி மாதம் ஆடிப்பூர விழாவும், ஆண்டாள் அவதார உற்சவமும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம், விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, மூல நட்சத்திரத்தில் மணவாள மாமுனிகள் சாற்றுமுறை, பூராடம் நட்சத்திரத்தில் சேனைமுதலிகள் சாற்றுமுறை, சதய நட்சத்திரம் அன்று பேயாழ்வாருக்கும், திருவோணம் நட்சத்திரத்தில் பொய்கையாழ்வாருக்கும், அவிட்டம் நட்சத்திரத்தில் பூதத்தாழ்வாருக்கும் சாற்றுமுறை நடக்கிறது. கார்த்திகை மாதத்தில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை, பாஞ்சராத்ர தீபம் ஏற்றப்படுகிறது. மார்கழி மாதத்தில் தனுர் மாத பூஜையும், பகல் பத்து, இராப்பத்து உற்சவங்களும், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, போகிப் பண்டிகை போன்றவையும், ஆண்டாள் திருக்கல்யாண சேர்த்தி உற்சவமும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் சங்கராந்தி உற்சவம், கனுப் பண்டிகைகளும், மாசி மாதத்தில் மகம் திருமஞ்சனம் மற்றும் சமுத்திர தீர்த்தவாரி, பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், சேர்த்தி உற்சவம், ராமநவமி மற்றும் 10 நாள் பிரம்மோற்சவம் ஆகியவை சிறப்புடன் நடக்கிறது.

    இவ்வாலயத்தில் எந்த ஆலயத்திலும் நடைபெறாத தீப்பந்தத் திருவிழா பக்தஜன சபையினரால் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
    திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் உடனுறை கொடியிடை அம்மனை முழு நிலவு நாளாம் பவுர்ணமியில் தரிசித்து நமது அக, புற இருளை அகற்றிக் கொள்வோம்.
    சென்னை அண்ணா நகரில் இருந்து அம்பத்தூர் செல்லும் ரோடில் ஆவடிக்கு செல்வதற்கு முன்னால் உள்ளது திருமுல்லைவாயில். இந்தத் திருத்தலத்தில் ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் (ஸ்ரீ நிர்மலமணீஸ்வரர்) உடனுறை அம்பாள் : ஸ்ரீ கொடியிடை நாயகி (ஸ்ரீ லதாமத்யாம்பிகா ) தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகள் தீர்த்து வருகிறாள்.

    வள்ளலார், சுந்தரர், அருணகிரிநாதர் பாடி வழிபட்ட இந்த தலம் 32 தேவார பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று.

    தல வரலாறு

    காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான் ஒரு முறை திக்விஜயம் மேற் கொண்ட போது, எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான். போரில் தோல்வியுற்ற தொண்டைமான் தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால் தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான்.

    அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து இரத்தம் வருவதைக் கண்டான். யானையிலிருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொறுத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான். இந்த தல வரலாற்றை சுந்தரர் தனது பதிகத்தில் 10வது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

    இறைவன் அவன்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன் அசுரர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றி கொண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் அருளைப் போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான். அசுரர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டுவந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான். அந்த இரண்டு வெள்ளருக்கத் தூண்களையும் கருவறையின் வாசலில் காணலாம்.

    திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

    .இத்திருக்கோவிலுக்குள் நுழையும் முன்னால் உள்ள பதினாறு கால் மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் நம்மை வெகுவாக ஈர்க்கின்றது.

    கிழக்கு நோக்கிய சன்னதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். வாளால் வெட்டுப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது.

    தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில், நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல், கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நால்வர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன..

    கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள திருமுல்லைவாயில் சென்று மாசிலாமணீஸ்வரர் உடனுறை கொடியிடை அம்மனை முழு நிலவு நாளாம் பவுர்ணமியில் தரிசித்து நமது அக, புற இருளை அகற்றிக் கொள்வோம்.
    சென்னை மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பழமையான 7 சிவாலயங்கள் அமைந்துள்ளன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்பவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    சென்னை மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பழமையான 7 சிவாலயங்கள் அமைந்துள்ளன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்பவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அந்த ஏழு சிவாலயங்களையும் ‘சப்த சிவ ஸ்தலங்கள்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஆலயங்களை முறையே காரணீஸ்வரர் கோவில், தீர்த்த பாலீஸ்வரர் கோவில், வெள்ளீஸ்வரர் கோவில், விருபாட்சீஸ்வரர் கோவில், வாலீஸ்வரர் கோவில், மல்லீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் என்ற முறையில் வரிசையாக வழிபாடு செய்ய வேண்டும்.

    இந்த ஆலயங்கள் அனைத்தும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ராமபிரான் இந்த 7 தலங்களையும் வழிபாடு செய்ததாகவும், அந்த முறையிலேயே இன்றும் இந்த ஆலயத்தை வரிசையாக வழிபடும் மரபு உள்ளதாகவும் ஆன்மிக அன்பர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    காரணீஸ்வரர் கோவில்

    சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையில் இருந்து வரும் காரணீஸ்வரர் கோவில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இதன் அருகில் மாதவப் பெருமாள் திருக்கோவிலும் உள்ளது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஆலயத்திற்கு, பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப் பணிகள் செய்யப்பட்டதாக தெரிகிறது. உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்பதால் இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வந்துள்ளது. அம்பாளின் திருநாமம் சொர்ணாம்பிகை என்பதாகும். இந்த ஆலயம் வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது. இங்குள்ள சொர்ணாம்பிகையை வழி படுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும், பொருளும் செழிக்கும்.

    தீர்த்தபாலீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் இருக்கிறது, தீர்த்த பாலீஸ்வரர் ஆலயம். மாசி மாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத் தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். இதனாலேயே இத்தல இறைவனுக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திரு நாமம் ஏற்பட்டது. அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் இதுவாகும். சப்த சிவாலயங்களில் இந்தக் கோவில் இரண்டாவதாக வழிபட வேண்டிய ஆலயம். பழங்காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக் குளங்கள் அருகருகே இருந்ததாக கூறப்படுகிறது. தெய்வீ சக்தி வாய்ந்த அந்த தீர்த்த குளங்களில் தான், முன் காலத்தில் இறைவனுக்கு தீர்த்தவாரி நடைபெற்றிருக்கிறது.

    வெள்ளீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே இருக்கிறது, வெள்ளீஸ்வரர் கோவில். சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக இது அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி செய்த யாகத்தின் போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டார். வந்திருப்பது மகா விஷ்ணு என்றும், தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்ராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்ராச்சாரியார் வண்டாக மாறி, கமண்டலத்தில் நீர் வரும் பாதையை அடைத்தார். வாமனராக வந்த விஷ்ணு, தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். இதில் சுக்ராச்சாரியாரின் கண்பார்வை பறிபோனது. இதையடுத்து இத்தல இறைவனை வழிபட்டு தனது கண்பார்வையை சுக்ராச்சாரியார் திரும்பப் பெற்றார். சுக்ர பகவானுக்கு வெள்ளி என்ற பெயரும் உண்டு. எனவே இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படலானார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    விருபாட்சீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூர் கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும், காரணீஸ்வரர் கோவிலுக்கு அருகில் தான் விருபாட்சீஸ்வரர் ஆலயமும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் நான்காவதாக வழிபட வேண்டிய கோவில் இதுவாகும். விசாலாட்சி அம்பாள் சமேதராக விருபாட்சீஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. பைரவர் சன்னிதியும், சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது, இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த ஈசன் இங்கு அருள்கிறார். இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால், நமது மனம், உடல், இதயம் மூன்றையும் இணைக்கும் ஆத்ம பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    வாலீஸ்வரர் கோவில்

    ‘மயிலாப்பூரின் காவல் தெய்வம்’ என்று கூறப்படும், கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது வாலீஸ்வரர் கோவில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் பெரியநாயகி சமேதராக வாலீஸ்வரர் வீற்றிருக்கிறார். இந்தக் கோவில் 2 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. கவுதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோவில். ராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான் என்று கூறப்படுகிறது. எனவேதான் இத்தல இறைவன் ‘வாலீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள், இந்தக் கோவிலின் சிறப்பம்சமாகும். சப்த சிவ ஸ்தலங்களில் 5-வதாக வழிபடவேண்டிய கோவில் இது.

    மல்லீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலை)யில் உள்ள காரணீஸ்வரர் கோவிலுக்குப் பின்புறம் மல்லீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோவில் கொண்ட இறைவனுக்கும் ‘மல்லீஸ்வரர்’ என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இதுவாகும். சப்த சிவ ஸ்தலங்களில் 6-வது தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர் களின் நம்பிக்கை.

    கபாலீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூரின் அடையாளமாக திகழ்வது தான் கற்பகாம்பிகை சமேத கபாலீஸ்வரர் கோவில். இதுவே சப்த சிவ ஸ்தலங்களில் நாம் நிறைவாக வழிபட வேண்டிய ஆலயம். காசியப முனிவர் வழிபட்ட சிறப்புக்குரியது இந்தக் கோவில். திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இதுவாகும். சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய ஆலயம் அமைக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

    புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு ‘மயிலாப்பூர்’ என்று பெயர் ஏற்பட்டது.
    ×