என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் போன்ற நமது கலாசார பாரம்பரிய கல்வெட்டுகள் அவற்றின் பெருமை மற்றும் துடிப்பான சாட்சியமாக உள்ளன.
    • இன்று, பஞ்சாயத்துகள், சுயராஜ்ஜியத்தின் வலுவான தூணாக மட்டுமல்லாமல், சுயசார்பு பாரதத்தின் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சி மாதிரியின் பிரதிபலிப்பாகவும் உள்ளன.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள்!

    பஞ்சாயத்து ஆட்சிமுறையானது நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்மாவாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் போன்ற நமது கலாசார பாரம்பரிய கல்வெட்டுகள் அவற்றின் பெருமை மற்றும் துடிப்பான சாட்சியமாக உள்ளன. இன்று, பஞ்சாயத்துகள், சுயராஜ்ஜியத்தின் வலுவான தூணாக மட்டுமல்லாமல், சுயசார்பு பாரதத்தின் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சி மாதிரியின் பிரதிபலிப்பாகவும் உள்ளன.

    இவ்வாறு அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

    26CNI0240402024: சீன கப்பல் ஒன்று 22 மாலுமிகளுடன் இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றி கொண்டு சமீபத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது. இந்த நிலையில் அந்த கப்பலில் வந்த காங்-யுவு (57) என்ற மாலுமி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சீன கப்பல் கடந்த 6-ந் தே

    பொன்னேரி:

    சீன கப்பல் ஒன்று 22 மாலுமிகளுடன் இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றி கொண்டு சமீபத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது.

    இந்த நிலையில் அந்த கப்பலில் வந்த காங்-யுவு (57) என்ற மாலுமி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சீன கப்பல் கடந்த 6-ந் தேதி இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்த இருந்த போதே அவர் காணவில்லை என்று இந்தோனேசியா துறைமுகத்தில் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது பிணமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் மாலுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதா? உடல்நல குறைவால் உயிரிழந்தாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையிலிருந்து கடந்த 19ம் தேதி 1000 கனஅடி தண்ணீர்திறக்கப்பட்டது.
    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.30 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையிலிருந்து கடந்த 19ம் தேதி 1000 கனஅடி தண்ணீர்திறக்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் இது படிப்படியாக குறைக்கப்பட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    கடந்த 4 நாட்களில் மட்டும் மதுரை கள்ளழகர் திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து 216 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 57.64 அடியாக உள்ளது. நீர் இருப்பு 3166 மி.கனஅடியாக உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.30 அடியாக உள்ளது. வரத்து 83 கனஅடியாகவும், திறப்பு 105 கனஅடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 1751 மி.கனஅடியாக உள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிலரின் சுயநலத்தினால், பதவி வெறியால் துரோக புத்தியால் அ.தி.மு.க. வியாபார நிறுவனமாக செயல்படுகிறது.
    • தமிழகம் முழுவதும் போதைப்பொருள் வியாபாரம் ஆளும் கட்சியினரின் உதவியுடன் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்:

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், சுவாமி தரிசனம் செய்து இரவு ராக்கால அபிஷேகத்திற்கு பால் வழங்கி விழாவில் கலந்து கொண்டு மூலவர் மற்றும் சண்முகரை வழிபட்டார்.

    பின்னர் சூரசம்கார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருப்ர்களிடம் கூறியதாவது:-

    கட்சியை அபகரித்து வைத்திருப்பவர்கள் தலைவராக முடியுமா?. எடப்பாடி பழனிசாமி தன்னை தலைவர் என போட்டுக்கொண்டால் தலைவராக முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இன்று பலவீனமாகி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிலரின் சுயநலத்தினால், பதவி வெறியால் துரோக புத்தியால் அ.தி.மு.க. வியாபார நிறுவனமாக செயல்படுகிறது. பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சி மீதான கோபத்தின் காரணமாகவும், தி.மு.க. திருந்தியிருக்கும் என்றும்தான் மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தார்கள்.

    ஆனால் தி.மு.க. 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் வியாபாரம் ஆளும் கட்சியினரின் உதவியுடன் நடைபெறுகிறது.

    எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க.வும் கள்ள உறவு வைத்துக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிடக்கூடாது என்று வேலை பார்த்தனர். வாக்குகளை பிரிப்பதற்காக இரட்டை இலை சின்னத்தை தி.மு.க.விற்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தினர். தி.மு.க.விற்கு எதிராகவும், துரோகத்திற்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் இன்று துரோகம் செய்வதற்காகவே ஒரு கும்பலால் பயன்படுத்தப்படுகிறது.

    அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் கட்சி பா.ஜ.க. அல்ல. தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் உறுதியாக வெற்றிபெறும். வாக்கு சதவீதமும் அதிகமாக இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் 3-ம் இடத்திற்கு தள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா, மாநில அமைப்பு செயலாளர் பி.ஆர். மனோகரன், இளைஞர் பாசறை மாநிலச் செயலாளர் மணிகண்டன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர செயலாளர் முருகேசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • செல்போன், பணம் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
    • கைது செய்யப்பட்ட கலையரசன் பந்தல் கட்டும் தொழிலாளி எனவும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    வள்ளியூர்:

    திருவாரூர் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தை சேர்ந்தவர் ஞானவேல் (வயது23). இவர் சென்னையில் வெல்டராக பணிபுரிந்து வருகின்றார்.

    இவரும் நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் செல்போனில் பேசி வந்தனர்.

    இந்நிலையில் தேர்தல் முடிந்த மறுநாள் தனது காதலன் ஞானவேலை வள்ளியூரில் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வருமாறு அந்த பெண் அழைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து ஞானவேல் தனது நண்பர்கள் 2 பேருடன் வள்ளியூருக்கு வந்து அந்த பெண்ணை சந்தித்ததோடு அவருடன் சாமி கும்பிட்டு விட்டு அருகில் உள்ள கல்மண்டபத்தில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அங்கு வந்த 3 பேர் காதலர்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன், பணம் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஞானவேல் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டியதாக வள்ளியூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் கலையரசன், அதே பகுதியை சேர்ந்த குட்டி மற்றும் கால் கரையை சேர்ந்த கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் கைது செய்யப்பட்ட கலையரசன் பந்தல் கட்டும் தொழிலாளி எனவும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • தேரோட்டம் இன்று காலை நடந்தது.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மற்றும் திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    திருநங்கைகளின் குலதெய்வமாக கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இதில் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி, தேரோட்டம், அரவாண் பலி, தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி போன்றவைகள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

    மகாபாரத போரில் பாண்டவர்களுக்கும், கவுர வர்களுக்கும் மோர் மூண்டது. இதில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், சாமூத்ரிகா லட்சணம் கொண்ட ஆண்மகனை பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    பாண்டவர்களின் படை யில் இருந்த அரவாண், 32 சாமூத்ரீகா லட்சணத்துடன் இருந்ததால் அவரை பலி கொடுக்க முடிவெடுத்தனர்.

    அப்போது அரவாண் ஒரு நிபந்தனை விதித்தார். தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தாம்பத்திய உறவு முடிந்த பின்பு தன்னை பலி கொடுக்க வேண்டுமென அரவாண் கூறினார்.

    இதனை ஏற்ற கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து, அரவாண் கையால் தாலியை கட்டிக்கொண்டு, அன்றிரவு முழுவதும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். தொடர்ந்து மறுநாள் காலை அரவாண் களப்பலி கொடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்.

     எனவே, இவ்வுலகில் வாழும் திருநங்கைகள் தங்களை கிருஷ்ணரின் அவதாரமாக கருதி, பூசாரி கைகளினால் தாலி கட்டிக்கொண்டு அன்றிரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர், தொடர்ந்து மறுநாள் நடைபெறும் தேரோட்டத்தை தொடர்ந்து அரவாண் பலி முடிந்த பின் தங்களது தாலியை அறுத்துக் கொண்டு ஓப்பாரி வைத்து அழுவது ஐதீகம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்றது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் திருநங்கைகள் கூவாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

     விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. கூவாகத்தின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்த தேர் காலை 10 மணியளவில் தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தது. அங்கு அரவாண் பலி நடந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களின் தாலிக்கயிறை அறுத்துவிட்டு, கணவரை நினைத்து ஓப்பாரி வைத்தனர். பின்னர் அருகில் இருந்த நீர்நிலைகளில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்து தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    இவ்விழாவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடக, வட மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளும், வெளிநாட்டை சேர்ந்த திருநங்கைகளும் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.

    • ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.
    • தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்துள்ளது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலத்தில் குடிநீருக்காக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் தமிழக- கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 400 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    கடுமையான வெப்ப அலை தாக்குதலால் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் என நீர்நிலைகளில் தண்ணீர் படிப்படியாக வற்ற தொடங்கி வருகிறது.

    மேலும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் திறப்பு குறைவாலும், மழை பொய்த்து போனதாலும், ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 200 கனஅடி அளவில் சரிந்து வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் குடிநீருக்காக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 350 கனஅடியாக நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 400 கனஅடியாக மேலும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    தமிழகத்திற்கு வரும் இந்த நீரின் அளவு குறைந்த அளவு என்பதால் ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.

    தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்துள்ளது. எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு சுற்றுலா பயணிகள் குறைவாக தண்ணீர் கொட்டும் அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்த அளவு உள்ளதால், பரிசல் சவாரி செல்லக் கூடிய மாமரத்து கடுவு முதல் ஊட்டமலை வரை பகுதிகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் அளவும் சரிந்து காணப்படுகிறது.

    இதன் காரணமாக பரிசலில் செல்லமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், மீன் மற்றும் இறைச்சி கடைகள், கடை வீதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    • பறவை காய்ச்சல் நோய், கோழி, வாத்து, வான்கோழி, நீர்ப்பறவைகள், வனப் பறவைகளை தாக்கும்.
    • கோழி பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியுள்ளோம்.

    ஈரோடு:

    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோழிகளை தாக்கும் பறவை காய்ச்சல் உறுதியானதால் தமிழகத்தில் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரளா மாநில எல்லைப் பகுதிகளில் கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் கேரளாவில் இருந்து கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளித்து தமிழகத்தில் அனுமதிக்கின்றனர்.

    தொற்று பரவக்கூடியது என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:-

    பறவை காய்ச்சல் நோய், கோழி, வாத்து, வான்கோழி, நீர்ப்பறவைகள், வனப் பறவைகளை தாக்கும்.

    பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகள் பல வகை இருந்தாலும், எச்5என்1 என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது. நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழி கழிவுகள், பண்ணை உபகரணங்கள், கோழி தீவனம் மூலம் இந்நோய் பரவும். இந்நோய்க்கு சிகிச்சை இல்லை.

    நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகள், உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 65 முட்டை கோழி பண்ணைகளில் 32.38 லட்சம் முட்டை கோழிகள், 568 கறிக்கோழி பண்ணைகளில், 27.57 லட்சம் கறிக்கோழிகள், 56 நாட்டுக்கோழி பண்ணைகளில் 2.31 லட்சம் நாட்டுக்கோழிகள் உள்ளன.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகள் புறக்கடை கோழிகளை நேரில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கிறோம். வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை தினமும் பார்வையிட்டு, பறவைகளின் நோய் அறிகுறியை கண்காணிக்கிறோம்.

    நோய் தடுப்பு நடவடிக்கைக்காக 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைத்து தயார் நிலையில் வைத்துள்ளோம். கோழி பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
    • சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.

    ஓசூர்:

    சித்ரா பவுர்ணமி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரனபள்ளி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. இதில், மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை யாகசாலை குண்டத்தில் நிரப்பி பூரண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ராகு கேது பரிகார பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் வழிபாடு நடத்தினர்.

    • பக்தர்கள் ஆணிகள் கொண்ட காலணி அணிந்தும் நேர்த்தி கடன்.
    • சிறப்பு அலங்காரத்தில் முருகன் சாமி பவனி வந்தார்.

    மொரப்பூர்:

    மொரப்பூர் அருகே சித்ரா பவுர்ணமியையொட்டி முருகன் கோவிலில் பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்து விநோத வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் ஆணிகள் கொண்ட காலணி அணிந்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது தாமலேரிப்பட்டி. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்து உள்ளது.

    இந்த நிலையில் நேற்று சித்ரா பவுர்ணமியொட்டி முருகன் சாமிக்கு இளநீர், மஞ்சள், பால், தயிர் ஆகிய வற்றால் சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனையும் நடைபெற்றன. பின்னர் சாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    தாமலேரிப்பட்டி கிராமத்தில் இருந்து முருகன் கோவில் வரை மேளம் தாளங்கள் முழங்க கரகம் பாதித்து காவடியுடன் தேரில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் சாமி பவனி வந்தார்.

    அப்போது மொரப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்குடன் ஊர்வல மாக வந்தனர்.

     இதனைத் தொடர்ந்து பூ மிதித்தல் நிகழ்ச்சியும், சாமி திருவீதி உலா வந்தபோது பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தும், ஆணிகள் கொண்ட காலனியை அணிந்தும், பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.

    • தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.
    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 40 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார்.

    கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி தொடங்கி இந்த மாதம் 17-ந் தேதி வரை 20 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அவரது பேச்சுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக சாடினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் உணர்வுபூர்வமாக இருந்ததாக பரவலாக பேசப்பட்டது. பொதுக் கூட்டங்களில் பேசியது மட்டுமின்றி காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோதும் மக்களை சந்தித்து வாக்கு கேட்டார்.

    தற்போது தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணி கட்சியினர் மாவட்ட கழக செயலாளர்கள் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடமாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.

    இதற்காக அவரது பிரசார சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது.

    • எல்லாவிதத்திலும் சிறுபான்மையினருக்கு சிறந்த அரசாக பாரதிய ஜனதா அரசு உள்ளது.
    • 25 கோடி மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி.

    கோவை:

    தெலுங்கானா முன்னாள் கவர்னரும், தென்சென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான திட்டம் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரம். பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பு மக்களுக்குமான பிரதமராக பணியாற்றி வருகிறார்.

    50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை அடித்தட்டிலேயே வைத்துள்ளது. அவர்களை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மக்களிடம் வேற்றுமையை விதைப்பது காங்கிரஸ் தான்.

    பிரதமர் மோடிக்கு அனைத்து தரப்பு மக்களிடம் ஆதரவு உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி இஸ்லாமிய பெண்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்தி எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.

    பெண்ணுரிமை என்று எதிர்க்கட்சியினர் பேசி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பேசுகிறார். ஆனால் அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்ல முடியாத நிலை இருந்தது. அதனை மீட்டெடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்க வில்லை.

    ஆனால், இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்ல விசாவில் தளர்வு ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி தான். அதேபோன்று முஸ்லிம் பெண்கள் பாராட்டும் வகையில் முத்தலாக் தடைச் சட்டத்தையும் பாரதிய ஜனதா அரசு தான் கொண்டு வந்தது.

    எல்லாவிதத்திலும் சிறுபான்மையினருக்கு சிறந்த அரசாக பாரதிய ஜனதா அரசு உள்ளது.

    ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஏதோ இவர்கள் தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் போலவும், பிரதமர் மோடி சிறுபான்மை மக்களுக்கு எதிரியாக இருப்பது போல சித்தரித்து இந்த தேர்தலை முன்னெடுத்து செல்ல முயல்கிறார்கள்.

    ஊடுருவல்காரர்களிடம் நமது சொத்து பறிபோய் விடக்கூடாது என்று தான் பிரதமர் சொன்னார். குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து ஏராளமானோர் ஊடுருவி உள்ளனர். மேற்கு வங்கத்தில் 1 கோடி ஊடுருவல்காரர்கள் உள்ளனர். அவர்களுக்கு அந்த அரசு ரேஷன் கார்டு வரை கொடுத்துள்ளது. நம் நாட்டு மக்களின் சொத்துக்கள் பறி போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் பிரதமர் சொன்னாரே தவிர வேறு எதுவும் காரணம் இல்லை.

    ஆனால் காங்கிரஸ் இதனை தேர்தலுக்காக திசை திருப்ப முயற்சிக்கிறது.

    25 கோடி மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு 45 லட்சம் உயிர்களை காப்பாற்றியது பாரதிய ஜனதா அரசு.

    இப்படி எல்லா தரப்பு மக்களுக்குமான அரசாக பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.

    ஆனால் காங்கிரஸ் வேண்டும் என்றே பாரதிய ஜனதா மீது குறை கூறுகிறார்கள். நாட்டின் முக்கியமான தேர்தல் நடக்கும்போது ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் வெளிநாடு சென்றுவிட்டாரா என்று தெரியவில்லை.

    வட மாநில தேர்தல் பிரசாரத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லாதது ஏன் என்பது குறித்து தெரியவில்லை.

    ஒருவேளை இந்தி எதிர்ப்பு பிரச்சனை ஏற்படுமோ என்ற காரணத்தினால் இருக்கலாமோ? அல்லது அங்கு சென்றால் எந்த பிரயோஜனம் இருக்காது என்பதாலும் இருக்க வாய்ப்புள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பிரச்சனைகளையும் மீறி பா.ஜ.க வெற்றி பெறும்.

    வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் கொத்து கொத்தாக வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் வாக்குகள் விடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தேர்தல் ஆணையம் இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    சென்னையில் நான் போட்டியிட்ட தொகுதியில் கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்காளர்களின் வாக்குகள் சில மாதங்களில் காணாமல் போய் விட்டது.

    மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்டதற்கு குரல் கொடுப்பவர்களை பார்த்து தோல்வி பயத்தில் பேசுகிறார்கள் என்று கூறினால், நீங்கள் தான் தோல்வி பயத்தில் அமைதியாக உள்ளீர்கள் என்று சொல்வோம். ஏனென்றால் எங்களுக்கு தோல்வி பயம் இல்லை. நிச்சயமாக நான் உள்பட பா.ஜனதா சார்பில் போட்டியிட்டவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    மாநில உரிமையை பறித்து விட்டார்கள், அதனை மீட்க நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம் என முதலமைச்சர் அடிக்கடி பேசி வருகிறார். ஆனால் இங்கு மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

    சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் முதல் ஆளாக வந்து குரல் கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் இதுவரை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்? அவர்களது கூட்டணி கட்சியினரும் இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்?.

    இவர்கள் அமைதி காப்பதன் மூலம் இந்த சம்பவங்கள் வேண்டும் என்றே நடந்து போல தோன்றுகிறது. இதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்.

    தமிழ்நாட்டில் அரிசியிலும் அடிதடி நடக்கிறது. அரசியலிலும் அடிதடி நடக்கிறது. ரேஷன் அரிசியை கடத்தி அதனை மாவாக்கி விற்கிறார்கள்.

    தமிழகத்தில் கஞ்சா, போதை கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. அதனையெல்லாம் விட்டுவிட்டு, பிரதமரை மட்டுமே குறை கூறுவதிலேயே கவனம் செலுத்தக்கூடாது.

    தே.மு.தி.க. முன்னாள் தலைவர் விஜயகாந்த் மீது எங்களுக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் என்றும் உள்ளது. பத்மவிபூஷன் விருது படிப்படியாக ஒவ்வொருவருக்காக தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    #WATCH | Coimbatore, Tamil Nadu: On PM Modi's statement, BJP candidate from South Chennai, Tamilisai Soundararajan says, "...First of all, our Prime Minister's schemes are of inclusive growth. Sabka Saath Sabka Vikas; nobody has been excluded...For the past 50 years, almost half… pic.twitter.com/oTqbdQlI9T

    ×