என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது.
- கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சென்னை:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது.

கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் நல்ல அரசுக்கு அழகு. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் மரக்காணம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்விலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது. மாறாக, சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், அதில் இது குறித்து எதிர்க்கட்சிகள் சிக்கல் எழுப்பும் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. ஒருகட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு தான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டது.
கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை தான் . ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான்.
கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ. வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். கடந்த காலங்களில் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போக மறுத்த காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதனால், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிராக காவல்துறையினரால் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதற்கெல்லாம் மேலாக கள்ளச்சாராய சாவு தொடர்பாக இப்போது கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்ற சாராய வியாபாரி, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாழ்த்து தெரிவித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் திமுக அலுவலகம் அருகில் பதாகை வைத்துள்ளார். கள்ளச்சாராய சாவு குறித்த செய்தி வெளியான பிறகு தான் நேற்று மாலை அந்த பதாகை அகற்றப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சாராய வணிகர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு உள்ளது.
கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரி மருவூர் இராஜாவுடன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தானுக்கு நெருங்கிய உறவு இருந்தது அம்பலமானது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவருக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
- அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை பெய்த நிலையில் இன்று காலை முதலே இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக இருந்தது.
7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு, அசம்புரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
காலை முதலே மழை பெய்து வந்ததால் பள்ளிக்கூடங்களுக்கு வந்த மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வருவதற்கு சுணக்கம் காட்டினார்கள். பெற்றோர் அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு வந்தனர். குடை பிடித்தவாறு வந்தாலும் ஒரு சில மாணவிகள் மழையின் வேகத்தினால் நனைந்தனர். சீருடைகள் நனைந்ததால் மாணவிகள் அவதிப்பட்டனர்.
பள்ளிக்கூடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் மாணவிகளை அழைத்து வந்த பெற்றோர் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இடலாக்குடி பகுதியில் சாலையில் உள்ள பள்ளம் எங்கு கிடக்கிறது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை ஓட்டி வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் அரசு அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வந்த ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர்.
சுசீந்திரம், கன்னியாகுமரி, கொட்டாரம், அஞ்சுகிராமம், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி, தக்கலை, குருந்தன்கோடு, சுருளோடு, மயிலாடி, கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை கொட்டியது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கோழிப்போர் விளை பகுதியில் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக அந்த பகுதியில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் மட்டுமின்றி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
ஏற்கனவே பேச்சிப்பாறை அணை நிரம்பியுள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணையில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் கோதை ஆறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.42 அடியாக உள்ளது. அணைக்கு 653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 637 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.70 அடியாக உள்ளது. அணைக்கு 345 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.04 அடியாக உள்ளது. அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 16.14 அடியாகவும்,பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 40.76 அடியாகவும் முக்கடல் அணை நீர்மட்டம் 17.90 அடியாகவும் உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கன்னிமார் 17.2, கொட்டாரம் 27.8, மயிலாடி 15.2, நாகர்கோவில் 32.4, ஆரல்வாய்மொழி 13, பூதப்பாண்டி 25.2, பாலமோர் 34.4, தக்கலை 49.6, குளச்சல் 40, இரணியல் 14.4, அடையாமடை 23, குருந்தன்கோடு 28.2, கோழிப்போர்விளை 62.2, மாம்பாழத்துறையாறு 29, சிற்றாறு 1-10.2, சிற்றாறு 2-28.4, களியல் 14.2, பேச்சிப்பாறை 32.8, பெருஞ்சாணி 44.6, புத்தன் அணை 39.8, சுருளகோடு 31.2, ஆணைக்கிடங்கு 28.4, திற்பரப்பு 13, முள்ளங்கினாவிளை 43.8.
- கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தஞ்சை மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
- உயிர் இழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலியாகி உள்ள துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தஞ்சை மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
காவல் துறையின் சில கருப்பு ஆடுகளால் மதுவினால் அதிகரிக்கும் சமூக குற்றங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதும் வேதனை தருகிறது.
உயிர் இழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து உயிர்களைக் காப்பாற்றுமாறு மருத்துவத் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வால்பாறையில் உள்ள முக்கிய சாலைகள், எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
- கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை மிதமான வெயில் காணப்பட்டது.
மதியத்திற்கு பிறகு வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த மழைக்கு வால்பாறையில் உள்ள முக்கிய சாலைகள், எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். மழை காரணமாக, வால்பாறையில் உள்ள ஆறுகளுக்கு நீர்வரத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொட்டி தீர்த்த கனமழையால் வால்பாறை பகுதியில் மிதமான காலநிலை நிலவி வருகிறது. மழை பெய்ததால் கடும் குளிரும் காணப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 50 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆத்தூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குடித்த வர்களின் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சேலம் மாவட்ட எல்லைகளில் தீவிர கள்ளச்சாராய வேட்டை நடத்த சேலம் சரக டி.ஐ.ஜி. உமா மற்றும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அருகே உள்ள சேலம் மாவட்ட எல்லையான தலை வாசல், ஆத்தூர், மணிவிழுந்தான், கல்வராயன்மலை கிராமங்களில் போலீசார் தீவிரமாக கள்ளச்சாராய சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமசேஷபுரம், சிறுவாச்சூர், மணிவிழுந்தான் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தலைவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 25), ராமசாமி (58) மற்றும் காமக்காபாளையம் பகுதியை சேர்ந்த பெரியம்மாள் (60), வடகுமறை பகுதியை சேர்ந்த சிவகாமி (60) ஆகிய 2 பெண்கள் உள்பட 4 பேர் பிடிபட்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 50 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கள்ளச்சாராய விற்பனையில் தொடர்பு உடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.
- கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.97.10-க்கும் பார் வெள்ளி ரூ.97,100-க்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,600-க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.97.10-க்கும் பார் வெள்ளி ரூ.97,100-க்கும் விற்பனையாகிறது.
கடந்த திங்கட்கிழமையில் இருந்து தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது.
- சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.
- வருகிற ஞாயிற்றுக்கிழமை திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை:
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 25-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருப்பூா், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும், வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
22, 23-ந்தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- நாளை முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்க இருக்கிறது.
- 29-ந்தேதி காலை காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
சென்னை:
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.57 மணிக்கு சட்டசபைக்குள் வந்தார். அப்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.
சபாநாயகர் அப்பாவு சரியாக 10 மணிக்கு வந்ததும் சட்டசபை நிகழ்வுகள் தொடங்கியது. முதலில் மறைந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், புலவர் இந்திர குமாரி, டாக்டர் ராம கிருஷ்ணன் உள்பட 17 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதன் பிறகு கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசிக்கையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரசாயனம் கலந்த சாராயம் அருந்தியதன் காரணமாக 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்தது இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணா துயரமும் கொள்கிறது.
சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இத்தகைய நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்வதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் உயிர் இழந்தவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு சபாநாயகர் கூறியதும் உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்து அஞ்சலி செலுத்தினர்.
இதன் பிறகு விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 10 நிமிடம் மட்டும் இன்று சட்டசபை நடந்தது. அத்துடன் இன்றைய சட்டசபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
- ஊருக்குள்ளேயே விற்பதால்தான் எல்லோரும் குடிக்கிறார்கள்.
- எல்லோருமே கூலி வேலைக்கு போகிறவர்கள் தான்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள் பொதுமக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஆரம்பத்தில் சாவுக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல. வாந்தி, வயிற்று போக்குதான் என்று இடமாற்றம் செய்யப்பட்ட கலெக்டர் கூறியதை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்தனர். உடனடியாக தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பை குறைத்திருக்க முடியும் என்றார்கள்.
தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கூறும்போது, `வாந்தி, வயிற்று போக்குக்கு காரணமே கள்ளச்சாராயம் தான். சாராய விற்பனை பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை மேட்டில் தாராளமாக நடக்கிறது. இது போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ளது. கண்டும் காணாமல் இருந்தது தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணமாகி விட்டதாக ஆவேசப்பட்டார்'.
கருணாபுரத்தை சேர்ந்த பெண்கள் கூறும்போது, `எங்கள் தெரு அருகில் உள்ள தெருக்களிலேயே சாராயம் விற்கிறார்கள். எல்லோருமே கூலி வேலைக்கு போகிறவர்கள் தான். கையில் காசு கிடைத்ததும் பாக்கெட்டில் சாராயத்தை வாங்கி குடிக்கிறார்கள்.
ஊருக்கு வெளியே எங்காவது விற்றால் வயதானவர்கள் அவ்வளவு தூரம் நடந்து சென்று குடிக்க யோசிப்பார்கள். ஊருக்குள்ளேயே விற்பதால்தான் எல்லோரும் குடிக்கிறார்கள்' என்றார்.
காலை 5 மணிக்கே ஒரு பாக்கெட் சாராயத்தை தனது கணவர் குடித்துவிட்டு கண் எரியுது, வயிறு வலிக்குது என்று துடித்ததாகவும் உடனே ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்ததாகவும் கூறினார்.
- உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
- இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும்.
சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கள்ளச்சாராய பலி அரசு நிர்வாகத்தில் அலட்சியம் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
— TVK Vijay (@tvkvijayhq) June 20, 2024
- கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி இன்று செல்கிறார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்திக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சட்டசபையின் இன்றைய நிகழ்வில் பங்கேற்ற பின்னர் கள்ளக்குறிச்சிக்கு அவர் செல்ல உள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி இன்று செல்கிறார்.
மேலும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கள்ளக்குறிச்சியில் மாலை நேரத்தில் கடை வீதியில், பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது.
- 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் மாலை நேரத்தில் கடை வீதியில், பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது. இப்படி விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தில் மெத்தனால் அதிகமாக கலக்கப்பட்டதால், அதனை குடித்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அங்குள்ளவர்களிடம் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதும், அதனை அவர்கள் வாங்கிச் செல்லும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






